விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 11

‘‘ஸோ, தாரா இங்கதான் இருக்கா. லொகேஷன் தெரிஞ்சுடுச்சு. குட்... குட்... இப்ப IMSI (International Mobile Subscriber Identity) ஆன் பண்ணறேன்...’’ சொன்ன க்ருஷ், எக்கி பின்பக்க சீட்டில் இருந்து தன் பையை எடுத்து ‘சர்ர்ர்ர்’ரென ஜிப்பை கீழிறக்கி உள்ளிருந்து ஒரு டப்பாவை எடுத்தான்.

‘‘இதுதானா அது..?’’ புருவத்தை உயர்த்திய ஐஸ்வர்யாவைப் பார்த்து கண்ணடித்தான். ‘‘யெஸ்...’’ IMSI டப்பாவை தன் செல்போனில் இணைத்து தாராவின் எண்ணை டிராக் செய்ய முற்பட்டான். இமைக்காமல் ஐஸ்வர்யா பார்த்துக் கொண்டிருந்தாள். ‘‘ஷிட்...’’ முகத்தை சுருக்கியபடி டாஷ்போர்டை ஓங்கி குத்தினான். ‘‘என்னடா..?’’ ‘‘தாரா திரும்பவும் தன் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செஞ்சுட்டா...’’ ‘‘இப்ப என்ன செய்ய..?’’ ‘‘அவளை உனக்குத் தெரியும் இல்லையா... இந்த இடத்துல எங்க இருக்கானு தேடு...’’

‘‘டன். ஆஸ்பிடலுக்கு வந்திருக்கானா... உடம்புக்கு ஏதாவது...’’ ‘‘கற்பனைய முதல்ல அடக்கு ஐஸ்... அப்பதான் நிஜத்தை எதிர்கொள்ள முடியும். ரெண்டு பேரும் காரை விட்டு இறங்கி ஒவ்வொரு பக்கமா போவோம்...’’ ‘‘சரி...’’ ‘‘என் நம்பரைத் தவிர வேற எந்த காலையும் அட்டெண்ட் பண்ணாத...’’ ‘‘ம்...’’ இருவரும் கையை உயர்த்தி உள்ளங்கையால் அடித்துக் கொண்டார்கள்.

‘‘புத்திக்கு வேலை கொடு. சுத்தி நடக்கறதை நல்லா கவனி...’’ ‘‘சரிடா... நானென்ன குழந்தையா... ஐ நோ...’’ சீட் பெல்ட்டை விலக்கிவிட்டு கார் கதவைத் திறக்க ஐஸ்வர்யா முற்பட்டபோது - அவளது தோளைத் தொட்டு நிறுத்தினான். ‘‘எல்லாரும் அந்தப் பக்கமா ஓடறாங்க... போய் என்னனு பாரு...’’ க்ருஷ் சுட்டிக் காட்டிய திசையைப் பார்த்தாள்.

உண்மைதான். மக்கள் கூட்டம் கூட்டமாக ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தார்கள். ஆள்காட்டி விரலை உயர்த்திக் காட்டிவிட்டு, கார் சாவியை அவனிடம் கொடுத்தாள். இறங்கினாள். கூட்டத்தில் கலந்தாள். ஐஸ்வர்யா செல்வதை சில நொடிகள் பார்த்துவிட்டு க்ருஷ் இறங்கினான். காரை லாக் செய்து விட்டு எதிர் திசையில் நடந்தான். அவன் தோளில் பை இருந்தது. பைக்குள் IMSI டப்பா. மீண்டும் ஒருமுறை தாராவை தொடர்பு கொண்டான். ஸ்விட்ச் ஆஃப்.

‘‘அப்பாடா... என்ன செய்யறது... எப்படி சொந்தக்காரங்களை கான்டாக்ட் பண்ணறதுன்னு முழிச்சுட்டு இருந்தோம்... நல்லவேள வந்தீங்களே...’’ பேசிக் கொண்டே சென்ற காக்கி உடை அணிந்தவரை மவுனமாக ஆதி பின்தொடர்ந்தான். ‘‘அவங்களுக்கு நீங்க சொந்தமா...’’ திரும்பாமல் காக்கி கேட்டார். ‘‘யாருக்கு?’’ ‘‘ஆக்சிடெண்ட் ஆனவங்களுக்கு...’’ ‘‘நான் தேடி வந்தவங்களானு தெரியாம எப்படி இதுக்கு பதில் சொல்ல முடியும்?’’ ‘‘அதுவும் சரிதான்.

ஆனா, பார்த்தா கூட உங்களால அடையாளம் காண முடியாது சார்...’’ ‘‘எதை வைச்சு அப்படி சொல்ற?’’ ‘‘சுத்தமா எரிஞ்சு கரிக்கட்டையா இருக்காங்க... அடையாளமே தெரியல...’’ ‘‘...’’ ‘‘வந்த கார்ல ஏதோ கோளாறு போல... சட்டுனு தீ பிடிச்சிருக்கு. ஆறடி உயரத்துக்கு நெருப்பாம்... ஆம்புலன்ஸ் டிரைவரு சொன்னாரு...’’ எல்லாவற்றையும் ஆதி காதில் வாங்கினான். உதட்டை மட்டும் திறக்கவில்லை. சிப்பந்தியும் பதில் எதையும் எதிர்பார்க்கவில்லை.

‘‘போஸ்ட் மார்ட்டம் இப்பதான் முடிஞ்சுது. டாக்டரை வேணா போய் பார்க்கறீங்களா?’’ ‘‘முதல்ல சடலத்தை பார்த்துடறேன்...’’ ‘‘அதுவும் சரிதான்... கரிக்கட்டைல கூட உங்களுக்கு அடையாளம் தெரியலாம். மார்ச்சுவரில இருக்கிறவன் கொஞ்சம் தகராறு பண்ணுவான்... நூறோ இருநூறோ கொடுத்தா சரியாகிடுவான்...’’ ‘‘இது உனக்கு...’’ புது இரண்டாயிரம் ரூபாய் தாளை எடுத்து ஆதி அவர் கையில் திணித்தான். ‘‘சார்...’’ கையெடுத்து கும்பிட்ட சிப்பந்தி வேகமாக நடந்தார்.

உதட்டோரம் புன்னகை கசிய சுற்றிலும் பார்த்தபடியே ஆதி சென்றான். இருவரும் மார்ச்சுவரியை அடைந்தபோது அங்கு பெரும் கூட்டம் திரண்டிருந்தது. வந்த மயக்கத்தை சிரமப்பட்டு ஐஸ்வர்யா அடக்கினாள். தலை சுற்றலை நிறுத்த முடியாதது போலவே வாந்தியையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அடிவயிற்றில் இருந்து குடல்கள் வெளியேற முற்பட்டன. ‘‘அதுக்குத்தான் வேண்டாம்னு அப்பவே சொன்னேன். வாந்தி வந்தா வெளில போய் எடுமா... உள்ளாற எடுத்தா எவன் க்ளீன் பண்ணுவான்...’’ சிப்பந்தியின் அதட்டலுக்கு கட்டுப்பட்டு வெளியேற முற்பட்டாள்.

‘‘ஏழரைய கூட்டாதமா... பின்பக்கமா வா... முன்பக்கம்னா கண்டவன் கேள்வி கேப்பான். பதில் சொல்லணும்...’’ மார்ச்சுவரிக்கு ஏது பின்பக்கம் என்ற கேள்விக்கு விடையாக பக்கத்தில் இருந்த அறைக்கு சிப்பந்தி அழைத்துச் சென்றார். பாழடைந்து காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் தூசு. ஜன்னல் என்ற பெயரில் இருந்த செவ்வக மரச் சட்டங்கள் கரையான்களால் அரிக்கப்பட்டிருந்தன. குறுக்காக நடப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளை துரு தின்று கொண்டிருந்தது.

லாவகமாக அந்த மரச் சட்டகத்தை தன் கைகளால் தூக்கினார். ‘‘இறங்கிப் போம்மா...’’ ‘‘இங்கயா?’’ ‘‘ஆமா... புதரோரமா நடந்து வலப்பக்கமா திரும்பு. காம்பவுண்ட் சுவராண்ட ஒரு ஓட்ட இருக்கும். புகுந்து வெளியேறிடு...’’ ஐஸ்வர்யா தயங்கினாள். ‘‘சீக்கிரமா... யாராவது வந்தாங்கன்னா பிரச்னை...’’ பதில் சொல்லாமல் சிப்பந்தியின் கையில் புது ஐநூறு ரூபாயை திணித்துவிட்டு குதித்தாள்.

அனைவரது முகங்களையும் தனக்குள் ஸ்கேன் செய்தபடி கிருஷ்ணன் விழுப்புரம் அரசாங்க மருத்துவமனையை சுற்றிச் சுற்றி வந்தான். மார்ச்சுவரியின் முன்னால் கூடியிருந்த கூட்டத்துக்குள் புகுந்தவன் முன்னேறவில்லை. மாறாக பின்னால் நின்றபடியே மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனித்தான். சொல்லி வைத்தது போல் அனைவரும் ஒரே விஷயத்தைப் பற்றிதான் பரபரப்பாக பேசினார்கள். பேசியதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்காகவே மார்ச்சுவரி வாசலில் முட்டி மோதினார்கள்.

கண்களை மூடியபடி சில விநாடிகள் க்ருஷ் நின்றான். விலகினான். நடந்தான். வெளியே இருந்த டீ க்கடைக்கு சென்று தேநீர் அருந்தினான். சிகரெட்டை பற்ற வைத்தபடி அங்கு நடந்த உரையாடல்களை தனக்குள் சேமித்தான். அங்கும் அதேதான் பேச்சு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவரித்தார்கள். நூற்றி ஓராவது முறையாக தாராவை தொடர்பு கொள்ள முயற்சித்தான். ஸ்விட்ச் ஆஃப். காரை நோக்கி நடந்தவன் - பதட்டத்துடன் முன்னால் வந்து கொண்டிருந்தவன் மீது மோதினான்.

‘‘சாரி...’’ ‘‘சாரி...’’ பரஸ்பர புன்னகையுடன் இருவரும் அவரவர் திசையில் சென்றார்கள். மோதப்பட்டவன்தான் ஆதி என்பதை க்ருஷ்ஷும் அறியவில்லை. தன் மீது மோதியவன்தான் கிருஷ்ணன் என்கிற க்ருஷ் என்பதை ஆதியும் உணரவில்லை. காம்பவுண்ட் சுவரில் தட்டுப்பட்ட ஓட்டையை ஐஸ்வர்யா பார்த்தாள். ஓராள் குனிந்து, சற்றே தவழ்ந்து வெளியேறும் வகையில் உடைக்கப்பட்டிருந்தது. முட்டி போட்டவள் அந்த ஓட்டைக்குள் புகுந்தாள். காலில் ஏதோ இடறியது. பார்த்தாள்.

உள்ளங்காலுக்குக் கீழே ஓரடி உயரத்தில் சாவி ஒன்று தட்டுப்பட்டது. எடுத்தாள். புருவங்கள் முடிச்சிட்டன. காரணம், அந்த சாவியின் முனை அவளுக்கு நன்கு பழக்கப்பட்ட வீட்டின் திறவுகோலை நினைவுபடுத்தியது. என்ன... கண்டெடுத்த சாவி ஒரிஜினலை விட பல மடங்கு பெரிதாகக் காட்சியளித்தது. சட்டென்று அதை எடுத்துக் கொண்டு வெளியேறினாள். இதயம் படபடவென துடித்ததை அவளால் துல்லியமாக உணர முடிந்தது. 

‘‘மாஸ்டர்... நாம எதிர்பார்க்காதது எல்லாம் நடக்குது...’’ மருத்துவமனைக்கு வெளியே, யாரும் இல்லாத இடத்தில் நின்றபடி இயர் போனில் ஆதி பேசத் தொடங்கினான். ‘‘என்ன நடந்ததுன்னு சொல்லு ஆதி...’’ மறுமுனையில் அதே தேனொழுகும் குரல். ‘‘விழுப்புரம் கவர்மெண்ட் ஆஸ்பிடலுக்கு நீங்க சொன்னா மாதிரியே வந்தேன்...’’ ‘‘ம்...’’ ‘‘எதிர்பார்த்தா மாதிரியே கார்ல எரிஞ்ச ரெண்டு சடலங்கள் மார்ச்சுவரில கரிக்கட்டையா இருந்தது...’’ ‘‘ம்...’’ ‘‘அந்த டெட் பாடிஸ்ஸை என் கண்ணால பார்த்தேன்...’’ ‘‘ம்...’’ ‘‘அடையாளம் தெரியாத அளவுக்கு எரிஞ்சிருந்தாங்க...’’ ‘‘ம்...’’ ‘‘போஸ்ட் மார்ட்டம் செஞ்சுட்டாங்க... வாட்ஸ் அப் வழியா நீங்க அனுப்பின தாராவோட ப்ளட் குரூப் மாதிரியான டிடெயில்ஸோட டாக்டரை சந்திச்சேன்...’’ ‘‘ம்...’’ ‘‘ரிசல்ட் வந்தாதான் எதுவும் சொல்ல முடியும்னு சொல்லிட்டார்...’’ ‘‘ம்...’’ ‘‘ஆனா, பேசறப்ப டாக்டரோட கை, காலெல்லாம் நடுங்குது...’’ ‘‘ஏன்..?’’

‘‘இந்த உலகத்தையே புரட்டிப் போடற ஓர் உண்மையை போஸ்ட் மார்ட்டம் ரிசல்ட் உறுதிப் படுத்தும்னு அந்த டாக்டர் நம்பறார் மாஸ்டர். டாக்டரோட சந்தேகம் எப்படியோ வெளில கசிஞ்சிடுச்சு. விழுப்புரம் முழுக்க இதுதான் பேச்சு. மீடியாகாரங்க குவிஞ்சிருக்காங்க...’’ ‘‘அப்படியென்ன உண்மைய அந்த ரிசல்ட் வெளிப்படுத்தப் போகுது ஆதி..?’’

‘‘எரிஞ்சதுல ஒண்ணு பெண்ணோட உடல். ஆனா, இடுப்புக்கு கீழ அது மனித உடம்பு இல்லையாம்...’’ என்றபடி பதட்டத்துடன் டாக்டரின் சந்தேகத்தை வெளிப்படுத்தினான். ‘‘க்ருஷ்... இங்க பாரு...’’ காருக்குள் மூச்சு வாங்க ஏறியபடி அந்த ஓரடி சாவியை ஐஸ்வர்யா நீட்டினாள். ‘‘இதே மாதிரி சாவியை நான் பார்த்திருக்கேன்... என்ன அது சின்னதா இருக்கும்...’’ ‘‘எங்க பார்த்த?’’ ‘‘தாரா கிட்ட...’’ ‘‘...’’ ‘‘யெஸ் க்ருஷ்... தாராவோட வீட்டு சாவி இதே மாதிரிதான் இருக்கும்.

முனையப் பாரு... இதே வளைவுதான்...’’ ‘‘இதை எங்கேந்து எடுத்த?’’ ‘‘மார்ச்சுவரிக்கு பின்னாடி. எதிர்பாராத விதமா ஒரு கார் பற்றி எரிய ஆரம்பிச்சுதாம்... அதுக்குள்ள இருந்த ரெண்டு பேரும் ஆன் த ஸ்பாட் அவுட்டாம்... கேட்டதும் பயமாகிடுச்சு. ஒருவேளை அது தாராவா இருந்தா..? அதனால மார்ச்சுவரில போய்ப் பார்த்தேன்...’’ ‘‘அடையாளம் தெரிஞ்சுதா?’’ ‘‘கண்டுபிடிக்க முடியல... கரிக்கட்டைங்கதான் அங்க இருந்தது...’’ சொன்ன ஐஸ்வர்யா தன் தலைமுடியை கொத்தாகப் பிடித்து கொண்டை போட்டுக் கொண்டாள்.

‘‘ஆமா... ஏன் எல்லாரும் பதட்டத்தோட இருக்காங்க..?’’ ‘‘உனக்கு விஷயமே தெரியாதா ஐஸ்..?’’ ‘‘ம்ஹும். சாவி கிடைச்சதுமே ஓடி வந்துட்டேன்... என்ன மேட்டர்?’’ ‘‘கார்ல எரிஞ்சாங்களே ரெண்டு பேர்... நீ கூட சடலத்தை மார்ச்சுவரில பார்த்தியே...’’ ‘‘ஆமா...’’ ‘‘அதுக்கு போஸ்ட் மார்ட்டம் செஞ்சுட்டாங்க...’’ ‘‘ஓகே...’’ ‘‘ரிசல்ட்டுக்காக டாக்டர் காத்திருக்கார்...’’ ‘‘சரி... அதுக்கும் இந்த கும்பலுக்கும் என்ன சம்பந்தம்?’’

அவளை உற்றுப் பார்த்துவிட்டு க்ருஷ் சொன்னான். ‘‘எரிஞ்ச ரெண்டு பேரும் இந்த பூமியை சேர்ந்தவங்களே இல்லையாம்... ஏலியன்ஸா இருக்கலாம்னு டாக்டர் சந்தேகப்படறார்...’’ ‘‘என்னது..?’’ ‘‘ஆமா... நீ கரிக்கட்டையா பார்த்தது வேற்றுகிரகவாசிகளை!’’

(தொடரும்)  

ஓவியம்: ஸ்யாம்