Inner Wear A to Z
-ப்ரியா
Only For Ladies... But எல்லோரும் படிக்கலாம்!
‘‘பெண்களின் முக்கிய பிரச்னை உள்ளாடைகள்தான். இதை ஒப்புக் கொள்ள பெண்களே மறுப்பதுதான் வேதனையான விஷயம். வெளிப்பார்வைக்கு தெரியாமல் உடலோடு ஒட்டி உறவாடும் இந்த உடைக்கு உரிய முக்கியத்துவத்தை பெண்கள் வழங்குவதே இல்லை. தவிர எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் படித்த பெண்கள் கூட பாமரர்களாகத்தான் இருக்கிறார்கள்...’’ வருத்தப்படுகிறார் உமா.
 பிரபல உள்ளாடை நிறுவனத்தின் நிர்வாகியான இவர், inner ware அவசியம் குறித்து விளக்க ஆரம்பித்தார். ‘‘உள்ளாடை அணிவதல்ல; அதை ஒவ்வொருவரும் தங்கள் உடலுக்கு ஏற்ற வகையில் சரியான அளவைத்தான் தேர்ந்தெடுத்து அணிகிறார்களா என்ற கேள்வியே முக்கியம். இந்த எளிய விஷயத்தில்தான் ஒவ்வொருவரின் மனபலமும் உடல் ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது.
தங்களின் உள்ளாடைகளின் அளவைத் தேர்ந்து எடுப்பது எளிமையான விஷயம். யார் உதவியும் இல்லாமல் ஒவ்வொரு பெண்ணும் இதை தானே கண்டறிய முடியும். இன்ச் டேப்பால் மார்பகங்களுக்குக் கீழுள்ள சுற்றளவை துல்லியமாக கணக்கிட்டு அதனுடன் எண் ஐந்தைக் கூட்டினால் என்ன வருமோ அதுதான் பிரா சைஸ். இப்படி அணியும் போதுதான் சீரான சுவாசம் சாத்தியம். மாறாக டைட்டாக அணிந்தால் மூச்சு விட சிரமம். நெஞ்சு வலியும் வரலாம்.
 இன்றைய தொழில் நுட்ப உலகில் எல்லா வயதுள்ள பெண்ளுக்கும் ஏற்ற வகையில் ‘பிரா’க்கள் விற்பனைக்கு உள்ளன. கால மாறுதல் காரணமாக இப்போது பெண்கள் சின்ன வயதிலேயே பருவம் அடைந்து விடுகிறார்கள். அவர்களுக்கான ஸ்பெஷல் ‘டீன் ஏஜ் பிரா’க்கள் உள்ளன. இதற்கு ‘ஹாப் சிலிப்’ என்று பெயர். இதனை பருவமடைந்தவர்களும் அந்த வயதில் பருவத்துக்காக காத்திருப்பவர்களும் அணியலாம்.
பதினெட்டு வயதுக்குப் பின் அவர்களும் பெரியவர்கள் அணியும் சாதாரண உள்ளாடைகளை தங்களின் அளவுக்கு ஏற்ப தேர்வு செய்து அணியலாம். இதுபோக ‘பே டெட்’ வகையும் உள்ளது. இதனைத் தான் பல பெண்கள் விரும்புகின்றனர். புடவைகள் சாதாரணமாக இருந்தாலும், அதற்கு கிராண்ட் பிளவுஸ் அணிவதுதான் இன்றைய டிரண்ட். அதுவும் லோ நெக்காக அணிவதையே பெண்கள் விரும்புகிறார்கள்.
 இப்படி அணியும்போது ஸ்ட்ராப் உள்ளாடைகளை அணியமுடியாது. ‘பேடெட்’ இங்குதான் உதவுகிறது. காரணம், ஜாக்கெட்டுடன் சேர்ந்து இது இணைக்கப்படுகிறது. அனைத்து சைஸுக்கும் ‘பேடெட்’ உள்ளன. அந்தக் காலத்தில் பெரும்பாலான பெண்கள் புடவை அல்லது தாவணியே உடுத்தியதால் மல்லு துணியில் தைக்கப்பட்ட உள்ளாடைகளே போதுமானதாக இருந்தன. ஜாக்கெட்டின் வண்ணத்துக்கு ஏற்ப அப்போது பிரா கிடைக்கவில்லை.
இப்போது அப்படியில்லை; வெளிப்புற ஆடையின் நிறத்துக்கு ஏற்ற உள்ளாடைகள் கிடைக்கின்றன. டி ஷர்ட், ஸ்ட்ராப்லெஸ், பாடெட், வயர்ட், மினிமைசர்... என வகைகள் மார்க்கெட்டில் கொட்டிக் கிடக்கின்றன...’’ என்று சொன்ன உமா அந்த வகை உள்ளாடைகளை எப்படி அணிய வேண்டும் என்பதை எளிமையாகப் புரிய வைத்தார். ‘‘உள்ளாடைகளை அணிந்த பிறகுதான் அதன் கொக்கியை பலரும் மாட்டுகிறார்கள். இது தவறு.
முதலில் ‘பிரா’வின் கொக்கியை முன் பக்கமாக போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகே முதுகுப் பக்கம் அதை திருப்பி அணியவேண்டும். இப்படி செய்யும் போதுதான் அவை உடலில் சரியாக பொருந்தும். ஆனால், பாடெட், வயர்ட் உள்ளாடைகளை முதலில் அணிந்துவிட்டு அதன் பிறகே கொக்கியை மாட்ட வேண்டும். குண்டாக இருப்பவர்கள் மார்பகங்களை முழுதாக மூடக்கூடிய உள்ளாடைகளை அணிவதே நல்லது.
இவர்கள் மினிமைசர் ‘பிரா’வை அணிந்தால் ஓரளவு ஒல்லியாகத் தெரிவார்கள்...’’ என்றவர் வெளிப்புற ஆடைகளுக்குத் தகுந்த உள்ளாடைகளை அணிவதே சாலச் சிறந்தது என்கிறார். ‘‘டி ஷர்ட் அல்லது ஷர்ட் அணியும்போது அதற்கான உள்ளாடைகளை அணியலாம். இது பனியன் துணியில் வருவதால், டி ஷர்ட் அணிந்தாலும் மார்பகங்களை எடுத்துக் காட்டாது. விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு இது ஏற்றது.
புடவை அல்லது சுரிதார் உங்கள் சாய்ஸ் என்றால் சாதாரண உள்ளாடைகளே போதுமானது. சுரிதார் அணியும் போது உள்ளாடைக்கு மேல் ஸ்லிப் அணிவது அவரவர் விருப்பம். அதேபோல் ஸ்டராப்லெஸ் மற்றும் டிராஸ்பேரன்ட் ஸ்ட்ராப் கொண்ட உள்ளாடைகளும் உள்ளன. தோள்பட்டை தெரியும் படி ஜாக்கெட் அல்லது டாப்ஸ் அணியும் போது இதை உடுத்தலாம். சில பெண்களுக்கு வயதின் காரணமாக மார்பகங்கள் தளர்ந்து போகும். அவர்கள் வயர்ட் உள்ளாடைகள் அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும்.
லேஸ் மற்றும் வேலைப்பாடுகள் கொண்ட உள்ளாடைகள் தேனிலவு செல்லும் தம்பதிகளுக்காகவே ஸ்பெஷலாக தயாரானவை...’’ என்ற உமா, ‘பிரா’க்கு சமமாக ‘இன்னர்வேர்’ அணிவதும் அவசியம் என்று வலியுறுத்துகிறார். ‘‘இதிலும் பல வகைகள் உண்டு. பிகினி, லோவெயிஸ்ட், ‘ஐந்து நாள்’ இன்னர்வேர், தாங், சீம்லெஸ், டிஸ்போசபிள், பாக்சர், பாடெட்... என பட்டியலிடலாம். இதையும் வெளிப்புற உடைக்கு ஏற்ப அணிய வேண்டும். ஜீன்ஸ் அணிபவர்களுக்கு லோ வெயிஸ்ட் இன்னர்வேர் சிறந்தது.
காரணம், இப்போது லோவெயிஸ்ட் ஜீன்சைத்தான் பெண்கள் விரும்பி அணிகின்றனர். கால், தொடைகளை இறுக்கிப் பிடிப்பது போல் இருப்பது பாக்சர் இன்னர்வேர். இதனை மிடி, ஸ்கர்ட், மினி ஸ்கர்ட் உடுத்தும்போது அணியலாம். மினி ஷார்ட்ஸ் போலவும் இது இருப்பதால் மற்றவர்களின் கண்களை உறுத்தாது. அணியவும், நடமாடவும் சவுகரியமாக இருக்கும்.
டம்மி டக்கர், தொப்பையை இறுக்கி சிக்கென்று எடுத்துக் காட்டும். மாதவிலக்கின் போது அணியக் கூடிய ‘ஐந்து நாள்’ இன்னர்வேரை பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். இதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இதிலும் பேடெட் இன்னர்வேர் உள்ளது. இது பின்புறத்தை எடுப்பாகக் காட்டும். இதிலும் லேஸ் வேலைப்பாடுகள் கொண்ட இன்னர்வேர்கள் உண்டு. இவை தவிர எல்லா காலமும் அணியக்கூடிய பனியன் துணியால் நெய்யப்பட்ட உள்ளாடைகளும் உள்ளன...’’ என்று சொல்லி முடித்தவர், இரவில் அணியும் நைட்டி விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்.
‘‘வேலை எல்லாம் முடித்துவிட்டு அக்கடா என்று படுக்கையில் விழும் சமயத்தில் பெண்களை கம்பர்டபிளாக உணர வைக்கும் உடைதான் நைட்டி. இரவில் மட்டுமே அணிந்த இந்த ஆடையை இப்போது பெண்கள் எல்லா நேரமும் உடுத்த ஆரம்பித்து விட்டார்கள். சாக்குப்பை போல் அணியக்கூடிய இந்த நைட்டிகள் இப்போது பல டிசைனில் வருகின்றன. பிரைடல் செட், காப்ரி செட், கவுன் டைப், பைஜாமா டைப், ஷார்ட்ஸ் டைப் என பல மாடல்கள் உள்ளன.
இதில் சில உடைகளை இரவில் படுக்கும்போது மட்டுமே பயன்படுத்த முடியும். குறிப்பாக பிரைடல் செட் மற்றும் கவுன் டைப் நைட்டிகள். பிரைடல் செட்டில் பல வகைகள் உள்ளன. மெல்லிய ஸ்ட்ராப் கொண்ட சாடின் துணியில் இந்த நைட்டிகள் வரும். இவை புதுமணத் தம்பதிகளுக்காகவே டிசைன் செய்யப்பட்டவை. இதில் டூ பீஸ் முதல் எயிட் பீஸ் வரை வெரைட்டிகள் உள்ளன. காப்ரி செட், பனியன் துணியில் உள்ள டாப் மற்றும் பேன்ட், இதில் முட்டி வரை இருப்பது ஷார்ட்ஸ் டைப்.
முட்டிக்கால் வரை பனியன் துணியில் கவுன் போல இருக்கும் உடைகளே, கவுன் டைப் நைட்டிகள். இது தவிர கர்ப்பிணிகளுக்கு என ஸ்பெஷல் நைட்டிகள் உள்ளன. இவை பேன்ட் மற்றும் டி ஷர்ட் டைப்பில் வரும். பேன்டின் இடுப்புப் பகுதி அகலமாக இருப்பதால், வயிற்றை இறுக்கிப் பிடிக்காது. மேலும் பனியன் துணி உடலில் எரிச்சலை ஏற்படுத்தாது.
அதேபோல் பிரசவத்துக்குப் பிறகான நைட்டிகளும் வந்து விட்டன. குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் இது டிசைன் செய்யப்பட்டிருக்கும்...’’ என்றவர், தேவையான உள்ளாடைகளை வாங்கினால் மட்டும் போதாது; அதை சரிவர பராமரிக்கவும் வேண்டும் என்கிறார். ‘‘நைட்டிகள் பருத்தி, பனியன் மற்றும் சாடின் துணிகளில் தைக்கப்படுகின்றன. வெயில் காலத்தில் பருத்தி நைட்டிகளும், குளிர் காலத்தில் சாடின் நைட்டிகளும் அணியலாம். பனியன் துணியில் வரும் நைட்டிகள் எல்லா காலத்துக்கும் ஏற்றது. அதே போல் உள்ளாடைகளும் பனியன் மற்றும் பருத்தி துணியில் தயாராகின்றன.
வேலைப்பாடு கொண்ட நைட்டிகள் மற்றும் உள்ளாடைகளை கையால் மட்டுமே துவைக்க வேண்டும். வாஷிங் மெஷின் உதவியை நாடக் கூடாது. உள்ளாடைகளை மிதமான சுடுதண்ணீரில் சோப்பு போட்டு ஊறவைத்து துவைத்தால் கிருமிகள் அழிந்து போகும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் இப்படிச் செய்வது அவசியம். அனைத்தையும் விட முக்கியமானது உள்ளாடைகளை ஆறு மாதத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. வெயில் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே சிவப்பு, கருப்பு மற்றும் அடர்த்தியான நிறங்களை பயன்படுத்தாமல் வெள்ளை மற்றும் சந்தன நிறத்தில் வரும் பருத்தி / பனியன் உள்ளாடைகளை அணியலாம்.
உள்ளாடைகளை நேரடியாக வெயிலில் காய வைக்கக் கூடாது. கோடைக் காலத்தில் வியர்வையின் தாக்கமும் பாதிப்பும் அதிகமாக இருக்கும். அது சருமத்தில் அரிப்பு, மங்கு, ரேஷஸ் (rashes) போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே கோடைக்காலத்தில் காலை, மாலை என இரண்டு வேளையும் குளித்தால் மட்டும் போதாது. கையோடு உள்ளாடைகளையும் மாற்ற வேண்டும்...’’ என்கிறார் உமா.
|