சோதனையில் HOLLYWOOD!
-த.சக்திவேல்
“கஞ்சா போன்ற போதைப் பொருளை பெரியவர்கள் அளவோடு எடுத்துக் கொள்ளலாம்” என்ற சட்ட திருத்தம் உலகிலேயே முதல் முறையாக கலிபோர்னியாவில் அமலுக்கு வந்திருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக ஆட்டம் பாட்டம் என லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் களைகட்டியது. இதை பயன்படுத்தி யாரோ சிலர் ‘அந்தக்’ காரியத்தை செய்திருக்கிறார்கள்! ஹாலிவுட்டின் அடையாளமே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் பளிச்சென்று தெரியக் கூடிய ‘HOLLYWOOD’ என்ற எழுத்துக்கள்தான்.
 ஒவ்வொரு எழுத்தும் 45 அடி உயரமும் இருபது அடி அகலமும் கொண்டது. இதில்தான் ‘O’ என்ற இரண்டு எழுத்துகளை எடுத்துவிட்டு ‘E’ என்ற எழுத்துகளை சில விஷமிகள் இரவோடிரவாக வைத்துவிட்டனர்! ‘‘இதுபோல் செய்வது அவ்வளவு சுலபமல்ல. பல நாட்கள் திட்டமிட்டு நிறைவேற்றியிருக்கிறார்கள். குற்றவாளிகள் யார் என கேமராவில் பதிவாகியிருக்கிறது. விரைவில் அவர்களை கைதுசெய்வோம்’’ என்று போலீசார் வழக்கம்போல் சொல்லியிருக்கிறார்கள்.
‘Weed’ என்றால் களைச்செடி என்று அர்த்தம். ஒருவேளை சட்ட திருத்தத்தை கேலி செய்வதற்காக கூட இது நிகழ்ந்திருக்கலாம்! ஏனெனில் 41 வருடங்களுக்கு முன்பும் கலிபோர்னியாவில் கஞ்சாவுக்காக சில சட்டங்கள் தளர்த்தப்பட்டன. அப்போதும் இதே மாதிரியான நிகழ்வு நடந்திருக்கிறது!
|