டிஜிட்டலில் பதுக்கப்படும் கறுப்புப் பணத்தை பிட்காயின் தடுக்கும்!



-ச. அன்பரசு

நாளொரு பொருளாதாரக் கொள்கையும், பொழுதொரு திட்டமுமாக பிரதமரின் மின்னல் வேக நடவடிக்கைகள் இந்திய மக்களை திண்டாட வைக்கின்றன. கரன்சிக்கு மாற்றான பேடிஎம், மொபிவிக் உள்ளிட்ட ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள், இப்போது பயனர்களின் சேவைகளுக்கு 1 - 2.9% கட்டணத்தை வசூலிப்பதால் பலரும் இதற்கு மாற்றான கரன்சியை தேடத் தொடங்கினார்கள். அப்போது கிடைத்ததுதான் பிட்காயின் (Bitcoin)!

2009ல் வணிக பரிமாற்றத்துக்காக, பாதுகாப்பான கரன்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட பிட்காயினில் கடந்த 2 மாதங்களாக இந்தியர்கள் பலரும் நம்பி முதலீடு செய்து வருகின்றனர். பிட்காயின் எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான ஸெப்பேவில், 50 ஆயிரம் உறுப்பினர்கள் நவம்பர் மாதம் மட்டுமே நியூ என்ட்ரி. விளைவு, பிட்காயின் முதலீட்டின் அளவு வெறும் ஐம்பது நாட்களில் 200% அதிகரித்திருக்கிறது. ‘‘ஆல்டர்நேடிவான முதலீட்டை விரும்பும் மக்களின் ஒரே சாய்ஸ் இப்போது பிட்காயின்தான். பணமதிப்பு நீக்கத்துக்கு சில நாட்களுக்கு பிறகு ஒரு பிட்காயினின் மதிப்பு 77 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. அதாவது ஏறத்தாழ 15% வளர்ச்சி கண்டிருக்கிறது...’’ வாயெல்லாம் பல்லாக பெருமையோடு பேசுகிறார் பிடிசிஎக்ஸ் பிட்காயின் நிறுவனத்தைச் சேர்ந்த சிவா காமேஸ்வர் ராவ்.

பிட்காயின் டெக்னிக்!   
ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் பிட்காயின் டெக்னிக் என்ன தெரியுமா? அதே இன்டர்நெட்டின் ஸ்டைல். என்ன, கிரிப்டாலஜி கொண்டு உடைக்க முடியாத அளவுக்கு பூட்டியிருக்கிறார்கள். தனிநபரோ, நிறுவனமோ, நாடோ கூட இதனை கட்டுப்படுத்த முடியாது என்ற சுதந்திரம்தான் இதன் பிளஸ். இமெயிலை ஒருவருக்கு என்டர் தட்டி அனுப்பும் சொகுசோடு, எளிதாக பிறருக்கு பணத்தை பிட்காயின்களாக எவ்வித சர்வீஸ் சார்ஜும் இன்றி (குறைந்த கட்டணத்தோடும்) அனுப்பலாம்.

சில நாடுகள் பிட்காயின்களை ஏற்று அதனை முறைப்படுத்தி இருக்கின்றன. ஆனால், இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இதுவரை பிட்காயினுக்கு க்ரீன் சிக்னல் காட்டவில்லை. பிட்காயின் குறித்த எச்சரிக்கைகளை மட்டுமே ஆர்பிஐ மக்களுக்கு தெரிவித்துள்ளது. பிட்காயின்களை மூன்று விதங்களில் பயன்படுத்தலாம். புதிய பிட்காயின்களை உருவாக்குவது, பிட்காயின்களை வாங்குவது (அ) மாற்றுவது, பொருட்கள் மற்றும் சேவைக்காக அதனை ஏற்றுக்கொள்வது.

இப்போது இந்தியாவில் யூனோகாயின், ஸெப்பே, காயின்செக்யூர், பிடிஎக்ஸ் இந்தியா ஆகிய நான்கு பிட்காயின் நிறுவனங்கள் மார்க்கெட்டில் உள்ளன. இதில் யூனோகாயின் மட்டும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக பிட்காயின்களை மாற்றித் தரும் நேரடி பிஸினஸில் ஆதிக்கம் செலுத்துகிறது.

டிஜிட்டல் தங்கம்!   
சென்ற ஆண்டு ஒரு பிட்காயின் மதிப்பு ரூ.15 ஆயிரமாக இருந்தது. இன்று அதன் மதிப்பு, ஒரு பிட்காயினுக்கு ரூ.73 ஆயிரம்! பிட்காயின் மதிப்பு இப்படி ராக்கெட் வேகத்தில் உயர அமெரிக்க தேர்தல், சீனாவின் யுவான் மதிப்பு வீழ்ச்சி... உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டாலும், இந்தியாவின் பணநீக்கம்தான் முக்கிய ரீசன் என்கிறார்கள்.

‘‘இனி பிட்காயின்தான் டிஜிட்டல் தங்கம்! விலை குறையும்போதே தங்கத்தை வாங்கும் அவசரமும், லிமிட்டும் பிட்காயினில் கிடையாது. ஃபிக்ஸட் டெபாசிட், ம்யூச்சுவல் ஃபண்ட், தங்கம் ஆகியவற்றைவிட அதிக லாபம் தருவது பிட்காயின் மட்டுமே. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், பங்குச் சந்தையைப் போல முதலீடு செய்பவர்களை கண்டுபிடிக்க முடியாது என்பது இதன் மிகப்பெரிய ஸ்பெஷல்...’’ உற்சாகமாக சொல்கிறார் சைபர்பிளாட் பணப்பரிமாற்ற நிறுவனத்தின் இயக்குநரான அலோக்ஜா.

யூனோகாயின் நிறுவனத்தில் பிட்காயின் மூலம் பிசினஸ் செய்ய புதிதாக ஆயிரத்து ஐநூறு பேர் இணைந்திருக்கிறார்கள். இப்படி உலகம் முழுக்க இந்த வணிகத்தில் இரண்டு லட்சம் பேர் ஒரு மாதத்துக்குள் சேர்ந்திருக்கிறார்கள் என்பதில் இருந்தே இதன் மவுசைத் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் பிட்காயின் வணிகத்தில் 65 சதவிகிதத்தை தன் கையில் வைத்திருக்கும் ஸெப்பே நிறுவனத்தின் கடந்தாண்டு லாபம் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்! ஸோ, இந்திய அரசு உடனடியாக விழித்துக்கொண்டு பிட்காயினை முறைப்படுத்தினால் மட்டுமே கறுப்புப் பணம் டிஜிட்டலாக பதுங்காமல் தடுக்க முடியும்.     

முகமில்லா பிட்காயின் பிரம்மா

2009ல் உருவான பிட்காயின், இணையத்தில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பரிமாறிக் கொள்ளும் உரிமையாளரற்ற, கட்டற்ற ரகசிய டிஜிட்டல் பணம். ஷடோஷி நகமோடோ (2010 வரை) என்ற முகமறியாத குழு (அ) நபர்தான் பிட்காயினின் பிரம்மா. பிட்காயின் என்பது சோதனை முயற்சி பணப் பரிவர்த்தனை. மதிப்பு மாறக்கூடியது என்பதால், வாங்கிய பிட்காயின்களை உடனே அவரவர் நாட்டு பணமாக மாற்றுவது நலம்.

பிட்காயின் பரிமாற்ற விவரங்களை பிளாக்செயின் பதிவேட்டில் எல்லோரும் பார்வையிடலாம். எனவே, பயனர்கள் ஒவ்வொரு பரிமாற்றத்தின்போதும் தம் முகவரியை மாற்றுவது பிரைவசி காக்கும். இந்தியாவில் தினசரி ஆயிரம் பிட்காயின்கள் புழங்குகின்றன. சீன வணிகத்திலோ நாளொன்றுக்கு 10 லட்சம் பிட்காயின்கள் மின்னலென வந்துவிட்டுச் செல்கின்றன. உலகம் முழுக்க கணக்கிட்டால், 24 மணி நேரத்துக்குள் 21 மில்லியன்கள் ‘ஹாய்’ சொல்லிவிட்டுப் போகின்றன.