கூரை வீட்டிலிருந்து மாளிகைக்கு...



-மை.பாரதிராஜா

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநரையும் நடிகரையும் உருவாக்கிய ஆணிவேர் இவர்தான்!

‘‘சிதம்பரத்துலதான் நான் பிறந்து, வளர்ந்தேன். ரொம்ப சாதாரண குடும்பம்.  வரலட்சுமி நோன்பு அப்ப பிறந்ததால எனக்கு வரலட்சுமினு பெயர் வைச்சாங்க...’’ சங்கோஜம் தென்பட்டாலும் கம்பீரமாகவே பேச ஆரம்பிக்கிறார் வரலட்சுமி மோகன். எடிட்டர் மோகனின் மனைவி. ‘தனி ஒருவன்’ மோகன் ராஜா, ஜெயம் ரவி ஆகியோரின் அம்மா என்றால் சட்டென்று அனைவருக்கும் இவர் யார் என்று புரிந்து விடும். அந்தளவுக்கு கிளை பரப்பி கனிகளையும், பூக்களையும் உலகுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் மோகன் குடும்பத்தின் ஆணிவேர் சந்தேகமேயில்லாமல் இவர்தான்.

எப்படி இது சாத்தியமானது? தன் வாழ்க்கைப் பயணத்தின் வழியே அதற்கு விடை தருகிறார் வரலட்சுமி மோகன். ‘‘சின்ன வயசுலேயே அம்மா தவறிட்டாங்க. ஒரே ஒரு அக்கா. நான் இரண்டாவது. எட்டாவது வரை ஓர் ஊர்லயும், பதினொண்ணாவது வரை இன்னொரு ஊர்லயும் படிச்சேன். எங்க வீடு அக்ரஹாரத்துல இருந்தது. ரொம்ப ஆச்சாரமான குடும்பம். தெருவுல ஃப்ரெண்ட்ஸோட விளையாடினாலும் தாகம் எடுத்தா எங்க வீட்ல வந்துதான் தண்ணீர் குடிப்பேன். அப்படித்தான் நான் வளர்ந்தேன்.

இப்படி இருந்த என்னை தலைகீழா மாத்தினது காந்தி கிராமம். டீன் ஏஜ் வயசுல அங்க அடியெடுத்து வைச்சேன். காந்தியக் கொள்கைகளை அப்படியே இம்மி பிசகாம பின்பற்றும் இடம் அது. தினமும் குரான், பகவத்கீதை, பைபிள்ல இருந்து சர்வமத பிரார்த்தனை நடக்கும். பிராமினா வளர்க்கப்பட்ட என்னுடைய ஆச்சாரங்கள் கொஞ்சம் கொஞ்சமா உதிர்ந்த இடம் அதுதான்...’’ தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை மறைக்காமல் வெளிப்படுத்தும் வரலட்சுமி மோகன், காரைக்குடியில் பிஏ படித்திருக்கிறார்.

‘‘அப்ப சென்னைல இருக்கிற எங்கப்பாவை பார்க்க அடிக்கடி வருவேன். அவர் கோயில் அர்ச்சகரா இருந்தார். அப்பா வீட்டுக்குப் பக்கத்துலதான் என் கணவர் தங்கியிருந்தார். வயது வித்தியாசம் இருந்தாலும் அப்பாவும் இவரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். நிறைய விஷயங்களை பரிமாறிப்பாங்க. அப்பாவும் நானும் பேசறப்ப எல்லாம் இவரைப் பத்தின பேச்சும் வரும். ரொம்ப உயர்வா இவரைப் பத்தி அப்பா சொல்வார். கேட்கக் கேட்க ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருக்கும். ஏன்னா, ஒரு நிகழ்வைப் பத்தி நான் என்ன நினைக்கிறேனோ அதையேதான் இவரும் அப்பாகிட்ட பேசியிருப்பார்!

யோசிச்சுப் பார்த்தா என் கணவர் மேல எனக்கு காதல் வந்ததுக்கே எங்கப்பாதான் காரணம்னு நினைக்கறேன். நல்ல கணவரா, நல்ல மருமகனா இவர் இருப்பார்னு அப்பா கணிச்சிருக்கலாம். எனக்கு அம்மா கிடையாது. இவருக்கு அப்பா கிடையாது. இந்த ஏக்கங்கள் கூட எங்களை இணைச்சிருக்கலாம். என் கணவருக்கு சொந்த ஊர் மதுரை பக்கம் திருமங்கலம். பனிரெண்டு வயசுல சென்னைக்கு வந்திருக்கார்.

அதுவும் தன் ஊர்லேந்து நடந்தே! முதல்ல பாண்டிபஜார்ல தங்கியிருக்கார். டணால் தங்கவேலுகிட்ட வேலை பார்த்திருக்கார். தங்கவேலு அண்ணனுக்கு பசங்க கிடையாது. அதனால என் கணவரை தன் மகனா வளர்த்திருக்கார். ‘நீயும் சினிமாவை கத்துக்கோ... எடிட்டருக்குதான் இப்ப நல்ல மரியாதை’னு சொல்லி அவர்தான் இவரை எடிட்டிங் கத்துக்க வைச்சிருக்கார்.

அப்ப இவரோட மாச சம்பளம் பதினைந்து ரூபாய். இது பத்தாதுன்னு தங்கவேலு அண்ணன் தன் கைல இருந்து மாசா மாசம் இன்னொரு பதினைந்து ரூபாயை கொடுப்பாராம். இந்த விஷயம் எல்லாம் எங்கப்பா என்கிட்ட சொன்னதுதான்...’’ என்று பேசிக் கொண்டே வந்த வரலட்சுமி சட்டென்று சுதாரித்து கணவரை ஏறிடுகிறார். ‘‘ஏங்க... எல்லாத்தையும் சொல்லிடலாமா..?’’ கேட்ட மோகன் பக்கென்று சிரிக்கிறார். ‘‘நம்மகிட்ட ஏது ஒளிவு மறைவு? தாராளமா சொல்லும்மா...’’

க்ரீன் சிக்னல் கிடைக்க, ‘எப்படி எங்களுக்குள்ள மனப்பொருத்தம்...’ என்று நம்மை நோக்கி பார்த்தபடி தொடர்ந்தார். ‘‘நாங்க பார்க், பீச்சுன்னு எங்கயும் சுத்தலை. ‘உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்’னு ஒருநாள் சொன்னார். இதுக்காகத்தானே காத்திருந்தேன்? உடனே சம்மதிச்சேன். எங்கப்பாவும் தடையேதும் சொல்லலை. மனப்பூர்வமா ஆசீர்வதிச்சார்.

இத்தனைக்கும் என் கணவர் எங்க சமூகத்தைச் சேர்ந்தவர் இல்ல... ஏன், மதமும் வேற வேற. ஆனா, இந்த வேறுபாடு எதுவுமே எனக்கும் எங்கப்பாவுக்கும் தோணலை. நான் பிஏ முடிக்கிறப்ப எங்க கல்யாணம் நிச்சயமாச்சு. 1972ல திருத்தணில கல்யாணம். அப்புறம் மதுரை போனோம். இவரோட மத வழக்கப்படி திரும்பவும் அங்க கல்யாணம் செஞ்சுகிட்டோம்.

உண்மைல நான் மணந்தது கணவரை இல்ல... தாயை. அந்தளவுக்கு எனக்கு தாயுமானவரா இவர் இருந்தார்... இருக்கிறார்... பொய் சொல்லலை. நடந்ததை பூரா கேட்டா நீங்களே இந்த முடிவுக்குத்தான் வருவீங்க. மணமானதும் வடபழனி, ராகவன் காலனில வீடு பிடிச்சோம். அப்ப எல்லாம் வேற மதத்துக்காரங்களுக்கு வீடு தர மாட்டாங்க. சினிமால இருக்காங்கன்னா கேட்கவே வேண்டாம். இந்த சிரமம் எல்லாம் எங்களுக்கு ஏற்படலை. வீடு சுலபமா கிடைச்சது. மாடிக்கு மேல ஓலை போட்ட கூரை. இதுதான் எங்க வீடு. வாடகை, மாசம் 55 ரூபாய். பாத்ரூம், குளியலறை எல்லாமே கீழ. குடிக்கிற தண்ணீரையும் கீழேந்துதான் எடுத்துட்டு வரணும்.

பெரும்பாலும் பழைய சோறுதான் சாப்பிடுவோம். சினிமால இவர் இருக்கிறதால நல்ல சாப்பாடு இவருக்கு கிடைக்கும். ஆனா, வீட்ல நான் பழைய சோறு சாப்பிடுவேன்னு அங்க எதையும் சாப்பிட மாட்டார். வீட்டுக்கு வந்து என் கூட சேர்ந்து பழைய சோறை சாப்பிட்டுப் போவார். அப்ப... அந்த வீட்ல எனக்குக் கிடைச்ச மனநிம்மதியும் சந்தோஷமும் பாதுகாப்பும் இருக்கே... ஆண்களுக்கு இது புரியாது.

பெண்களால மட்டுமே உணர முடிஞ்ச சந்தோஷம் இது...’’ குரல் தழுதழுக்க ஆரம்பிக்கவே வரலட்சுமி அமைதியாகிறார். சட்டென்று மோகன் கொண்டு வந்து கொடுத்த நீரை ஒரு மடங்கு குடித்துவிட்டு இயல்புக்குத் திரும்புகிறார். ‘‘என்னை வேலை செய்ய விட்டதேயில்ல. தண்ணீரைப் பிடிச்சு வைப்பார். எழுந்திருக்கறதுக்குள்ள சமையல் செஞ்சு முடிச்சிருப்பார். ஆனாலும் வேலைதான் இவருக்கு முதல் மனைவி. இரவு பகல் பார்க்காம உழைப்பார். சைக்கிள்லதான் வேலைக்கு கிளம்புவார்.

நமக்காக இப்படி நாக்கு செத்துப் போய் பழைய சோறை சாப்பிடறாரேன்னு ஒருநாள் அசைவம் சமைக்கலாம்னு முடிவு செஞ்சேன். கறிக்கடைக்காரர் என்னைப் பார்த்ததுமே, ‘அப்படி ஓரமா போம்மா... இந்த வாசனை உங்களுக்கு பிடிக்காது’னு சொன்னது இப்பவும் நினைவுல இருக்கு. ‘இல்ல... கறி வாங்கத்தான் நான் வந்தேன்’னு சொன்னதை அவரால நம்பவே முடியலை. மட்டன் வாங்கி இவருக்காகவே குழம்பு வைச்சேன்.

மதியம் சாப்பிட வந்தவரு, ‘என்ன நம்ம வீட்ல மட்டன் வாசனை வருது’னு கேட்டார். ‘நான்தான் சமைச்சு வைச்சிருக்கேன்’னு சொன்னதும் ஷாக் ஆகிட்டார். ‘நாக்கு ருசிக்காக இன்னிக்கி நான் இதை சாப்பிட்டா... அப்புறம் அடிக்கடி நீ கஷ்டப்படணும். உன்னை சிரமப்படுத்த விரும்பலை’னு மொத்த குழம்பையும் தூக்கி சாக்கடைல கொட்டிட்டார்... அந்த ஓலை வீட்டுலதான் பெரிய பையன் ராஜா பிறந்தான். இப்ப டென்டிஸ்ட்டா இருக்கிற எங்க மகள் ரோஜாவும் அங்கதான் பிறந்தா. இதுக்குள்ள இவரும் படிப்படியா முன்னேற ஆரம்பிச்சார்.

டப்பிங் படங்களை வாங்கி விநியோகம் செஞ்சார். தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். ரொம்ப ராசியானவர்னு இண்டஸ்ட்ரில இவருக்கு பெயர் கிடைச்சது. குறிப்பா தெலுங்குல. சிரஞ்சீவிக்கு மார்க்கெட் டல்லா இருந்தப்ப துணிஞ்சு அவரை ஹீரோவா போட்டு படம் எடுத்தார். அது பெரிய சக்சஸ் ஆச்சு. அதுக்குப் பிறகு திரும்பிப் பார்க்க நேரமே இல்லாதபடி சிரஞ்சீவி முன்னேற ஆரம்பிச்சார்.

அதே மாதிரி சில லட்சங்கள்ல சம்பளம் வாங்கிட்டு இருந்த பவன் கல்யாணுக்கு மிகப்பெரிய பிரேக்கை கொடுத்தது கூட என் கணவர்தான். இதுக்குப் பிறகுதான் அவரோட சம்பளமும் கோடிகளுக்கு உயர்ந்தது. இப்படி நாங்க முன்னேற ஆரம்பிச்சதும் கோடம்பாக்கம் ஏரியாவுல சின்னதா ஒரு வீடு வாங்கி குடிபோனோம். ரவி பிறக்கறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி ‘lost of the world’ படத்துக்காக இவர் அதிகம் உழைச்சார். அதுல உடம்பு முடியாமப் போய் படுத்த படுக்கையானார்.

1980ல ரவி பிறந்தப்ப என் கணவர் படுக்கைலதான் சிரமப்பட்டுகிட்டு இருந்தார். ரவி பிறந்ததுக்கு அப்புறம் மறு பிறவி எடுத்தார். அதனாலயே கடைக்குட்டினு ரவி மேல எங்களுக்கு அதிக பாசம். அதே மாதிரி மூத்த மகன் என்பதால் ராஜா மேல கொள்ளைப் பிரியம். ஒரே பெண் என்பதால் ரோஜா எங்களுக்கு செல்லம். ஆக, மூணு குழந்தைகளுமே எங்களுக்கு ஸ்பெஷல்தான்.

ஒண்ணு தெரியுமா, எங்க மாமியாருக்கு பெண் குழந்தை கிடையாது. அதனால என்னை தன் மகள் மாதிரி கவனிச்சுக்கிட்டாங்க. இப்ப எங்களுக்கு கூடுதலா ரெண்டு மகள்களும் ஒரு மகனும் கிடைச்சிருக்காங்க. என்ன அப்படி பார்க்கறீங்க? எங்க வீட்டுக்கு வந்திருக்கிற மருமகள்களையும் மருமகனையும்தான் சொல்றோம். மூணு பேரன், மூணு பேத்திகள்னு வாழ்க்கை ரொம்ப நிறைவா சந்தோஷமா போயிட்டு இருக்கு...’’ சொல்லும்போதே வரலட்சுமி மோகனின் முகத்தில் அவ்வளவு கனிவு, பெருமிதம். உண்மையில் அது ஆணிவேரின் கம்பீரம்! 

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Double MA

வரலட்சுமி பிஏ படித்தது மனோரமா ஆச்சி பிறந்த பள்ளத்தூரில் உள்ள சீதாலட்சுமி ஆச்சி கல்லூரியில். திருமணத்துக்குப் பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் ஒரு எம்ஏவும், திருப்பதி வெங்கடேஸ்வரா யுனிவர்சிட்டியில் ஆங்கிலத்தில் எம்ஏவும் முடித்திருக்கிறார். மனைவி MA படிக்க ஆசைப்பட்டதால், அவரை டபுள் MA படிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார் எடிட்டர் மோகன். முதல் எம்ஏ படிக்கும் போது ராஜா பிறந்திருக்கிறார். இரண்டாவது எம்ஏ படிக்கும் போது ரோஜா பிறந்திருக்கிறார். ‘நான் ஹால்ல எக்ஸாம் எழுதறப்ப வெளிய கைக்குழந்தையோட இவர் எனக்காக வெயிட் பண்ணுவார்...’ என சிலிர்க்கிறார் வரலட்சுமி.

காதல் பரிசு

எடிட்டர் மோகன் முதன் முதலில் தன் மனைவிக்கு வாங்கிக் கொடுத்த பரிசு, இரண்டு தங்க வளையல்கள். வரலட்சுமி எம்ஏ படிக்கும் காலத்தில் ரூ.40க்கு பிளாட்ஃபார்ம் ஒன்றில் விற்பனைக்கு இருந்த ரீடிங் டேபிளை வாங்கிக் கொடுத்திருக்கிறார் மோகன். அதை இன்றும் தன் அறையில் பத்திரமாக வைத்திருக்கிறார். இதன் மீது சின்னதாக தூசி படர்ந்தாலும் வரலட்சுமிக்கு பிடிக்காதாம்!

வசனகர்த்தா

‘இயற்கையின் அதிசயங்கள்’ என்ற படத்துக்கு வரலட்சுமி வசனம் எழுதியிருக்கிறார். திருமணமானதும் கணவருடன் சேர்ந்து பார்த்த முதல் படம், சென்னை சாந்தி தியேட்டரில் ‘வசந்தமாளிகை’. குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பார்த்த முதல் படம், கிருஷ்ணவேணியில் ‘ராஜபார்ட் ரங்கதுரை’. அதிக முறை இவர் பார்த்து ரசித்த படம், ‘எம்.குமரன் s/o. மகாலட்சுமி’.

எழுத்தாளர்

மில்டன், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷாவின் நூல்களை வரலட்சுமி விரும்பி வாசிக்கிறார். வீட்டில் மினி லைப்ரரி இருக்கிறது. தமிழில் கல்கி, லட்சுமி, ஜெயகாந்தன் நூல்களின் கலெக்‌ஷன்ஸை வைத்திருக்கிறார். கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் ஆரம்பித்த ‘தனவணிகன்’ என்ற  தனிச்சுற்று இதழில் ‘வான் புகழ் வள்ளுவன்’ தலைப்பில் திருக்குறள் அதிகாரங்களுக்கு இப்போது விளக்கவுரை எழுதி வருகிறார். விரைவில்  தனிப் புத்தகமாக இதைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று:

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
- குறள்

விளக்கம்:  ஒழுக்கம் மனிதனுக்கு பெரும் சிறப்பினைத் தருவதால் ஒழுக்கம் உயிரையும் விட சிறந்ததாய் பாதுகாக்கப்படும். பலவற்றையும் ஆராய்ந்து தெரிந்து கொண்டாலும்  இறுதி வரை துணையாய் இருப்பது ஒழுக்கம் ஒன்றே ஆகும்.

அன்னபூரணி

மோகன்ராஜாவுக்கு வாழைப்பூ உசிலி பிடிக்குமாம். ஜெயம் ரவிக்கு சேப்பங்கிழங்கு வறுவலும், சிக்கனும் ஃபேவரிட். என் கையால் எதை சமைத்துக் கொடுத்தாலும் என் கணவருக்கு பிடிக்கும்-என்று வெட்கப்படுகிறார்.

குழந்தை வளர்ப்பு

சின்ன வயதில் இருந்தே எதைப் பேசினாலும் ராஜா லாஜிக்குடன் பேசுவாராம். அதனாலேயே அவரை இயக்குநராக்க முடிவு செய்து திரைப்படக் கல்லூரியில் சேர்த்திருக்கிறார்கள். சிவாஜி படங்களை ரவி விரும்பிப் பார்ப்பாராம். எனவேதான் அவரை நடிகராக்க முடிவு செய்து மும்பை ‘நமீத் கபூர் ஆக்ட்டிங் இன்ஸ்டிடியூட்’டில் சேர்த்திருக்கிறார்கள்.

பொதுச் சேவை

பன்னிரெண்டு வருடங்களாக Lions Club President. Serve dead என்ற அனாதை பிணங்களை எரிக்கும் சேவையில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார். பிடித்தது மெரூன் கலர். எனவே மெரூன் நிற புடவைகளையே அதிகம் வாங்குகிறார். ஒவ்வொருமுறை புதுப்புடவையை வாங்கும்போதும் பழைய புடவையை தானமாகக் கொடுக்கும் பழக்கத்தை இன்றும் கடைப்பிடிக்கிறார்.