விருச்சிக லக்னம் - செவ்வாய் புதன் சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 75

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

அக்னியான செவ்வாயும், வாயுவான புதனும் இணைந்தால் ஒரு விஷயத்தை பெரிதாக்குவார்கள். லக்னாதிபதியான செவ்வாயோடு, அஷ்டமாதிபதியான புதன் சேர்ந்தால் எதைச் செய்தாலும் அலைச்சல், சின்னச்சின்ன விஷயங்களில் தடங்கல் வரும். வீடு, மனை வாங்கும்போது தங்கள் பெயரில் வைத்துக்கொள்ளக் கூடாது. மிகச் சிறந்த உளவாளியாக இருப்பார்கள்.

ஆனால், எப்போதும் இவர்களின் மூளை கொதித்தபடியே இருக்கும். வரைமுறை தாண்டிப்போய் சம்பாதிக்கவோ உதவியோ கேட்க மாட்டார்கள். அதேசமயம் எல்லோரையும் நம்பி ஏமாந்து கொண்டேயிருப்பார்கள். எல்லோருமே சுயநலவாதியாக இருப்பதுபோல் அவ்வப்போது உணர்வார்கள். மேலே சொன்னவை பொதுவான சில விஷயங்கள். ஒவ்வொரு ராசியிலும் இவ்விரு கிரகங்கள் அமர்ந்தால் என்னென்ன பலன்கள் என்று பார்ப்போமா! லக்னத்திலேயே, அதாவது விருச்சிக ராசியிலேயே செவ்வாயோடு புதன் அமைந்திருந்தால் வண்டிகளில் செல்லும்போது பாதுகாப்புக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

எந்த விஷயத்திலுமே ஆர்வமில்லாமல் மசமசவென்று இருப்பார்கள். உடனே எந்த காரியத்தையும் முடிக்க மாட்டார்கள். குரூரமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்படுவார்கள். இவர்களை மூளைச் சலவை செய்வது எளிது. எவ்வளவு முக்கியமான விஷயமானாலும் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். தனுசு ராசியில் அதாவது லக்னத்திற்கு இரண்டாவது இடத்தில் செவ்வாயும் புதனும் அமைந்திருந்தால் இதுவும் கொஞ்சம் சிக்கலான அமைப்புதான். மாறு கண், தெற்றுவாய் என்று சில பிரச்னைகள் இருக்கும். கையில் காசு பணம் தங்காது. என்ன செலவு செய்கிறார்கள், எதற்குச் செய்கிறார்கள் என்று சுத்தமாகத் தெரியாது.

ஆரம்பக் கல்வி சுமாராகவும், உயர்கல்வி நன்றாகவும் அமையும். சுரீரென்று கோபம் வரும். தான் பிறந்த இனத்திற்காக பாடுபடுபவர்களாக இருப்பார்கள். மகர ராசியான மூன்றாம் இடத்தில் புதனும் செவ்வாயும் சேர்ந்திருக்கிறார்கள். இங்கு புதனை விட செவ்வாயின் கையே ஓங்கியிருக்கும். புதனின் வேகத்தை செவ்வாய் ஒருபக்கம் குறைத்தபடியே இருக்கும். மனதில்பட்டதை மறைக்காமல் பேசுதல் போன்ற குணங்களும் உண்டு.

இயற்கைச் சீற்றத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு இவர்கள்தான் முதலில் சென்று உதவுவார்கள். இவை இரண்டும் சேருவதென்பது முரண்பாடுகளின் முழுத் தொகுப்பாகும். மண வாழ்க்கையில் சூறாவளியை உண்டாக்கி விட்டுச் செல்லும். இளைய சகோதரரோடு இயைந்து போக முடியாது. முயற்சி ஸ்தானமாகவும் இது இருப்பதால் போதும் போ என்று எல்லா முயற்சிகளையும் கிடப்பில் போட்டு விடுவார்கள். கும்ப ராசியான நான்காம் இடத்தில் செவ்வாயும் புதனும் ஒன்று சேரும்போது, அதாவது சுக ஸ்தானத்தில் சேரும்போது நீடித்த ஆரோக்ய குறைவு இருந்து கொண்டேயிருக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவார்கள். சிறு வயதிலேயே தாயை விட்டு பிரிந்து வாழுதல் அல்லது உறவினர்களின் வீட்டில் வளருதல் என்றெல்லாம் வாழ்க்கை சோதனையாக இருக்கும். கியர் வண்டியை இயக்காது சாதாரண வண்டியை இயக்கிச் செல்லுதல் நல்லது. அதிக வட்டிக்கு கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று கடன் வாங்காமல் இருப்பது நல்லது.

மீன ராசியான ஐந்தாமிடத்தில் லக்னாதிபதியான செவ்வாய் கைகள் ஓங்குகின்றன. பூர்வீகச் சொத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். பூர்வீகச் சொத்தின் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கக் கூடாது. தாய் மாமன் உறவில் ஏதேனும் பகை உணர்வு இருந்து கொண்டேயிருக்கும். உறவினர்களால் எப்போதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். இவர்கள் நகரத்து நெரிசல் மிகுந்த குடித்தனங்களில் இருக்க முடியாமல் வெளியே தள்ளித்தள்ளி இருப்பார்கள்.

கஷ்டப்பட்டு பாதுகாத்து வைத்திருக்கும் சொத்தை பிள்ளைகள் அழிப்பார்கள். இல்லையெனில் விற்றுவிட்டு வேறு ஊருக்கு போவார்கள். குழந்தை பாக்கியமே கூட தாமதப்பட்டுத்தான் கிட்டும். மேஷ ராசியான ஆறாம் இடத்தில் செவ்வாய் ஆட்சி பெறுகிறது. முன்கோபம், விதண்டாவாதமெல்லாம் எப்போதும் இருக்கும். இந்தச் சேர்க்கை பெற்றிருப்பவர்கள் சகோதரர்களோடு விட்டுக் கொடுத்துப்போனால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்.

இவர்களுக்கு செவ்வாய் தசையோ அல்லது புதன் தசையோ நடக்கும்போது சகோதரங்களுக்குள் பிரச்னைகள் வரும். இவர்களுக்கு வழக்கில் வெற்றி உண்டு. யாருக்கும் ஜாமீன், கேரண்டி கையெழுத்து போடாமல் இருப்பதே நல்லது. சூணாம் வயிறு என்று கிராமத்தில் சொல்வார்கள். திடீரென்று வயிறு உப்பி வீங்கிவிடும். அடுத்தவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவார்கள். வியாபாரமாக இருந்தால் அலைச்சலும் அதிகமாக இருக்கும். நோயை எப்போதும் பாராட்டிக் கொண்டே இருக்கக் கூடாது.

நோயை மனதிற்குள் கொண்டுவரக் கூடாது. ரிஷப ராசியான ஏழாம் இடத்தில் செவ்வாயும் புதனும் வருவதால் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. சேர்ந்து வாழ்வது மிகவும் கஷ்டமாகும். மண வாழ்க்கை பாதித்து பின்னரே சரியாகும். குடும்ப சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்தே சேர்க்க வேண்டும். இல்லையெனில் நிரந்தர நோயுற்றவர்கள் வாழ்க்கைத் துணையாக வரும் வாய்ப்புகள் உண்டு.

இந்த அமைப்பை உடையவர்களின் சொந்த ஜாதகத்தில் களத்திரகாரகனான சுக்கிரன் பலவீனமாக இருந்துவிட்டால் இன்னும் பிரச்னை அதிகமாகும். எட்டாம் இடமான மிதுனத்தில் புதன் ஆட்சியாகிறார். இங்கு செவ்வாயும் புதனும் அமரும்போது வித்தியாசமான பலன்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. விபரீத ராஜயோகத்தைத் தரும். ஷேர் மூலமாக உச்சத்தில் சென்று அமருவார்கள். இவர்கள் தங்களின் தாய்மொழி இல்லாத வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் சென்று வசித்தால் பிரகாசிக்கலாம்.

மகிழ்வான பழைய இன்ப நினைவுகளை மறந்து விட்டு எதிர்காலத்தில் ஏதேனும் சோகமான விஷயங்கள் நடந்துவிடுமோ என்று பயந்து கொண்டேயிருப்பார்கள். ஒன்பதாம் இடமான கடகத்தில் இருவரும் அமரும்போது மகிழ்வான பழைய இன்ப நினைவுகளை மறந்து விட்டு எதிர்காலத்தில் ஏதேனும் சோகமான விஷயங்கள் நடந்துவிடுமோ என்று பயந்துகொண்டேயிருப்பார்கள். நிறைய தர்மகாரியங்களைச் செய்துகொண்டேயிருப்பார்கள்.

தந்தை வழிச் சொத்துக்களைக் கூட வேண்டாமென்று சிலர் மறுப்பார்கள். நள்ளிரவு நேரங்களில் சுயமாக வாகனத்தை செலுத்தக் கூடாது. கடுங்கோபம் கொள்ளுதலை இவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். மர்ம ஸ்தானத்தில் ஏதேனும் நோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். சொத்துக்கள் உள்ளோர்கள்தான் உங்களுக்கு நண்பர்களாகவும் இருப்பார்கள்.

பத்தாம் இடமான சிம்மத்தில் செவ்வாயும் புதனும் வருவதால் தடயவியல் நிபுணராக வருவார்கள். மோப்பநாய் பயிற்சியாளர், குற்றவாளிகளை இனங்கண்டறிதல் என்று பல்வேறு திறமைகள் பெற்றிருப்பார்கள். கலைத்துறையில் டைரக்டர், கலை இயக்குனர் என்று நுழைந்து நிச்சயம் சாதிப்பார்கள். ஐ.ஏ.எஸ்., வங்கி அதிகாரி, டாக்டர், கெமிக்கல் இன்ஜினியர் போன்ற துறைகளில் தனித்துவமாக செயல்படுவார்கள்.

மத்திம வயதுக்கு மேல் தர்ம ஸ்தாபனங்களில் ஈடுபட்டோ அல்லது தானே ஒன்றைத் தொடங்கியோ மற்றவர்களுக்கு உதவுவார்கள். இன்னொரு வகையில் பார்த்தால் தந்தையின் கனவை இவர்களே நிறைவேற்றுவார்கள். பதினோராம் இடமான கன்னி ராசியில் புதன் ஆட்சி பெறுகிறார். மூத்த சகோதரரின் தவறான வழிகாட்டுதலால் சில விஷயங்களில் சிக்கிக் கொள்வார்கள். கொஞ்சம் காது கேளாத் தன்மை இருக்கும். கப்பல் வழி பிரயாணங்கள் மேற்கொள்வதில் மிகவும் ஆவலோடு இருப்பார்கள். மேலும், கடல் வழி வாணிகத்தால் மிகுந்த லாபத்தையும் அடைவார்கள்.

பன்னிரெண்டாம் இடமான துலாம் ராசியில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால் ஆன்மிகத்தில் தீவிர ஆர்வத்தோடு செயல்படுவார்கள். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதைக் குறித்த ஆரோக்யமான விவாதத்தை ஏற்படுத்தி அறிவை மேம்படுத்திக் கொள்வார்கள். முருக உபாசகராக இருப்பார்கள். இந்த அமைப்பு கொஞ்சம் சிக்கலானதுதான். ஒன்றையொன்று விஞ்சும் பொருட்டு போட்டியிட்டு அலைக்கழிப்பவைதான். உணர்ச்சிக்கும், அறிவுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தையே இவ்விரு கிரகங்களும் உணர்த்துகின்றன.

பொதுவாகவே, இந்த அமைப்பைப் பெற்றவர்கள், ஐயனார் போன்ற தெய்வங்களை வணங்குவது நல்லது. இன்னும் முக்கியமாக குதிரையில் அமர்ந்திருக்கும் எல்லை தெய்வங்களாக இருப்பின் நல்லது. சில கோயில்களில் ஐயனாரை குதிரையில் அமர்த்தி வைத்து வணங்குவார்கள். அப்படிப்பட்ட கோயில் நீங்கள் வசிக்கும் பகுதியில் இருந்தால் சென்று வணங்கி வாருங்கள். மேலும், தஞ்சாவூரிலுள்ள பள்ளி அக்ரஹாரத்திலிருந்து, கும்பகோணம் பைபாஸ் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிறைகாத்த ஐயனார் எனும் கோயில் உள்ளது.

இக்கோயில் சிறியதாக இருந்தாலும் கீர்த்திமிக்க கோயிலாக விளங்குகிறது. தொன்மையின் இனிமையாக கோயில் ஒருபக்கம் விளங்க, ஆலமரமும், பனையும் ஒன்றோடொன்று பிணைந்து வானுயர வளர்ந்து நிற்கும் அழகு பிரமிப்பூட்டுகிறது. அதேபோல கருவறையின் அருகே இருக்கும் நாக்கொட்டை மரம் மிகச் சிறந்த மூலிகையாகக் கருதப்படுகிறது.

கருவறையில் அருள்பாலிக்கும் ஐயனாருக்கு அபிஷேகம் புரிபவர்களை அனுதினமும் இங்கு காணலாம். வழக்குகள், கொடுக்கல் வாங்கல் பிரச்னை என்று சூழ்நிலையால் சிறை செல்ல நேர்ந்த நேர்மையுள்ளோர் இத்தல ஐயனாரை வணங்க மிக எளிதாக சிறை, வழக்குகளிலிருந்து மீட்டு நல்வாழ்வு சேர்க்கிறார். மேலும், கோயிலின் வாயிலில் குதிரையும் யானையும் வைத்திருக்கின்றனர். அதையும் தரிசித்து விட்டு வாருங்கள்.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்