சவுக்கார்பேட்டை



-பேராச்சி கண்ணன்

அறிந்த இடம் அறியாத விஷயம்

சென்னையின் மிக நீளமான தெரு அது. நம்பமாட்டீர்கள். கிட்டத்தட்ட மூன்று கிமீ தூரம். பூங்கா நகரின் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தொடங்கி ஸ்டான்லி மருத்துவமனை இருக்கும் பழைய சிறைச்சாலை வரை விரிந்திருக்கும் அந்தத் தெருமுனையில் நிற்கிறோம். ‘தங்கசாலை’ என்ற பெயர் வரவேற்கிறது. சென்னைவாசிகளுக்கு ‘மின்ட் ஸ்ட்ரீட்’! பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இங்கே தங்க நாணயங்களைத் தயாரித்ததால் இப்பெயர் வந்திருக்கிறது.

ரிக்‌ஷாக்காரர் ஒருவரிடம் மெதுவாகக் கேட்கிறோம். ‘சவுகார்பேட்டை..?’ ‘இதெல்லாமேதான்ப்பா. உனக்கு எங்க போகணும்? வா குந்து’ புகை ஊதியபடியே சவாரிக்கு அழைக்கிறார். ‘வேண்டாம்’ எனத் தலையாட்டியபடி நடக்கிறோம். ஏகாம்பரேஸ்வரர் கோயில், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயிலைத் தாண்டி, என்.எஸ்.சி. போஸ் சாலையைக் கடக்கிறோம். அதன்பிறகும் நீள்கிறது மின்ட் தெரு. பத்து பதினைந்து அடியெனக் குறுகிச் செல்லும் அத்தெருவின் இருபுறங்களிலும் வரிசையாக எழுந்து நிற்கின்றன கடைகள்.

முழுவதும் டிசைன் சேலைகளாலும் சல்வார்களாலும் கலர்ஃபுல்லாக மின்னுகின்றன. ஒவ்வொரு கடைக்கு முன்பும் ஒரு ரோட்டோர சிறு வியாபாரி. காய்கறிகள், துணிகள், ஒப்பனைப் பொருட்கள், பாணிபூரி, ஸ்வீட் கடைகள், சாட் ஐட்டங்கள் என நீண்டு பரவிக் கிடக்கிறார்கள். காதில் விழும் இந்தி உரையாடல்கள்... வேறு மாநிலத்துக்கு வந்துவிட்ட ஓர் உணர்வை தானாகவே எழுப்புகின்றன.

மேற்கு பக்கம் வால்டாக்ஸ் சாலை. கிழக்கு பக்கம் குடோன் தெரு. வடக்கு பக்கம் ஆதியப்பன் தெரு. தெற்கு பக்கம் என்.எஸ்.சி. போஸ் சாலை என சின்ன வரையறைக்குள் ஒடுங்கிக் கிடக்கும் இந்த ‘குட்டி’ வடஇந்தியாவின் பெயர்தான் ‘சவுகார்பேட்டை!’ ‘சவுகார்’ என்றால் Money lender என்று அர்த்தமாம். வணிகத்துக்காக பணப்பரிவர்த்தனை செய்த இந்த மக்கள் வசிக்கின்ற பகுதியே ‘சவுகார்பேட்டை’யாக வரலாற்றில் பதிந்திருக்கிறது.

‘டங்... டங்... டங்...’ ஒலி கேட்டு சட்டெனத் திரும்புகிறோம். பொருட்களுடன் உட்கார்ந்திருக்கும் இரண்டு பெண்மணிகளை ரிக்‌ஷாவில் இழுத்து வருகிறார் ரிக்‌ஷாக்காரர் ஒருவர். ஆட்டோக்களும், கால் டாக்சிகளும் பெருகிப் போன சென்னையில் வேறெங்கும் காண முடியாத ரிக்‌ஷா சவாரி. ‘‘இங்க ரெண்டாயிரம் ரிக்‌ஷா இருக்கும் சார்... நானும், இவரும் 25 வருஷங்களா இங்க  ரிக்‌ஷா ஓட்டிட்டு இருக்கோம். எங்களுக்கு அரியலூர் பக்கமா ஒரு கிராமம். விவசாயம் பொய்த்துப் போனதால ரிக்‌ஷா இழுக்க வந்தோம்.

பக்கமா இருக்குற தெருவுக்கு போகணும்னா 20 ரூபாதான். கொஞ்ச தூரம்னா ஐம்பது ரூபா. மார்வாடி மக்கள்தான் நிறைய ஏறுவாங்க. அவங்களாலதான் வாழ்க்கை ஓடுது. ஒரு நாளைக்கு முந்நூறு ரூபா கிடைக்கும். சமயத்துல அதுவும் இல்லாம அல்லாடுவோம். சில நேரங்கள்ல தாம்பரம், வண்டலூருக்கு பொருட்கள் ஏத்திட்டு போறப்போ ஐநூறு ரூபா பாக்க முடியும்’’ என்கிறார்கள் ஜெயின் கோயில் முன் சவாரிக்குக் காத்திருந்த ராஜேந்திரனும், கோபாலும்!

தொடர்ந்து நடக்கிறோம். அடுத்தடுத்து சின்னதாக இரண்டு ஜெயின் கோயில்கள். கடந்தால், பிரம்மாண்ட ஜெயின் கோயில். உள்ளே இருந்து மேல் சட்டையில்லாமல் பின்புறம் சிறிய குடுமியுடன் வெள்ளை வேஷ்டியை தார்ப்பாச்சி கட்டியபடி வெளியேறும் இளைஞர்கள், இடதுபக்கமாக முந்தானை உடுத்தி, தலையில் முக்காடுடன் கூஜாவைத் தூக்கி வரும் பெண்கள், சாட்ஸ் உணவுகளை ரசித்துக் கொண்டிருக்கும் இளம் வயதினர், அம்மாவின் கைபிடித்து நடந்து வரும் குழந்தைகள் எனப் பலரையும் பார்க்கிறோம். கடக்கிறோம்.

இடையிடையே சந்துகளாக விரியும் தெருவுக்குள் நேர்த்தியான வீடுகள் ரம்மியம் காட்டுகின்றன. வணிகத்தோடு இணைந்தே தங்கள் குடியிருப்புகளையும் அருகிலேயே செதுக்கி இருக்கிறார்கள் மார்வாடிகள். ஜிலேபிக்கு புகழ்பெற்ற ‘கக்கடா ராம்பிரசாத்’ கடையின் முன்பு எண்ணெயில் போட்டு சுடச்சுட தரப்படும் ஜிலேபியைச் சாப்பிட ரெடியாக நிற்கிறது ஒரு கூட்டம். அதற்கு அடுத்தாற்போல் சிறிய குடைக்குள், ‘அன்மோல் லஸ்ஸி வாலா’ கடை அதகளப்படுத்துகிறது. ‘பாஸ்... ரொம்ப ஃபேமஸான கடை’ என்கிறார் நம் போட்டோகிராபர்.

அப்படியென்ன ஃபேமஸ்? ‘குங்குமப்பூ’ கலந்து லஸ்ஸி ஜில்லென்று தரப்படுகிறது. ‘‘ஒரு கிளாஸ் 140 ரூபா. அரை கிளாஸ் 70 ரூபா’’ என்கிறார் கடையின் ஓனர் தினேஷ் சோனி. 28 வருடங்களாக இங்கே கடை நடத்துகிறாராம். ‘‘பட்டாணி, டில்லி கேரட்...’’ எனக் கூவும் கடைக்காரிடம், ‘‘கித்னா ரூபியா?’’ என பச்சை முக்கலை எடுத்தபடி பெண் ஒருவர் அதட்டலாகக் கேட்க, ‘‘சாவ் ரூபி’’ எனக் கடைக்காரரும் கணீர் குரலில் இந்தியில் சரளமாக சொல்கிறார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
 
‘‘பிளாட்பார்ம்ல கடை போட்டுருக்காங்கனு எழுதிடாதீங்க சார்...’’ என பயத்தோடு கண்டிஷன் போட்டுவிட்டு தொடர்ந்தார். ‘‘இவங்க உணவுல பட்டாணி, கொத்தவரங்காய், பச்சை முக்கல் (பச்சை கொண்டைக் கடலை), டில்லி கேரட் அதிகமா இருக்கும். அதனால, இந்த ஏரியாவுல அதை மட்டும் நிறைய பேர் கடை போட்டு விற்பாங்க...’’ என்றவரிடம், ‘இந்தி எப்ப கத்துக்கிட்டீங்க?’ என்றோம். 

‘‘பொறந்து வளர்ந்ததே இங்கதான். அதனால ஈஸியா வருது’’ என ஆச்சரியமூட்டுகிறார். ஆதியப்பன் தெரு வழியே திரும்பி நாராயண முதலி தெருவுக்குள் நுழைகிறோம். இதுவும் குறுகலான தெருதான். இந்தத் தெரு முழுவதுமே பிளாஸ்டிக் ஐட்டங்களால் நிரம்பி வழிகிறது. டம்ளரிலிருந்து அழகுப் பொருட்கள் வரை எல்லாம் மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கிறது. தெரு ஓரத்தில் பால் கேனுடன் ஒருவர் அமர்ந்து பசும்பாலை விற்றுக் கொண்டிருக்கிறார். பாக்கெட் பால் நடமாடும் சிட்டிக்குள் மாட்டுப்பால்!

‘‘ணோ’’ என்றொரு குரல் கேட்டுத் திரும்பினோம். டிரை சைக்கிள் முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களால் தெருவே மறைந்து கிடக்கிறது. அதன் அடியிலிருந்து வருகிறது அந்தக் குரல். முதுகை வளைத்து தம் பிடித்து டிரை சைக்கிளை இழுத்து வருகிறார் ஒருவர். ‘அண்ணா’ என்பதைத்தான் சுருக்கமாக ‘ணோ’ என்றார். வழிவிட்டு நின்றோம்.

இங்கு பிரியும் காசிச் செட்டித் தெரு, வெறும் பத்தடிதான். இங்கும் பிளாஸ்டிக் ஐட்டம், புத்தகங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விதவிதமாக கிடைக்கின்றன. டிரைசைக்கிளில் பொருட்கள் ஏற்றப்பட்டு சென்றுகொண்டே இருக்கிறது. ‘ஓரமா நில்லுபா...’ ஒரு டிரை சைக்கிள்காரரின் அதட்டல் கேட்டு ஒதுங்கினோம். அங்கிருந்த ஒரு பெல்ட் கடைக்குள் நுழைந்ததும் நமது போட்டோகிராபர், ‘என்ன விலை’ என்றார்.

‘‘எத்தனை பீஸ் வேணும்..?’’ இது கடைக்காரர். ‘‘பெல்ட் மொத்தக் கடையை இப்போதாங்க பார்க்குறேன்!’’ என வியந்து வெளியேறினார். அங்கிருந்து கோவிந்தப்ப நாயக்கன் தெரு. இதன் ஒருபுறம் பல்புகள், ஃபேன்கள், வயர்கள் என எலக்ட்ரிக்கல் பொருட்களும் இன்னொரு புறம் உலர் திராட்சை, பாதாம், முந்திரி, பேரீட்சை என உலர்பழ வகைகளும் நிரம்பி களைகட்டுகின்றன.

அப்படியே வெளியேறி குடோன் தெருவுக்குள் நுழைந்தால் துணி வியாபாரத்தின் சொர்க்கபுரியாகக் காட்சியளிக்கிறது. குஜராத்தின் சூரத் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வரும் ஜவுளிகள் மின்னுகின்றன. தி.நகரை விட முப்பது நாற்பது சதவீதம் விலை மலிவு என்கிறார்கள். அங்கிருந்து என்.எஸ்.சி சாலைக்கு வந்து சீனா பாய் டிபன் சென்டரில் நிற்கும் போது இரவாகி இருந்தது. ஆனியன், மிளகாய்ப் பொடி தூவி, நிறைய நெய் ஊற்றி போடும் குட்டி ஊத்தப்பத்துக்கும், இட்லிக்கும் செம கூட்டம்.

1977ல் இருந்து இந்தக் கடை இருக்கிறதாம். முதலில் வண்டிக் கடையாக வைத்திருந்தவர்கள் பின்னர் கடைக்குள் வந்திருக்கிறார்கள். ‘‘அப்பா பெயர் சீனிவாசன். அதனால, இங்குள்ளவங்க சீனுண்ணானு கூப்பிடுவாங்க. வட இந்திய மக்கள் ‘பாய்’னு சொல்வாங்க. ரெண்டும் சேர்ந்து ‘சீனா பாய்’னு மாறிடுச்சு. இது மக்களே வச்ச பேரு...’’ என்கிறார் ஓனர் சந்தான கிருஷ்ணன். பின்நோக்கி வந்து மீண்டும் ஒருமுறை மின்ட் தெருவை எட்டிப் பார்த்தோம். மூச்சு முட்டியது.        

யார் இந்த மக்கள்?

‘‘பதினொன்றாம் நூற்றாண்டில் இஸ்லாமிய படையெடுப்பு அதிகம் இருந்த சமயம். அப்போது, ராஜஸ்தானிலுள்ள மார்வார் பகுதியிலிருந்து குஜராத்திலுள்ள சவுராஷ்டிரா பகுதிக்கு நகர்ந்த மக்கள் இவர்கள். பின்னர், அங்கிருந்து மதுரை, திருநெல்வேலி என வந்து செட்டில் ஆகியிருக்கிறார்கள். விஜய நகரப் பேரரசு மதுரையில் காலூன்றிய பிறகு இந்த சவுராஷ்டிரா மக்கள் பட்டுத் துணி நெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஆங்கிலேயர் ஆட்சியில் குறிப்பிட்ட சிலர் வணிகத்துக்காக சென்னைக்கு நகர்ந்தனர். அப்போது ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்ட இப்போதைய ஜார்ஜ் டவுன் பகுதியில் மற்ற வணிகர்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்து வங்கி போல் செயல்பட்டனர். அன்று ஏகாம்பரேஸ்வரர் கோயில்தான் இவர்களது முக்கிய வழிபாட்டிடமாக இருந்தது. ஆகையால், அதற்கு மிகவும் உதவியிருக்கிறார்கள். பின்னர்தான், ஜெயின் கோயில்கள் வந்து சேர்ந்தன...’’ என்கிறார் ஆய்வாளர் நரசய்யா.

சேட்டு பெயர்க் காரணம்

சவுகார்பேட்டையில் ‘கட்டியக்காரி’ நாடகக் குழுவை நடத்தி வரும் ஜித் சுந்தரம், இம்மக்கள் பற்றிய டேட்டாவை கொட்டுகிறார். ‘‘பொதுவா, நாம் சேட்டுகள்னு சொல்றோம். ஆனா, மார்வாடி, ஜெயின், சர்மானு இவங்களுக்குள்ள நிறைய உட்பிரிவுகள் இருக்கு. இவங்கள ஆரம்பத்துல ‘other state’ல் இருந்து வந்தவங்கனு குறிக்க ‘அதர் ஸ்டேட்’னு நம்ம மக்கள் அழைச்சிருக்காங்க. அதுவே சுருங்கி ‘சேட்டு’னு ஆகிடுச்சு! 

* இவங்க எல்லோருமே கூட்டுக் குடும்பத்தை விரும்பறவங்க. சினிமா, கோயில், ஷாப்பிங்னு எங்க போனாலும் குடும்பமா போவாங்க. சின்ன வயசுலயே திருமணமாகிடும். நிறைய குழந்தைங்களை பெத்துப்பாங்க. பெரியவங்களைப் பார்த்தா கால்ல விழுந்து ஆசி பெறுவாங்க. மணமான ஆண்கள்கிட்ட பேசறப்ப பெண்கள் முக்காடு போட்டுப்பாங்க. 

* நடுநிலையான உடல்வாகோட இருக்கிறவங்க குறைவு. ஒண்ணு ரொம்ப குண்டா இருப்பாங்க. இல்லைன்னா, ரொம்ப ஒல்லியா இருப்பாங்க.

* நிறைய ஒப்பனை செய்துப்பாங்க. டிரஸ்லயும் அது எதிரொலிக்கும். குறு குறுவென பார்ப்பாங்களேனு எண்ணமே இல்லாத நல்ல மனுஷங்க. நிறைய பேரம் பேசுவாங்க. சிக்கனமா வாழறவங்க. சொந்த ஊர்லேந்து தங்களை நம்பி வர்றவங்களுக்கு தொழில் தொடங்கி கொடுத்து முன்னேற்றி விடுவாங்க.

* சைவ பிரியர்கள். பாவ் பாஜி, வடபாவ்னு இவங்க உணவு முறையே வேற. ஜெயின்ஸ் பூண்டும், வெங்காயமும் சேர்த்துக்க மாட்டாங்க.

* பாக்கெட் பால் பயன்படுத்த மாட்டாங்க. இதுக்காகவே தங்க வீடுகள்ல சிலர் மாடுகள் வளர்க்கிறாங்க.

* கலகலனு ஜாலியா பேசிட்டு திரியற ஜெயின் நண்பர்கள், திடீர்னு ஒரு நாள் துறவியாகறதை பார்த்திருக்கேன்.

* சடங்குகள் எல்லாமே கோலாகலமா நடக்கும். மகாவீர் ஜெயந்தியை அமர்க்களப்படுத்துவாங்க. ஹோலி அன்னைக்கு நார்த் இந்தியாவுல இருக்கிற ஃபீலிங் வரும்.

* நிறைய டிராவல் பண்ணுவாங்க. தேவையான அத்தியாவசியப் பொருட்கள கையோடு எடுத்துட்டு போயிடுவாங்க.

* இவங்க இங்கிருந்தா கூட தங்களுக்குனு ஒரு ஊர் இருக்கு, கலாசாரம் இருக்குன்னு நினைச்சு வாழறாங்க.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்