அருமையான காதலோடு த்ரில்லரை கலந்திருக்கோம்...



-நா. கதிர்வேலன்

அதே கண்கள் ஸ்பெஷலை விவரிக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன்

‘‘அவரவருக்கு ஒரு ரசனை, தேடுதல் எப்பவும் இருக்கும். பிடிச்சதைப் பண்ற சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கு. அதை சரியாக மனசில் வைச்சுக்கிட்டு இந்த சினிமாவை எடுத்திருக்ேகன். ‘அதே கண்கள்’ ஒரு ரொமான்டிக் த்ரில்லர். நிச்சயமாக ஒருத்தனைக் காதல் மாத்தும். இங்கே எல்லாமே காதல்தான். மண் மேலே, மனுஷன் மேல, மரம், செடி கொடிகள் மேல் வைக்கிற அத்தனையும் காதல்தான். எல்லாத்தையும் உணர்வோடும், காதலோடும், துடிப்பாகவும் சொன்னால் ஏத்துக்கிற மனசு நம்மோடது.

சொல்ல எவ்வளவோ இருக்கு. அருமையாக  காதலோடு த்ரில்லர் சொல்ல முயற்சி செய்திருக்கேன். உங்களுக்குப் படத்தை பிடித்துப் போகிற கட்டம் ஆரம்பத்திலிருந்தே வரும்னு நம்பிக் கொண்டிருக்கிறேன். மற்றபடி ‘அதே கண்களி’ன் சுவாரஸ்யத்துக்கு நான் அதிகப்படியாக உழைத்திருக்கேன் என சொல்ல முடியும்...’’ வார்ப்பாகப் பேசுகிறார் புதுமுக டைரக்டர் ரோகின் வெங்கடேசன். டைரக்டர் விஷ்ணுவர்தனின் சீடர்.

எப்படியிருக்கும் ‘அதே கண்கள்’... மிகவும் பழகிய தலைப்பு..?
ரொம்ப நாளாக கதை உருவான பிறகு, சரியான தலைப்புக்காக காத்திருந்தேன். நினைவுக்கு வந்தது ‘அதே கண்கள்’தான். ஏவி.எம்.மில் அணுகியபோது தாராள மனசுடன் விட்டுக் கொடுத்தார்கள். இது முக்கோண காதல் கதை. பார்வையற்ற சமையல் கலை நிபுணரின் கதை. ஒற்றை இழையில் கதை செல்வதால், படத்தின் கதையை விரிவாகப் பேச இயலாது. முக்கியமானது இதில் திரைக்கதை.

‘ஒரு படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது எப்போது பிடிக்க ஆரம்பித்தது, எப்படி நம்மை கவர்ந்துவிட்ட படமாக உள்ளே உட்கார்ந்து கொண்டது’ என்று நாங்கள் சினிமா பார்த்த காலம் முழுவதும் பேசிக் கொள்வோம். நல்ல கதைகளும், புது விஷயங்களும் ஜெயிச்சுக்கிட்டே இருக்கிறதுதான் என்னை மாதிரி புதியவர்களுக்கு மூலதனம்.

சினிமாவிற்கும் எனக்குமான காதல் கொஞ்சம் உணர்வுபூர்வமான விளையாட்டு. இதில் அவ்வளவு தூரம் உழைத்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. காதல் என்னிக்குமே சலிக்காது. காதல் செய்யற ஒவ்வொருத்தருக்குள்ளேயும் ஈரமும், கனிவும், அன்பும் நிறைந்திருக்கிறதா நம்பறவன் நான்.

அந்த காதலின் ைமயம் தொட்டு எழுதியிருப்பதால் இந்த நம்பிக்கை கூடுகிறது. காதலில் இருந்த இந்தத் தவிப்பும், துடிப்பும் இத்தனை யுகங்கள் தாண்டியும் மாறலை. என்னைக் கேட்டால் மனுஷங்க முன்னாடி கடவுள் வெச்ச முதல் கேள்வியும், கடைசிக் கேள்வியும் காதல்தான்.

கலையரசன், ஷிவதா, ஜனனின்னு இந்த செட்டே அழகா இருக்கு..?
மூணு பேருமே இந்தக் கேரக்டரில் ஒன்றி இருந்தாங்க. ஸ்கிரிப்ட் கொடுத்திட்டு படித்து விட்டதால், வசனங்களில் ஒரு வார்த்தை மாறினால்கூட, ஏறிட்டு பார்ப்பாங்க. ஒரு கட்டத்தில் பார்வையற்றவராக இருக்கிற கலையரசனுக்குப் பார்வை கிடைத்துவிட, பிறகு எல்லாமே மாறுகிறது. ஷிவதா, ஜனனி இருவரையும் இன்னும் புதுமுகங்கள் என்ற வரிசையில் சேர்க்க முடியாது. மிக நேர்த்தியான இயல்பான நடிப்பில் முன்னணியில் வந்தாங்க. அதே மாதிரி கலையரசன் பிரமாதமான பர்ஃபார்மர்.

‘மெட்ரா’ஸில் பாருங்க... தனியா, துண்டாகத் தெரிவார். ஒரு முழுப் படத்தையும் அழகா தாங்கி நிற்கிற அழகு அவருடையது. இந்தக் கதை மனசில் வந்ததும் நான் நினைச்சது கலையரசன்தான். ‘நெடுஞ்சாலை’யில் ஷிவதா அருமையான ஹீரோயின் ரோல் பண்ணியிருந்தாங்க. இதில் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்காங்கன்னு சொல்லணும். இவர்களுக்கு இணையாக கனிவு, பாசம், காதல், அன்பு, கோபம், அத்தனையையும் வெறும் குரலால் கூட கலையரசனால் உணர்த்த முடிஞ்சது.

கதையின் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருக்கிறவங்களை மட்டும்தான் விரும்பினேன். அந்த விதத்தில் சி.வி.குமார் எனக்கு நல்ல டெக்னீஷியன்களையும் தந்து உதவினார். அவருக்கு நாம் செய்கிற ஸ்கிரிப்ட் ஒன்றே திருப்தி அளிக்கும். சில சந்தேகங்களை தெளிவு செய்து கொண்ட பிறகு முழுவதும் நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுவார்.

ஜிப்ரானின் பாடல்கள்... ரொம்ப நல்லாயிருக்கு..?
அடுத்தடுத்து கமலோடு நான்கு படங்களை முடித்த பிறகு அடுத்து நான்தான் அவர்கிட்ட போனேன். எடுத்தவுடனே கதை சொல்ல ஆரம்பித்தவனை நிறுத்தி ‘உங்களைப் பத்தி முதலில் சொல்லுங்க’ என இயல்பாக ஆரம்பித்தவர் அவர். அவருடையது ஆழமான இசை ரசனை. அவர் இழைத்து இழைத்து செய்த பாடல்கள் பற்றி சொல்ல நிறைய இருக்கு.

எங்களுக்குத்தான் அந்த பாடல்களுக்கு நியாயம் செய்யணும்ங்கிற பயம் கூடிப்போச்சு. பி.எஸ். வினோத்தோட அஸிட்டென்ட் ரவிவர்மன் நீலமேகம்தான் கேமராமேன். நிறைய கணங்களை ரொம்ப அர்த்தப்படுத்தியிருக்கார். நம்ம சினிமாவுல பாடல்கள் வகிக்கிற இடம் ரொம்ப முக்கியம். சரியான இடத்தில் அமைஞ்சாதான் பார்ப்பாங்க. அப்படி அமையாத ஒவ்வொரு பாடலும் இன்டர்வெல்தான். கதையைப் புரிஞ்சிகிட்டு ஜிப்ரான் அருமையான ட்யூன் போட்டிருக்கார்.

படத்தின் ட்ரைலருக்கு கிடைச்ச வரவேற்பைப் பார்த்து ரொம்ப சந்தோஷம். ட்ரைலர் பார்த்தவங்க எல்லாரும் தனித்தனியாக, ஆனா ஒரே கமெண்டைச் சொன்னாங்க, ‘ரொம்ப புதுசாக இருக்கு’னு. ‘அதே கண்கள்’ மக்கள் தீர்ப்புக்கு வருகிற நாளை எதிர்நோக்கி இருக்கோம். புதுசு பண்ணினா மரியாதை கிடைக்கும்ங்கிற நம்பிக்கை மனதில் நிறைஞ்சு இருக்கு.

Behind the scenes

* 35 நாட்களில் படத்தை முடித்திருக்கிறார்கள்.
* மூன்று பெண் கவிஞர்கள் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் முறையே பார்வதி, உமாதேவி, அனுராதா.
* ‘ஊமை விழிகள்’ இயக்குநர் அரவிந்தராஜ் ஒரு முக்கியமான கேரக்டரில் வருகிறார்.
* ஹீரோயின்களான ஜனனியும், ஷிவதாவும் தாங்களே டப்பிங் பேசியிருக்கிறார்கள்.
* தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு இது 16வது படம்.
* இயக்குநர் ரோகின் வெங்கடேசன் லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்து, பிரசாத் ஃப்லிம் ஸ்கூலில் டைரக்‌ஷன் கோர்ஸ் படித்தவர்.
* சென்னை, கன்னியாகுமரி, ஈரோட்டில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
* எழுத்தாளர் முகில் ஸ்கிரிப்ட்டில் உதவி செய்திருக்கிறார்.