COFFEE TABLE



-குங்குமம் டீம்

1801 டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப. (அகநி வெளியீடு, 3, பாட சாலை தெரு, அம்மையப்பட்டு, வந்தவாசி - 604 408. விலை ரூ.500/- தொடர்புக்கு: 9842637637) இந்திய விடுதலையின் எழுச்சிக்கான முதல் அறிமுகம் தென்னகத்திலேயே நடந்தது. அதிலிருந்து தொடங்கி பெரும் பரப்பில் சுதந்திரத்தின் எழுச்சி, குறிப்பாக தென் இந்தியாவில் மருது சகோதரர்கள் முன்னின்று நடத்திய விடுதலைப் போர், அதன் விவரணைகள், போர் வாழ்க்கை என அச்சு அசலாக மு.ராஜேந்திரன் ‘1801’ல் எழுதியிருக்கிறார்.

இது சாதாரண விஷயமில்லை. நிறைய ஆராய்ச்சிக்குப் பிறகே செய்ய முடிகிற பெரும் காரியம். சுதந்திரப் போரின் பதட்டம், அதை மருது சகோதரர்கள் எதிர்கொண்ட விதம், அதன் கலவரம், பரபரப்பு, சந்தித்த துரோகங்கள் என பல நோக்கில் விரிந்து மையத்தை நோக்கி புறப்பட்டுச் செல்கிறது இந்நாவல். இத்தகைய வரலாற்றை திரட்டிய உழைப்பிற்கே அவரை கொண்டாட வேண்டும். உள்ளே புகுந்துவிட்டால் நாமும் அந்த நாட்களுக்கு துல்லியமாக, புரிந்துணர்வுடன் சென்று விடுகிறோம்.

இப்படி நம்மை உள்ளே ெகாண்டு போய் வைத்து விடுவதுதான் ஒரு மேலான நூலாசிரியரின் வேலை. அதில் வெற்றி கண்டது ராஜேந்திரனின் சாதனை. கூடவே நம்மை ஆரம்பித்த கணத்திலிருந்து இழுத்துச் செல்கிறது அதன் செழுமை மொழி. நூலின் பக்குவத்தையும், எழுச்சியையும் பார்க்கும்போது விலை ஒரு பொருட்டில்லை.

புலியை மிரளவைத்த வாத்து!

கு ளத்தில் புலியிடம் வேடிக்கை காட்டி விளையாடும் வாத்துதான் இப்போது வைரல். நடந்த இடம்: ஆஸ்திரேலியாவின் சிம்ப்யோ பார்க்.
புலி பசியோடு வாத்தை துரத்துகிறது. வாத்து பிடி கொடுக்கவே இல்லை. வேறு இடத்துக்கு தப்பித்துப் போகவும் முயற்சிக்கவில்லை. புலி அருகில் வரும் போது தண்ணிக்குள் மறைந்து மாயமாகிவிடுகிறது. இப்படியே சில நிமிடங்கள் நடக்கிறது. கடைசி வரைக்கும் போராடிப் பார்த்துவிட்டு நம்மால் முடியாது என்று குளத்தை விட்டு வெளியே கிளம்பி விடுகிறது புலி.

‘இந்த குளம் எனக்கு மட்டும்தான் சொந்தம்’ என்பதுபோல மேலே வரும் வாத்து ஜாலியாக நீச்சல் அடிக்கிறது. பார்த்தவர்கள், ‘இந்த உலகத்திலேயே துணிச்சலான வாத்து இதுதான்’ என சான்றிதழ் வழங்குகிறார்கள். இக்காட்சி யூ டியூப்பில் பதிவேற்றப்பட்ட ஆறு மணி நேரத்திலேயே ஒரு லட்சம் பார்வையாளர்களைத் தாண்டிவிட்டது!

பெற்றோர்களாகும் toys

இரண்டு முதல் நான்கு வயதில் உள்ள குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம் பெற்றோர்கள்தான் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ஆனால், ‘‘தங்களின் அருகாமையும் அரவணைப்பும்தான் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் என்ற விஷயம் நிறைய பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. அதனால் அவர்கள் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த பொம்மைகளை வாங்கிக்கொடுக்கின்றனர். பெரும்பாலும் பொம்மைகள்தான் குழந்தைகளுடன் அதிக நேரம் இருக்கிறது.

விரைவிலேயே பெற்றோர்களின் இடத்தை பொம்மைகள் பிடித்துவிடுகிறது!’’ என்கிறார் ஒரு நிபுணர். இந்த வயதில்தான் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன் அதிகம் என்பதால் பெற்றோர்கள் வேறு எதையும்விட அதிக நேரத்தை குழந்தைகளுக்காக ஒதுக்க வேண்டும் என்கிறது அந்த ஆய்வு.

நெருப்பில் இயங்கும் ஸ்பீக்கர்!

ப்ளூடூத்தினை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வகை ஸ்பீக்கர்கள் விற்பனையில் உள்ளன. இவற்றின் புதிய வரவாக பேட்டரி, மின்சாரம் இல்லாமல் நெருப்பிலிருந்து மின் சக்தியைப் பெற்று இயங்கக்கூடிய ஸ்பீக்கரை இப்போது வெளியீட்டுள்ளனர் பெல்டி நிறுவனம். மெழுகுவர்த்தியில் இருந்து வரும் வெளிச்சத்தைக் கொண்டு தனக்குத் தேவையான மின்சாரத்தை தன்னியல்பாக தயாரித்துக்கொள்ளும் விதமாக இந்த ஸ்பீக்கரை வடிவமைத்திருக்கிறார்கள். இதுதான் நெருப்பின் சக்தியில் இயங்கக்கூடிய முதல் ஸ்பீக்கர்! விலை ரூ. 6000 முதல் ரூ. 20000 வரை.

சைலன்ட் கார்னர்

அழகிய மரம்தரம் பால் / தமிழில்: பி.ஆர். மகாதேவன் [தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், சென்னை - 51. விலை ரூ. 480/- தொடர்புக்கு: 044 - 28490027] 18ஆம் நூற்றாண்டு இந்தியாவில் இருந்த பாரம்பரியக் கல்வி பற்றின புத்தகம். நிச்சயமாக உள்ளே நுழைய முடியாமல் தவிக்கப் போகிறோம் என நினைத்து ஆரம்பிக்கும்போதே நூலின் எளிமை நம்மை ஏமாற்றுகிறது. கல்வி பற்றிய நிறைய விபரங்கள், இந்திய சமூகம், அதன் உள்கட்டமைப்பு, அவற்றின் பலம், பலவீனங்கள் என தொகுக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால், நம்மை பாடுபடுத்திவிடாமல் சொல்லும் விதத்தில்தான் இந்த நூலின் பெருமை கூடுகிறது. ஆவணங்களை எல்லோரின் கவனம் பெறும் விஷயமாக மாற்றும்போது அதற்கு தேவைப்படுகிற உழைப்பு கொஞ்ச நஞ்சமில்லை. சொல்லப்போனால் உயிர் உறிஞ்சும் உழைப்பும்கூட தேவைப்பட்டிருக்கும் போல தெரிகிறது.

மொழிபெயர்ப்பில் பி.ஆர்.மகாதேவனின் அர்ப்பணிப்பு சாலச்சிறந்தது. தமிழ்க் கல்விக்கான பெரும் ஞானப்பரிசு இந்தப் புத்தகம். எல்லோரும் படிக்கலாம் என்பதுதான் இந்நூலின் சிறப்பு. அட்டையில் ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்தின் புகைப்படம் இருக்கிறது. பார்த்துவிட்டு நாம் கல்வியில் இப்போது வந்து நிற்கிற நல்ல நிலையை நினைத்துப் பாருங்கள் சகோ!