வாங்க குண்டடி படலாம்!



-த.சக்திவேல்

‘‘எல்லோருமே சாகசத்தை விரும்புகிறவர்கள்தான். என்ன... அதை வெளிப்படுத்தினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தயங்குகிறார்கள். நான் துணிந்து இறங்குகிறேன்...’’ கம்பீரமாகச் சொல்லும் ஜெஃப் ஹான்,  டிராவல் கம்பெனி ஒன்றை இங்கிலாந்தில் நடத்தி வருகிறார். வயது 79. இவரை ‘உலகின் துணிச்சலான, தீவிரமான சுற்றுலா வழிகாட்டி’ என்கிறார்கள். காரணம், ரத்தம் சிதறிக் கிடக்கும் சிரியா, உள்ளூர் வாசிகளே வெளியே வர பயப்படும் ஆப்கானிஸ்தான், யாராலும் நெருங்க முடியாத காட்டுப்பகுதிகள், ஆபத்தான, மக்கள் வசிக்க தகுதியில்லாத இடங்கள்... ஆகியவைதான் ஜெஃப் அழைத்துச் செல்லும் சுற்றுலாத் தலங்கள்.

‘‘யார் வேண்டுமானாலும் நம்மை இடை மறித்து சுடலாம். கொள்ளை அடிக்கலாம். குண்டுகள் வெடிக்கலாம். சில நேரங்களில் பேருந்திலேயே தங்க வேண்டும். உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை...’’ இதுதான் ஜெஃப்பின் நிபந்தனைகள். ‘முழு மனதுடன் உடன்படுகிறேன்’ என இதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட்டால் மட்டுமே ஜெஃப் உங்களை அழைத்துச் செல்வார். மூன்று வாரங்களுக்கு 3,500 பவுண்டுகள் கட்டணம். ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த முதல் சுற்றுலாப் பேருந்து இவருடையதுதான்! என்ன... ஜெஃப்புடன் சுற்றுலா செல்லத் தயாரா?