ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சுரங்கக் குழிகளாக மாற்றப்பட்டுள்ளன...
-ச.அன்பரசு
சத்தீஸ்கர் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று விளக்குகிறார் அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் படித்து இந்திய மக்களுக்காக இப்போது போராடி வரும் சுதா பரத்வாஜ்
 ‘‘கனிம வளங்களின் பொக்கிஷமாக சத்தீஸ்கர் திகழ்கிறது. ஆனால், இந்த நிலத்துக்கு சொந்தமானவர்கள் இன்னமும் வறுமையில் வாழ்கிறார்கள். முறையற்ற வளர்ச்சி, கல்வி அறிவு அற்ற நிலை... என பல காரணங்களால் இம்மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இவர்களது பிரச்னையை தீர்க்க அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால்தான் ஊழல் அரசியல்வாதிகளையும், கனிமங்களைக் கொள்ளையிட வந்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களையும் எதிர்த்து போராட வேண்டிய நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்...’’
நிதானமாக, அதேசமயம் அழுத்தத்துடன் பேசத் தொடங்குகிறார் சுதா பரத்வாஜ். கடந்த 25 வருடங்களாக சட்டத்துக்கு புறம்பாக சத்தீஸ்கர் பகுதியில் நிலங்களைக் கையகப்படுத்தி வரும் செயலுக்கு எதிராக சட்ட ரீதியாக இவர் போராடி வருகிறார். அதனாலேயே சத்தீஸ்கர் கிராம மக்கள் இவரைப் பார்த்ததுமே மலர்கிறார்கள். கையைப் பிடித்து கொஞ்சுகிறார்கள். சொந்தம் கொண்டாடுகிறார்கள். வணிக தொழிற்சங்க உறுப்பினர், நிலப்பறிப்புக்கு எதிரான செயல்பாட்டாளர், வழக்குரைஞர்களின் கூட்டமைப்பு (ஜன்கித்) வழியே வழக்குரைஞராகவும் சீரிய செயல்பாடு... என எல்லா வழிகளிலும் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் சுதா பரத்வாஜ்.
 வசிப்பதும் எளிய வீட்டில்தான். பிலாய் நகரின் தொழிலாளர் குடியிருப்பில்தான் வாசம். ஒரு ஆதிவாசிக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார். தொழிலாளர்களின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்களோ அந்தப் பள்ளியிலேயே தன் குழந்தையையும் சேர்த்திருக்கிறார். எப்போதும் பருத்தி ஆடைதான். பெரும்பாலும் கருஞ்சிவப்பு நிறம். சிறுவயதில் இவர் இந்தி படிக்கவில்லை. இப்போதோ சரளம். ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மையினர், வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள தொழிலாளர்களின் ஊதியம், வேலை நீக்கம், ஒப்பந்தப் பணியாளர்களின் சிக்கல்கள்... என எல்லாவற்றுக்காகவும் நாள்தோறும் நீதிமன்றம் செல்கிறார்.
‘‘பழங்குடியின மக்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்னைகளை வார்த்தைகளில் விளக்க முடியாது. இதைப் புரிந்துகொள்ள அவர்கள் வாழும் வாழ்க்கையை நீங்களும் வாழ்ந்து பார்க்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சத்தீஸ்கரில் உள்ள நிலங்களை பழங்குடிகள் தவிர்த்து வேறு யாரும் வாங்க முடியாது. தனி நபர்கள் மட்டுமல்ல... நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனவேதான் பழங்குடி மக்களிடம் இருந்து நிலங்களைப் பெற்று, அதை பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட கால ஒப்பந்தத்துக்கு அரசு வழங்குகிறது.
இதுகுறித்து விரிவாக ‘நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தனியார் நிறுவன விற்பனை’ என்ற 35 பக்க நூல் பேசுகிறது. ‘ஜன் சேட்னா’ அமைப்பின் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலை ஒரு பார்வை பார்த்தாலே சாதாரண மக்களுக்கும் பளிச்சென்று உண்மை புரியும். சத்தீஸ்கரிலுள்ள பழங்குடி மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தெரியும்.
சத்தீஸ்கர் மாநிலம் உருவாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இதற்குள் 26 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், சுரங்கக் குழிகளாக மாற்றப்பட்டுள்ளன. முகத்தில் அறையும் இந்த நிஜத்தை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும்..?’’ என்று கேட்கும் சுதா, சரியான கோணத்தில் இந்தப் பிரச்னையின் வேரை இனம் காண்கிறார்.
‘‘கடும் பொருளாதார சீர்குலைவு உலகில் ஏற்படும் போதெல்லாம் ஒன்று சமூக நலத்திட்டங்களை குறைப்பார்கள் அல்லது இயற்கை வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பார்கள். இந்த இரு வாய்ப்புகளில் இந்தியா இரண்டாவதை தேர்வு செய்திருக்கிறது...’’ என்று சொல்லும் சுதா, அம்மாநில PUCL அமைப்பின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.
போராளியின் கதை
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸில் பிறந்த சுதா, தொடக்கக் கல்வியை பயின்றது இங்கிலாந்தில். இவரது அம்மாவுக்கு தில்லி பல்கலைக்கழகத்தில் வேலை கிடைக்க... குடும்பத்துடன் இந்தியா வந்தார்கள். அப்போது சுதாவுக்கு வயது 11. 1975ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இவரது அம்மாவுக்கு பேராசிரியர் பணி கிடைத்தது. இதுவே இவரது பிற்கால போராட்ட வாழ்வுக்கான அச்சாரம். பல்கலை வளாகத்தில் கிடைத்த அரசியல் கருத்துகள், விவாதங்கள், கோட்பாடுகள், கலந்துரையாடல்கள்... என சகலமும் சுதாவை செழுமைப்படுத்தி இருக்கின்றன.
1984ம் ஆண்டு கான்பூர் ஐஐடியில் கணிதம் படித்து முடித்தார். அப்போது அந்நகருக்கு வேலை தேடி வந்த பிற மாநில தொழிலாளர்களின் நிலை இவரை அதிர வைத்தது. 1991ம் ஆண்டு கனிம தொழிலதிபர்களால் படுகொலை செய்யப்பட்ட சத்தீஸ்கரின் தொழிற்சங்கத் தலைவரான சங்கர் குஹா நியோகி, அவரது செயல்பாடுகளால் கவரப்பட்ட சுதா, உடனே அவரது ‘சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா’வில் இணைந்தார். அந்த நொடியில் இருந்து தொடங்குகிறது சுதாவின் பொதுப்பணி வரலாறு.
|