பீட்ஸா திருடிய பீர்பாட்டில்!
கேமரா வைத்தாலும் நூதன திருடர்களின் ரவுசுதான் இப்போதெல்லாம் வைரல் மவுசு. சவுத்வேல்ஸ் பகுதி போலீசார் தேடுவதும் இதுபோன்று நூதனமாக பீட்ஸாவைத் திருடிய பீர்பாட்டிலைத்தான். பீட்ஸாவை பீர்பாட்டில் எப்படி திருடும்? திருடிய மனிதர் பீட்ஸாவை அலேக் செய்யும்போது போட்டிருந்தது பீர் பாட்டில் டிரஸ்தான் ஐயா! இங்கிலாந்தின் சவுத்வேல்ஸிலுள்ள பேரி ஏரியாவிலுள்ள பாப்பா ஜான் பீட்ஸா கடையில் காலரைத் தூக்கிவிட்டபடி அலர்ட் ஆறுமுகமாக உள்ளே நுழைந்த பீர்பாட்டில் டிரெஸ் திருடர், நானோ நொடியும் தயங்காமல் பீட்ஸா பணியாளர்களின் அறைக்குள் நுழைந்து 2 பீட்ஸாக்களை ஆட்டையைப் போட்டுவிட்டார். மின்னலென மறைந்தும் விட்டார்.
 பீட்ஸா கடை கேமராவில் பதிவான உருவத்தைக் கொண்டு பீர்பாட்டில் டிரெஸ் மனிதரை போலீசார் தேட ஆரம்பித்தபோது திருட்டு நடந்து 6 மணி நேரம் ஆகிவிட்டது. எனவே ‘இந்த மனிதரை அடையாளம் கண்டால் 101க்கு எங்களை அழையுங்கள்’ என சவுத்வேல்ஸ் மக்களின் காலிலேயே போலீசார் விழுந்துவிட்டார்கள். அடப்பாவத்த!
|