தயாரிப்பாளராக மாறிய விமல்!
-மை.பாரதிராஜா
சினிமாவுக்கு வந்து ஏழெட்டு வருஷம் ஆச்சு. ‘பசங்க’, ‘களவாணி’னு நல்ல படங்கள் கொடுத்த நம்பிக்கையோடு இன்னிக்கு வரை கதைகள் தேர்ந்தெடுத்து நடிச்சிட்டிருக்கேன். இத்தனை வருஷ சினிமா அனுபவத்துல இன்னமும் என்னால இங்க நிறைய விஷயங்களை புரிஞ்சுக்க முடியல. எந்த பின்னணியும் இல்லாம இந்த சினிமாவுக்கு வந்தது கூட இதற்கு காரணமாயிருக்கலாம்.
 நடிக்க வந்த புதுசுல எல்லாத்தையும் புரிஞ்சுக்க வாய்ப்பு கிடைக்காமப் போச்சு. ஆரம்பத்துல நான் கரெக்ட்டுனு நினைச்சதெல்லாம் பின்னாடி தப்பாவும் போயிருக்கு...’’ வெளிப்படையாகப் பேசுகிறார் விமல். பூபதிபாண்டியன் இயக்கத்தில் ‘மன்னர் வகையறா’வுக்காக காதில் ஸ்டட், வித்தியாசமான கிருதா என புது லுக்கில் இருக்கும் விமலிடம் ஏகப்பட்ட மாற்றங்கள்.
‘மாப்ள சிங்கம்’ படத்துக்கு அப்புறம் உங்களை காணோமே? அத ஏங்க கேட்கறீங்க! ரெண்டு படங்கள் கமிட் ஆனேன். ரெண்டுமே ரசிச்சு கதை கேட்ட படங்கள். ஆனா, சிலபல பிரச்னைகளால அதை அவங்க பண்ணாம விட்டுட்டாங்க. அந்த ரெண்டும் திட்டமிட்டபடி வந்திருந்தா இடைவெளி விழுந்திருக்காது. நம்ம சினிமால ஒரே நாள்ல யார் வேணும்னாலும் ஃபேமஸ் ஆகிடலாம். ஆனா, ஒரே நாள்ல ஒட்டு மொத்த விஷயத்தையும் யாராலயும் கத்துக்க முடியாது. படிப்படியாகத்தான் தெரிஞ்சுக்க முடியும். இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்பேன்.
 பூபதி பாண்டியன் இயக்கத்துல இப்ப நடிக்கிற ‘மன்னர் வகையறா’ ஃபேமிலி என்டர்டெயினர். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படைல நானே தயாரிக்கறேன். லவ் காமெடிக்கு பெயர் போன பூபதி அண்ணன், ஃபேமிலி சப்ஜெக்ட்ல புகுந்து விளையாடியிருக்கார். ‘கயல்’ ஆனந்தி ஹீரோயின். தவிர பிரபு, நாசர், சரண்யா, ரோபோ சங்கர், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், ‘யாரடி நீ மோகினி’ கார்த்திக்குமார்னு நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்க.
சரித்திரப் படமா..? இல்லீங்க. தஞ்சாவூர் பக்கம் நடக்கற கதை. ராஜேந்திரன் வகையறா, ராமன் வகையறா மாதிரி வகையறாங்கறது அந்த குடும்பத்தைச் சார்ந்தவன்னு அர்த்தம். மூணு பெரிய குடும்பங்கள் பத்தின கதைதான் ‘மன்னர் வகையறா’. வக்கீல் மதியழகனா நடிக்கறேன். ‘களவாணி’யில மிடில்கிளாஸ் பையனா பண்ணினேன். இதுல அப்படியில்ல. ஒவ்வொரு குடும்பமுமே பிரமாண்டமா இருக்கும். பிரபு சார் எனக்கு அப்பாவா நடிக்கறார். சின்ன நடிகர், பெரிய நடிகர்னு எந்த வித்தியாசமும் பார்க்காம பழகறார். திடீர்னு அவர் வீட்ல இருந்து லன்ச் கொண்டு வந்து எல்லாருக்கும் கொடுத்து அசத்துவார்.
பாண்டிராஜ், சற்குணம், பூபதி பாண்டியன்னு நல்ல இயக்குநர்கள் வரிசை அதிகரிக்குதே..? அதாங்க. பாண்டிராஜ் அண்ணன் எம்மேல தனிபாசம் வச்சிருப்பார். சற்குணம் சார் இன்னும் பிரியம் காட்டுவார். அவங்க ரெண்டு பேரோட மறுபடியும் வொர்க் பண்ற வாய்ப்புகள் கூடி வந்திருக்கு. நேரம் வரும் போது சொல்றேன். பூபதி பாண்டியன் சார்கிட்ட நாம மெனக்கெடவே வேணாம். அவரே நடிச்சுக் காட்டிடுவார்.
ரோபோ சங்கரும் நானும் காமெடியில கலக்கியிருக்கோம். ரோபோ சங்கர்கிட்ட பூபதியண்ணன் சீனை சொல்லும் போதே, ‘கொஞ்சம் நடிச்சுக் காட்டுங்க.. அதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்துக்கறோம்’னு சொல்லுவார். யதார்த்தமா பேசும் போதே பூபதி சார்கிட்ட பன்ச் டயலாக் கொட்டும். ‘யாரடி நீ மோகினி’ கார்த்திக்குமார் பத்தியும் சொல்லணும். அவர் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். அவருக்கு நடிப்பு பத்தி நிறைய விஷயங்கள் தெரியும். சினிமாவுல அண்ணன்- தம்பியா வர்றோம். நிஜத்திலும் அப்படியே ஆகிட்டோம்!
எப்படி இருக்காங்க ஆனந்தி? ‘பிதாமகன்’ல லைலா கேரக்டர் மாதிரி வெகுளியும் துறுதுறுப்புமா இதுல கலக்கியிருக்காங்க. பட்டுக்கோட்டை பக்கம் ஷூட்டிங். ஒரு பஸ் ஜன்னல்ல இருந்து ஆனந்தி கீழே குதிக்கற மாதிரி சீன். ரொம்ப தைரியமா ரிஸ்க் எடுத்து கிழே குதிச்சிட்டாங்க.
நடிகர் சங்க கூட்டங்கள்ல உங்களை பார்க்க முடியறதில்லையே? பொதுக்குழு கூட்டத்துக்கு வந்திருந்தேனே... பிறகு ஷூட்டிங்க்காக தஞ்சாவூர் போயிட்டேன். எங்க சங்கம் ஆரோக்கியமா இருக்கு. சங்கத்துல இருந்து அழைப்பு வரும் போது அட்டெண்ட் பண்ணிடுவேன். எனக்கு சினிமாவுல நட்பு வட்டம் குறைவு. சினிமா தவிர வேற வேலைகள் கிடையாது. கூத்துப்பட்டறை நண்பர்கள் விஜய்சேதுபதி, குருசோமசுந்தரம் தவிர பாண்டிராஜ், சற்குணம் சார், சூரி, ரோபோ சங்கர்னு எல்லாரோடயும் தொடர்புல இருக்கேன். தவிர ஃபேமிலியோடு நேரம் செலவு பண்றது பிடிக்கும். பெரியவன் ஆரிக், யூகேஜியும், சின்னவன் ஆஹர், ப்ரீகேஜியும் படிக்கறாங்க.
2017 எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்க? துவக்கமே நல்லா அமைஞ்சிருக்கு. ‘மன்னர் வகையறா’ முடிச்சிட்டு த்ரில்லர் படம் ஒண்ணு பண்றேன். இன்னும் ரெண்டு படங்கள் பேச்சு வார்த்தை போயிட்டிருக்கு. மொத்தத்துல இந்த வருஷம் பிரகாசமா இருக்கும். அதுல சந்தேகமே இல்லை!
Behind the scenes
* சென்ற வருடம் ஜூன் மாதம் சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்கி, தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் தொடர்ந்திருக்கிறது. * ‘சகுனி’, ‘சேட்டை’ படங்களின் கேமராமேன் பி.ஜி.முத்தையா, விமலுடன் இணையும் இரண்டாவது படமிது. * ‘களவாணி’யைப் போல இதுவும் தஞ்சாவூரில் நடக்கும் கதை என்பதால், படம் பெரிய ஹிட் அடிக்கும் என சென்டிமென்ட்டாக நினைக்கிறார்கள். * தொடர்ந்து சூரியுடன் காமெடி பண்ணிய விமல், இதில் ரோபோ சங்கருடன் கூட்டணி அமைத்திருக்கிறார். * இசை ‘துருவங்கள் பதினாறு’ ஜேக்ஸ் பிஜாய். இன்னும் மூன்று பாடல்கள் படமாக்க வேண்டியிருக்கிறது. * சிவா நடித்த ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தை தயாரித்த அரசு ஃபிலிம்ஸுக்காக முதல் பிரதி அடிப்படையில் இதை தயாரித்திருக்கிறார் விமல்.
|