மிஸ்டர் சாத்தான்



-பாலைவன லாந்தர்

ஒரு கோப்பை மதுவில் போதை இல்லையென
சாத்தானுக்கு முன் மண்டியிட்டு இறைஞ்சுகிறான் கிழவன்
போதை தலைக்கேறி மது போத்தலை
சாத்தானின் மண்டையில் உடைக்கிறான் யுவன்
மிருதுவான போதையில் சாத்தானுக்கு
முத்தமிடுகிறாள் யுவதி
சாத்தான்

நெகிழ்ந்து பயந்து மயங்கிச் சரிகிறார்
சாத்தானின் முகத்தில் மது தெளித்து
தெளிய வைக்கிறார்கள்
அன்றிலிருந்து சாத்தானாக, தான் வாழத் தகுதியற்று திரிந்து
தன்னை
மீட்டெடுக்கும் யுக்தியைத் தேடுகிறார்
தேடித் தேடி
ஓர் இரவில் மூன்று பெண்களுடன்
உல்லாசமாக இருந்த சாத்தான்
பரிபூரணத்தையும் 
அரைகுறையையும் 
ஏமாற்றத்தையும் வழங்குகிறார்
ஏமாற்றமடைந்த பெண் காறி உமிழ்கிறாள்
பீப் சப்தத்தில் சாபமிடுகிறாள்
அவமானம் தாங்காமல்
தற்கொலைக்கு முயற்சிக்கிறார் சாத்தான்
ஆதலால் காவல் துறை கைது செய்கிறது
சிறைச்சாலையில்
வெண் பன்றிகளை மேய்க்கும் பணியில்
ஒவ்வொரு பன்றியின் இடுப்பிலும்
நீல நிறத்தில் ‘சோல்ட்’ என்றிருப்பதை கண்ணுற்றதால் 
சாத்தான் வேகமாக கழிவறைக்குச் சென்று
உள்ளாடையைத் தளர்த்திப் பார்க்கிறார்
நல்லவேளை தான் இன்னும்
சோல்ட் இல்லை
மேலும்
புதிதாக வாழ்வதற்கான காரணத்தை
அறிந்து விட்டதாகக் கூறுகிறார்
அன்றிலிருந்து தனது பெயரை
மிஸ்டர் என்று வைத்துக் கொண்டார்