ராஜாஜியின் கோரிக்கையை நிராகரித்தவர்!



கோமல் அன்பரசன் - 13

எஸ். துரைசுவாமி அய்யர்
“இந்த கேஸ் ஜெயிக்கலேன்னா உலகத்திலே நியாயமே இல்லன்னு அர்த்தம். நீ நோட்டீச கொடு. மத்ததை நான் பார்த்துகிறேன்...” சினிமா வசனம் போல ஜூனியரைப் பார்த்து பொரிந்து தள்ளினார் துரைசுவாமி அய்யர். பாதிக்கப்பட்டு வந்து நின்ற கோயில் குருக்கள் அதன் பிறகே நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். நடந்தது இதுதான்! செட்டிநாட்டில் உள்ள பழைய ஆலயம் ஒன்றை நிர்வகித்து வந்த குருக்கள் ஒருவர், அதனைப் புதுப்பிக்க விரும்பினார்.

இதற்காக சிங்கப்பூர், மலேசியா, பர்மா (மியான்மர்) போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு வணிகம் செய்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடம் நிதி வசூலித்தார். சேரும் பணத்தைக் கையில் வைத்திருக்க விரும்பாமல் அங்குள்ள பெரிய தமிழ்க் குடும்பத்தை அணுகினார். அவர்களோ ‘இதிலென்ன இருக்கிறது? பணத்தை இங்கே எங்கள் கணக்கில் செலுத்திவிடுங்கள். ஊருக்குச் சென்றவுடன் அங்கே வாங்கிக் கொள்ளலாம்’ என இனிப்பாகச் சொன்னார்கள்.

ஆனால், தமிழ்நாட்டுக்கு வந்து பணத்தைக் கேட்டபோது பதில் கசப்பாக வந்தது. ‘பணமா..? எங்கள் பிரதிநிதியாகத்தானே நீங்கள் அங்கு போய் வசூல் செய்தீர்கள். அதோடு உங்கள் கடமை முடிந்தது. கோயில் திருப்பணியை எப்போது செய்வது என்று எங்களுக்குத் தெரியும். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்...’ குருக்களுக்குத் தலை சுற்றியது. சென்னைக்கு வந்து வக்கீல்களைப் பார்த்தார். பெரிய குடும்பத்துக்கு எதிரான வழக்கை எடுக்க பலரும் தயங்கினார்கள். ஒரு வழியாக துரைசுவாமி அய்யரிடம் வந்து சேர்ந்தார்.

விவரங்களைக் கேட்ட அவருக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன. உடனே நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு செய்தார். வழக்குச் செலவுகளைக் கூட தானே பார்த்துக் கொள்வதாக ஏழை குருக்களுக்கு உறுதி அளித்தார். உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது. எதிர்த் தரப்புக்காக சென்னையின் பிரபல வக்கீல்கள் முன்னிலையானார்கள். வழக்கின் விவரங்களையும் வாதி ஏமாற்றப்பட்ட விதத்தையும் துரைசுவாமி அய்யர் தெள்ளத் தெளிவாக விளக்கினார்.

பணம் கொடுத்ததற்கு ஆதாரமாக குருக்களிடம் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது. வெளிநாட்டில் பணத்தைப் பெற்றுக்கொண்டவர் அதனை எழுதிக்கொடுத்திருந்தார். அதை வைத்துக்கொண்டு அய்யர் செய்த குறுக்கு விசாரணையில் எதிர்த் தரப்பு கலங்கியது. வாதங்களைக் கேட்ட ஆங்கிலேய நீதிபதி ஆர்.எஸ்.ஜென்டில் உண்மையைப் புரிந்து கொண்டார். முழுப்பணத்தையும் வட்டியோடு குருக்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட குருக்கள் துரைசுவாமி அய்யரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். வழக்காடியதற்காக அவர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்து ‘‘போய் கோயில் திருப்பணியைப் பாருங்கள்...’’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். இப்படி நியாயத்துக்காகப் போராடும்போது தொழில் லாபங்களைப் பார்க்காத மனித நேய வழக்கறிஞராக இருந்தவர் துரைசுவாமி அய்யர். அதே நேரத்தில் தொழிலிலும் கொடி கட்டிப்பறந்தார். 1920களில் உயர்நீதிமன்றத்தின் ‘ஒரிஜினல் சைடி’ல் முன்னணியில் இருந்த முதல் 5 வக்கீல்களில் அய்யரும் ஒருவர்.

அதிலும் அன்றைக்கு பெரும் பணம் புழங்கிய ‘பெரியமேடு தோல் தொழில் வழக்கு’களில் பாதிக்கு இவர்தான் வழக்கறிஞர். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பே மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதித்தவர். வழக்கறிஞர் தொழிலின் முக்கியமான இரு அம்சங்களில் துரைசுவாமி அய்யர் கை தேர்ந்தவர். முதலாவது ‘ஓபனிங் ஆஃப் த கேஸ்’ என்று சொல்லப்படும் வழக்கைத் தொடங்கி வைத்து விளக்கும் வாதத்திறமை. இரண்டாவது, திணறடிக்கும் வகையில் குறுக்கு விசாரணை செய்யும் திறன். இவற்றோடு அழகான ஆங்கிலப் பேச்சாற்றலும், தடயவியல் துறை அறிவும் அவருக்குப் பலமாக இருந்தது.

எல்லாவற்றையும் விட ‘நீதி எப்போதும் உண்மைக்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டும்’ என்பதில் அசைக்க முடியாத உறுதி கொண்டிருந்தார். தனிப்பட்ட வாழ்விலும் அய்யர் இதனைக் கடைப்பிடித்தார். வக்கீலாகவும் இருந்து கொண்டு, சத்தியவானாகவும் திகழ்வது அத்தனை எளிதானதல்ல. துரைசுவாமி அய்யரின் சிறப்பியல்புகளில் இது முக்கியமானது. புகழ்பெற்ற இசைக்கலைஞரான ‘வீணை’ குப்பய்யரின் பரம்பரையில் பிறந்த துரைசுவாமி அய்யர், வீணை வாசிப்பதில் கெட்டிக்காரர். இதற்காக இசை மூவர்களில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் வம்சா வளியில் வந்த சியாமா சாஸ்திரி என்பவரிடம் முறைப்படி வீணை கற்றுக்கொண்டார்.

சட்டப்படிப்பை முடித்தவுடன் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான எஸ்.சீனிவாச அய்யங்காரிடம் தொழில் பழகுநராக சேர்ந்தார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக அய்யங்கார் திகழ்ந்ததால், துரைசுவாமி அய்யரும் அரசியலில் ஆர்வம் காட்டினார். ஆனால், காங்கிரசில் அய்யங்கார் மிதவாதி. அய்யருக்கோ மிதவாதம் பிடிக்காது. அதிரடியாக ஆங்கிலேயரை அடித்து விரட்ட வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்குள் இத்தகைய எண்ணம் கொண்டவர்களுக்கு எல்லாம் திலகர்தான் தலைவர். வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதி போன்ற தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் துரைசுவாமி அய்யருடன் நட்பு பாராட்டினர். அதிலும் பாரதியும் அய்யரும் ‘வாடா... போடா...’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம். 1907ல் நடைபெற்ற சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்கு இவர்களெல்லாம் சேர்ந்துதான் போனார்கள்.

‘காங்கிரஸ் கலாசாரம்’ என்றழைக்கப்படும் கோஷ்டி மோதல் சூரத் மாநாட்டிலே பட்டவர்த்தனமாக வெடித்தது. மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் நாற்காலிகளும் செருப்புகளும் பறந்தன. இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழிகள் பலவற்றிலும் வசைச் சொற்கள் வந்து விழுந்து அந்த இடத்தை நாராசமாக மாற்றின. துரைசுவாமி அய்யர் உள்ளிட்ட அவரது நண்பர்கள் திலகரின் பின்னால் நின்று, மிதவாதிகளுக்கு எதிராக சண்டமாருதம் முழங்கினார்கள்.

இதனால் மாநாட்டுக்குப் பின்னர் ‘சூரத்’ துரைசுவாமி அய்யர் என்றே அழைக்கப்பட்டார். வக்கீல் என்பதை விட சூரத் என்ற சொல்லே பன்னெடுங்காலமாக அவரை அடையாளப்படுத்தியது. வேடிக்கை என்னவென்றால், சூரத் மாநாட்டுக்குப் பின் துரைசுவாமி அய்யருக்கு காங்கிரஸ் மட்டுமல்ல, அரசியலே பிடிக்காமல் போய்விட்டது. முழு நேரமாக வழக்கறிஞர் தொழிலைக் கவனிக்கத் தொடங்கினார். சொல்லப்போனால் அதற்குப் பிறகே அவர் ஏறுமுகத்தில் நடைபோட்டார். பெயரும் புகழும் பணமும் சேர்ந்தன.

வக்கீல் தொழிலின் உச்சத்தில் இருந்த நேரத்தில் அன்பு மகனின் மரணம் துரைசுவாமி அய்யரை உலுக்கி எடுத்தது. மீளவிடாத துயரத்தில் இருந்து வெளியில் வர முடியாமல் தவித்தார். கடைசியாக வக்கீல் தொழிலையே விட்டு வெளியேறினார். இப்படி உச்சாணிக் கொம்பில் இருந்துவிட்டு வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பது அரிதினும் அரிதானது.

வக்கீல் தொழிலை விட்ட பிறகு ராயப்பேட்டையில் இருந்த மாளிகை போன்ற வீட்டையும் விற்றுவிட்டார். சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் சென்றார். அங்கே அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி, ஆன்மீகப் பாதைக்குத் திரும்பிய தன்னுடைய நண்பர் அரவிந்த் கோஷ் ஆசிரமத்தில் தங்கினார். தீவிரவாத அரசியலை முன்னெடுத்த காலத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள்.

அரவிந்தரின் மறைவுக்குப் பின்னர் மீண்டும் சென்னைக்கு வந்த துரைசுவாமி அய்யர் தமது குருநாதர் எஸ்.சீனிவாச அய்யங்காரின் மகனான பார்த்தசாரதியுடன் திருமுல்லைவாயிலில் குடில் போன்ற ஓரிடத்தில் தங்கி துறவி போல் வாழ்ந்தார். ஓய்வு பெற்ற பிறகும் அய்யரைத் தேடி வாய்ப்புகள் வந்தன. 1937ல் ராஜாஜி முதலமைச்சரான போது சென்னை மாகாணத்தின் அட்வகேட் ஜெனரலாக வேண்டுமென அய்யரைக் கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் சொன்ன பதில்: ‘நான் ஓய்வு பெற்ற வக்கீல்.

தொழிலைவிட்டு போனவன். என்னை அட்வகேட் ஜெனரலாக இருக்கச் சொல்வது சரியானதல்ல...’  என்றார். நீதிபதி பதவி வந்தபோதும் அவருக்கு இதே மன நிலைதான்! ‘வாழ்க்கை என்பதே மாயை. எல்லோரும் எப்போதும் சந்தோசமாகவே இருக்க வழி தேடுவது அர்த்தமற்றது’ என்று ஞானியைப் போல சொன்னவர் துரைசுவாமி அய்யர். அந்த சட்ட நிபுணருக்குள் துறவியின் மனசு எப்போதும் இருந்திருக்கிறது போலும்!

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்

பள்ளிக்கூடமான வீடு

சென்னை ராயப்பேட்டையில் திரு.வி.க. மூன்றாவது தெரு என்பதே அந்த வீதியின் பெயர். ஆனால், அதைவிட எளிதாக ‘கேசரி ஹை ஸ்கூல் ரோடு’ என்றால் எல்லாருக்கும் பளிச்சென புரியும். சென்னை வாழ் தெலுங்கு மக்களிடம் பிரசித்தி பெற்ற அந்த பள்ளிக்கூடம்தான் துரைசுவாமி அய்யரின் ‘பாம்குரோவ்’ என்ற பெயரிலான வீடு. அரசு வழக்கறிஞராகவும் இந்தியன் வங்கியில் இயக்குநராகவும் இருந்த எல்.ஏ.கோவிந்தராகவ அய்யர் என்பவரிடம் இருந்து இந்த வீட்டை துரைசுவாமி அய்யர் வாங்கினார். விடுதலைப் போராட்டக் காலத்தில் நிறைய வீரர்களுக்குப் புகலிடமாக விளங்கிய வீடு இது. மகன் இறந்த பிறகு இவ்வீட்டை ஆயுர்வேத டாக்டரான கே.என்.கேசரி என்பவரிடம் அய்யர் விற்றார். அவர் அதில் தொடங்கிய பள்ளிக்கூடமே பின்னாளில் கேசரி ஸ்கூல் ஆனது.

பாரதியைத் தப்பவைத்த நண்பன்!

விடுதலைப் போராட்டக் காலத்தில் சென்னையிலிருந்த பாரதியார் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. அப்போது அவரை கட்டாயப்படுத்தி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்குப் பத்திரமாக அனுப்பி வைத்தவர் துரைசுவாமி அய்யர். முதல் உலகப்போர் முடிந்து அங்கிருந்து தமிழ்நாட்டுக்குள் நுழைந்த பாரதியை கடலூரில் கைது செய்தது பிரிட்டிஷ் காவல்துறை. 21 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு சி.பி.ராமசாமி அய்யர், அன்னிபெசன்ட் அம்மையார் போன்றோரின் உதவியுடன் பாரதியைக் குற்றமற்றவர் என்று கூறி விடுவிக்க வைத்தவர் துரைசுவாமி அய்யர்.

பாரதியின் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்த இவர், ‘‘பாரதியின் தேசபக்தி யாரிடமும் கடன் வாங்காத அவனுடைய சொந்த சரக்கு. தமிழ்நாடுதான் பாரதி. அப்படித்தான் எனக்குச் சொல்லத்தெரியும்...’’ என்று ஒருமுறை உருகிக் கூறினார். பாரதியைச் சிறையிலிருந்து வெளியே எடுக்கும் வரை அவரது குடும்பத்தை துரைசுவாமி அய்யர் தமது வீட்டிலேயே தங்க வைத்து கவனித்துக் கொண்டார். இதனை பாரதியாரின் மனைவி செல்லம்மா ‘பாரதியார் சரித்திரம்’ நூலில் எழுதியிருக்கிறார். பாரதி மறைந்த போது அவரது இறுதிச்சடங்குகளுக்கான செலவுகளைக் கவனித்துக் கொண்டதும் துரைசுவாமி அய்யர்தான்.

நிறுத்தும் இடம் தெரியணும்!

துரைசுவாமி அய்யரிடம் ஜூனியராக இருந்து பிற்காலத்தில் ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தவர் பி.ஜெகன்மோகன் ரெட்டி. இவர் தமது வாழ்க்கை வரலாற்று நூலில் அய்யரைப் பற்றி சில செய்திகளை நன்றிப் பெருக்கோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். “வழக்கைத் தயாரிக்கும் கலையிலும், குறுக்கு விசாரணை செய்யும் கலையிலும் துரைசுவாமி அய்யர் விற்பன்னர். அவரிடம் கற்றுக்கொண்ட அம்சங்கள் அத்தனையும் அற்புதமானவை.

குறுக்கு விசாரணையின் போது ‘பூமராங்’ ஆகி நம்மையே திருப்பித் தாக்கும் கேள்விகளை எப்படி தவிர்ப்பது என்பது அதில் முக்கியமானது. அதைப்போலவே நீதிபதியின் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கிய பிறகு எந்த இடத்தில் வாதத்தை நிறுத்தவேண்டும், சாட்சியங்களை உடைப்பது எப்படி என்பன போன்றவற்றுக்கு துரைசுவாமி அய்யர் ஒரு கல்லூரி போன்றவர்” என்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி.