நிறைய காஸிப் சுத்துதுப்பா...
-மை.பாரதிராஜா
ஜனகராஜ் செகண்ட் இன்னிங்ஸ்
‘மண்வாசனை’ 120வது நாள், ‘பணக்காரன்’ 25வது வாரம், ‘பாட்ஷா’ வெள்ளி விழா, ‘அண்ணாமலை’ 175வது நாள், ‘ராஜாதிராஜா’ 125வது நாள் விழா... இன்றைய தலைமுறை நடிகர்களின் வீடுகளில் காணக் கிடைக்காத வெற்றி விழா ஷீல்டுகள் ஜனகராஜ் வீட்டு ஹாலை அலங்கரிக்கின்றன.
 ‘‘இன்னா சார் பாக்குறீங்கோ... அந்தாண்ட இருக்கறது எங்க டைரக்டர் குடுத்த ஷீல்டு. மொத தடவையா அவர்ட்ட வாங்கினது. இந்தாண்ட இருக்கறது ரஜினி கையால வாங்கினது. என்னாண்ட இருக்கற மிச்சசொச்ச சந்தோஷம் இதெல்லாம்தான்ப்பா. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மொத நாள் ஷூட்டிங் போனதும் மெய்யாலுமே மெர்சலாயிட்டேன். கேமராவுல ஃபிலிமையே காணோம். சின்ன ஒரு சீனுக்கே அம்பது அறுபது ஷாட் வைக்கறாங்கோ.
ஆக்டர்களை வுட கேமராமேனுக்குதான் இப்போ வேலை அதிகம். என்னோட ரெண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியாச்சுபா... வூடு கட்டி அடிக்கலாம்னு நினைக்கறேன். என்னா சொல்ற...?’’ கைகுலுக்கலும் ஸ்ட்ராங் டீயுமாக தனது டிரேட் மார்க், ‘க்கெக்கெக்கெக்கே...’ சிரிப்புடன் வரவேற்கிறார் ஜனகராஜ். நம்ம ஜனகராஜ்.
 ‘‘நான் அமெரிக்காவுல செட்டில் ஆயிட்டேன்... ட்ரீட்மென்ட் எடுக்கறேன்... ஆடிட்டர் ஆபீஸ்ல கிளார்க்கா இருந்தேன்னு ‘என் தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா...’ கணக்கா என்னைச் சுத்தி காஸிப் கடிக்குதுப்பா. அந்தளவுக்கு நான் ஒர்த் இல்ல! இந்த ஜனகராஜ் உங்கள வுட்டுட்டு எங்கியும் போயிடல. போகவும் மாட்டான். இதே எல்டாம்ஸ் ரோட்டுல படு சோக்கா தெனமும் வாக்கிங் போயிகினுதான் இருந்தேன்...’’ தனக்கு அடையாளமாக இருக்கும் கண்களை லேசாக மூடியபடி பேச ஆரம்பிக்கிறார்.
‘‘அது என்ன ஆச்சுன்னா... கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி பிபி அதிகமாகிடுச்சு. என்னமோ சொல்வாங்களே... என்ன அது... ஆங்... சுகரு லேசா எட்டிப் பார்த்துச்சு. இந்த ரெண்டும் புருஷன் பொண்டாட்டி மாதிரி கை கோர்த்தா என்னாகும்? உடம்பு போட்டுடுச்சு. ஷூட்டிங் போனா மட்டன், சிக்கன், காடை, வறுத்த மீனு, சிக்கன் 65னு எல்லாம் இருக்கும். சும்மா கண்ணால அத பார்த்துட்டு எப்புடி பேசாம போக முடியும்? நீயே சொல்லு ராஜா. எடுத்து கடிக்கத் தோணுமா இல்லையா? சாப்ட்டா என்னாகும்? உடம்புல இருக்கிற பிரச்னை அதிகமாகும்.
சரி... இதோட பிரச்னை முடியுமான்னா அதுவும் இல்ல... நேரத்துக்கு சாப்பிடவும் முடியாது. வேல... வேலனு கால்ல சக்கரத்த கட்டிக்கிட்டு ஓடிக்கிட்டே இருக்கணும். இதெல்லாத்தையும் யோசிச்சுட்டு இருந்தப்ப தலைல அந்த இடி இறங்குச்சுப்பா...’’ உற்சாகத்துடன் பேசிக் கொண்டே வந்த ஜனகராஜ் சட்டென்று மவுனமாகிறார். சில நொடிகள் கடந்ததும் தொடர்ந்தார்.
‘‘இந்த நேரத்துல அப்பா தவறிட்டாரு. சுகரு, பிபிக்கு எல்லாம் அசராம இருந்தேன். ஆனா, நைனா போனதை தாங்கிக்க முடியல. இந்த ஜனகராஜோட ஒர்க்கை எல்லாம் அவர்தான் பார்த்துகிட்டு இருந்தாரு. வூட்டுல எனக்கு ஒரு டென்ஷன் கூட ஏற்படாம பொத்திப் பொத்தி பாதுகாத்தாரு. அப்படிப்பட்டவரு இறந்ததை ஜீரணிக்கவே முடியல. உடைஞ்சு போயிட்டேன் ராசா...
மெல்ல மெல்ல இதுலேந்து தேறி வந்தனா... வூட்டுல பொறுப்பு அதிகமாகிடுச்சு. குடும்பத் தலைவனா லட்சணமா சிலதை செய்ய வேண்டியிருந்தது. எல்லாத்தையும் நைனாவ நினைச்சுகிட்டே செஞ்சு முடிச்சேன். இப்பவும் அப்பா நினைப்பு இருக்கத்தான் செய்யுது. அது எப்படி போகும்... ஆனா, ஒண்ணு. மனசுக்குள்ள இப்பவும் நைனா இருக்காரு. இதோ உன்னாண்ட பேசறப்ப கூட ‘நம்ம தம்பிதான்... சகஜமா பேசு’னு உள்ளுக்குள்ள சொல்லிகிட்டே இருக்காரு. சரிதான ராசா... என் தம்பிதானே நீ...?’’ கபடமற்று கண்களைச் சிமிட்டுகிறார். ஆண்டுகள் உதிர்ந்தாலும் நமக்குத் தெரிந்த ஜனகராஜ் மட்டும் அப்படியேதான் இருக்கிறார்.
‘‘அப்படியா சொல்றீங்க... இப்ப கொஞ்சம் ஸ்லிம்மா ஆகிட்டேன்னு சொல்றாங்களே... தமன்னாவுக்கு ஜோடியா நடிக்கலாமா...?’’ முகமெல்லாம் சிரிப்பு வழிகிறது. ‘‘ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் சொல்றேன் கண்ணு. கவனமா நோட் பண்ணிக்கோ. அப்ப நம்ம வூடு பெரியார் ரோட்டுல இருந்துச்சு. நெறைய சினிமாக்காரங்க நம்ம வூட்லதான் வாடகைக்கு இருந்தாங்க. மலேசியா வாசுதேவன் இருந்தப்ப அவரைப் பார்க்க எங்க டைரக்டர் பாரதிராஜா, இளையராஜானு ஜாம்பவானுங்க எல்லாம் வருவாங்க. அவங்களோட சரிக்கு சமமா உட்கார்ந்து சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருப்பேன். எல்லாருக்கும் என்ன புடிச்சுப் போச்சு.
அப்ப பாரதிராஜா சார் ஒரு டிராமா எழுதியிருந்தாரு. ‘இதுல நீ ஹீரோவா நடி’னு சொன்னாரு. ஷாக்காயிட்டேன் தம்பி. என்னா சொல்றதுன்னே தெரியல. அதுக்குள்ள மத்தவங்க ‘அவன் பாக்க ரொம்ப சின்னப் பையனா இருக்கானே’னு இழுத்தாங்க. டைரக்டரும் அப்படியே நினைச்சிருப்பாரு போல. அவரே அதுல ஹீரோவா நடிச்சுட்டாரு. இளையராஜா சார்தான் மியூசிக். நான் ஒல்லியா இருந்ததால எனக்கு ‘எலும்பு கோபால்’னு ஒரு கேரக்டர கொடுத்தார். எல்லாரும் ரசிச்சாங்க.
அப்பவே அவங்க ஆசீர்வாதத்தோட ஐயா நடிக்க வந்தாச்சு. அப்புறம் ரெண்டு மூணு டிராமா நடிச்சிருப்பேன். எங்க டைரக்டர் ‘16 வயதினிலே’ ஷூட்டிங் போனப்ப நான் வெளியூர்ல இருந்தேன். அதனால அதுல நடிக்க முடியாமப் போச்சு. ஆனா, சார் விடல. ‘கிழக்கே போகும் ரயில்’ல தரதரனு இழுத்துட்டு வந்து அவரே என்னை அறிமுகப்படுத்தினாரு. அத்தோட விட்டுடுவாரா..? தொடர்ச்சியா வாய்ப்பு கொடுத்தாரு. இந்த மூஞ்சும் ரசிகர்கள்கிட்ட போய் சேர்ந்துச்சு.
இந்த நேரத்துல ராபர்ட் ராஜசேகர் தோஸ்தா ஆனாங்க. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ‘பாலைவனச் சோலை’ ஆரம்பிச்சப்ப அஞ்சு ஹீரோல ஒருத்தனா என்னையும் நடிக்க வைச்சாங்க. இதுக்கு அப்புறம் காமெடியனா எப்படி ஆனேன்னு எனக்கே ஞாபகம் இல்ல. ஆரம்பத்துல மதுரை ஸ்லாங்லதான் பேசிட்டிருந்தேன். அப்புறம்தான் மெட்ராஸ் தமிழுக்கு மாறினேன். இன்னிக்கி ஜனகராஜ்னா அந்த மெட்ராஸ் ஸ்லாங்தானே அல்லாருக்கும் நினைவு வருது..?’’ என்று கேட்கும் ஜனகராஜ், தான் நடித்த படங்களிலேயே ‘இனி ஒரு சுதந்திரம்’தான் ஸ்பெஷல் என்கிறார்.
‘‘அருமையான கேரக்டர் கண்ணு. இப்ப பாக்கறப்பவும் நானா நடிச்சேன்னு இருக்கு... ‘கிழக்கு வாசல்’ ஷூட்டிங்க மறக்கவே முடியாது. சாட்டையை வச்சு, உடம்புல அடிச்சு பொழப்பு நடத்தற கேரக்டர். இது மாதிரி நிஜமாவே பண்ணறவங்க சாட்டைய சுத்தறப்ப சத்தம்தான் வரும். ஆனா, நான் சுத்தினப்ப ஒடம்புல பட்டு வடுவாகிடுச்சு. நாலஞ்சு நாள் ப்ராக்டீஸ் செஞ்சதுக்கு அப்புறம்தான் அந்த வித்த கைகூடிச்சு. ‘சினிமா இல்லனாலும் கைல ஒரு பொழப்பு இருக்கு’னு கார்த்திக்கிட்டயும் ரேவதிகிட்டயும் சொன்னேன்.
விழுந்து விழுந்து சிரிச்சாங்க...’’ என்று சொல்லும் ஜனகராஜுக்கு ரஜினி, கமல் ஆகிய இருவருடனும் தான் நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றன என்பதில் மனம் கொள்ளாத மகிழ்ச்சி. ‘‘இந்த பாக்கியம் வேற யாருக்கு கெடைக்கும்? இதோ இப்பக்கூட ‘பாட்ஷா’வை டிஜிட்டல்ல பண்ணியிருக்கோம், வந்து பாருங்கனு கூப்பிட்டிருக்காங்க. சந்தோஷமா இருக்கு ராசா... ரஜினியும், கமலும் தங்கமானவங்க. நம்மகிட்ட எப்பவும் ரஜினி டவுன் டு எர்த்தா இருப்பார். மனசு விட்டு பேசுவார்.
கமல் அப்படியில்ல. நிறைய பேச மாட்டாரு. ஆனா, தன்னோட ஒவ்வொரு அசைவுலயும் ‘உனக்கு ஆதரவா நான் இருக்கேன்’னு உணர்த்திக்கிட்டே இருப்பார். இவங்க ரெண்டு பேரை விட அதிகமா நான் பழகினது மணிரத்னத்துகிட்டதான். ‘அக்னி நட்சத்திரம்’ல இருந்துதான் அவரோட படங்கள்ல காமெடி இருக்கும். ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...’ இன்னிக்கும் பாப்புலரா இருக்கு. மீம்ஸ் எல்லாம் கூட இப்ப அத வைச்சு வருதாமே? பசங்க சொன்னாங்க. என் பையன் சாஃப்ட்வேர்ல இருக்கான். ‘அப்பா இத பாரு’னு அத எல்லாம் பொட்டில காட்டுவான்!’’ என்ற ஜனகராஜ், ஹாலிவுட் காமெடியை விட பிரிட்டிஷ் காமெடி பிரமாதமாக இருக்கும் என்கிறார்.
‘‘தெலுங்கு, இந்தில கூட கொஞ்சம் சுமார்தான். டாப்புன்னா அது தமிழ்தான். என்ன நான் சொல்றது? நம்ம ஜீன்லயே காமெடி இருக்கு ராசா... கலைவாணரு, சந்திரபாபு காமெடிய இப்பவும் ரசிக்கிறோமே... ஏன்? குவாலிட்டி கண்ணா. படம் சரியில்லைனாலும் அதுல காமெடி ஷோக்கா இருந்தா நம்ம ஜனங்க தலைல தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க. ஒண்ணு சொல்லட்டா... ஹீரோவை வெளில பார்த்தா ‘ஹலோ சார்’னு ரசிகர்கள் கைகுலுக்குவாங்க.
வில்லனைப் பார்த்தா, ‘இவன்ட்ட ஏன் வம்பு வச்சுக்கணும்’னு ஒதுங்கிப் போவாங்க. ஆனா, காமெடியனைப் பார்த்துட்டா எல்லாருக்கும் சந்தோஷம் பொத்துக்கிட்டு வரும். தோள்ல கை போட்டு சொந்தம் கொண்டாடுவாங்க. அதுதாம்ப்பா எங்களுக்கு கிடைச்ச பெருமை...’’ கண்கள் விரிய சொல்லும் ஜனகராஜ், 35 வருடங்களாக நடித்து வருகிறாராம். ‘‘எல்லா லேங்குவேஜும் சேர்த்து 250 படங்கள்கிட்ட பண்ணிட்டேன். இத்தனை வருஷத்துல நான் கத்துகிட்டது ஒண்ணே ஒண்ணுதான்.
எதுக்கும் டென்ஷன் ஆகாதீங்க. டென்ஷன் ஆகி டென்ஷன் ஆகிதான் நடுவுல அவஸ்தைப்பட்டேன். பீக்ல இருந்தப்பவே ஒதுங்கிட்டேன். நடுவுல நெறைய இயக்குநர்கள் கதை சொல்ல வந்தாங்க. நான்தான் கொஞ்ச நாள் போகட்டும்னு அமைதியா இருந்தேன். விஜய்ஸ்ரீராஜ்னு ஒரு புது டைரக்டர். ஆறேழு மாசமா விடாம ஃபாலோ பண்ணி, கதை கேட்க வச்சுட்டார். நல்ல ஸ்கிரிப்ட். ‘சரி நடிக்கறேன்’னு சொல்லிட்டேன். அதோட ஷூட்டிங்தான் இப்ப போகுது. சாருஹாசண்ணா முக்கியமான ரோல் பண்றாரு. ‘என்னமோ போடா மாதவா’னு அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகிட்டேன்.இனிமே தொடர்ந்து நடிப்பேன்...’’ உற்சாகத்துடன் சொல்கிறார் ஜனகராஜ். நம்ம ஜனகராஜ்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால் படங்கள் உதவி: ஞானம்
|