நன்றி மொழி
“கலியழிப்பது பெண்கள் அறமடா! கைகள் கோத்துக் களித்து நின்றாடுவோம்!” - பாரதி
கண்களுக்கான பூட்டுகள்... உதடுகளுக்கான பூட்டுகள்... ஏன் நினைப்பதற்கான பூட்டுகள் என ஏராளமான முன்கற்பித துருப்பிடித்த பூட்டுகள் பெண் ஆண் உறவுகளிடம் மொழியழித்த மூச்சுத் திணறலை உருவாக்கியிருக்கின்றன.
இந்தப் பூட்டுகளை அடித்து உடைத்து வீசியெறிவதற்கான சுத்தியல் முயற்சியே இந்த ‘நட்புமொழி’.
பால் முரண்களைக் கவித்துவ அழகாக்குவன காதலும் காமமும். வாழ்வியல் அழகாக்குவது நட்பு மட்டுமே.
ஆயினும்... கைபேசிக் காலத்திலும் பொய்பேசித் தரகர்களாலேயே கட்டமைக்கப்படுகிறது நம் பிள்ளைகளுக்கான இல்லறம்!
நாம் பெற்று படிக்க வைத்த பெண்களின் படிப்புத் தகுதிகளை நீட்டினால்... அவற்றை மறுதலித்துவிட்டு உன் பெண் வயசுக்கு வந்த நேரம் சொல் என்கிறான் தரகன்!
காதல் உயிர் இயற்கை.. எனும் அகத் தமிழ் இயல்பில் காதல் செய்வீர். எனில் சாதல் செய்வோம் என்கிறது நிகழ்காலம்.
இத்தகைய நெருக்கடிகளுக்கான இடர்களிலிருந்து விடுதலை பெறத்தான்... பெண்கள்... ஆண்கள்... உடல்கள் கடந்து சுயங்களால் பேசவேண்டிய... பழகவேண்டிய... சூழல்களுக்கான கதவுகளை... படிப்பு.. பணி.. பயணம் ஆகியன அகலத் திறந்துவிட்டிருக்கின்றன.
இனி எந்தப் பழமைகளாலும் இவற்றை இழுத்து மூடிவிட முடியாது.
இந்த அழகிய சூழலுக்குள்ளாக அறமற்ற வணிகப் பணவுலகம் இரவு பகலைக் குழப்பி பெண்... ஆண் உறவிலும் ஒழுக்கப் பிறழ்வை உள்புகுத்தப் பல்வேறு உளவியல் உத்திகளைக் கடைபரப்பி வைக்கிறது.
வைக்கட்டுமே!
இவர்கள் விரிக்கும் இந்தச் சூழ்ச்சி வலைகளின் கண்ணிகளை அறுத்தெறிந்து.. சிறகுச் சிக்கலின்றிப் பறக்க... இருக்கவே இருக்கிறது ‘நட்பு’.
ஆதலால் ‘காதல் செய்வீர்’ என்று அன்று பாரதி சொன்னதைப் போல
‘நட்பு செய்வீர்’ என்று இன்று சொல்ல வந்தேன் அறிவுமதி.
ஆம்... வானம் அள்ளிக் குடித்தால்தான் நட்பு.
குங்குமம்.. பத்து இதழ்கள் வாயிலாக ஓவியர் ப்ரத்யூஷ் அவர்களின் அழகிய ஓவியங்களோடு இந்த ‘நட்புமொழி’யை உங்களிடம் உச்சரிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி சொல்லி மகிழ்கிறேன்.
அன்புடன் உங்கள் அறிவுமதி.
|