விருச்சிக லக்னம்- செவ்வாயின் சுயம்பு யோகம்கிரகங்கள் தரும் யோகங்கள் - 72

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

பெரும் வெற்றி பெற்ற மனிதரை உற்றுப் பார்த்தால் அவருக்குப் பின்னால் விருச்சிக லக்னக்காரர் இருப்பதை அறியலாம். ஸ்திர லக்னங்களிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலிகள் நீங்கள்தான். அடிப்படை விஷயங்களான வீடு, மனை, சொத்து, சுகம் எல்லாமும் அமைந்துவிடும். ஆனால், ஏதோ ஒன்றுக்காக தனக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். தனக்காக வாழாமல் சுற்றியுள்ளோருக்காக வாழ்ந்துவிட்டு மத்திம வயதில்தான் தனக்கென்று வாழ ஆரம்பிப்பார்கள். தன் கண்ணெதிரே தவறு நடக்கும்போது யோசிக்காமல் தட்டிக் கேட்பார்கள். எதையும் கண்டும் காணாமலும் இருக்கத் தெரியாது.

வீட்டிலேயே இவர்களைப் புரியாத புதிராகத்தான் பார்ப்பார்கள். தந்தையின் உழைப்பில் ஒதுங்காமல், தந்தையைத் தாண்டி வரவே விரும்புவார்கள். இவர்கள் பயணப்படும்போது புத்தி மிகக் கூர்மையாக வேலை செய்யும். அப்படிப்பட்ட நேரங்களில் யோசிப்பதைக் குறித்து வைத்துக் கொண்டு செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம். சுற்றியுள்ளோர்களைப்பற்றி சரியான மதிப்பீடுகளால் விமர்சிப்பது பிடிக்கும்.

மேலும், வாழ்க்கைத் துணையை எங்குமே விட்டுக் கொடுக்கவே மாட்டீர்கள். லௌகீகத்திற்கும் ஆன்மிகத்திற்குமிடையே அவ்வப்போது அல்லாடிக் கொண்டிருப்பீர்கள். இல்லறமா? துறவறமா? என்கிற அலைக்கழிப்பு மத்திம வயதைத் தாண்டியவுடன் வந்துவிடும். மேலே சொன்னவை யாவும் விருச்சிக லக்னத்தின் பொதுவான பலன்களாகும். இப்போது லக்னாதிபதியான செவ்வாய் ஒவ்வொரு ராசியிலும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா.

லக்னாதிபதியான செவ்வாய் லக்னத்திலேயே அதாவது, ஒன்றாமிடத்தில் இருந்தால் தோற்றமே கம்பீரமாக இருக்கும். பார்வையே பல விஷயங்களைச் சொல்லும். எந்த நேரத்தில் யாரை என்ன சொல்லுவாரோ என்று சுற்றியுள்ளோர் நடுங்கியபடி இருப்பார்கள். இவர்கள் பெண்களாக இருப்பின் மிகுந்த ஆளுமைப் பண்போடு இருப்பார்கள். எங்கும் யாருக்கும் முடிந்த வரையில் வளைந்து கொடுத்துப் போக மாட்டார்கள்.

எல்லோர் பேச்சையும் கேட்டாலும் தன்னுடைய இஷ்டத்திற்குத்தான் முடிவெடுப்பார்கள். தன்னைத் தானே சுத்தம் செய்துகொண்டு நதிநீரைப் போல நகர்ந்து கொண்டேயிருப்பார்கள். எவ்வளவு பெரிய துயர் வரினும் எதிர்கொள்வார்கள். சுய கழிவிரக்கம், பச்சாத்தாபம் போன்றவையெல்லாம் சுத்தமாக இவர்களுக்குப் பிடிக்காது. ஒரு போருக்குச் செல்லும் மனோநிலையிலேயே எப்போதும் இருப்பார்கள். செவ்வாய்க்கு பொதுவாகவே புதனும் சனியும் பகைவர்கள். எனவே, புதன் மற்றும் சனியின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற கிரகங்களில் செவ்வாய் சென்று அமரக் கூடாது.

இரண்டாம் இடமான தனுசு ராசியில் செவ்வாய் அமர்வது மிகமிக நல்ல விஷயமாகும். சிறந்த மேடைப் பேச்சாளர்களாக வருவார்கள். அதேபோல ஒரு பள்ளியை நிர்வகிக்கும் ஆசிரியராகவும் வருவார்கள். இன்னும் சொல்லப் போனால் கண் மருத்துவத்தில் சிறந்த மருத்துவராக விளங்குவார்கள். கையில் பணமாக வைத்துக் கொள்ளாமல் சொத்தாகவே நிறைய சேர்ப்பார்கள். எப்போதோ வாங்கிப்போட்ட இடங்களெல்லாம் தற்போது நல்ல விலைக்கு வந்து விற்பார்கள். வழக்கால் செல்வம் ஈட்டுவார்கள்.

ஆனால், திடீரென்று கூடாப் பழக்க வழக்கங்கள் வந்து செல்வத்தை இழக்க நேரிடும். லக்னத்தில் இருந்து செவ்வாய் 2, 4, 7, 8, 12ல் இருந்தால்  அது செவ்வாய் தோஷம் எனப்படும். ஆனால், விருச்சிக லக்னத்திற்கு லக்னாதிபதியே செவ்வாயாக இருப்பதால் தோஷத்தின் வீர்யம் குறையும். பாதிப்பும் குறையும். மகர ராசியான, மூன்றாம் இடத்தில் செவ்வாய் உச்சமாக சென்று அமர்கிறார்.

இளைய சகோதரர்கள் நிறைய உதவிகள் செய்வார்கள். குடும்பமாக தொழிலில் இறங்கி சாதிப்பார்கள். ஆனால், காதை மட்டும் கொஞ்சம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். எப்போதுமே அதிகமாக கரன்சியை கையில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களின் வாழ்க்கை துரியோதனின் கைகளில் கர்ணனைப்போல இருக்கும். எனவே, சேரிடம் அறிந்து சேரவேண்டும். ஜீவகாருண்ய குணம் மேலோங்கியிருக்கும். தடயவியல் நிபுணராக வருவார்கள். மோப்பநாய் பயிற்சியாளர், குற்றவாளிகளை இனங்கண்டறிதல் என்று பல்வேறு திறமைகள் பெற்றிருப்பார்கள்.

கும்பத்தில் செவ்வாய் அமரும்போது கொஞ்சம் கவனிக்க வேண்டும். நுரையீரல் தொடர்பான அல்லது வீசிங் பிரச்னை வரும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஆணாக இருப்பின் விந்தணுக்குள் குறைபாடு இருக்கும். பெண்ணாக இருந்தால் ரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் தொந்தரவு இருக்கும். தாயாரோடு ஏதேனும் பிரச்னைகள் இருந்தபடியிருக்கும். ஏதோவொரு செலவு ஏற்பட்டபடி இருக்கும். சொந்த தேசத்தைவிட அந்நிய தேசத்தில் புகழ்பெற்று விளங்குவார்கள்.

தூக்கம் குறையும். இந்த சேர்க்கை பெற்றிருப்பவர்கள் சகோதரர்களோடு விட்டுக் கொடுத்துப்போனால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும். யாருக்கும் ஜாமீன், கேரண்டி கையெழுத்து போடாமல் இருப்பதே நல்லது. பிள்ளைகளை மிகவும் சுதந்திரர்களாக வளர்ப்பார்கள். எப்போதும் குச்சி எடுத்து பாடம் நடத்த மாட்டார்கள். மீன ராசியான ஐந்தாம் வீடான பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் அமரும்போது சிறந்த மக்கட்பேறு கிட்டும். குருவின் வீட்டில் அமர்வதால் ஆச்சரியமான விதத்தில் உள்ளுணர்வு செயல்புரியும். இந்த அமைப்பை ராஜகுரு என்று சொல்லலாம். பிரபலமாவார்கள் அல்லது பிரபலமானவர்களிடம் உதவியாளராக இருப்பார்கள்.

கடைசிவரைக்கும் பிள்ளைகள் தங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென விரும்புவார்கள். எதிராளி எவ்வளவு தெரிந்து வைத்திருந்தாலும் அவருக்கென்ன தெரியும் என்று பேசுவார்கள். பூர்வீகச் சொத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். பூர்வீகச் சொத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கக் கூடாது. தாய் மாமன் உறவில் ஏதேனும் பகை உணர்வு இருந்துகொண்டேயிருக்கும்.

ஆறாம் இடமான மேஷத்தில் செவ்வாய் இருந்தால் ஹெர்னியா, பைல்ஸ், தைராய்டு பிரச்னைகள் இருக்கும். லக்னாதிபதியே ஆறாம் வீட்டிற்கு அதிபதியாக வருகிறார். இதனால் உங்களின் உழைப்பிலேயே வளர்ந்த இன்னொருவர் உங்களுக்கு எதிராகச் செயல்படுவார். வார்த்தைகளை இறைக்கக் கூடாது. அளவோடு பேசவேண்டும். காமவேகம் அதிகமாக இருக்கும். எதையுமே மிகைப்படுத்தித்தான் பேசுவார்கள். அடுத்தவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவார்கள்.

கியர் வண்டியை இயக்காது சாதாரண வண்டியை இயக்கிச் செல்லுதல் நல்லது. சகோதரர்களுக்குள் பிரச்னைகள் வரும். இவர்களுக்கு வழக்கில் வெற்றி உண்டு. எதிரிகளை எளிதாக ஜெயிப்பார்கள். ஏழாமிடமான ரிஷபத்தில் செவ்வாய் இருந்தால் வாழ்க்கைத் துணைவர் கலைகளில்  ஈடுபாடு மிக்கவர்களாக இருப்பார்கள். மிகுந்த ரசனை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். சுக்கிரனின் வீட்டில் செவ்வாய் இருந்தால் படைப்புகளில் காரசாரமான விஷயங்களையே கொடுப்பார்கள்.

இவர்களின் படைப்புகளில் சமூகக் கோபமே முக்கியப் பிரச்னையாக எதிரொலிக்கும். பார்த்தாலே பற்றிக் கொள்ளும் பெட்ரோல் போல காதல் வயப்படுவார்கள். இரவு நேரத்திலோ அல்லது பொதுவாகவே இவர்கள் வெகுதூரம் சுயமாக வாகனத்தை இயக்குதல் கூடாது. மத்திம வயதில் கண் பார்வைக் கோளாறு வந்து நீங்கும். கூட்டுத் தொழிலாக வியாபாரத்தை மேற்கொண்டால் மிகச் சிறப்பாக வருவார்கள்.

பொதுவாகவே இந்த அமைப்பு நல்ல முன்னேற்றத்தையே கொடுக்கும். ஆனால், செவ்வாய் தோஷமுள்ள இன்னொரு ஜாதகத்தைச் சேர்த்தால் நன்றாக இருக்கும். எட்டாமிடமான மிதுனத்தில் செவ்வாய் இருந்தால் திடீர் பிரயாணங்களால் எப்போதும் நன்மையே உண்டு. பலர் வெளிநாட்டு வாழ்வுரிமை பெற்று அங்கேயே இருப்பார்கள். வீடு, மனை என்று எல்லா வசதிகளும் எளிதில் கிட்டும். ஆனால், மனதில் திருப்தியற்ற ஒரு வெறுமை இருப்பதைத் தவிர்க்க முடியாது.

எந்த விஷயமாக இருந்தாலும் தன்னைவிட பெரியோர்களிடம் அல்லது விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டுத்தான் செய்வார்கள். ஒன்பதாம் இடமான கடகத்தில் செவ்வாய் அமர்ந்தால் தந்தையை விஞ்ச வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். தந்தைக்கும் பிள்ளைக்குமிடையே ஏதோவொரு பனிப்போர் இருந்துகொண்டே இருக்கும். தனக்குப் பிறகு நடக்க வேண்டிய காரியங்கள் என்று பல்வேறு விதமான தர்ம காரியங்களைப் பட்டியலிட்டு அதற்காக பணத்தையும் ஒதுக்கிவிட்டுத்தான் செல்வார்கள்.

எந்த விஷயமாக இருந்தாலும் மிகவும் கறாரான விமர்சனப் போக்கைக் கொண்டிருப்பார்கள். தவறான வழிக்குச் செல்ல மாட்டார்கள். தானாக நல்லது நடக்கும் என்றுதான் எப்போதும் பேசுவார்கள். பத்தாம் வீடான சிம்மத்தில் செவ்வாய் அமரும்போது அரசாங்கத்தில் பெரிய பதவிகளில் சென்று அமர்வார்கள். சொத்துச் சேர்க்கை, தோப்பு, பங்களா என்று ஏகபோகமான வாழ்க்கை அமையும்.

சிலர் அரசாங்கத்தில் வலிமையான பதவிகளிலும், மந்திரிகளாகவும் அமர்ந்திருப்பார்கள். காவல்துறை, ராணுவம், வங்கி அதிகாரிகள் என்று அமர்வார்கள். எலக்ட்ரிக்கல் ஷாப், பாத்திரத் தொழிற்சாலை போன்றவற்றை தொடங்க முயற்சித்து வெற்றியடைவீர்கள். சிலர் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து என்.எஸ்.எஸ்., என்.எஸ்.சி. போன்ற பயிற்சிகளைக் கொடுப்பார்கள்.

குலத்தின் தொழிலையே நவீனமாக நடத்துவார்கள். மக்களுக்கு மத்தியில் புகழ் பெறவும் தன்னை எல்லோரும் அடையாளம் கண்டு வியக்கவுமே இவர்கள் விரும்புவார்கள். பதினொன்றாம் இடமான கன்னியில் செவ்வாய் அமர்வதென்பது அவ்வளவு நல்லதில்லைதான். ஏனெனில், ஏற்கனவே பார்த்ததுபோல் கன்னிச் செவ்வாய் கடலையும் வற்றடிக்கும் என்பார்கள். மூத்த சகோதரரோடு பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். தங்கள் பெயரில் நிலங்களை வைத்துக்கொள்வதும் நல்லதல்ல.

கூட்டுக் குடும்பமும் கூடாது. தனக்கு எதிராக யாரோ சதி செய்வது போன்ற பிரமையில் இருப்பார்கள். பன்னிரெண்டாம் இடமான துலாம் ராசியில் செவ்வாய் மறைவதால் வீண் செலவுகளைக் கொடுக்கும். உளவாளியாக இருப்பார்கள். பிரயாணம் செய்து கொண்டேயிருப்பதை மிகவும் விரும்புவார்கள். யோக விஷயங்கள், தியானம், உபாசனை என்று தீவிரமாக இறங்குவார்கள். வித்தியாசமான மத சிந்தனைகளை உடையவர்களாக இருப்பார்கள்.

ஆரம்பத்தில் ஓஷோவை பின்பற்றுபவர்களாகவும் பின்னர் சக்தி பீடங்களோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு சக்தி உபாசகராகவும் விளங்குவார்கள். பெயர், புகழிற்காக அதிகம் செலவு செய்பவர்களாக இருப்பார்கள். ஜாதகத்தில் செவ்வாய் இவ்வாறு தனித்து நிற்கும்போது நல்லதையே தரும். ஆனாலும், கிரகங்கள் நீசமாகும்போதும், பகை பெறும்போதும் எதிர்மறை பலன்களே கிடைக்கும். நமக்கு ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுவதுமாகப் பெற இலஞ்சி எனும் தலத்தில் அருளும் முருகப் பெருமானை தரிசித்து வாருங்கள்.

முருகனுக்குரிய பிரதான ஆலயங்களில் இலஞ்சியும் ஒன்று. அருணகிரிநாதர், ‘இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமானே’ என்று இந்த முருகனைப் பாடியுள்ளார். வள்ளி,தெய்வானை சமேதராக முருகப் பெருமான் தனிச் சந்நதியில் அருள்கிறார். திருச்செந்தூர் புராணத்தில் இலஞ்சி முருகனைப்பற்றி, ‘தேவர் மூவராவது நாமேயென்று’ என்று தொடங்கும் பாடல், வரதராஜகுமாரனென முருகனைப் புகழ்கிறது.

வேண்டுவோருக்கு வரம் கொடுக்கும் வள்ளல் இந்த ராஜன் என்கிறது. இலஞ்சி என்ற சொல் ஏரி, குளம், மடு, பொய்கை, மகிழ மரம் என பல பொருள்படும். ஆனாலும், இன்றைய பேச்சு வழக்கில், ஊரைக் குறிக்கும் ஆகுபெயராகவே வழங்கப்படுகிறது. ஷண்முகர் விலாசத்தில் சக்கரம், சிவசக்கரம், சுப்ரமணிய சக்கரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இலஞ்சி எனும் இத்தலம் நெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. விருச்சிக லக்னத்தில் தனித்து நின்ற செவ்வாய் அதாவது லக்னாதிபதியான செவ்வாய் ஒவ்வொரு ராசியிலும் நின்ற பலன்களைப் பார்த்தோம். அடுத்த இதழில் சூரியனும் செவ்வாயும் ஒவ்வொரு ராசியிலும் நிற்கும்போது ஏற்படும் யோக பலன்களைப் பார்க்கலாம்.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்