COFFEE TABLEரீடிங் கார்னர்

மறுதுறை மூட்டம் (நாகார்ஜுனன் நேர்காணல்)
நேர்காணல்: எஸ். சண்முகம்
நெறியாள்கை: முபின் சாதிகா

(கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 600017. விலை ரூ.180/- தொடர்புக்கு: 044-24345641)

தமிழில் பின்நவீனத்துவம் காட்டிய எழுத்துக்களில், அதை அடையாளப்படுத்தியதில் நாகார்ஜுனனுக்கு பெரும் இடம் உண்டு. அவரது முழு நேர்காணலின் மூலம் துடிப்பும், அக்கறையும், பரந்துபட்ட அறிவும், சொல்லாடலின் செழுமையும் இந்த நூல் முழுமையும் பரவிக் கிடக்கிறது. ஒவ்வொரு பிரச்னையிலும் அவர் கருத்து வைக்கும் இடம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

நாகார்ஜுனனின் வற்றாத உழைப்பும், மிகையற்ற மதிப்பீடுகளும், அகந்தையற்ற மனமும், மனிதநேய இழைவும் மிகவும் முக்கியமானவைகளாக இந்த நூலில் பதிவாகி இருக்கின்றன. எது ஒன்றிற்கும் அவரிடம் சரியான பதில் இருப்பதும், அதை நம்மிடம் பகிர்ந்துகொள்வதுமாக அருமையான உரையாடலை நோக்கிய இனிய நிகழ்வு இந்தப் புத்தகம். நேர்த்திமிக்க உரையாடலை நிகழ்த்துவதற்கான உழைப்பை கேள்விகளின் வழியாக எஸ். சண்முகம் எழுப்பியிருக்கிறார். அதை இறுதிப்படுத்தியதில் முபின் சாதிகாவின் பணியும் முக்கியமானது.

நிகழ்ச்சி நெகிழ்ச்சி மகிழ்ச்சி

‘‘பாடகனாக பயணத்தைத் தொடங்கி அம்பது வருடங்களாகின்றன. நம்பவே முடியவில்லை. அறிமுகப்படுத்திய கோதண்டபாணி, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ‘எஸ்.பி.பி.தான் வேணும்’ என்று ஆரம்பத்திலிருந்து உற்சாகப்படுத்தி வாய்ப்பு கொடுத்து வரும் தயாரிப்பாளர்கள், இந்த நிலைக்கு நான் வரக் காரணமாக இருந்த என் ஆரம்ப கால நண்பர்கள்... என அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். கான கந்தர்வ ஜேசுதாஸிடம் ஆசி வாங்க விரும்பினேன். என் மகன் சரண் அதை நிறைவேற்றி யிருக்கிறார்...’’ நெகிழ்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

டெக் டிக்

என்னதான் புதிது புதிதாக மார்க்கெட்டுக்கு எலக்ட்ரானிக் பொருட்கள் வந்தாலும் பழசுக்கு இருக்கும் மவுசே தனிதான். கையாள்வதில் உள்ள எளிமையும் ஈர்ப்பும்தான் இதற்குக் காரணம். அந்த வகையில் பித்தளை, செம்பினால் தயாரான ‘ஆன்ட்டிக் பாக்கெட் கடிகாரங்கள்’ மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.700 முதல் ரூ.5 ஆயிரம் வரை இவை கிடைக்கின்றன.

ஷாக்

இந்தியாவில் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ‘சரியான உடற்பயிற்சியின்மை, ஃபாஸ்ட் புட், மன அழுத்தம், எந்த நேரமும் இணையத்தில் இருப்பது, வேலை செய்யும் இடத்தில் ஏற்படுகின்ற சிக்கல்கள்... போன்றவையே இதற்குக் காரணம் என்கிறது  இந்த சர்வே. எச்சரிக்கையா இருங்க பாஸ்.

சைலன்ட் கார்னர்

பொய்கைக்கரைப்பட்டி
எஸ். அர்ஷியா

[புலம், 332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005 விலை: ரூ.130. தொடர்புக்கு: 9840603499] வேண்டும் என்கிற அளவுக்கு அறியப்படாதவர்களில் அர்ஷியா வுக்கு முதலிடம் இருக்கிறது. கிராம மற்றும் சிறுநகர மன உலகத்தை விவரித்துப் போவதும், அதில் உயிரை நிறுத்தி எழுதுவதும் சாதாரண காரியமில்லை. தொடர்ந்தும் அக்கறையுடன் விடாப்பிடியாக எழுதி வரும் அவரை மிகவும் நினைவு கூருகிறது இந்த நாவல்.

எங்கேயோ வெளியில் இருந்து கதையை நகர்த்தாமல், அவரே உள்ளோட்டமாக இருப்பது போன்ற பிரமை நாவலைப் படிக்கும்போது எழுகிறது. வெறும் கதை சொல்லலை மட்டும் துணை நிறுத்தாமல் சமூக அக்கறைகளின் வெளிச்சத்தையும் துணைக்கு அழைத்து இயங்குகிறது. கிராமப்புறக் காட்சிகள் அழுத்தமான நிறம் கொண்டு அமைகின்றன. மரபுகள், சடங்குகள், பேச்சு வழக்கு, மனித உறவுகள், பறவைகள் என முழு உலகமும் உரையாடலில் இதம் அடைகிறது. வெற்றி பெறுகிற நாவலுக்கு இயற்கையும், உண்மைத்தன்மையுமே அழகு. அது அர்ஷியாவிற்கு இயல்பில் கை கூடுகிறது.

யூ டியூப் லைட்

செம ஜாலி மூடில் புத்தாண்டை மும்பையில் ஸ்டார் ஹோட்டலில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் அக்‌ஷய் குமார். ‘ஜாலி எல்எல்பி 2’, ‘2.0’, தவிர இந்தியில் இரண்டு படங்கள் என அக்‌ஷய்யின் மகிழ்ச்சிக்கு கூடுதல் காரணங்கள். ஷார்ட் காஸ்ட்யூமில் கையில் கேக்குடன் அவர் குஷியாக ஆடும் நாலு செகண்ட் வீடியோவை ஃபேஸ்புக்கில் தட்டிவிட 7 லட்சத்து 68 ஆயிரம் ரசிகர்கள் அதைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இது தவிர, இரண்டாயிரம் புத்தாண்டு வாழ்த்துகள், ஒரு லட்சத்து 15 ஆயிரம் லைக்ஸ், 3500 ஷேர்கள் என ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கிறது அ கு-வின் பக்கம்.

-குங்குமம் டீம்