விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 8

மை காட். தாமதிக்காமல் அழைத்த காலை கட் செய்த ஐஸ்வர்யா, அப்படியே சீட்டில் சாய்ந்தாள். ‘‘வாட் ஹேப்பண்ட்?’’ உலுக்கிய கிருஷ்ஷை வெறித்தாள். ‘‘ஷாக்கிங்கா இருக்கு!’’ ‘‘ஒய்?’’ ‘‘மறுமுனைல இருந்தது தாரா..!?’’ ‘‘வாவ்... பேச வேண்டியதுதானே? வேற க்ளூ கிடைச்சிருக்குமே..?’’ ‘‘கிடைச்சுடுச்சு...’’ ‘‘வாட்?’’ ‘‘இது தாராவோட நம்பர் இல்ல...’’ கிருஷ்ணனின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘புரியலை...’’ ‘‘எனக்கும்...’’ கண்ணாடி வழியே சாலையை வெறித்தாள். எந்த காரும் செல்லவில்லை.

மாறாக குமிழுடன் கொதித்த தாரின் அனலைக் கிழித்தபடி பறந்து கொண்டிருந்தன. ஏசியையும் மீறி வெந்து தணிந்தாள். குப்பென்று முகத்தில் பட்ட வெப்பம் ஐஸ்வர்யாவை இயல்புக்குக் கொண்டு வந்தது. திரும்பினாள். அவளையே பார்த்தபடி கார் கண்ணாடியை இறக்கிவிட்டு இன்னொரு சிகரெட்டை கிருஷ் பற்ற வைத்துக் கொண்டிருந்தான்.

‘‘சொல்லு...’’ ‘‘எதை?’’ ‘‘எல்லாத்தையும்...’’ ஸ்டியரிங்கில் கையை ஊன்றியபடி அவன் பக்கம் திரும்பினாள். ‘‘தாராகிட்ட ஒரு நம்பர்தான் உண்டு...’’ ‘‘ம்...’’ ‘‘ரயில்வே டிராக் பக்கம் செத்துக் கிடந்த கார்க்கோடகரோட கைல ஒரு துண்டு சீட்டு இருந்தது...’’ ‘‘ம்...’’ ‘‘அதுல ‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை நவரத்தினமும் ஒன்றுமில்லை...’னு இப்ப ஒரு ஸ்லோகத்தை... ஐ மீன் செய்யுளை பிரேக் செய்தோம் இல்லையா... அது இருந்தது. இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா.

தெரியலைனு உண்மையை சொன்னேன்...’’ ‘‘ம்...’’ ‘‘இப்ப உன் வழியாதான் அந்தக் குறிப்பு ஒரு கோடிங்னு எனக்கே தெரிஞ்சது. அது ஒரு செல்போன் நம்பரை சுட்டிக் காட்டுதுன்னும்...’’ ‘‘ம்...’’ ‘‘ஆனா, அந்த நம்பரை தாரா யூஸ் பண்ணுவான்னு எதிர்பார்க்கலை...’’ ‘‘ஒருவேளை உனக்குத் தெரியாம ரகசியமா இந்த எண்ணுள்ள சிம்மையும் அவ யூஸ் பண்ணலாம் இல்லையா...’’ ‘‘...’’ ‘‘இல்ல... எதேச்சையா அவ கைக்கு அந்த சிம் கிடைச்சிருக்கலாம்...’’

‘‘ரெண்டுமே பாசிபுள்...’’ ‘‘தென்..? கார்க்கோடகர் கைல இருந்த செய்யுள் இந்த செல் நம்பரைத்தான் குறிப்பிடுதுனு சொல்லி பேச்சை தொடங்க வேண்டியதுதானே?’’ ‘‘அதைத்தான் செய்யப் போறேன் கிருஷ். ஆனா, நாம பிரேக் பண்ணின நம்பர்ல கூப்பிட்டு இல்ல. மாறா எனக்குத் தெரிஞ்ச... எப்பவும் அவகிட்ட நான் பேசிட்டு இருக்கிற ஐடிக்கு கால் பண்ணி இதை சொல்லப் போறேன்... அப்படியே தூண்டிலை வீசி மீன் பிடிக்கப் போறேன்...’’

‘‘குட் ஐடியா. பட், அவ வாய்ஸை நீ கண்டுபிடிச்சா மாதிரி தாரா உன் குரலை...’’ ‘‘சான்ஸே இல்ல...’’ இடைமறித்தாள். ‘‘நான்தான் எதுவும் பேசாம கட் பண்ணிட்டனே... இப்ப என் சந்தேகம் எல்லாம் ஒண்ணுதான். உண்மைலயே தாராவுக்கு எதுவும் தெரியாதா... இல்ல அரைகுறையா தெரிஞ்ச உண்மைகளை கன்ஃபார்ம் பண்ணிக்க அப்பாவி மாதிரி என்கிட்ட நடிக்கிறாளா... என் உதவியோட அவ கைக்கு கிடைச்ச ரகசிய கோட்ஸை பிரேக் செய்யறாளா..?’’

கிருஷ்ணனின் வினாவுக்கு விடையளிக்க ஆரம்பித்து தனக்குத்தானே பேசிக்கொள்ளத் தொடங்கிய ஐஸ்வர்யா, சுண்டி விட்டதுபோல் துள்ளினாள். ‘‘ஐஸ்ட் எ செக்...’’ செல்போனில் யாரையோ தொடர்பு கொண்டாள். முகம் சுருங்கியது. ‘‘பச்...’’ ‘‘என்ன?’’ கிருஷ்ஷின் குரல் நிதானமாக ஒலித்தது. ‘‘ஸ்விட்ச் ஆஃப்னு வருது...’’ ‘‘யாரோடது?’’ ‘‘தாராவோடது. எப்பவும் அவளை கான்டாக்ட் பண்ணுவனே... அந்த நம்பர்...’’

‘‘எதிர்பார்த்ததுதானே...’’ ‘‘என்ன சொல்ற..?’’ ‘‘ஃபேக்ட்டை. நீ வேணும்னா பேசாம இருந்திருக்கலாம். ஆனா, 9840907375க்கு கால் செய்தப்ப டிஸ்பிளேல உன் நம்பர் தெரிஞ்சிருக்குமே... கால் ஹிஸ்டரில கல்வெட்டா அது பதிஞ்சிருக்குமே... அதை நோட் பண்ணாமயா இருந்திருப்பா?’’ ‘‘கிருஷ்...’’ ‘‘உண்மையான ஷாக் இங்கேர்ந்துதான் ஆரம்பமாகுது. ஒருவேளை நீ சந்தேகப்படறா மாதிரி தாராவுக்கு எல்லாம் தெரியும்னா... அந்த ‘எல்லாம்’ என்ன? இதுவரை கிடைச்ச க்ளூஸ் பூரா அர்ஜுனனோட வில் இருக்கிற இடத்தைத்தான் சுட்டிக் காட்டுதுன்னு நாமளா ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்.

ஒருவேளை வேறொரு பொக்கிஷமா அது இருந்தா..?’’ ‘‘டேய்...’’ ‘‘அதை நோக்கி தாரா நகர்ந்தா..?’’ ‘‘ப்ளடி...’’ பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். ‘‘என்னடா குண்டைத் தூக்கிப் போடற...’’ ‘‘யெஸ்... புத்தர் சிரிக்கிறார் ஐஸ்...’’ ‘‘உன் மூஞ்சி... என்ன இந்திரா காந்தி காலத்து அணுகுண்டு பரிசோதனையை இங்க பிட்டா போடறியா?’’ ‘‘கூடாதா..?’’ ‘‘எல்லாம் சரி... தாரா எதை நோக்கி நகர்றான்னு நாம எப்படி கண்டுபிடிக்கிறது?’’

‘‘என்கிரிப்ட் செஞ்சுதான்...’’ ‘‘யூ மீன் செல்லுலார் மெஸேஜ் என்கிரிப்ஷன் அல்காரிதம்?’’ ‘‘CMEA காலாவதியான அல்காரிதம் ஐஸ். ஐ மீன் செல்போன்லேந்து வெளியாகிற சிக்னலை என்கிரிப்ட் செய்யறது. இப்ப நாம ரெண்டு பேரும் பயன்படுத்தறோமே அது செல்லுலார் மெசேஜ் என்கிரிப்ஷன் அல்காரிதம். நேரடியா செய்தியை சொல்லாம சங்கேத பாஷைல இப்படி ‘%$#*~’ நீ எனக்கு மெசேஜ் அனுப்பறது.

இதை என்னுடைய மொபைல் விடுவிச்சு செய்தியை காட்டும். நடுவுல யாராவது இந்த மெசேஜை திருட முற்பட்டா கூட ஒரு மண்ணும் அவங்களுக்கு விளங்காது. ‘பாகுபலி’ல காலகேயர்கள் பேசறாங்களே... அது மாதிரிதான் நீ எனக்கோ நான் உனக்கோ அனுப்பற செய்திகள் மத்தவங்களுக்கு தெரியும்...’’ ‘‘சரிடா... இப்ப எதுக்கு இதை எல்லாம் விளக்கற?’’ ‘‘நீ ஏன் இன்னும் தேறாம இருக்கன்னு சொல்லத்தான்...’’ ‘‘கிருஷ்...’’

‘‘பின்ன என்ன ஐஸ்... உலகம் எவ்வளவு அட்வான்ஸா போயிட்டிருக்கு... இன்னமும் கிணத்துக்குள்ளயே இருக்கியே..?’’ ‘‘மவனே... வந்ததுலேந்து என்னை நீ ஓட்டிகிட்டே இருக்க... கொல பண்ணலாம்னு கோபம் வருது. ஆனா, தாராவை டிரேஸ் செய்ய ஏதோ சொல்ல வர்றியேன்னுதான் அமைதியா இருக்கேன்...’’ ‘‘அதே சைலன்ஸோட இன்னும் கொஞ்ச நேரம் இரு. இப்ப கிரிப்டோ போன்ஸ் வந்தாச்சு. வாட்ஸ் அப்புல அனுப்பற மெசேஜஸ் ரெண்டு பக்கமும் என்கிரிப்ட் ஆகியே send செய்யப்படுது. ஆக, வாட்ஸ் அப்புல ரெண்டு பேர் என்ன சாட் பண்றாங்கன்னு ஒருத்தருக்கும் தெரியாது. ஏன், வாட்ஸ் அப் நடத்தறவங்களாலயே அந்த கோடிங்கை பிரேக் பண்ண முடியாது. ‘ஹலோ’னு அனுப்பறதே கோடிங்காதான் போகும்னா பார்த்துக்க...’’

‘‘அப்ப சாதாரண ஆண்ட்ராய்ட் போனை தாரா அந்த 9840907375க்கு வைச்சிருந்தா..?’’ ‘‘அப்பாடா. புத்தி வேலை செய்ய ஆரம்பிக்குது. எல்லா போன்லயும் ஒரு IMEA கோட் இருக்கும். எந்த டவர்ல அந்த போன் கடைசியா ஆன் செய்யப்பட்டதோ அதை வைச்சு இடத்தை ட்ராக் செய்யலாம். ஒருவேளை யாருக்கும் தெரியாம இடத்தை கண்டறியணும்னா முதல்ல ஒரு வெத்து மெசேஜை அனுப்பணும்.

‘சிங்கம் 2’ல ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை கண்டுபிடிக்க சூர்யா ஒரு எம்டி மெசேஜை அனுப்பச் சொல்வார் இல்லையா..? அப்படி. இதுல ஒரு லிங்க் இருக்கும். அந்த லிங்கை க்ளிக் செஞ்சா இல்ல அந்த வாட்ஸ் அப்பை திறந்தா ஆட்டோமெட்டிக்கா செல்போனோட லொகேஷன் ஆன் ஆகி GPS கோடை திருப்பி அனுப்பும். இதை கூகுள் மேப்புக்குள்ள தூக்கிப் போட்டா இடம் தெரியும்...’’

‘‘ஆக தாரா இப்ப இருக்கிற லொகேஷனை கண்டுபிடிக்க டைரக்டர் ஹரிதான் உதவப் போறார்னு சொல்லு...’’ ‘‘இல்ல. நாம இன்னொரு படி போகப் போறோம்...’’ ‘‘எப்படி க்ருஷ்?’’ ‘‘ஏன்னு கேளு...’’ ‘‘சரி. ஏன்?’’ ‘‘தாரா இருக்கிற இடம் தெரிஞ்சா மட்டும் போதாது. அவ யார் யார் கிட்ட என்னென்ன பேசறா... யார் யார் அவளை தொடர்பு கொள்றாங்க... இதெல்லாமே நமக்குத் தெரியணும்...’’ ‘‘கரெக்ட். அதுக்கு என்ன பண்ணணும்?’’

‘‘அவ இருக்கிற லொகேஷனை தெரிஞ்சுகிட்ட பிறகு அந்த இடத்துக்கு போய் IMSI (International Mobile Subscriber Identity) ஆன் செய்யணும். பார்க்க டப்பா மாதிரி இது இருக்கும்...’’ ‘‘இதனோட ஸ்பெஷல்...’’ ‘‘மொத்த ஜாதகமும்! IMEAல வெறும் சிம்மும், இருக்கிற இடமும்தான் தெரியும். ஆனா, IMSI பக்கா. அந்த ஏரியாவுல இருக்கிற செல்போன் டவர்களை எல்லாம் ஓவர் ரைட் செஞ்சு இந்த டப்பாவே வெர்ச்சுவல் டவர்களை உருவாக்கிடும்.

தாரா யாருக்கு மெசேஜ் செய்தாலும் பேசினாலும் அவளுக்கு யாரு செய்தி அனுப்பினாலும் கால் செய்தாலும்... அவ்வளவு ஏன், தன்னோட மொபைல்ல அவ நெட்டை அக்ஸஸ் செஞ்சு ஈமெயில், ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப்... லொட்டு லொசுக்குனு எதைப் பார்த்தாலும் அதனோட காப்பி ஒண்ணு அப்படியே டப்பாவுக்குள்ள வந்து விழுந்துடும்...’’ ‘‘என்னடா... ஹாலிவுட் படம் மாதிரி பூ சுத்திகிட்டே போற..?’’ ‘‘கப்ஸா இல்ல ஐஸ்... சென்ட் பர்சன்ட் சாத்தியமானது.

FBI, CIA, மொசார்ட் எல்லாம் இதைதான் யூஸ் பண்றாங்க. எல்லா நாடுகளுக்கும் ஆயுதங்களை விக்கறவங்கதான் இந்த IMSI-யும் சேல்ஸ் பண்றாங்க. சில லட்சங்களை தூக்கி வீசினா கிடைச்சுடும். ஒரு சின்ன USB, நாலு சிம். இது போதும். வெர்ச்சுவல் டவரை எழுப்பி அஞ்சு கிலோமீட்டருக்குள்ள எவன் தன்னோட மொபைலை வைச்சு என்ன செஞ்சாலும் அதை அப்படியே லபக்கிடலாம். இன்ச் பை இன்ச்சா காப்பி எடுத்துடலாம்...’’

‘‘சூப்பர். அப்ப உடனடியா IMSI வாங்கிடலாம்...’’ ‘‘அவசியமில்ல. வரும்போதே அதை பர்ச்சேஸ் பண்ணிட்டேன். பைலதான் இருக்கு. தாராவோட நம்பரை சொல்லு. ஐ மீன்... எப்பவும் நீ கான்டாக்ட் பண்ணி பேசற எண். அதுக்கும் நாம பிரேக் செஞ்ச 9840907375க்கும் என் செல்லுலேந்து நான் எம்டி மெசேஜ் அனுப்பறேன்...’’

‘‘எப்படிடா இவ்வளவு புத்திசாலியா பொறந்த?’’ ‘‘அத எங்க அப்பாம்மாகிட்டதான் கேக்கணும்!’’ மன அழுத்தம் நீங்க இருவரும் சிரித்தார்கள். ‘‘கமான். லெட்ஸ் மூவ் டூ த அட்வென்சர் வோல்ட். என் கணிப்பு சரின்னா ஸ்ரீரங்கத்துலதான் தாரா இருப்பா...’’ கிருஷ் கையை உயர்த்த ஐஸ்வர்யா தன் உள்ளங்கையால் அதைத் தட்டிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தாள். காருக்கருகில் அவிச்ச முட்டை ஒன்று இருந்ததையும் அதன் மேல் ‘KVQJUFS’ என்று எழுதப்பட்டிருந்ததையும் இருவரும் கவனிக்கவேயில்லை.

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்

நாட்டிய ஷா

சென்னையின் அடையாளமாகவே கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி மாறிவிட்டது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ‘லஷ்மன் ஸ்ருதி இசையகம்’ இவ்விழாவை நடத்துகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 24ல் வினிஷா கதிரவனின் பரத நாட்டியம் அரங்கேறியது. பரத்வாஜ் மிருதங்கம் வாசிக்க, கலையரசன் புல்லாங்குழல் இசைக்க, ரசிகர்கள் மெய்மறந்து நாட்டியத்தை ரசித்திருக்கின்றனர்.

ஆச்சிக்கு மரியாதை

கடந்த ஆண்டின் ‘சிறந்த நிர்வாகி’க்கான தேசிய விருதினை ‘ஆச்சி’ குழுமத்தின் நிறுவனரான பத்மசிங் ஐசக் பெற்றிருக்கிறார். ஜனாதிபதி தன் கையால் அதை வழங்கி கவுரவித்திருக்கிறார். சமையலுக்குத் தேவையான மசாலா வகைகளைத் தயாரித்து வரும் இந்நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி, சொந்தக் காலில் அவர்கள் வாழும்படி செய்து வருகிறது.

இந்த நல்ல எண்ணத்துக்காகத்தான் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனது சக்சஸுக்கு என்ன காரணம் என்பதை ‘தோல்வியை ருசியுங்கள் வெற்றியை ரசியுங்கள்’ என்ற நூலாகவே பத்மசிங் ஐசக் எழுதியிருக்கிறார். இந்நூலை மாநில கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் வெளியிட, தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார்.