முதல் தமிழ்ப் பெண் விமானி!‘‘டென்மார்க்குல ‘டென்மார்க்கின் முதல் தமிழ்ப் பெண் விமானி’னு சொல்றாங்க. தமிழகத்துல ‘முதல் தமிழ்ப் பெண் விமானி’னு புகழ் றாங்க. சொந்த ஊர்ல ‘முதல் வல்வை பெண் விமானி’னு பூரிக்கறாங்க. தாயகத்துலயோ ‘இலங்கையின் முதல் தமிழ்ப் பெண் விமானி’னு காலரை உயர்த்தறாங்க. மீடியாக்கள் ‘உலகத் தமிழ்ப் பெண் விமானி’னு பெருமைப்படுத்தறாங்க. மொத்தத்துல ஒவ்வொரு ஈழத் தமிழ்ப் பெண்ணுக்கும் என்னால் பெருமை கிடைச்சிருக்கு.

இதை நினைக்கிறப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...’’ முகமெல்லாம் மலர சிரிக்கிறார் அர்ச்சனா செல்லத்துரை. விமானி, பாடகி, மாடல், இசையமைப்பாளர், ஆசிரியர் என இவரது ஒவ்வொரு ஃபேஸும் ஃபேமஸ்! ‘‘பிறந்தது, வளர்ந்தது எல்லாம் டென்மார்க்குல. அப்பா, அம்மாவுக்கு சொந்த ஊர் ஈழத்துல இருக்கிற வல்வெட்டித்துறை. எதையாவது படிப்போம்... வேலைக்குப் போவோம்னு வாழப் பிடிக்கல. எதுக்காக, ஏன் படிக்கணும்? இந்தக் கேள்வி மனசை குடைஞ்சுகிட்டே இருந்தது.

இந்த நேரத்துல வெளிநாட்டவர்களுக்கு டேனிஷ் மொழியை கற்றுத் தர வாய்ப்பு கிடைச்சது. பயன்படுத்திக்கிட்டேன். சுதந்திரமில்லாம நாடோடியா வாழற உலக மக்கள் பத்தியும், ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு பெண்களோட அவலமும் துல்லியமா அப்பதான் புரிஞ்சது. பணம், பேர், புகழ்... இது எல்லாத்தையும் விட ஒரு பறவை மாதிரி சுதந்திரமா வாழறதுதான் முக்கியம்னு மனசு சொன்னது. அதுக்குப் பிறகு தொடர்ந்து வேலை பார்க்க முடியலை.

ராஜினாமா செய்தேன். விமானியாக முடிவு எடுத்தேன்...’’ கம்பீரமாகச் சொல்லும் அர்ச்சனா, அமெரிக்கா, சுவீடன், டென்மார்க், ஆஸ்திரியாவில் விமானிக்கான பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். படித்திருக்கிறார். வாங்கிய மதிப்பெண்ணும் விமானம் தொடர்பான அறிவும் உடனடியாக இவரை விமானியாக மாற்றியிருக்கிறது. யெஸ். இப்போது பிரிட்டிஷ் ஏர்வேஸில் உள்ள சன் ஏரின் பைலட் அர்ச்சனாதான்.

‘‘சின்ன வயசுல பெத்தவங்க படி படினு நச்சரிக்கலை. வேண்டிய எல்லாமும் கிடைச்சது. அதனாலேயே பெரிசா கனவுகள் இல்ல. இந்த உண்மையை என்னால தாங்க முடியலை. எனக்கான கனவுகளைக் கண்டுபிடிக்க போராடினேன். சகல இடங்கள்லயும் தேடினேன். நான் வளர்ந்த நாட்டுல மட்டுமில்ல... பொதுவாகவே மேற்கத்திய நாடுகள்ல டாக்டருக்கு படிக்க வாய்ப்பிருந்தாலும் சம்பந்தப்பட்டவர் கூலி வேலை செய்யப் போவார்.

கூலி வேலை செய்யறது அவருக்கு பிடிச்சிருப்பதுதான் ஒரே காரணம். தங்களுக்கு பிடிச்சதை செய்யத்தான் இங்குள்ள மக்கள் எப்பவும் முன்னுரிமை தர்றாங்க. இந்த அம்சம் எனக்கு பிடிச்சிருந்தது. நானும் கடைப்பிடிக்க முடிவு செய்தேன். பெத்தவங்க அதுக்கு ஆதரவா நின்னாங்க. அவங்க இல்லைனா இன்னிக்கி நீங்க பேட்டி கேட்கிற இந்த நிலைக்கு நான் வந்திருக்க மாட்டேன்...’’ புன்னகைக்கும் அர்ச்சனா, விமானியாகும் லட்சியத்துக்காக பெரும் போராட்டமே நடத்தியிருக்கிறார்.

‘‘அமெரிக்காவுக்கு படிக்கப் போனப்ப, ‘ப்பூ... விமானிக்கு வேலையே கிடைக்காது. படிக்கறதே வேஸ்ட்’னு கேலி செஞ்சாங்க. இன்னும் சிலபேர், ‘இதெல்லாம் தேவையா? பேசாம கல்யாணம், குடும்பம், குழந்தைனு செட்டிலாகப் பாரு’னு அட்வைஸ் கொடுத்தாங்க. இதையெல்லாம் நான் மனசுல ஏத்திக்கலை. ‘செலவு செய்யாத’னு பலர் சொன்னதையும் கேட்காம அப்பாவும், அம்மாவும் எனக்காக, என் படிப்புக்காக தங்களோட சக்திக்கு மீறி பணத்தைக் கொடுத்தாங்க.

உண்மையைச் சொல்லணும்னா ஒரு பெண், விமானியாவது சுலபமில்ல. இது பலருடைய உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ‘மன உறுதியோட இருக்கேன். எந்த ஆபத்து வந்தாலும் எதிர்கொள்வேன்’னு நாம 24 X 7 விமான நிறுவனங்களுக்கு உணர்த்திக்கிட்டே இருக்கணும். இதுக்காக பல மாசம் விமானத்தை க்ளீன் செய்திருக்கேன். விமானத்துக்கு வர்ற லக்கேஜ் வண்டியை கை வலிக்க வலிக்க இழுத்திருக்கேன். கடுமையான குளிர்லயும் விமான நிலையங்கள்ல இருந்தேன்.

இதுக்கு அப்புறமும் என்னை வேலைய விட்டு தூக்க சிலர் சதி செய்தாங்க. அதையெல்லாம் தாக்குப் பிடிச்ச பிறகுதான் என்னால விமானியாகவே ஆக முடிஞ்சது. இதை பெருமையோட என்னால சொல்ல முடியும். எனக்கு முன்னாடி ஆறு பேர் இருந்தாங்க. அவங்களை எல்லாம் தாண்டித்தான் இந்த சான்ஸ் எனக்கு கிடைச்சது. வேலை கிடைத்ததும் அதுவரைக்கும் நான் பட்ட கஷ்டமெல்லாம் காத்துல கரைஞ்சுடுச்சு! பறக்க ஆசைப்பட்டேன்.

பறக்க ஆரம்பிச்சேன்! வானத்துலேந்து பூமியைப் பார்க்க எப்படி இருக்கும் தெரியுமா..? அப்படியே அள்ளிக்கலாம் போல இருக்கும். எனக்குள்ள ஒலிச்ச குரலை காது கொடுத்து கேட்டேன். இதே மாதிரி எல்லாரும் அவங்கவங்க குரலைக் கேட்க ஆரம்பிச்சாங்கன்னா சகலரும் பறக்க ஆரம்பிக்கலாம், சுதந்திரப் பறவையா...’’ அழுத்தமாகச் சொல்கிறார் அர்ச்சனா செல்லத்துரை. காதுள்ளவர்கள் கேட்கக் கடவது.

-ஸ்வீடனிலிருந்து ரவி