2Gயில்4G Making of துருவங்கள் பதினாறு-மை.பாரதிராஜா

‘சஸ்பென்ஸ், க்ரைம், த்ரில்லர் டைப் படங்கள்னு சொல்லிகிட்டு இது எதுவுமே இல்லாம பல படங்கள் நம்மை ஏமாத்தியிருக்கு. ஆனா, நிஜமாகவே இது அசத்தல்...’ என தம்ஸ் அப் சிக்னலை ரசிகர்கள் காட்டும் படம், ‘துருவங்கள் பதினாறு’.

‘ஒரு இங்கிலீஷ் ஃபிலிம் ஃபீல் இருக்கு கார்த்திக். டீஸர் ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிருக்கீங்க...’ அறிமுக இயக்குநருக்கு பூங்கொத்து நீட்டுகிறார் ஏ.ஆர். ரஹ்மான். ‘நம்ப முடியலப்பா. இவ்வளவு சின்ன வயசுல டீட்டெயிலோட ஸ்கிரீன்ப்ளே. பெரிய விஷயம்.

இன்ட்ரஸ்ட்டிங் த்ரில்லர்’ வியக்கிறார் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ். ‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாமதான் வந்தேன். சின்ன பட்ஜெட்டுல பிச்சு உதறிட்ட...’ மலர்கிறார் சுந்தர்.சி. தெலுங்கு இயக்குநர் மாருதி, பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி என புருவத்தை உயர்த்துபவர்களின் பட்டியல் நீளம்.

எப்படி இது சாத்தியமாயிற்று?
சென்னை லெமாஜிக் லேன்டர்ன் ப்ரிவியூ தியேட்டரில் அசெம்பிளான இயக்குநர் கார்த்திக் நரேன், கேமராமேன் சுஜித் சரங், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய், எடிட்டர் ஜித் சரங் ஆகியோரிடம் கேட்டதுமே படபடவென்று பட்டாசு வெடிக்கத் தொடங்கியது. ‘‘எங்க டீமோட ‘சின்ன வயசு’ கேப்டன்னு டைரக்டர் கார்த்திக் நரேனை சொல்லலாம். வயசு 21தான்...’’ கோரசாக சொல்கிறார்கள் சுஜித், ஸ்ரீஜித், ஜேக்ஸ்.

‘‘சொந்த ஊர் ஊட்டி. படிச்சது கோவைல மெக்கானிக்கல் இன்ஜினியரிங்...’’ என அவர்களை அடக்கிவிட்டு கார்த்திக் நரேன் பேச ஆரம்பித்ததுமே ‘‘பாஸ்... டிகிரி முடிச்சிட்டீங்களா?’’ என பற்ற வைக்கிறார் கேமராமேன் சுஜித். ‘‘ப்ரோ... நீங்க ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டையே கரைச்சு குடிச்சவங்க. பாவம், இப்பதான் ஃபைனல் இயர்...’’ அழகாக வெட்கப்பட்டுவிட்டு தொடர்ந்தார் கார்த்திக்.

‘‘நான் இயக்கின ‘ஊமைக்குரல்’ குறும்படம்தான் சென்னைக்கு என்னை வரவைச்சது. சினிமாவுக்கு நான் மட்டும்தான் புதுசு. என்னோட டெக்னீஷியன்ஸ் எல்லாருமே மலையாளம் ப்ளஸ் தெலுங்குல பட்டையைக் கிளப்பிக்கிட்டு இருக்கிறவங்க. ஆனா, எங்க எல்லாருக்குமே ஓர் ஒற்றுமை உண்டு. யெஸ். சினிமா பின்னணி ஒருத்தருக்கும் கிடையாது...’’ பெருமையுடன் சொல்லும் கார்த்திக்கின் அப்பாவும் அம்மாவும் டாக்டரேட் முடித்தவர்கள்.

‘‘அதெல்லாம் கிடக்கட்டும் பாஸ். நடிகர் ரகுமான் எப்படி இந்தப் படத்துக்குள்ள வந்தாரு?’’
நிருபராக மாறினார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய். வால்ட் டிஸ்னியின் தலைமையகத்தில் கேம் ப்ராஜெக்ட்டிலிருந்தவர் வேலையை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார் என்பது ஹைலைட்.

‘‘இதோ நல்ல பசங்க மாதிரி நின்னுட்டு இருக்காங்களே சுஜித்தும், ஸ்ரீஜித்தும்... இவங்களுக்கு இதுக்கு ஆன்சர் தெரியும். போனா போகுதுன்னு உங்களுக்கும் பதில் தர்றேன். எழுதின கதைக்கு அம்பது வயசுக்கு மேல இருக்கிறவங்க தேவைப்பட்டாங்க. சின்சியர் போலீஸ் ஆபீசர் லுக் வேணும். பர்ஃபார்மும் செமத்தியா இருக்கணும். ரூம் போட்டு யோசிக்காமயே பளிச்சுன்னு ரகுமான் நினைவுக்கு வந்தார்.

மலையாளப் படங்கள்ல, தான் கத்துகிட்ட எல்லா வித்தையையும் மொத்தமா இறக்கிட்டு இருக்கார். சந்திச்சு கதை சொன்னேன். நடிக்க சம்மதிச்சார். ஆனா, முத ரெண்டு நாள் ஷூட்டிங்குல அவருக்கு என் மேலயும் உங்க மேலயும் நம்பிக்கை இல்ல! அப்புறம் நம்ம ஒர்க்கை பார்த்துட்டு தோள்ல தட்டிக் கொடுத்தார்... ஸோ, ரகுமான் பிரமாதமா நடிச்சதுக்கு நம்ம டீம்தான் காரணம்...’’ என்ற கார்த்திக், ‘‘இப்ப உங்க பயோடேட்டாவை சொல்லுங்க...’’ என்றபடி ரிலே ரேஸ் குச்சியை ஸ்ரீஜித், சுஜித் வசம் ஒப்படைத்தார்.

‘‘பார்றா... டிவில பேட்டி எடுக்கறாராம்...’’ கலாய்த்த இருவரும் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்கள். ‘‘எங்க அப்பா சாரங்கநாதன், மார்ஷியல் ஆர்ட் மாஸ்டர்...’’ முடிப்பதற்குள் கார்த்திக்கும், ஜேக்ஸும் மூன்று ஸ்டெப் தள்ளி நின்றார்கள். ‘‘பயந்தா மாதிரி நடிக்காதீங்கப்பா...’’ என்ற சுஜித் தொடர்ந்தார். ‘‘அண்ணன் ஸ்ரீஜித் எனக்கு நேர் எதிர். பொறுமைசாலி. அதனாலதான் எடிட்டரா இருக்கார். நான் அப்படியில்ல. அதனாலதான் கேமராமேன் ஆகிட்டேன்.

நம்ம படத்தோட DI ஒர்க் பண்ணினது எங்கண்ணன் ஸ்ரீஜித்தான். ஜேக்ஸை எங்களுக்கு சின்ன வயசுலேந்தே தெரியும். மூணு பேரும் கோவையை இண்டு இடுக்கு விடாம சுத்தியிருக்கோம். தமிழ்ல ‘தாக்க தாக்க’ல நாங்க மூணு பேரும் ஒர்க் பண்ணியிருக்கோம். அதுக்குப் பிறகு திரும்பவும் இந்த மும்மூர்த்திகள் இணைஞ்சது இந்தப் படத்துலதான்...’’ பொறுப்பாக கேமராமேன் சுஜித் தங்கள் டேட்டாவை சொல்லி முடிக்க, ‘‘கார்த்திக் என்கிட்ட கதை சொல்றதுக்கு முன்னாடியே ‘இந்தப் படத்துல பாடல்கள் கிடையாது... நோ குத்து ஸாங்... ஏன் ஹீரோயினே இல்ல’னு டீசர் விட்டான்.

என்னடா ஏகத்துக்கு பில்டப் தர்றான்னு நினைச்சேன். ஆனா, சும்மா சொல்லக் கூடாது. சொன்ன கதை அசத்தலா இருந்தது. உடனே ஓகே சொல்லிட்டேன். ஏற்கனவே மலையாளத்துல பிருத்விராஜ், பஹத் பாசில் நடிச்ச படங்களுக்கு மியூசிக் போட்டிருக்கேன். தமிழ்ல இது எனக்கு இரண்டாவது படம்...’’ கண்கள் மின்ன சொல்லும் ஜேக்ஸிடம் ஒரு கேள்வி இருந்தது. கார்த்திக்கை நோக்கி கேட்டார்.

‘‘இந்தப் படத்துக்கு எப்படி உங்கப்பா ப்ரொடியூசர் ஆனாரு?’’
‘‘என்னுடைய அலைச்சலை பார்த்துட்டுதான். ஷார்ட் ஃபிலிமுக்கு ரெஸ்பான்ஸ் கிடைச்சதும் முழுநீள சினிமா பண்ணலாம்னு கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கினேன். எதுவும் செட் ஆகலை. ஒருநாள் அப்பா கூப்பிட்டு ‘எவ்வளவுடா வேணும்’னு கேட்டார். தொகையை சொன்னேன். ‘நானே தரேன். படத்தை ஆரம்பி’னு சொல்லிட்டார். அப்பாவே ப்ரொடியூசரா அமைஞ்சதாலதான் எந்தப் பிரச்னையும் இல்லாம நிம்மதியா என்னால படம் எடுக்க முடிஞ்சது. தேங்க்ஸ் டேட்..’’ என்று கார்த்திக் நெகிழ, மற்ற மூவரும் அவரை நெருங்கி அணைத்துக் கொண்டார்கள். Way to Go Boss. Keep Rocking.   

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

PLANNING DETAILS

* படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ஹீரோ ரகுமான் தவிர மற்ற அனைவருக்கும் ரிகர்சல் நடந்திருக்கிறது.
* 28 நாட்களில் மொத்த படத்தையும் முடித்திருக்கிறார்கள். சென்னையில் இன்டோர். கோவை, ஊட்டியில் அவுட்டோர்.
* படத்தில் மழைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த போர்ஷனை மட்டும் 10 நாட்கள் ஷூட் செய்துள்ளனர்.
* கிளைமாக்ஸ் ப்ளாக்கின் பின்னணி இசைக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து இசைக்கலைஞர்களை வரவழைத்துள்ளனர்.