அச்சமின்றி விமர்சனம்



உதார் விட்டு ஊரைச் சுற்றும் பிக்பாக்ெட் பையன் விஜய் வசந்த். அவரை மையமாக வைத்துக் கொண்டு, மிக எளிய மனிதர்களின் குழந்தைகளின் வாழ்வை இந்த கல்விக் கொள்கை எப்படியெல்லாம் குதறிப்போடுகின்றன என்பதுதான் கதை. அதையே கமர்ஷியல் மசாலா தடவிச் சொல்வது ‘அச்சமின்றி’. வெறும் ஆக்‌ஷனும், காமமும், கேளிக்கையும் மட்டுமே அதிகம் புழங்கும் தமிழ் சினிமாவில் விழிப்புணர்வுக்கு குடை விரித்ததற்கு இயக்குநர் ராஜபாண்டிக்கு பூங்கொத்து!

பிக்பாக்கெட் திருடன் விஜய் வசந்துக்கு சிருஷ்டியைப் பார்த்தவுடன் காதல். தான், போலீஸ் என ஆமோதித்து தன் காதலைத் தொடர்கிறார். இதற்கிடையில் போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி தன் காதலியை மணக்க நினைக்கிறார். விபத்தில் காதலி இறக்க, காரணங்களைத் துரத்திப் போனால் அது வேறொரு இடத்துக்குப் போகிறது. பிரச்னைகளைத் தொடர்ந்தால் கல்வி நிறுவனங்களை நடத்தும் சரண்யா ெபான்வண்ணனைச் சென்று அடைகிறது.

கடைசியில் சமுத்திரக்கனி காதலியின் சாவுக்கு காரணமானவர்களைக் கண்டடைந்தாரா? இவற்றில் கல்வி நிறுவனங்களின் பின்னணி என்ன என்பதுதான் க்ளைமேக்ஸ். திருடனாக இருந்தாலும், அப்பாவித் தோற்றத்தில் முன் நிற்கிறார் விஜய் வசந்த். தனக்கு ஏற்ற கதையைத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். தன்னை அதிகம் முன்னிலைப்படுத்தாத கதையிலும் வரத் துணிந்திருப்பது அழகு.

அந்த கன்னக்குழி விழும் சிருஷ்டி டாங்கேவுக்கு பெரிதாக சொல்லிக் கொள்கிற மாதிரி கேரக்டர் இல்லை. ஆனாலும் என்ன? பார்க்க குளுமை.. செழுமை. அடர்த்தியும், அழுத்தமான பர்ஃபாமன்ஸ் தேவைப்படும் இடத்தில் நடிப்புமாக சமுத்திரக்கனி... நேர்த்தி! சாதாரண முகபாவனைகளில் தீர்க்கமும், தெளிவுமாக மிரட்டுகிறார். ஒரே மாதிரி நடித்து, அவ்விதமே பேசியும் வந்த ராதாரவி இப்போது எடுக்கும் அவதாரங்கள் எல்லாமே அப்பழுக்கு இல்லாத நடிப்பு.

மிக நுணுக்கமான உடல்மொழியில் ஒரு அமைச்சரின் உணர்வுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். பாசத்தில் உருகும் தாயாகவே நாம் பழகி வந்த சரண்யா பொன்வண்ணன், இதில் எடுத்திருப்பது வேறு அவதாரம். கல்வித் தாயாக மாறுவதற்கு எப்படியெல்லாம் மாற வேண்டியிருக்கிறது எனப் பட்டியலிடுவதும், அதற்கு துணை போவதுமாக அசுர நடிப்பு. கொஞ்சம் நீளமே என்றாலும், அந்த கடைசி கோர்ட் க்ளைமேக்ஸ் அதிர வைக்கிறது. பணத்தாசை பிடித்த கல்வி நிறுவனங்களின் அடித்தோல் வரைக்கும் உரிக்கிறது.

இதில் நம் ஒவ்வொருவரின் பங்கு என்ன என்பதையும் பாடம் எடுக்கிறது. வசனம் எழுதிய ராதாகிருஷ்ணனுக்கு கைகுலுக்கல். தெறிக்கும் உண்மைகளில், கேலி செய்யும் வார்த்தைகளில், கல்வித்துறையின் அத்தனை கோல்மால்களையும் துவைத்து அடிக்கிறார். அரக்கப் பரக்கத் துடிக்கிற ஆரம்பக் காட்சிகளில் காமிராவுக்கான டெம்போவைத் தக்கவைக்கிறது ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவு.

குறிப்பாக துப்பாக்கிக் குண்டுகள் பறக்கும் சண்டைக் காட்சிகளில் துறு துறு... விறுவிறு. பிரேம்ஜியின் இசை தேறுகிறது. சென்ஸிட்டிவ் விஷயத்தை க்ரைம், ஆக்‌ஷன், காதல், காமெடி கலந்த மசாலா பேக்கேஜில் சினிமா ஆக்க முயற்சித்திருக்கிறார் ராஜபாண்டி. இறுக்கிப் பிடித்து மெருகேற்றியிருந்தால் இன்னும் உயர்த்திப் பிடித்திருக்கலாம்.                     

-குங்குமம் விமர்சனக்குழு