யூ டியூப்பில் இலக்கிய கூட்டம்!-பேராச்சி கண்ணன்

சென்னையில் இலக்கியக் கூட்டம் எங்கு நடந்தாலும், அங்கு  நிச்சயம் ஆஜராகி இருப்பார் கபிலன். இலக்கியக் கூட்டத்தை வீடியோவாக ஆவணப்படுத்தும் ஆச்சரிய இளைஞர். ‘யூ டியூப்’பில், ‘ஸ்ருதி டிவி’ என டைப் செய்த மறுவிநாடியே அவர் எடுத்த வீடியோக்கள் கொட்டுகின்றன. ‘‘உலக சினிமாவும் இலக்கியமும் எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி. அதனாலயே இலக்கியக் கூட்டங்களுக்கு போறதை ஒரு கடமையாவே வைச்சிருந்தேன். பேசற எழுத்தாளர்கள் அற்புதமான பல கருத்துக்களை உதிர்ப்பாங்க.

கேட்கும்போதே நமக்குள்ள பல கதவுகள் திறக்கும். உற்சாகமும் தொத்திக்கும். இதுக்குப் பிறகு உலகத்தை நாம பார்க்கிற பார்வையே வேறயா இருக்கும். ஆனா, இதெல்லாம் ஆவணமாகலை. அதனாலயே அப்பப்ப கேட்கறது அப்பப்பவே மறைஞ்சுடுது. இப்படி இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். கூட்டங்களுக்கு வர்றவங்க மட்டுமில்ல... வர முடியாதவங்க கூட எப்ப விருப்பப்பட்டாலும் அதை கேட்கற மாதிரி இருக்கணும். இந்த எண்ணத்தோடதான் இந்த சேனலை ஆரம்பிச்சேன்...’’ என்கிற கபிலனின் பூர்வீகம் திருவாரூர் அருகிலிருக்கும்
திருத்துறைப்பூண்டி.

‘‘எடிட்டிங் முடிச்சுட்டு, சின்னத்திரைக்கு எடிட்டிங் பண்ணிட்டு இருக்கேன். நிறைய சீரியல்கள்ல வேலை பார்த்திருக்கேன். 2009க்கு அப்புறம் எடிட்டிங்ல ஒருங்கிணைப்பு வேலை மட்டும் பார்க்கறேன். இதனால அதிக நேரம் கிடைச்சது. இதை என் ஆசைப்படி பயன்படுத்த முடிவு செxஞ்சு 2012ல் நண்பர்களோட சேர்ந்து ‘shruti.tv’ இணையதளத்தை ஆரம்பிச்சேன். சில காரணங்களால சரியா ரன் பண்ண முடியல. அப்புறம், 2014ல யூ டியூப் சேனலைத் தொடங்கினோம். அதுவும் கொஞ்சம் சிக்கலாச்சு. இப்ப, 2015 ஜனவரி 26ல் இருந்து தொடர்ந்து இயங்கிட்டு வர்றோம்.

இதுவரை 600 வீடியோக்கள் எடுத்திட்டோம்...’’ என்ற கபிலனிடம் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று கேட்டோம். ‘‘சின்ன எதிர்ப்பு இருந்துச்சு. நிகழ்ச்சி அழைப்பிதழைப் பார்த்து அவங்ககிட்ட பேசின பிறகுதான் எப்பவும் போவேன். அதே மாதிரிதான் சமீபத்துல ஒரு கூட்டத்துக்கு போனேன். ‘யாரைக் கேட்டு எடுக்கறீங்க’னு கேட்டாங்க. ‘அனுமதி வாங்கிட்டுதான் எடுக்கறோம்’னு சொன்னபிறகுதான் அந்த நபர் அமைதியானாரு.

நாங்க ஏதோ இதை வைச்சு சம்பாதிக்கறோம்னு நினைக்கறாங்க. அப்படியெல்லாம் எதுவுமில்ல. பல்லாயிரக்கணக்குல ஹிட்ஸ் விழுந்தாதான் இந்திய மதிப்புல நூறு ரூபா அளவுக்கு கிடைக்கும். நிகழ்ச்சி நடத்தறவங்களுக்கு இந்த உண்மை தெரியும். அதனால எங்களுக்கு மனமுவந்து ஆதரவு அளிக்கறாங்க. யார்கிட்டயும் நாங்க பணம் வாங்கறதில்ல. அவங்களா ஏதாவது கொடுத்தா அதை மறுக்கறதுமில்ல. எதிர்காலத்துல இந்த இலக்கிய மேடைப் பேச்சுகளை லைவ்வா ஒளிபரப்பணும். அதுதான் ஆசை...’’ உற்சாகம் கொப்பளிக்க சொல்கிறார் கபிலன். கனவு மெய்ப்படட்டும்.    

படங்கள்: பிரபு காளிதாஸ்