ஆண்மைக்கு ஆப்பு சோப்பு?எச்சரிக்கை ரிப்போர்ட்

-ஞானதேசிகன்

ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும்?! ‘இனிமையான தாம்பத்திய வாழ்க்கைக்கு சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மட்டுமே போதுமானதல்ல. நீங்கள் நினைத்துக் கூட பார்த்திராத விஷயங்களும் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கின்றன. ஆமாம்... குளியல் சோப்புகளில் இருக்கிற டிரைக்ளோஸன் என்கிற வேதிப்பொருள் ஆண்களிடம் பெண் தன்மையை உருவாக்கி தாம்பத்திய வாழ்க்கையை அழிக்கிறது’ என்று கூறியிருக்கிறது சமீபத்திய திகில் ஆய்வு ஒன்று.

இந்த டிரைக்ளோஸனை சோப் தயாரிப்பில் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான FDA தடைவிதிப்பதாகக் கூறியிருக்கிறது. அலர்ட்டான வெளிநாட்டு சோப் தயாரிக்கும் நிறுவனங்கள் டிரைக்ளோஸன் என்ற பெயரைத் தங்களுடைய லேபிளில்இருந்துஅகற்றத் தொடங்கியிருக்கிறது. சரும நல மருத்துவர் வானதியிடம் இந்த சர்ச்சை குறித்துக் கேட்டோம். ‘‘நுண்கிருமிகளை நீக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள்தான் டிரைக்ளோஸன் (Triclosan).

மருத்துவத்துறையில் தொற்று அபாயம் அதிகம் என்பதால் மருத்துவர்கள், செவிலியர்களின் பயன்பாட்டுக்காகவே இந்த டிரைக்ளோஸன் கலந்த சோப்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதற்கு Medicated Soap என்றே பெயர். இது தெரிந்திருந்தும் இப்போது பொதுமக்கள் பயன்படுத்தும் குளியல் சோப்புகளிலும், ஷாம்புகளிலும், பாடி வாஷ்களிலும், டியோடரண்டு களிலும் இந்த டிரைக்ளோஸனை கலந்து விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன், டூத் பேஸ்ட்டுகளில்கூட இப்போது டிரைக்ளோஸனை சேர்க்கிறார்கள். இது பெண் தன்மையை ஏற்படுத்தும் வேதிப்பொருள் என்பது உண்மைதான். ஆனால், அது அளவு கடந்து டிரைக்ளோஸனைப் பயன்படுத்தும்போதுதான். இந்தியாவில் விற்கப்படுகிற சோப்புகளைப் பொறுத்தவரை மிகமிகக் குறைந்த அளவிலேயே டிரைக்ளோஸன் சேர்க்கப்படுகிறது. நாம் பயப்படுகிற அளவுக்கு டிரைக்ளோஸன் நம் சோப்புகளில் இல்லை.

இதனால் தைராய்டு குறைபாடு ஏற்படலாம்...’’ என்றவரிடம், பிறகு எப்படி இந்த சர்ச்சை எழுந்தது என்று கேட்டோம். ‘‘நாம் பயன்படுத்தும் சோப், ஷாம்பு, டூத் பேஸ்ட்டில் இருக்கும் மிகக் குறைவான டிரைக்ளோஸன் தண்ணீர் மூலம் பூமியிலும், சுற்றுப்புறங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து வருகிறது. இதுவே காய்கறிகள், தானியங்கள், கடல் உணவுகள் போன்றவற்றில் கலந்து உணவு வழியாக நம் தட்டுக்கு வருகிறது.

இதனால்தான் பெண் தன்மை ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியில் கூறியிருக்கிறார்கள். அதனால், வேதிப்பொருட்களின் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலமே இதுபோன்ற அபாயங்களில் இருந்து தப்பிக்க முடியும். சுத்தமாக இருக்கிறேன் பேர்வழி என்று அடிக்கடி சோப் போட்டு முகத்தைக் கழுவுவது, குளிப்பது, மெடிக்கேட்டட் சோப்புகள் பயன்படுத்துவது, நுண்கிருமிகளை நீக்கும் திறன் கொண்டது என்று விளம்பரப்படுத்தப்படும் சோப்புகளை வாங்கிப் பயன்படுத்தாமல் இருப்பது... என்று எந்தளவுக்கு எச்சரிக்கையாக இருக்கிறோமோ அந்த அளவுக்கு நம் ஆரோக்கியத்துக்கு நல்லது.

நம் சருமத்தில் நல்ல பாக்டீரியாக்களும் இருக்கின்றன, கெட்ட பாக்டீரியாக்களும் வசிக்கின்றன. கெட்டதை அழிக்க வேண்டும் என்று நாம் பயன்படுத்தும் சோப், ஃபேஸ் வாஷ் போன்றவை நல்ல பாக்டீரியாக்களையும் அழித்துவிடுகிறது. பல சருமப் பிரச்னைகளுக்கு நம் அதீத சுத்தமும், அதிகப்படியான அறிவுமே காரணம்!’’ என்கிறார் வானதி.

படங்கள்: ஆர்.கோபால்