நட்பு மொழிஅறிவுமதி

* ஆண் குழந்தைகளையும்
பெற்றெடுத்து
வளர்த்து
ஆளாக்குகிற
பெண்கள்தாம்
அடுத்த
ஆண்களிடம்
பேசக் கூடாதாம்

* இடதை ஒருவர் காதிலும்
வலதை ஒருவர் காதிலும்வைத்துப்
பாடல் கேட்பவர்கள்
காதலர்கள்
இரண்டையும் ஒருவருக்கே
மாட்டிவிட்டு
கேட்கச் சொல்லி
கேட்பவர்
முகத்தில் பாடல்
கேட்பவர்
நண்பர்

* இரண்டு தெருக்கள் தள்ளித்தான்
மகளிர் கல்லூரி
இருந்தும்
இரண்டு மணி நேரப் பயணத்தில்
வந்து போகிற
ஆண்கள் பெண்கள் சேர்ந்து படிக்கும்
கல்லூரிக்கு அழைத்து வந்து
அமைதியாய்
சேர்த்துவிட்டுப் போகிறார்
அப்பா

* கைதூக்கி விட்டவர்களை
எண்ணிப் பார்க்கையில்
முதலில் வருகிற
முகம்
ஓர் ஆசிரியராக இருக்கலாம்
இரண்டாவதாக
நட்பாகத்தான் இருக்கும்

* காமத்திற்கும் முத்தம் உண்டு
ஆனால்
முத்தத்திற்கு
காமம் மட்டுமே
இல்லை

ஓவியம்: ப்ரத்யூஷ்