முன்பு நக்சலைட் இன்று எழுத்தாளர்!ஆடு மேய்ப்பது, டீக் கடை எடுபிடி, கூலி, லாரி க்ளீனர், வெட்டியான், தோட்டி, வாட்ச்மேன், ரிக்‌ஷா ஓட்டுநர்... என ஆல் இன் ஆல் வேலைகளை அசாம், லக்னோ, அலகாபாத் என பல்வேறு இடங்களில் பால்யத்திலிருந்து செய்து வந்த அலுப்பு அணுவளவும் முகத்தில் இல்லை. உற்சாகமாகப் பேசுகிறார் மனோரஞ்சன் பியாபாரி. இவரது எழுத்துகள் ஏறுவெயிலைப் போல வாசிப்பவரின் மனதில் உள்ளிறங்குபவை.

சுடும் உண்மைகளை அப்படியே மனங்களில் இயல்பான மொழியில் சமைப்பதால்தான் தலித் எழுத்தாளர் என வங்காளத்தில் போற்றப்படுகிறார் இந்த முன்னாள் நக்சலைட். இரண்டு அறைகளைக் கொண்ட மிகச் சிறிய வீட்டில் மெல்ல க்ரீச்சிட்டபடி மின்விசிறி சுற்றிவர, ஓரமாக அடுக்கப்பட்டுள்ள நூல்வரிசை கவனம் ஈர்க்கிறது. ‘‘இயக்கத்தில் பைப்கன், சிறிய ஆயுதங்களைத்தான் முதலில் கையாள பயிற்சி கொடுத்தார்கள்.

எங்களின் முதல் எதிரி சிறு முதலாளிகளும், தொழிலதிபர்களும்தான்...’’ நினைவுகளைக் கிளறியபடி பேசும் மனோரஞ்சன், 1967 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (இப்போதைய வங்காளதேசம்) வங்காள மாநிலத்தில் இருக்கும் சிலிகுரிக்கு பிழைப்புத் தேடி வந்தவர். 1970ல் நக்சலைட் இயக்கத்தில் ஆர்வத்துடன் சேர்ந்தவருக்கு பின் வந்த காலகட்டங்கள் பெரும் வலியும் வேதனையும் அளித்திருக்கிறது.

‘‘எனது சிறுவயது நண்பரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான ஒரு தோழரை நக்சல்பாரிகள் சில காரணங்களுக்காக கொன்று விட்டார்கள். ரத்த சகதியில் கிடந்த அவரது உடலைப் பார்த்த நொடியை இன்றும் மறக்க முடியவில்லை. முதலாளித்துவத்தை எதிர்க்க ஏழைகளின் உயிர்களைக் காவு கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி மனதில் உதித்தது அப்போதுதான்...’’ வலிபொதிந்த குரலில் மெலிதாகப் பேசுகிறார்.

நக்சல் தொடர்பால் போலீசாரின் வன்முறை, சிறைவாசம் என அலைந்த போராட்ட நாட்களில் கல்வியின் மணம் கைக்கெட்டியது இவருக்கு. அலிப்பூர் சிறையில் இவர் இருந்த காலத்தில்தான் முதன் முதலாக கல்வி கற்க ஆரம்பித்திருக்கிறார். உதவியது உடனிருந்த சிறைக் கைதி. வங்காள மொழியை கசடற மனோரஞ்சன் கற்று முடிக்கவும் சிறைவாசம் முடியவும் சரியாக இருந்திருக்கிறது. வெளியே வந்தவர் ரிக்‌ஷா ஓட்டி தன் வாழ்க்கையை நடத்தத் தொடங்கியிருக்கிறார்.

என்றாலும் புத்தகங்களை வாசிக்க மறக்கவில்லை. இதை நேரில் பார்த்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், தனது ‘பர்திகா’ இதழில் எழுத வாய்ப்பளித்திருக்கிறார். 1981ல் இவரது முதல் கட்டுரை அச்சில் வந்தது. தலைப்பு, ‘ரிக்‌ஷா இழுப்பவன்’. வாய்ப்பு கொடுத்து இவரை எழுத வைத்து எழுத்தாளராக உயர்த்தியவர் வேறு யாருமல்ல. இந்தியாவின் பொக்கிஷ எழுத்தாளர்களில் ஒருவராக மதிக்கப்படும் மகாஸ்வேதாதேவிதான்!

‘‘‘பர்திகா’வில் கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். கற்பனை எழுத்துக்களில் அதிக ஆர்வம் கொண்ட நான் அதை பயன்படுத்திக் கொண்டேன்...’’ புன்னகைக்கும் மனோரஞ்சன், 100க்கும் மேலான சிறுகதைகளையும் 12க்கும் மேற்பட்ட நாவல்களையும் இதுவரை எழுதியிருக்கிறார். தன்னை எழுத்தாளராக உயர்த்தியதுடன் ‘புதிய தலைமுறைக்கான நம்பிக்கை’ என்றும் அடையாளப்படுத்திய மகாஸ்வேதாதேவியை தன்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது என்று நெகிழ்பவர், அந்த நன்றிக் கடனைச் செலுத்தும் விதமாக தன் மகளுக்கு மகாஸ்வேதா என்றே பெயரிட்டிருக்கிறார்.

‘‘மற்ற மாநிலங்களைப் போல தலித் மக்கள் கொல்கத்தாவில் தீண்டப்படாதவர்களல்ல. ஆனால், இங்கு வர்க்கப் பிரிவினை உண்டு. இங்குள்ள எந்தக் கட்சியிலும் உயர் பதவியில் தலித்துகள் கிடையாது. இன்னும் அவர்கள் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்...’’ என்று சொல்லும் மனோரஞ்சன் இப்போது, தான் எழுதி வரும் நாவல் நாமசூத்திரா என்ற இனக் குழுவைச் சேர்ந்த ஸ்ரீஹரிசந்த் தாகூர் என்ற சமய சீர்திருத்தவாதியைக் குறித்தது என்கிறார்.

‘‘பொருளாதாரச் சிக்கல்களால் ரிக்‌ஷா ஓட்டப் போகிறேன். பேட்டரி ரிக்‌ஷா வாங்க சிலர் உதவுகிறார்கள்...’’ எந்தவித பரிதாபத் தொனியும் எழாமல் பேசியபடியே தன் கழுத்து டவலை எடுத்து பர்சைச் சுற்றுகிறார். ‘‘இதேபோல் கற்களை வைத்துச் சுற்றினால் இதைவிட ஆபத்தான ஆயுதம் வேறில்லை!’’ வியப்பேதுமில்லை. பின்னே மனோரஞ்சன் பியாபாரியின் கதை மாந்தர்கள் அப்படிப்பட்டவர்கள்தானே!            

-ச.அன்பரசு