தடைப்பட்ட பயணம்



இரண்டு சொற்களைச் சேர்க்கிறேன்.
அங்கே, நீண்டு செல்கிறது ஒரு பாதை
அந்தப் பாதையை கடக்க வேண்டும்
சிறிய ஒரு பெட்டியை எடுத்து
ஆடைகளோடு உனது நிழலையும்
மடித்து வைத்துக்கொள்கிறேன்
வழித்துணைக்கு தேவைப்படலாமென

சில நினைவுகளையும்
மனதிற்குள் ஊற்றிக்கொண்டேன்
தொலைபேசியின் ரிங்டோன் போல
இடைக்கிடை உன் பெயர் கூப்பிட்டது
பயணத்தை தொடங்கி
மனதில் சிறிது தூரம் கடந்ததும்
கோடை வரலாமென்பதால்,
அதற்கான மழைத்துளிகளையும்
எடுத்து வைத்துக்கொண்டேன்
மீண்டும் என் இதயம்
அப்போதுதான் திரும்பி வந்திருந்தது
பிறகொருநாள், பயணத்தை தொடரலாம் என்றது.
சேர்ந்திருந்த சொற்களை பிரிக்கிறேன்
மெல்ல மெல்ல வெயில்
வாசலுக்குள் வந்தது
அந்த வெயிலிலும் குடைபிடித்தபடி
என்னிடம் வருகிறதே
அது யாருடைய துயரம்?

-றியாஸ் குரானா