சாரல் சீஸன்
-அசோக் சுப்ரமணியம்
இதோ துவங்கியே விட்டது மார்கழி மாத இசை சீஸன்! தொடர் இடர்களாலும், இழப்புகளாலும் சிறிது உற்சாகக் குறைவே எங்கும் காணப்பட்டாலும், சென்னை மியூசிக் அகாதமியின் இசை விழா ஆரவாரமில்லாமல் துவங்கி விட்டது. விதூஷி செளம்யாவின் கச்சேரி, அவருடைய குரு - நூற்றாண்டு விழா காணும் மறைந்த சங்கீத கலாநிதி டாக்டர் எஸ்.இராமநாதன் அவர்களுக்கு முழு அஞ்சலியாக அமைந்ததோடு மட்டுமன்றி, நிறைவாகவும் இருந்தது.
அவரே விண்ணிலிருந்து ஒவ்வொரு கணமும் பெருமைப்படக்கூடிய பாட்டு! ஆழமான தேர்ச்சியும், அழகான வெளிப்பாடும் ஒருங்கிணைந்த கச்சேரி! முழுவதுமே இராமநாதன் அவர்களே பாடிப் பாடி நம்மை இசையின்பத்தில் மூழ்கச் செய்த உருப்படிகளின் தேர்வு, ஆழ்ந்த குருபக்தியின் வெளிப்பாடு.
பூர்ணசந்திரிகாவில் எஸ்.இராமநாதன் அவர்களின் வர்ணம், குர்ஜரியில் ‘வரலாந்துகொம்மனி’, நாயகியில் ‘கனுகொனு சௌக்யமு’, விஜயயில் ‘வரநாரத’, தேவமனோகரியில் ‘யாருக்குத்தான் தெரியும்’, பிலஹரியில் ‘தொரகுன’, பாடியில் ‘ஸ்ரீகுருணா பாலிதோஸ்மி’, இறுதியாக பீம்ப்ளாசில் ‘பூலோக குமாரி’ எனும் பாரதியாரின் பாடல்... ஒவ்வொரு பாடல் தேர்வும் கணமும் குருவையே கண்முன் நிறுத்தியது.
சௌம்யாவின் கம்பீரமும், கன, நய பாவங்களும் இணைந்த குரல் வளம்... பல வருடங்களாகப் பாடியதன் அனுபவம்... உண்மையான உழைப்பு... இவற்றின் மொத்தமாக கச்சேரி அமைந்ததில் வியப்பே இல்லை. தோடி ராகப் பல்லவி 24 அட்சர அங்கதாளம். இதற்கு எடுத்துக்கொண்ட பல்லவி வரிகளும், இராமநாதன் அவர்களின் மேகரஞ்சனி பாடலின் வரிகள்தாம். ‘நின் மலரடி இணை துணையே நீல மயில் வாகனனே’.
பொதுவாக வழக்கில் இருக்கும் சூளாதி தாள வகைகளிலும் ஆதி, ரூபகம், மிஸ்ரசாபு, கண்டதிரிபுடை இவற்றில் கதிபேதங்கள் என்று முடங்கிப்போன பல்லவிகளிலிருந்தும் மாறுபட்டு, மிக்க உழைப்பும், தாள, லய நிர்வாகமும் தேவைப்படும் பல்லவி அமைப்புகளை எடுத்துக்கொண்டு மெனக்கெடுவதற்காகவே சௌம்யாவைப் பாராட்டத்தான் வேண்டும். அதைத் திறம்படப் பாடிக் காட்டும்போது சிரம் தாழ்த்தி வணக்கமும், கரம் தட்டி பாராட்டையும் வழங்கியே தீரவேண்டும். செய்வோம்!
உறுதுணையாக வாசித்த இளம் வயலின் கலைஞர் சாருமதி ரகுராமன், சௌம்யாவின் சவால்களைப் புன்சிரிப்பு மாறாமல் ஏற்றுக்கொண்டதோடு, குறையாமல் மிக்காமல் வாசித்ததே கச்சேரிக்கு முழுமையைத் தந்தது; நெய்வேலி நாராயணனின் மிருதங்கமும், எச்.பிரசன்னாவின் கடம் வாசிப்பும் நயமும் நளினமுமாக இருந்தன. மிக நிறைவான கச்சேரி!
மியூசிக் அகாதமியின் இசை விழாவில் இளம் வித்வான் ஸ்ரீராம் பார்த்தசாரதி கச்சேரி. வயலின் தில்லி சுந்தரராஜன், மிருதங்கம் சங்கீத கலாநிதி உமையாள்புரம் சிவராமன், கடம் கிரிதர் உடுப்பா என நல்ல பக்கவாத்தியங்கள். இருந்தாலும், அன்றைய நாயகன், சிவராமன் அவர்கள்தாம். அவருடைய விரல்கள் தவழ்ந்தன, பாய்ந்தன, உருண்டன... சரவெடியாக, தொடர் வாணமாக, அனுசரணையாக, அதேசமயம் அதிரடியாக!
எல்லோரையும் கட்டிப் போட்ட வாசிப்பு அவருடையது. சூரியன் முன்பு மற்ற கிரகங்கள் ஒளி குன்றுவது இயற்கைதானே! பேகடா ராகத்தில் குரு வந்தனையோடு தொடங்கி, இந்த சலமு வர்ணத்தை நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் பாடி, பின்பு மாயாமாளவ கௌளையில் தியாகய்யரின் மேரு சமான கீர்த்தனை ‘கலமுன சோபில்லு’வில் துரிதகால நிரவல், ராகத்தில் தீட்சிதரின் ஸ்ரீவரலக்ஷ்மி கீர்த்தனை என்று விரைவாக, கற்பனைச் சுரம் என்கிற டிபார்ட்மென்டை தொடாமல் பாடிக்கொண்டே சென்றபோது, ‘என்னடா! இன்றைக்கு கற்பனைச் சுரத்துக்கு கல்தாவா’ என்று தோன்றியது!
ஆனால் தொடர்ந்து வந்த பந்துவராளி ராக ஆலாபனையும், ‘ரகுவர’ என்னும் கீர்த்தனையும் ரசிக்கும்படியான, திட்டமான கற்பனைச் சுரங்களும் அதை ஈடு கட்டிவிட்டன. ராக ஆலாபனையின் சில இடங்களில் குமுதக்ரியாவா, பந்துவராளியா என்ற ஐயம் வராமலில்லை! தொடர்ந்து கரகரப்ரியாவில் பாபநாசம் சிவனின் ‘அப்பன் அவதரித்த கதாம்ருதம்’ என்ற பாடலை விரைவாகப் பாடி, தமிழ்ப் பாடலுக்கும் ‘டிக்’ செய்துவிட்டார்! சிவராமன், கிரிதர் உடுப்பாவின் தனி ஆவர்த்தனத்தில் அரங்கே அதிர்ந்தது! வயதை மறுக்கும் வாலிப வாசிப்பு சிவராமன் அவர்களுக்கு! மீண்டும் இந்துஸ்தானி ராகத்தில் (மேக்) அதிவிரைவாக ஒரு ராகம்-தானம்-பல்லவி! அளவான ராகம், அதிவிரைவாய் தானம்! டெல்லி சுந்தரராஜன், எப்போதும் போல இடைஞ்சல் இல்லாத ஒத்திசைவான வாசிப்பு.
இளம் வித்வான்கள், சீனியர் வித்வான்களின் இசையில் ஈர்க்கப்படுவது சரிதான்... ஆனால் அப்பட்டமாக அவர்களை நினைவுறுத்திக்கொண்டே இருக்கக்கூடாதல்லவா! ஸ்ரீராம் அவராகப் பாடினாலே அட்டகாசமாக இருக்கிறது. நல்ல சுகபாவம், லயம், சாகித்ய தெளிவு... போதுமே வெற்றிக்கு! ஸ்ரீராம், நீர் முடியுள்ள சீமாட்டி அல்லவா?
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|