மாப்பிள்ளை



பெண் பார்த்து விட்டு மாப்பிள்ளை வீட்டார் கிளம்பியதும், ‘‘அவங்க ஓகே சொல்லிட்டாங்க, நீ என்னம்மா சொல்றே?’’ மகள் சுதாவிடம் கேட்டார் சண்முகம். ‘‘இந்த மாப்பிள்ளை வேண்டாம்ப்பா!’’ என்றாள் சுதா மிகவும் தெளிவாக. ‘‘ஏம்மா?’’ ‘‘அவர் பெற்றோருடன் வந்து உட்கார்ந்தவர், நாம் ஹாலில் செய்திருந்த நேர்த்தியான அலங்காரம், ரம்மியமான மெல்லிசை எதையுமே கண்டுக்கலை. வந்ததிலிருந்து அவரோட அப்பா, அம்மாதான் பேசினாங்க. இவர் வாயே திறக்கலை. வைத்த டிபனையும் குருவி மாதிரி கொறித்தார், திருப்தியா அள்ளி சாப்பிடலை.

‘நல்லா இருக்கா... இல்லையா?’ என்ற எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தலை. நான் அவர்களுக்கு மரியாதை செய்யும்போது கூட செல்போனில் பேசிக்கொண்டிருந்தவர், என்னை ஆர்வத்துடன் பார்க்கவில்லை. அவங்க பெற்றோர் ‘பெண் பிடிச்சிருக்கா?’ என்றபோதும் வாய் திறக்காமல் தலையை மட்டும் ஆட்டினார். படித்தவர், வசதியான குடும்பம், கை நிறைய சம்பாதிக்கிறார், ஒழுக்கமானவர்... எல்லாம் சரிப்பா.

ஆனால் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டத் தெரியாத ரோபோ மாதிரி இருப்பவரை கட்டிக்கிட்டு என்னப்பா செய்யுறது?’’ ‘‘நீ சொல்வது சரிதாம்மா. உன்னை என்னால புரிஞ்சுக்க முடியுது. வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர் ஒருவர் கண்டிப்பாய் நமக்கு கிடைப்பார், கொஞ்சம் பொறுத்திருப்போம்’’ என்றார் சண்முகம் சுதா மகிழ்ச்சியோடு ஓடிவந்து அப்பாவை அணைத்துக் கொண்டாள்.                      

-சி.ஸ்ரீரங்கம்