குட்டடிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

ஜனவரி 1 வந்தா ‘ஆட்டுப் புழுக்கை போட்டா ஆப்பிளா விழும்’, ‘காரக் குழம்பு சட்டிக்குள்ள கை விட்டா கல்கண்டா வரும்’னு கதை கதையா விடுறதை நம்பி குந்த வச்சு காத்திருக்கிறவனெல்லாம் எப்படியும் கம்பி கேட்டை தாவிக் குதிக்கிறப்ப குதிக்கால்ல குத்துன மாதிரி கண்ணுல தண்ணி வர பொத்துனாப்ல இருக்கப் போறானுங்க.

ஆனா நமக்கு? ரேஷன் அரிசிக்கும் கணக்குப் போட்டு வாழும், கூலி வாங்கும் சனிக்கிழமையை வாரத்தின் முதல் நாளாய் நம்பியிருக்கும், மலேரியா காய்ச்சலுக்கும் மாரியம்மன் மேல பாரத்தைப் போடும், மளிகைக்கடைகளில் இன்னமும் பிதுக்குற பேஸ்ட்ல இருந்து கரைக்கிற புளி வரைக்கும் 50 கிராம் பொட்டலங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு பாவப்பட்ட இனத்தின் மீது இனப் படுகொலைக்கு ஈடாக ஒரு பணப் படுகொலையை நடத்தியிருக்கிறார்கள். அதை நியாயப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள், இருப்பார்கள்.

கார்த்திகை, மார்கழி மாசங்களில் செகண்ட் ஷோ சினிமா விட்டு வரும் நள்ளிரவு நேரங்கள்ல நாய்கள்தான் தெருவுல சுத்திக்கிட்டு இருக்கும். இப்பல்லாம் சர்க்கரை டப்பா, புடவை மடிப்பு, பழைய புத்தகம், சாமி போட்டோவுக்கு பின்னாடின்னு கருப்பு பணத்தை சேர்த்து வச்ச சாதாரண குடும்ப பொம்பளங்க எல்லாம் ஏடிஎம்களை தேடி சுத்திக்கிட்டு இருக்கிறததான் பார்க்க முடியுது. கேஷுவல் லீவ், மெடிக்கல் லீவ் மாதிரி ‘காசு எடுக்க லீவ்’னு புதுசா உருவாக்கிய பெருமை இந்த அரசாங்கத்திற்குத்தான் சேரும்.

ஒரு ஏடிஎம்ல பணமெடுக்க ஒன்பது ராஜா சார் பாட்டு ஆகுது. இதுல மாவீரன் நெப்போலியன் காலத்துல இருந்து மடோனா செபாஸ்டியன் காலம் வரை, வரலாற்றுல தங்களது பணத்தை எடுக்க தடியடி வாங்கிய ஒரே தலைமுறை நாமளாதான் இருக்கும். சொந்தக் காசே நொந்தக் காசானது நமக்கு மட்டும்தான். காலையில பேங்குக்கு பணமெடுக்க ‘கும்கி’ லட்சுமி மேனன் மாதிரி கிளம்பிப் போனவனெல்லாம் சாயந்திரம்
‘றெக்கை’ லட்சுமி மேனன் மாதிரி வீங்கிப் போய் வாரான்.

பரம்பரை பரம்பரையா பாட்டில் தண்ணி வாங்கி சரக்கடிச்சவனுங்க எல்லாம் இன்னைக்கு பாக்கெட் தண்ணி வாங்கக்கூட சில்லறை இல்லாம சிங்கியடிக்கிறாங்க. வாரம் ரூ.24000 எடுத்துக்கலாம்னு சொன்னாலும், 90% பேங்குகளில் பணமே இல்ல. பணத்தைக்கூட பிச்சை போடுற மாதிரி ரேஷன்ல வழங்கிட்டு இருக்காங்க. நகரங்களில் பெரும்பாலான ஏடிஎம்களிலும், கிராமப்புற கூட்டுறவு வங்கிகளிலும் சமீப கால படங்களில் பாடல் காட்சிகளில் தமன்னா டிரஸ்ஸிலும் ஒண்ணுமே இல்லை.

பேங்க்ல இருக்க வேண்டிய பணமெல்லாம் பணக்காரனுங்க பெட்ரூம்லயும் பாத்ரூம்லயும் இருந்து எடுக்கிறாங்க. மறைந்த முதல்வருக்காக அஞ்சலி செலுத்தக்கூட அரை நாள்தான் கடைகளையே மூடுனாங்க. திறந்து வைக்கிற நாளுலயே வியாபாரம் குரூடாயிலை குடிச்ச மாதிரி இருக்கு; இதுல மூணு நாள் மூடி வச்சா மொத்தமா பிசினஸ் பாலிடாயில குடிச்சுட்டு படுத்துக்கும் என்ற கவலைதான். அஞ்சலி இடுப்பு மாதிரி பல மடிப்புகளோட இருந்த பணப்புழக்கம், இப்போ இலியானா இடுப்ப இஸ்திரி போட்ட மாதிரி தட்டையா கிடக்கு.

மொத்தப் பொருளாதாரமே பேலியோ டயட் ஃபாலோ பண்ணின மாதிரி இருக்கு. இந்த ஒரு மாசத்துல இந்தியா முழுக்க ஒத்தி வைக்கப்பட்ட கல்யாணங்களும் விசேஷ நிகழ்வுகளும் பல லட்சத்துக்கும் மேலிருக்கும். அதன் பின்னிருப்பது ஒன்றுதான், நம்பிக்கை. ‘I promise to pay the bearer the sum of one thousand Rupees’னு சத்தியம் பண்ணி கையெழுத்துப் போட்டு ரிசர்வ் வங்கி சீல் வச்சு மக்களுக்குக் கொடுத்த நோட்டுகளை, திரும்ப எடுத்துக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வங்கிகளில் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிறார்கள்.

இப்ப அரசாங்கம் ‘நோட்டடிக்க லேட்டாகும், பேப்பர் தீர்ந்து போச்சு, மாமியார் வயசுக்கு வந்துட்டா, மச்சினிச்சி செத்துப் போயிட்டா’ன்னு கலர் கலரா ரீல் விட்டுக்கிட்டு, ‘கேஷ்லெஸ்ஸா போ, டாப்லெஸ்ஸா போ’ன்னு சொல்லுது. பூப்படையா பெண்ணை கட்டி வைத்து புள்ளை பெத்துத் தரச் சொல்றதுதான் இப்ப நம்ம நாடு இருக்கிற நிலைமைல கேஷ்லெஸ் எகானமி.

அந்தப் பக்கம் போறப்பவெல்லாம் எனக்காக தாராளமா சிரிப்பை செலவு பண்ற நல்ல மனுஷன், இளநீர் கடைக்காரர். 40 ரூபாயை பணமாத்தான் வாங்குவார் அவர். கடன்ல கொள்முதல் பண்ற அவரால, ஸ்வைப் பண்ற மெஷினெல்லாம் வாங்கி வச்சு வியாபாரம் பண்ணி ஜெயிக்க முடியுமான்னு தெரில. நாங்க கேட்காமலேயே செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் கீரையும் தக்காளியும் வீட்டுப் படிக்கட்டில் வச்சுட்டு போயிடுவாங்க ஒரு ஆயா.

சனிக்கிழமை மொத்தமா பணம் வாங்கிக்குவாங்க. இனி ‘பே டிஎம்லதான் பே பண்ணுவேன்’னு சொன்னா அவங்களுக்கு என்ன புரியும்னு தெரில. நன்றாக கவனித்துப் பார்த்தா, ஒவ்வொரு சிறு நகரத்தின்  பஸ் ஸ்டாண்டை சுற்றியோ, பிரதான சாலையிலோ சின்னச் சின்னதா காய்கறி முதல் மலிவு விலைப் பொருட்கள் விற்கும் கடைகள் இந்த ரெண்டு மூணு வருஷத்துல அதிகமா மொளைச்சிருக்கும். மதியத்துக்கு மேலதான் கடை திறப்பாங்க. சாயந்திரம் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போறவங்கதான் அவங்க டார்கெட்.

அவர்களில் பாதிப் பேருக்கு மேல் இந்தத் தொழில்ல லாபம் சம்பாதிக்க வரவில்லை, மற்ற பல தொழில்கள் செய்தும் தோற்றுப் போய் கடைசி முயற்சியாக இதைச் செய்பவர்கள். இது ரெண்டும் உதாரணம்தான். இப்படிப் பலர் இருக்காங்க. கேஷ்லெஸ் எகானமி கொண்டு வரேன்னு இப்படிப்பட்ட வியாபாரிகள் மீது நடத்தப்படும் தாக்குதல், அவர் மீதான தாக்குதல் மட்டுமல்ல; அது அவரை நம்பியிருக்கும் ஒரு குடும்பத்தின் மீது ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட தாக்குதல்.

கருப்புப் பணத்தின் மீதான துல்லிய தாக்குதல்னு ஆரம்பிச்சு, கள்ள நோட்டின் மீது மெல்லிய தாக்குதல்னு முழக்குபவன் எல்லாம் இப்ப ‘கேஷ்லெஸ் எகானமிடா’னு முனகிக்கிட்டு இருக்கானுங்க. கார்டுல இருக்கும் பலாக்காயை விட கைல இருக்கும் களாக்காய் எவ்வளவு முக்கியமென முந்தா நேத்து வந்த வர்தா புயல் பொட்டுல அடிச்சு சொல்லிட்டுப் போயிடுச்சே.

பணக்கார நாடுகளில் கூட கேஷ்லெஸ் எகானமி இன்னமும் 100% சாத்தியப்படல. இதுல கள்ளப்பணத்தை ஒழிக்க, கருப்புப் பணத்தை ஒழிக்கன்னு ஆரம்பிச்சு தீவிரவாதத்தை ஒழிக்க, ரொக்கப் பரிவர்த்தனையை ஒழிக்கன்னு காரணம் மாறிக்கிட்டே இருக்கு. சொப்பனசுந்தரிய கூட இத்தனை பேரு வச்சிருந்தாங்களான்னு தெரியல. ஆனா இந்த பணமாற்றத்துக்கு காரணத்தை பிரதமர் முதற்கொண்டு நிதியமைச்சர், ரிசர்வ் வாங்கி கவர்னர், துணை கவர்னர்னு பலரும் ஆளுக்கொண்ணு வச்சிருக்காங்க.

ஏடிஎம்ல பணமெடுக்கப் போய், ஆஸ்பத்திரிக்கு பணமில்லாம தவிச்சு, போதாக்குறைக்கு வங்கி ஊழியர்கள்னு செத்துப் போனவங்க எண்ணிக்கையைப் பார்த்தா, ‘பணமாற்ற நடவடிக்கை மக்கள் தொகையைக் குறைக்க’னு அரசாங்கம் சொன்னாலும் ஆச்சரியமில்லை. இந்த ஒன்னரை மாசமா நாம விரும்புனாலும் விரும்பாட்டியும் அரசாங்கத்தின் எண்ணங்கள் நம்ம மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுது. நாமளும் அதை ஏற்கப் பழக்கிட்டோம்.

‘கேஷ்லெஸ் எகானமிக்கு மாறு’ன்னு அரசாங்கம் நிர்ப்பந்திப்பது, உண்மையில் சிறு வியாபாரிகளுக்கும் பெரும் மூலதனக்காரர்களுக்குமான போட்டியைத்தான் மறைமுகமா நிகழ்த்துது. இதுல யாரு ஜெயிப்பாங்கன்னு எல்லோருக்கும் நிச்சயமா தெரியும். தகுதியுள்ளவை தப்பிப் பிழைப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த சாமானிய மக்களையும் அந்தப் போட்டிக்கு தயார் செய்துட்டு வந்திருந்தா ஒரு நியாயம் இருந்திருக்கும்.

இந்த பணமாற்றம் அறிவித்த பிறகு பிரதமர் மூன்று கூட்டங்களில் பேசியிருக்காருன்னு நினைக்கிறேன். அந்த மூணு கூட்டங்களிலும் மேடை போட்டவங்கள்ல ஆரம்பித்து மைக் செட் கட்டுனவங்க வரைக்கும், அதில் ஈடுபட்ட எல்லா தொழிலாளர்களுக்கும் கூலி ரொக்கமாய் கொடுக்கப்பட்டதா? இல்லை, கார்டுல ஸ்வைப் பண்ணிக்கிட்டாங்களா? நாமக்கல் பண்ணையில் குஞ்சு பொரிக்கப்பட்ட போண்டா கோழி மாணவனாட்டம், எல்லா இடங்களிலும் மனப்பாடம் பண்ணியதை பீரங்கியாய் முழங்கும் பிரதமர் பெரும் மெஜாரிட்டி வைத்திருந்தும் பாராளுமன்றம் பக்கம் விவாதம் செய்ய வரமாட்டேங்கிறார்.

ஆனா டிசம்பர் 30 அன்னைக்கு சாயந்திரமா தூர்தர்ஷன்ல தோன்றி ‘நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் நன்றி’ன்னு சீரியல் ஓட்ட கரெக்டா கண்ணீர் சிந்திக்கிட்டு வந்திடுவார். ‘ஓசில ஆறு மாசம் பேசிக்கலாம்’னு சொன்னதுக்காக சிம் வாங்க எவன்னே தெரியாம, எதுக்குனே கேட்காம, கைநாட்டு வச்சு சிம் வாங்குற கிறுக்குப் பயலுகதானே நாம! எப்படியும் பிரதமர் கண்ணைக் கசக்குறதைப் பார்த்துட்டு, அடுத்து சொல்றதுக்கும் கையைக் கட்டிக்கிட்டு, எப்படியும் நம்ம அக்கவுன்ட்ல 15 லட்ச ரூபாய் போடுவாங்கன்னு நிற்கப் போறோம்.

அப்படியே எதுவும் கேட்காம நின்னுக்கிட்டே இருந்தா, எப்படியும் 2030ம் வருஷம் நடுநிலைப்பள்ளி சிலபஸ்ல, ‘இந்தியா ஒரு ஜனநாயக சர்வாதிகார மதச்சார்புள்ள குடியரசு நாடு’ன்னு குழப்ப கும்மியடிக்க டால்கம் பவுடர் பூசிவிட்ட தாஜ்மகால் போல பிரகாசமா வாய்ப்பிருக்கு.       

ஓவியங்கள்: அரஸ்