துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் கேதுவும் தரும் யோகங்கள்
கிரகங்கள் தரும் யோகங்கள் - 70
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஒருவருடைய ஜாதகத்தில் ஞானகாரகனான கேதுவும் கலையுலக அதிபதியான சுக்கிரனும் சேர்ந்தால், ‘ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்’ என்றிருப்பார்கள். எல்லாம் இருந்தும் இல்லாதது போல நடந்துகொள்வார்கள். எதிலுமே திருப்தியில்லாதவர்களாக இருப்பார்கள். எந்தச் சூழ்நிலையிலும் சின்னச் சின்ன விதிமீறலைக் கூட விரும்ப மாட்டார்கள். நியாயஸ்தர் என்கிற பெயரெடுக்கவே விரும்புவார்கள். இவர்கள் பேசினால், ‘‘ஏன் அதிகமாகப் பேசுகிறாய்’’ என்பார்கள். அமைதியாக இருந்தால், ‘‘ஏன் பேசாமல் இருக்கிறாய்’’ என்பார்கள். லக்னாதிபதியான சுக்கிரனோடு கேது பகையில்லை. அதனால், பொதுவாக இந்த அமைப்பானது பெரிதாகக் கெடுதல் செய்யாது. ஆனால், இந்த லக்னத்தைப் பொறுத்தவரை நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதால் ஏதேனும் ஒரு கலகமோ, பிரச்னையோ, வீண் விவாதமோ ஏற்பட்டால் இறுதியில் அது நன்மையில்தான் சென்று முடியும்.
இந்த அமைப்பே சலிப்பை அதிகமாக வெளிக் காட்டக் கூடியது. ஆனால், இந்த சலிப்பிலிருந்துதான் இவர்கள் தங்களின் படைப்பையும், ஆற்றலையும் வெளிக்கொண்டு வருவார்கள். தன்னைச் சுற்றி எதுவுமே நியாயமாக இல்லை என்று எல்லோரிடமும் புலம்புவார்கள். ஏதேனும் விவாதங்களை உருவாக்கியபடி இருப்பார்கள்.
அதிலிருந்து தீர்வுகளை நோக்கி நகர்வார்கள். சுக்கிரன் உலகை அங்குலம் அங்குலமாக ரசிக்கச் செய்யும் கிரகம். ஆனால், கேதுவோ உலகை வெறுத்து ஒதுக்கும் கிரகம். எனவே, இந்த இரண்டு கிரகங்களும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுப்பார்கள். அதனால், உலகியல் இன்பங்களை நோக்கி ஓடாமலும், அனுபவித்தால் குற்ற உணர்வு கொண்டும் தவிப்பார்கள்.
துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் சனியும் ஒரே இடத்தில் இணைந்திருந்தால் கிடைக்கும் பொதுவான பலன்கள் இவை. இப்போது, ஒவ்வொரு ராசிக்குள்ளும் இவ்விரு கிரகங்கள் நின்றால் என்ன பலன் என்று பார்ப்போமா? லக்னத்திலேயே - அதாவது துலாம் ராசியிலேயே சுக்கிரனும் கேதுவும் இருந்தால் மிகவும் முதிர்ச்சியாக இருப்பார்கள். நிற்காமல் பாயும் நதி போல ஒருவித தேடலோடு இருப்பார்கள். எத்தனை பெரிதாக சாதித்தாலும் திருப்தியற்று இருப்பார்கள்.
ஆழமான விஷயங்களை சர்வ சாதாரணமாகப் பேசுவார்கள். பணத்தின் பின்னால் ஓட மாட்டார்கள். அதனாலேயே பணவரவும் குறைவாகத்தான் இருக்கும். உடல்நிலையில் - முக்கியமாக நரம்பு சம்மந்தமான பிரச்னைகள் வந்து நீங்கும். 27ம் வயதிலிருந்து நன்கு முன்னேறி வருவார்கள். தாயாருடைய வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும். தாயாருடன் விவாதிக்காது, சொல்லாமல் எந்தவொரு காரியத்தையும் செய்ய மாட்டார்கள்.
விருச்சிக ராசியான இரண்டாம் இடத்தில் கேதுவும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் கண்ணில் கவனம் தேவை. இவர்கள் கடைசி நேரத்தில் நன்கு படித்து மதிப்பெண் பெறுவார்கள். இவர்களின் இயல்பே அறிவாற்றல் சேர்ப்பதில்தான் இருக்கும். நெருக்கடி நேரத்தில் மட்டுமே பணத்தைப் பற்றிய சிந்தனை வரும். எல்லாவற்றிலும் தொடக்கச் சிரமம் இருந்தபடியே இருக்கும். எல்லா விஷயத்தையும் தெரிந்து வைத்திருந்தாலும் எப்போது தேவைப்படுமோ அப்போது சொல்லத் தெரியாது. நிறைய விஷயங்களை அடுக்கடுக்காக பேசும் திறமை பெற்றிருப்பார்கள்.
தனுசு ராசியான மூன்றாம் இடத்தில் கேதுவும் சுக்கிரனும் அமர்ந்திருந்தால் ஓவியத்துறையில் சிறந்து விளங்குவார்கள். எதையும் மனப்பாடம் செய்யும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள். நிறைய விரதம் இருப்பார்கள். சிறியதாக தாழ்வு மனப்பான்மை இருந்தபடி இருக்கும். அதிகமான ஆன்மிக ஈடுபாட்டின் காரணமாக நாற்பதிலிருந்து ஐம்பது வயதுக்குள் சந்நியாசம் போனாலும் போய்விடுவார்கள்.
இவர்களில் சிலர் ஆரம்ப காலத்தில் சம்பிரதாயத்தைப் பழிப்பவர்களாக இருந்தாலும், மத்திம வயதில் சமயச் சடங்குகளை நியாயப்படுத்திப் பேசுவார்கள். மகர ராசியான நான்காம் இடத்தில் சுக்கிரனும் கேதுவும் இருந்தால் தாயார் மூச்சிரைப்பு நோயினால் அவதிப்படுவார். இந்த அமைப்புள்ளவர்கள் மருத்துவத் துறையில் சாதிப்பார்கள்.
தன்னைச் சார்ந்து வந்தோரையெல்லாம் ஏற்றிவிடும் ஏணியாக இருப்பார்கள். எல்லாவற்றிலும் முன்னிலை பெற முயற்சிப்பார்கள். இது சுக ஸ்தானமாக இருப்பதால் மனதை சுகமாக இருக்க வைப்பார் சுக்கிரன். தாத்தா, தாய்மாமன் போன்றோர் வைத்திருந்த பொருட்கள் மற்றும் சொத்துக்களை இவர்கள் ஜாக்கிரதையாக பாதுகாப்பார்கள். இவர்களின் உடம்பில் உப்புச் சத்து சம்மந்தமான தொந்தரவுகள் வந்துபோகும்.
யாரையாவது பிடிக்கவில்லையெனில் ஏதாவது குறை கூறியபடியே இருப்பார்கள். கும்ப ராசியான ஐந்தாம் இடத்தில், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரனும் கேதுவும் இணைந்தால் பேரறிவு கொண்ட குழந்தைகள் பிறப்பார்கள். பூர்வீகச் சொத்தை கஷ்டப்பட்டு காப்பாற்றி வைப்பார்கள். குலதெய்வ வழிபாட்டை விடாது செய்ய வேண்டும். உள்ளுணர்வு மிகவும் நுட்பமாக இருக்கும்.
வாழ்க்கையில் பட்டும் படாததுமாக நடந்து கொள்வார்கள். சொந்தங்களும், கூடப் பிறந்தவர்களும் இவர்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள். அதனாலேயே மூன்றாம் மனிதர்களிடம் நல்ல நட்புணர்வோடு பழகுவார்கள். சிலர் மத்திம வயதுக்குப் பிறகு அருள்வாக்கெல்லாம் சொல்வார்கள். தாய்மாமனோடு பகை உண்டாகும். இவர்களின் கனவிலேயே பல விஷயங்களை சூட்சுமமாகத் தெரிந்துகொள்வார்கள்.
மீன ராசியான ஆறாம் இடத்தில் சுக்கிரனும் கேதுவும் சேர்ந்திருந்தால் ஆங்காங்கு உடலில் நரம்பு புடைத்து சுற்றிக் கொண்டிருக்கும். நிறைய பயணம் செய்தபடி இருப்பார்கள். அதேசமயம் பணத்தை தண்ணீர் போன்று செலவழிப்பார்கள். எதையும் எளிதில் ஏற்க மாட்டார்கள். ஆனால், பெரியோரின் சொற்களில் மரியாதை உள்ளவர்களாக இருப்பார்கள்.
மர்ம ஸ்தானத்தில் நோய் வரும் வாய்ப்பு உண்டு. கர்ப்பப்பை சம்மந்தமான பிரச்னை வரும்போது மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் வெளியிலேயே பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் நிம்மதி போய்விடும். வீண்வம்பு, வறட்டு கௌரவம் தவிர்ப்பது நல்லது.
மேஷ ராசியான ஏழாம் இடத்தில் சுக்கிரனும் கேதுவும் அமர்ந்திருந்தால் வாழ்க்கைத்துணை மிகுந்த யதார்த்தவாதியாக இருப்பார். இந்த அமைப்பானது தாமதமான திருமணத்தை ஏற்படுத்தும். ஆனால், மிகச் சிறப்பான வாழ்க்கைத்துணையை அமைத்துத் தரும். சொந்தத்தில் திருமணம் செய்வது அவ்வளவு நல்லதல்ல. ஆரம்பத்தில் வாழ்க்கைத்துணைவரின் திறமையை ரசித்தாலும் காலப்போக்கில் மட்டம் தட்டிப் பேசுவார்கள்.
இவர்கள் பெரும்பாலும் அந்நிய தேசத்திலிருந்தால் கொஞ்சம் பிரச்னைகள் குறையும். யாரேனும் அன்பளிப்பாக ஏதேனும் கொடுத்தால் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த அமைப்பில் ஆண்கள் பிறந்தால் மனைவிக்குத் தெரியாமல் எந்தவித பணப்பட்டுவாடாவும் செய்யக் கூடாது. ரிஷப ராசியான எட்டாம் இடத்தில் சுக்கிரனும் கேதுவும் இருப்பின் சிறுசிறு விபத்துகள் ஏற்படும். இவர்களின் உள்ளுணர்வு அசாத்தியமானதாக இருக்கும்.
இவர்களில் சிலர் அருள்வாக்கு சொல்வார்கள். உடல்நிலையில் ஏதேனும் தொந்தரவு இருந்தபடியே இருக்கும். முக்கியமாக சைனஸ், இ.என்.டி. பிரச்னை இருக்கும். யாரிடமாவது ஏதாவது கொடுத்துவிட்டு ஏமாந்தபடி இருப்பார்கள். சேமிப்பு குறித்த விழிப்புணர்வு இவர்களுக்கு மிகவும் முக்கியம். திருமணத்திற்கும் நிச்சயதார்த்தத்திற்கும் இடைவெளி கொடுக்கக் கூடாது. ஆண்களாக இருந்தால் பெண்களிடம் வீண்விவாதம் வைத்துக் கொள்ளக் கூடாது.
திடீர் பயணங்களில் உடைமைகளை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். மிதுன ராசியான ஒன்பதாம் இடத்தில் கேதுவும், சுக்கிரனும் சேர்ந்திருந்தால் அதிக பணத்திற்கோ, செல்வத்திற்கோ ஆசைப்பட மாட்டார்கள். தந்தையை மிகவும் நேசிப்பார்கள். ‘‘உங்கப்பா மாதிரி பேரெடுக்கணும்’’ என்று கூறினால் அவரின் பெயரைக் காப்பாற்றுவார்கள்.
பெரும்பாலும், தந்தையின் பணியையோ அல்லது அவரின் தொழிலையோதான் இவர்கள் எடுத்து நடத்துவார்கள். ஆனால், நெருக்கடி நேரத்தில் பணத்தின் அருமையை உணர்வார்கள். அதற்காக தவறான வழியை ஒருக்காலும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். தற்பெருமையாகக் கூட எல்லோரிடமும் தன்னிடமுள்ள சொத்துக்களை குறித்தெல்லாம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
கடக ராசியான பத்தாம் இடத்தில் சுக்கிரனும் கேதுவும் இருந்தால் மருந்துக்கடை வைத்து நடத்துவார்கள். அதிலும் முக்கியமாக ஆயுர்வேத மருத்துவத்தில் மிகப் பெரும் ஈடுபாடு காட்டுவார்கள். கெமிக்கல் நிறுவனத்தில் உயர்பதவி வகிப்பார்கள். இவர்கள் கல்வி நிறுவனங்களை நிறுவுவார்கள். மெரைன், வானிலை ஆய்வு மையம், பட்டுப் பூச்சி, மண்புழு வளர்த்தல், ஆர்கானிக் பயிர்கள் என பணி மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள்.
சிம்ம ராசியான பதினோராம் இடத்தில் சுக்கிரனும் கேதுவும் இருந்தால் ஒரு ராஜகுரு போல இருப்பார்கள். வேதங்களுக்கும் உபநிஷதங்களுக்கும் உரை எழுதும் அளவுக்கு பரந்த அறிவாற்றலோடு இருப்பார்கள். கணுக்காலில் அடிபட்டால் மேலும் எந்த பிரச்னையும் ஆகாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். இவர்கள் ஒரு தொழிலில் இறங்கி அதிலேயே சென்று கொண்டிருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யக் கூடாது. மூத்த சகோதரரோடு இணக்கமாக இருக்க முடியாது தவிப்பார்கள். கன்னி ராசியான பன்னிரெண்டாம் இடத்தில் சுக்கிரனோடு கேது இணைந்தால் மிக நிச்சயமாக தீவிர ஆன்மிகத்தில் இருப்பார்கள். லௌகீகமான விஷயத்தைப் பொறுத்த அளவில் நிறைய செலவினங்கள் இருந்து கொண்டேயிருக்கும். எப்போதும் சத்தியத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பார்கள். சதா எங்கேயாவது கோயில், ஜீவசமாதி என்று சென்ற வண்ணம் இருப்பார்கள்.
உலகக் கவர்ச்சியில் சிக்காது ஓடும் கேதுவும், உலகையே அருந்திவிடத் துடிக்கும் சுக்கிரனும் ஒன்று சேரும்போது இவர்களின் அகவுலகில் போர் தொடங்கி விடும். இது யதார்த்த வாழ்க்கையில் பெருங்குழப்பத்தைக் கூட உண்டு பண்ணும். எவ்வித குழப்பமுமின்றி வாழ்க்கையை எதிர்கொள்ளவும், பிரச்னைகளின்றி வாழவும் இவர்கள் ஞானிகளின் ஜீவசமாதிகளை தரிசித்து வருதல் நல்லது.
அப்படிப்பட்ட ஒரு ஞானியே சக்கரை அம்மாள் ஆவார். ஆரம்பத்தில் ஆனந்தாம்பாள் என்று பெயர் இருந்தது. ஆனந்தாம்பாள் 1854ல் திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர் வட்டத்தில் அடங்கும் தேவிகாபுரம் என்னும் சிற்றூரில் ஆதிசைவர் குடியில் பிறந்தவர். இவர் ஸ்ரீசக்ர பூஜையை செய்ததால் சக்ரம் என்பது சக்கரை என்று மாறி சக்கரை அம்மாள் என்றானது. சக்கரை அம்மாவின் ஆன்மிகப் பயணத்தில் முதல்முதலில் அவர்கள் உணர்ந்தது ‘நான் பிரம்மம்’, பின்பு ‘எல்லாம் பிரம்மம்’, ஈற்றாக அவர்கள் பிரம்மானந்த நிலையை அடைந்தார். சக்கரை அம்மாவின் ஜீவசமாதி சென்னை - திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா சாலை இலக்கம் 75ல் காமராசர் சாலை கூடும் இடத்தில் உள்ளது.
(கிரகங்கள் சுழலும்...)
ஓவியம்: மணியம் செல்வன்
|