இந்தியாவின் ஹீரோவான கருண் நாயர்!



‘நான்கு நிமிடம்... நான்கு பந்து... நான்கு ரன்னில் ரன் அவுட்...’ தனது முதல் டெஸ்ட் போட்டி இத்தனை கசப்பாக அமையும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார் கருண் நாயர். அமைதியான சுபாவம் கொண்ட மனிதர், அன்று ஒரு நிமிடம் கலங்கித்தான் போனார். காரணம், அவரின் நெருங்கிய தோழனான கே.எல்.ராகுல் காயத்தினால் வெளியேற, கருணுக்குக் கிடைத்த வாய்ப்பு அது.

ஆனால், மூன்றாவது போட்டியிலேயே வரலாற்றை தன் பக்கம் புரட்டிப் போட்டுவிட்டார். ‘வீரேந்தர் சேவக்கிற்குப் பிறகு ஒரு இன்னிங்ஸில் முச்சதம் அடித்த இந்தியர்’ என்ற பெருமையோடு, ஒரே நாளில் இந்திய கிரிக்கெட்டின் ஹீரோவாகிவிட்டார் கருண் நாயர். பூர்வீகம் கேரளா என்றாலும் கருண் பிறந்தது ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்பூரில்! பிறகு, பெங்களூரில் செட்டிலானது குடும்பம்.

அப்பா கலாதரன் மெக்கானிக்கல் எஞ்சினியர். அம்மா பிரேமா ஸ்கூல் டீச்சர். குறை மாத குழந்தையாகப் பிறந்த காரணத்தினாலேயே இன்று கிரிக்கெட்டராக ஜொலிக்கிறாராம் கருண். ‘‘அவன், எட்டு மாசத்துலயே பிறந்துட்டான். பேசுவதிலிருந்து சுவாசிக்கிறது வரை நிறைய பிரச்னைகள் இருந்துச்சு. அதனாலதான் அவனை கிரவுண்டுக்கு கூட்டிட்டுப் போனேன். கீழ விழுந்துருவானோ, காயம் பட்டுருமோனு வேறு கவலைகள். பிறகு, ெகாஞ்சம் கொஞ்சமா முன்னேறி வந்தான்.

ஆனா, இந்தியாவுக்காக விளையாடுவான்னு நாங்க நினைக்கவே இல்ல. அவன் கர்நாடக டீமுக்குள்ள போனபிறகுதான் அந்த நம்பிக்கை எங்களுக்குள்ள வந்துச்சு’’ என்கின்றனர் கருணின் பெற்றோர் சந்தோஷமாக. ‘‘எங்கே அவுட்டாகிடுவானோனு அவன் விளையாடுறதை டி.வி.ல பார்க்கக்கூட பயப்படுவேன். மும்பை டெஸ்ட் நடந்திட்டு இருந்தப்போ, வேலைக்குப் போயிட்டு வந்து டி.வி.யை போட்டேன். 13 ரன்ல அவுட்டாகிட்டான். வருத்தமா இருந்துச்சு. அதனால ஹைலைட்ஸ் மட்டும்தான் எப்பவும் பார்க்குறது’’ என்கிறார் கருணின் அம்மா பிரேமா.

பத்து வயதில்  மட்டையைப் பிடித்த  கருண் 2012ல்தான் முதல்தர கிரிக்கெட்டிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அடுத்தடுத்த மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து சதம் அடித்து கர்நாடகா அணியை ரஞ்சிக் கோப்பை பெறச் செய்தார். அதன்பிறகு, அவருக்கு ‘ஐ.பி.எல்’ வழிகாட்டியிருக்கிறது. 2014ம் ஆண்டு ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிக்காக விளையாடச் சென்றவருக்கு ராகுல் டிராவிட்டின் அறிமுகம் பெரிய வரப்பிரசாதம்.

அவர்தான் குருவாக இருந்து  சக்சஸ் ஃபார்முலாவைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு இந்தியா ‘ஏ’ அணிக்கு டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்க, நிறைய நுணுக்கங்கள் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இப்போதும் ராகுல் டிராவிட்டை நன்றியோடு நினைவு கூறி நெகிழ்கிறார் கருண்.

இவர் ட்ரிபிள் செஞ்சுரி அடிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2014ம் வருடம் தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் 328 ரன்கள் விளாசி மீண்டும் கர்நாடகா கோப்பையைக் கைப்பற்ற உதவினார். ‘கருணுக்கு விளையாட்டு சூடு பிடித்துவிட்டால் அவன் ஆடுவதைத் தடுக்கவே முடியாது. ஸ்வீப் ஷாட்டில் கைதேர்ந்தவன்’ என்கின்றனர் அவரின் நண்பர்கள்.

கடந்த ஜூன் மாதம் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் போட்டியில் கேப்டன் தோனி தலைமையில் களமிறங்கியபோது அவர் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால், எந்தவொரு சிக்கலில் இருந்தும் உடனடியாக மீண்டு வந்துவிடுவார் கருண். சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த கோயில் திருவிழாவுக்குச் சென்றிருந்தார். அவர் சென்ற படகு விபத்துக்குள்ளாக, நீச்சல் தெரியாத இவரை ஊர்க்காரர்கள் காப்பாற்றினார்கள். அந்தச் சம்பவம் கருண் நாயரை வெகுவாகப் பாதித்தது. அதை மறுபிறவி என இந்த சாதனையின்போதும் நினைவு கூர்ந்திருக்கிறார். முதல் நூறை முந்நூறு ஆக்கிய அவரிடம் இந்தியா நிறைய எதிர்பார்க்கிறது!

- பேராச்சி கண்ணன்