நயன்தாராவின் போட் நெக் பிளவுஸ்!



இப்போது கேர்ள்ஸின் ஹாட் சாய்ஸ்

‘‘பெண்கள் என்றாலே அழகுதான். முதல்ல உங்க அழகை நீங்களே ரசிங்க. அதற்குப் பிறகுதான் இந்த ஃபேஷன் எல்லாமே. உண்மையில் ஃபேஷனுக்கும், நம்முடைய உடல் அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு ஃபேஷன் டிசைனர்கிட்ட போய் ‘எவ்வளவு செலவானாலும்’ என்று மட்டும் சொல்லி விடாதீங்க. அவ்வளவுதான்... பில்லை தீட்டி பர்ஸை காலி செய்துவிடுவார்கள். ‘ஃபேஷன் வேறு, தையல் வேறு’. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்...’’ என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார் பிரியா. சன் டி.வி. ‘தெய்வமகள்’ சீரியல் வாணி போஜன், நடிகை திவ்யபாரதி என சின்னத்திரை பிரபலங்களின் ஃபேஷன் டிசைனர்.

‘‘இன்னைக்கு பத்துல ஆறு பெண்கள் சீக்கிரத்திலேயே குண்டாகிறாங்க. பப்ளியான அவர்களுக்கு பிடித்தமான, டிரெண்டியான டிரஸ் மார்க்கெட்ல கிடைப்பதே இல்லை. அப்படியே கிடைச்சாலும் அது அவர்களுக்குப் பொருத்தமாக இருப்பதில்லை. பொதுவாக குண்டான பெண்களுக்கு டிரஸ் தைப்பதை தையல்காரர்கள் விரும்புவதில்லை. அதுல ரொம்ப சிக்கல் இருக்குது. இருக்கிற துணியில் அட்ஜெஸ்ட் செய்துதான் தைக்க வேண்டும்.

ஆனால், என்னைப் போன்ற ஃபேஷன் டிசைனர்களுக்கோ, குண்டான பெண்களுக்கு டிரெண்டியான, ஃபேஷனான டிரஸ்ஸை டிசைன் செய்வதில்தான் ஆர்வம், சவால் எல்லாமே. ஒரு பெரிய டிசைன் எம்ப்ராய்டரியைக் கூட பப்ளியான பெண்களுக்கு அழகாக டிசைன் செய்து தைத்துவிட முடியும். பெல் பாட்டம் ஜீன்கள்தான் பப்ளி பெண்களின் ஸ்பெஷல். ஆனால், அவர்கள் ‘இந்த ஜீன்ஸ் எல்லாம் நம்ம உடம்புக்கு சரியாக இருக்குமா’ என்ற தயக்கத்திலும், தாழ்வு மனப்பான்மையிலும் அந்த ஃபேஷனையே தொலைத்துவிட்டனர்.

குண்டாக இருப்பது பெரிய பிரச்னை இல்லை. இப்ப வந்ததுதான் இந்த ஒல்லி பெல்லி, பென்சில்கட் மோகம் எல்லாம்’’ என்கிற பிரியா ஃபேஷன், மேரேஜ் டிரஸ் விஷயத்தில் பெண்கள் செய்கிற தவறுகளையும் நறுக்கென சுட்டிக் காட்டுகிறார். ‘‘சிலர் ‘வீட்டுப் பக்கத்துல பிளவுஸ் 40 ரூபாய்க்குத்தானே தைக்கிறாங்க, நீங்க என்ன இவ்வளவு  சொல்றீங்க’னு சண்டைக்கு நிற்பாங்க. இதுகூட பரவாயில்லை.

‘அந்த நடிகை மாதிரி எனக்கு தைச்சு தாங்க’ என அடம் பிடிப்பாங்க. ‘காஜல் அகர்வாலின் ஜீன்ஸ் உங்களுக்கு சரி வருமா’ என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதற்குமுன் ‘என்னோட சல்வார் காஜலுக்கு சரியாக இருக்குமா?’ என்பதையும் கேட்க மறந்துவிடாதீர்கள்.

சில மாதங்களுக்கு முன் ஒரு பொண்ணுக்கு மேரேஜ் டிரஸ் ஒன்றை கிளிப்பச்சை கலரில் டிசைன் செய்து கொடுத்தேன். அவரே அடம் பிடித்துக் கேட்ட கலர் அது. அந்தக் கல்யாணத்துக்குச் சென்ற பிறகுதான் தெரிந்தது, மாப்பிள்ளையும் கிளிப்பச்சை கலரில் கோட் போட்டிருக்கிறார் என்பது. சமீபகாலமாக திருமண உடைகளில் பெண்களின் டாமினேஷன் அதிகமாகவே தெரிகிறது.

ஆணை ஆணாக இருக்க விடுங்கள். அவர்களின் ஆடைகளை அவர்களே தேர்வு செய்யட்டும். இதைவிடக் கொடுமை என்னவென்றால் ‘தீம்’ திருமணங்கள். மாப்பிள்ளை, பெண், மொத்த உறவினர்களின் ஆடைகள் முதல் மண்டப செட் வரை என அனைத்தும் ஒரே கலரில் தேர்வு செய்வது. இது பல சமயங்களில் கேலிக்கூத்தாகத்தான் முடிகிறது’’ என்கிறவர், உடைகளைத் தேர்வு செய்கையில் என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் பட்டியலிட்டார்.

‘‘நம் உடல் அமைப்பு இதுதான். இப்படியான டிரஸ்ஸை அணிந்தால் மட்டுமே நமக்குச் சரியாகப் பொருந்தும் என்ற தெளிவுடன் இருக்க வேண்டும். மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாக எப்போதும் ஆடை அணியக்கூடாது. கலர் மற்றும் டிசைனில்தான் பெரும்பாலானவர்கள் சறுக்கி விடுகிறார்கள். பிங்க், கருப்பு, சிவப்பு இம்மூன்று கலர்களிலேயே பலரின் கலர் செலக்‌ஷன் நின்று விடுகிறது; அல்லது நீல நிறமாகவே இருக்கும்.

முடிந்தவரை உங்களிடம் இல்லாத கலர்களைத் தேர்வு செய்யுங்கள். இப்போது காஜல் அகர்வாலின் தாவணி ஸ்டைல் மற்றும் நயன்தாராவின் ‘காஷ்மோரா’ பாணி லெஹெங்காவைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். எல்லாமே பழங்கால டெக்னிக்தான். இப்போது ‘பாஸ்கர் த ராஸ்கல்’ நயன்தாராவின் ‘போட் நெக் ப்ளவுஸ்’தான் கேர்ள்ஸின் ஹாட் சாய்ஸ். ஆனால் அது எவர்க்ரீன் சௌகார் ஜானகியின் ஸ்டைல் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்’’ என ஆச்சரியத்துடன் முடித்தார் பிரியா.

- ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்