நயன்தாராவின் நம்பர் 1 ரகசியம்!



‘டோரா’ ஸ்பெஷல்

இது நயன்தாரா சீஸன். ஒரு பக்கம் மாயாவாக மிரட்டல்... இன்னொரு பக்கம் ஹெலனாவாக கிளாமர் அசத்தல் என டபுள் ட்ரீட் கொண்டாட்டம். அடுத்த ஆண்டு ஸ்பெஷலான ‘டோரா’வில் நயன் இன்னும் பாந்தம். எப்போதும் கழற்றாத கண்ணாடியில் புது லுக். கோபிகிருஷ்ணாவின் எடிட்டிங் அறை. மானிட்டரில் இருள் சூழ, ஊஃபரில் கடல் காற்று வீசும் சத்தம் இரைச்சலிட, நடுநிசியில் காலார
நடந்துகொண்டிருக்கிறார் நயன்தாரா.

‘எங்கே போறே... எங்கே போறே... என்னைக் கூட்டி எங்கே போறே டோரா’ என ஒலிக்கிற அமானுஷ்ய குரல் கேட்டு பயத்தில் உறைகிறார் நயன்தாரா. ‘‘மேடம் இன்னும் ரெண்டு ஸ்டெப் போனதும் கார் ஷாட்ஸ் கொஞ்சம் சேர்த்துக்குங்க’’ என எடிட்டருக்கு கரெக்‌ஷன் சொல்லிவிட்டு நம் பக்கம் திரும்புகிறார் புதுமுக இயக்குநர் தாஸ் ராமசாமி. சற்குணத்தின் பிரதான சீடர்.

‘‘அதான் பேய்ப்பட சீஸன் முடிஞ்சிருச்சே... இப்போ மறுபடியும் பேய்ப்படமா?
 ‘டோரா’ குழந்தைகளுக்கு விருப்பமான பெயர். அந்தத் தலைப்பில் ஒரு த்ரில்லரா? இப்படி இயல்பாக உங்களிடம் கேள்வி எழலாம். ஆனால் அதற்கான காரண காரியங்கள் இருக்கு. நிச்சயம் இது உங்களுக்குப் பிடித்த மான த்ரில்லர். நயன்தாரா மேடம்கிட்ட ஒன்லைன் மாதிரியாகவே ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்தேன்.

அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ‘எப்போ ஷூட்டிங் போறதா இருக்கீங்க’னு கேட்டு ஆச்சரியமும் நம்பிக்கையும் கொடுத்தாங்க. என்னை மாதிரி புது இயக்குநருக்கு முதல் படத்திலேயே அவங்க நடிக்கக் கிடைக்கறது பம்பர் பரிசு. இதை என் குரு சற்குணம் சாரே தயாரிக்கறதுக்கும் நான் கொடுத்து வச்சிருக்கணும். நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்!’’

‘‘அப்படி ‘டோரா’வில் என்ன ஸ்பெஷல்?’’
‘‘படத்தோட ஒன்லைன் ரொம்ப சிம்பிள். நயன்தாரா இதுல மிடில் கிளாஸ் பொண்ணு. படத்துல ஒரு கார்தான் பேய். கார் எப்படி பேய் ஆகும்? அப்படின்னா இதுல நயன்தாரா யாரு? காருக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் சொல்ல ஆரம்பிச்சா, கதை தெரிஞ்சுடும். வழக்கமான பேய்ப் படத்துக்கான அம்சங்களிலிருந்து இது நிச்சயம் வேறுபட்டிருக்கும். ஒரு க்ரைம் த்ரில்லருக்கு இணையான ஹாரர். தம்பிராமையாவின் மகள்தான் நயன்தாரா. ஹரீஷ் உத்தமன், சுனில் மாதிரியானவங்க இருந்தாலும் படத்தில் நயன்தாராதான் மெயின்.’’

‘‘நயன்தாரா ‘டோரா’வுக்குள் வந்தது எப்படி?’’
‘‘என் குருகிட்ட கதையைச் சொன்னதும், ‘நயன்தாராதான் இதுக்கு சரியான சாய்ஸ். அவங்ககிட்ட கதை சொல்றீயா? அவங்க ஒத்துக்கிட்டா இந்த ஸ்கிரிப்ட்டை அவங்க இடத்துக்குக் கொண்டு போயிடுவாங்க’னு சொன்னார். தீபாவளிக்கு முதல் நாள் மேடம்கிட்ட கதையைச் சொன்னேன். அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ‘உங்க மைண்ட்ல இந்தக் கேரக்டரை எப்படி வச்சிருக்கீங்க? நான் சில லுக்ஸ் ட்ரை பண்றேன்.

நீங்களும் பாருங்க... எது சரியா இருக்கோ, அதைப் பயன்படுத்திக்கலாம்’னு வரிசையா ஐடியாக்கள் சொல்லி ‘டோரா’வில் ஆர்வமாகிட்டாங்க. அவங்களோட ஸ்டோரி நாலெட்ஜ் பார்த்து மிரண்டுட்டேன். அவங்க ஏன் முதலிடத்துல இருக்காங்கன்னு இப்போதான் தெரியுது. ஒரு அறிமுக நடிகை மாதிரி ஆர்வமா இன்வால்வ் ஆகறாங்க. சமயங்களில் சாயந்திரம் 6 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிச்சு மறுநாள் காலை வரை பிரேக்கே இல்லாமல் போகும். அந்த நேரத்துலேயும், ‘சரியா வந்திருக்கா? உங்களுக்கு இன்னொரு டேக் வேணுமா? கேளுங்க ப்ளீஸ்’னு சொல்லுவாங்க. படத்துல முக்கியப் பங்கு காருக்கும் இருக்கு.

நைட் ஷூட்ல, மேடம் ட்ரைவ் பண்றப்ப எல்லாம் அந்தக் கார் எந்தப் பிரச்னையும் தராது. ஆனா, மத்தவங்க காம்பினேஷன்ல ஷூட் பண்றப்போ சம்பந்தமே இல்லாமல் கார் மக்கர் பண்ணும். திடீர்னு ஆஃப் ஆகிடும். ரொம்ப சிரமம் ஆச்சு. மேடம் இதையெல்லாம் கவனிச்சிட்டே இருந்தாங்க. அவங்களுக்கு கடவுள் பக்தி அதிகம். இப்படி சிக்கல் ஆகும்போது உடனே பிரார்த்தனை பண்ணினாங்க. அவங்க நம்பர் ஒன்னா இருக்கறதுக்கு காரணமே அவங்களோட டெடிகேஷன்தான்!’’

‘‘தம்பிராமையா, ‘நயன்தாரா அடிக்கடி என்னை ச்சோ ஸ்வீட்னு சொல்லுவாங்க’னு சொல்றாரே?’’
‘‘யெஸ். ஸ்கிரிப்ட் எழுதும்போதே நயனின் அப்பாவா மனசில வந்தது அவர்தான்.  நாம அவரை எப்படி வேணா பயன்படுத்திக்கலாம். அவர் இயல்பா நடிச்சது மேடத்துக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. அவங்களே பிரமாதமா நடிச்சிருப்பாங்க. ஆனாலும் பக்கத்துல நடிக்கற அவரையும் ‘ச்சோ ஸ்வீட்’னு உற்சாகப்படுத்திட்டே இருப்பாங்க. ‘அப்பா- மகள்’ கெமிஸ்ட்ரி அவங்களுக்குள்ள நல்லா வந்திருக்கு!’’

‘‘நயன்தாராவே படத்துல டப்பிங் பேசினாங்களாமே?’’
‘‘ஆமாங்க ப்ரோ. அந்தளவு இந்தக் கதையில இன்வால்வ் ஆகி வொர்க் பண்ணியிருக்காங்க. ‘நீங்க கதை சொன்னது மாதிரியே படம் வந்திருக்கு தாஸ். ஆல் த பெஸ்ட்’னு அவங்க வாழ்த்தினது இன்னும் மனசுல ரீ-ப்ளே ஆகிட்டிருக்கு!’’

‘‘உங்க இன்ட்ரோ...’’
‘‘பூர்வீகம் மன்னார்குடி. லயோலாவில் மீடியா படிக்கும்போது சற்குணம் சாரோட அறிமுகம் கிடைச்சது. ‘களவாணி’யில இருந்து ‘சண்டிவீரன்’ வரை அவர்கிட்ட வொர்க் பண்ணியிருக்கேன்’’.

‘‘படத்துல வேற என்ன ஸ்பெஷல்?’’
‘‘நயன்தாரா மேடத்துக்கு என்னவோ இந்தப் படம் மேல ஸ்பெஷல் ப்ரியம் வந்திடுச்சு. டெக்னீஷியன்ஸ் பத்தியும் அவங்களே பேசினாங்க. இதுல லைட்டிங் வொர்க் அதிகமா இருக்கும். கொஞ்சம் ஃபேன்டஸி சீன்ஸ் வேற இருக்கு. ‘சூது கவ்வும்’ கேமராமேன் தினேஷ் கிருஷ்ணன் சரியா இருப்பார். விவேக்- மெர்வின் மியூசிக் இப்போ ரொம்ப நல்லா இருக்குனு யோசனை சொன்னாங்க.

நேமிசந்த் ஜபக் படத்தின் குவாலிட்டிக்காக செலவு பண்ண யோசிக்கவே இல்லை. விக்னேஷ் சிவன் சார் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பிஸியிலயும் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார். திலிப் சுப்ராயன் மாஸ்டர் ஃபைட்ல எல்லாம் நயன் ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்காங்க. ஆக்‌ஷன் சீன்ஸும் பேசப்படும். ஒரு நல்ல த்ரில்லர் அனுபவத்திற்கு உத்தரவாதம் இருக்கு ப்ரோ!’’

- மை.பாரதிராஜா