நியூஸ் வே



* இயக்குனர் ராம் கோபால் வர்மா, ‘ஜெயலலிதா-சசிகலா’ இருவருக்கும் இடையேயான உறவை, ரகசியத்தைப் பற்றி படம் எடுக்கப் போவதாக ட்வீட்டியிருக்கிறார். படத்தின் டைட்டில் ‘ஷசிகலா’. சமீபத்தில் அவரின் எந்தப் படமும் பெரிதாகப் பேசப்படவில்லை. இருந்தாலும் பல டைட்டில்களைப் பதிவு செய்து வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். ‘இந்தப் படமும் வெளியாகுமா?’ என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. ‘பப்ளிசிட்டிக்காகத்தான் வர்மா இப்படியெல்லாம் செய்கிறார்’ என்ற சர்ச்சையும் கிளம்பியிருக்கிறது.

* இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ‘இந்தியா-இங்கிலாந்து’ டெஸ்ட் தொடரில் அசைக்க முடியாத சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். 31 வருடங்களுக்குப் பிறகு ஒரே டெஸ்ட் தொடரில் 250 ரன்களுக்கு மேல் எடுத்ததோடு, 25 விக்கெட்டுகளுக்குமேல் வீழ்த்தியிருக்கிறார் அஸ்வின். இந்தச் சாதனையை கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரைக்கும் ஏழு பேர்தான் செய்திருக்கின்றனர். இதற்குமுன் இந்தச் சாதனையைச் செய்த ஒரே இந்தியர் கபில் தேவ். யாராலும் நெருங்க முடியாத ஆல்-ரவுண்டராக விஸ்வரூபம் எடுத்திருக்கும் அஸ்வினை ‘இன்னொரு கபில் தேவ்’ என்று ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

* பார்த்தசாரதி சபா வழங்கும் ‘சங்கீத கலாசாரதி’ விருது இந்த ஆண்டு பாபனாசம் அசோக்ரமணிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற இசை மேதை பாபனாசம் சிவனின் பேரனான இவர், ‘குங்குமம்’ வாசகர்களுக்கு இசைக் கச்சேரி விமர்சனங்கள் மூலம் பரிச்சயமானவர்.

* ஜெர்மனியைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் போரிஸ் பெக்கர் ‘‘இந்திய டென்னிஸ் வீரர்களிடம் நல்ல திறமை இருக்கிறது. ஆனால், அவர்களை வழிநடத்த சரியான பயிற்சியாளர்கள் இல்லை. அதனால்தான் இந்திய வீரர்களால் உலக அரங்கில் ஜொலிக்க முடிவதில்லை’’ என்று சொல்லியிருக்கிறார். உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் பயிற்சியாளர் பெக்கர்தான்!

* பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு கார்டு பரிவர்த்தனைக்கான சேவை வரியை ரத்து செய்வதற்கான ஆலோசனையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. ‘‘சேவை வரியை ரத்து செய்தால், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு உந்துதலைக் கொடுக்கும். இதனால் பணமில்லா பரிவர்த்தனை விரிவடையும்’’ என்று நிதி அமைச்சகம் கருதுகிறது. விரைவில் சேவை வரி குறித்த திருத்தம் வெளியாகலாம்.

* இந்த ஆண்டுக்கான ‘மிஸ் வேர்ல்டு’ அழகு கிரீடம் ப்யூர்டோரிகோ நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த ‘மிஸ் வேர்ல்டு’ அழகிப்போட்டியில் 100 நாட்டு போட்டியாளர்களுடன் மோதி கிரீடம் வென்றிருக்கிறார் ப்யூர்டோரிகோவைச் சேர்ந்த ஸ்டெஃபானி. 19 வயது கல்லூரி மாணவியான ஸ்டெஃபானி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷில் சரளமாகப் பேசக் கூடியவர்.

* ‘‘இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவேயில்லை. எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக இந்தப் பட்டத்தைக் கருதுகிறேன். எனக்கான பொறுப்பு இன்னும் கூடியிருக்கிறது’’ என்று நெகிழ்கிறார் ஸ்டெஃபானி. இரண்டாம் இடத்தை டொமினிக்கன் ரிபப்ளிக் அழகியும், மூன்றாம் இடத்தை இந்தோனேஷிய அழகியும் பெற்றனர். இந்தியாவைச் சேர்ந்த பிரியதர்ஷினி சட்டர்ஜி முதல் 20 இடங்களுக்குள் வந்து ஆறுதல் அடைந்திருக்கிறார். சீக்கிரத்தில் உலக அழகியை ஹாலிவுட்டில் பார்க்கலாம்.

* 50 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய அரசு இல்லத்துக்குக் குடிபெயர்ந்திருக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். ஐதராபாத்தின் பேகம்பேட் பகுதியில் 9 ஏக்கரில் கட்டப்பட்ட இந்த மாளிகையில் ஒரு தியேட்டர், 200 கார்களை பார்க் செய்யும் வசதி என எல்லாம் பிரமாண்டம். படுக்கை அறைகளுக்கு குண்டு துளைக்காத கண்ணாடி ஜன்னல்கள் பதிக்கப்பட்டுள்ளன.

* தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாறிய பிறகு தொடர்ச்சியாக எட்டாவது வெற்றியைப் பெற்று அசத்தியிருக்கிறார் விஜேந்தர் சிங். தான்சானியா நாட்டு வீரர் பிரான்சிஸ் செகாவை அதிரடியாக வீழ்த்தினார் விஜேந்தர். போட்டிக்கு முன்பு செகா ஏக பந்தா விட்டார். ‘‘நான் உலக சாம்பியன் பட்டம் வென்றவன். எனக்கு விஜேந்தர் எல்லாம் ஒரு குழந்தை மாதிரி.

அவர் போட்டியை நினைத்து பயந்து போயிருக்கிறார். இப்படி ஒரு கத்துக்குட்டியை என்னோடு மோத விட்டதற்காக இந்தியர்கள் வருந்தப் போகிறார்கள். அவரை நான் ரத்தம் சிந்த வைப்பேன்’’ என்றெல்லாம் செகா உசுப்பிவிட்டார். விஜேந்தர் பக்குவமாக, ‘‘என் ஆக்ரோஷத்தை குத்துச்சண்டை மேடையில் மட்டுமே காட்டுவேன்’’ என்றார். காட்டியும் விட்டார். தனது வெற்றியை இந்திய ராணுவத்தினருக்கு அர்ப்பணித்திருக்கிறார் விஜேந்தர்.

* பராமரிக்க ஆள் இல்லாமல் கைவிடப்பட்ட தெருவோர நாய்களுக்கு புதிதாக ஒரு தந்தை கிடைத்துவிட்டார். மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அனாதையாக விடப்பட்ட 700க்கும் மேலான நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்துப் பராமரித்து வருகிறார் பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் எஞ்சினியரான ராகேஷ் சுக்லா. 45 வயதாகும் இவர் ‘நாய்களின் தந்தை’ என்று அன்பாக அழைக்கப்படுகிறார்.
‘‘ஆடம்பரமான கார்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள், சொகுசு பங்களா என்பது மட்டுமே என் வாழ்க்கையாக இருந்தது. ஆனால், அவை எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இந்த அன்பான நாய்களுடன் இருப்பது மகிழ்வாக இருக்கிறது. இந்த நாய்களின் கடைசி புகலிடம் நான்தான். தடவிக் கொடுத்து கொஞ்சும் நிலையில் அவை இல்லை. எல்லாம் நோய் வாய்ப்பட்டுள்ளன. மரணம் மட்டுமே எங்களைப் பிரிக்க முடியும்’’ என்று நெகிழ்கிறார் சுக்லா.

* கடந்த 23-12-2016 இதழில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில இதழ்களில் கடந்த மாதப் பக்கங்கள் இணைக்கப்பட்டு வெளியாகிவிட்டன. இதனால் வாசகர்களுக்கு நேர்ந்த சிரமத்துக்கு மிகவும் வருந்துகிறோம். இனி இப்படிப்பட்ட தவறுகள் நேராமல் கவனமாக இருப்போம் என உறுதியளிப்பதோடு, கடந்த இதழில் வெளியாகி இருக்க வேண்டிய தொடர்களை இந்த இதழில் பிரசுரித்திருக்கிறோம்.

- ஆசிரியர்