பிடிக்காது



வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருந்த வளையாபதி சலித்துக்கொண்டான்... ‘‘இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல. தினத்துக்கும் ஏதாவது சாமி, பூதம்னு மெஸேஜ் அனுப்பி, ‘இதை பத்துப் பேருக்கு ஃபார்வர்டு பண்ணு, உனக்கு இன்னிக்கு சாயங்காலமே நல்லது நடக்கும்’னு சொல்றாங்க, சே!’’

அதைக் கேட்ட எனக்கும் அவன் எரிச்சல் அடைவதில் நியாயம் இருப்பதாகவே பட்டது. நமக்கு வேறு வேலை இல்லை, பொழுதுபோக்க நிறைய நேரம் இருக்கிறது என்றாலும் நாம் அனுப்பி வைக்கும் அந்த பத்துப் பேருக்கும் நேரம் எப்படியிருக்குமோ! அவர்கள் ஒவ்வொருவரும் பத்துப் பத்துப் பேருக்கு அந்த மெஸேஜை அனுப்பி வைக்க வேண்டுமே! இந்தக் காலத்திலும் இதையெல்லாம் நம்ப வேண்டுமா என்ன? டெக்னாலஜி யுகத்தில் டெக்னாலஜி மூலமே இதையும் செய்ய வேண்டுமா?

வளையாபதியை ஆமோதிக்கும் வகையில் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தேன். ‘‘உனக்கும் இந்த விவகாரமெல்லாம் பிடிக்காது, இல்லையா?’’ என்று கேட்டேன். ‘‘ஆமாம்பா... பத்துப் பேருக்கு இந்த மெஸேஜை அனுப்பிவைக்கிறோம்னு வை! எனக்கு இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள நல்லது நடக்குமாங்கறது சந்தேகம்.

அதைவிட, நாம யார் யாருக்கோ அனுப்பி வச்சு, அவங்களும் அவங்களுக்குத் தெரிஞ்ச பத்துப் பேருக்கு அனுப்பிச்சு, அவங்க யாருக்காவது நல்லது நடந்துட்டா? அவங்க எனக்கு யாரு? அவங்களுக்கு எதுக்கு நல்லது நடக்கணும்? அதான் நான் இதிலே அக்கறையே எடுத்துக்கறதில்லை’’ என்றான் அவன். அடப்பாவி!                                    

-பி.எஸ்.