குங்குமம் ஜங்ஷன்



புத்தகம் அறிமுகம்

செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்
- என்.லிங்குசாமி

(டிஸ்கவரி புக் பேலஸ், 6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னை-600078. விலை: ரூ.110/- தொடர்புக்கு: 87545 07070) நல்ல கவிதைகளின் பயண வழியில் காணக் கிடைக்கும் தரிசனங்கள் மனதை மகத்தான நிலைகளுக்கு இட்டுச் செல்லக்கூடியவை. ‘‘கவிதை எழுதுவது ஒரு கலை. அதை தேடிக் கண்டுபிடிப்பது அனுபவம்’’ என்பார்கள். அப்படிப்பட்ட அனுபவமான ‘ஹைக்கூ’ கவிதைகளை எழுதியிருக்கிறார் லிங்குசாமி. இரண்டு, மூன்று வார்த்தைகளிலேயே சுள்ளென்று தைக்கும் வீரியம்.

சாவகாசமான மனநிலையில் படிக்க அமர்ந்தாலும் தரதரவென நம்மை ஆழமான பின் நினைவுகளுக்கு இழுத்துப் போகிறது. ‘என்னவொரு நுணுக்கம்’ என சில கணங்கள் யோசிக்கத் தூண்டுகிறபோது ‘என்ன ஒரு வித்வத்துவம்’ எனவும் மலைக்க வைக்கிறது. இந்தக் கவிதைகளை படிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட மனோநிலை வேண்டும் என்கிற அவசியமில்லை. யாரும் படிக்கலாம். நல்ல படைப்பில் கலைஞன் காணாமல் போவதும் நடக்கும்.

சிற்றிதழ் Talk

காட்டுக்குள் வாழும் ஒரு மனிதனுக்கு பணத்துக்கான தேவை என்பது அறவே இல்லை. மற்ற உயிர்களைப் போல காட்டுக்குள்ளேயே வாழ்ந்து, அங்குள்ள உணவுகளை சேகரித்து உண்ணும் அவர்களுக்கு எதற்குப் பணம்? பணம் இல்லாத காரணத்தாலேயே அவர்கள் ஏழைகள் என்று சொல்லிவிட முடியுமா?
- சூழலியலாளர் நக்கீரன் (‘ஓலைச்சுவடி’ இதழில்)

யூ டியூப் லைட்

இரண்டு கோடி சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட ‘யூ டியூப் ஸ்பாட்லைட்’ சேனலில் இந்த வார வைரல் ஹிட். ‘you tube rewind: the ultimate 2016 challenge’ என்ற மியூசிக் ஆல்பம்.  14 கோடி பேர் பார்த்து, ரசித்து செம ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர். ஸ்டைலீஷான மேக்கிங், கலர்ஃபுல் இளைஞர்களின் டான்ஸ் களை கட்ட, இந்த ஆண்டின் தலைசிறந்த சவால்களை பின்னியெடுக்கிறார்கள்.

மேஜர் லேசரின் ஒரிஜினல் ரீமேக்கில் இருந்து பாடலை கம்போஸ் செய்துள்ளனர். 26 லட்சம் பேர் இந்த ஆல்பத்தை ‘லைக்’கியும் உள்ளனர். வீடியோவில் ஒரு சுவாரசிய விஷயம், ஒருவர் தன் நண்பருக்கு ஒரு கிஃப்ட் பாக்ஸ் கொடுக்கிறார். அந்த பாக்ஸை திறந்து காட்டியபடி பரிசளிக்கிறார் அவர். நண்பர் அந்த பாக்ஸை பார்க்க, உள்ளே நீர் நிரம்பிய வாட்டர் பாட்டில். இப்படி நிறையவே இந்த ஆல்பத்தில் அசத்துகிறது.

டெக் டிக்

இங்கிலாந்து விஞ்ஞானிகள் ‘ஐ.வி.எஸ்’ எனப்படும் புதிய தொழில்நுட்பத்தால் பெண்ணின் கருப்பையில் உள்ள குழந்தையின் செயல்பாட்டை பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை பார்ப்பதை சாத்தியமாக்கியுள்ளனர். இதற்கு முன்பு 24 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே காண முடியும். மேலும் யு.எஸ்.பி மூலம் பெற்றோர்களுக்கு புகைப்படங்களாக எடுத்துக்கொடுக்கும் வசதியும் இந்த தொழில்நுட்பத்தில் உள்ளது.

இதன்மூலம் குழந்தை உருவான நாளிலிருந்தே அதன் இயக்கங்கள், ஆரோக்கியம் குறித்த தகவல்களை சுலபமாகக் கணக்கிட முடியும். சின்ன மாற்றங்கள், குறைகள் கூட மருத்துவர்களுக்கு எளிதாகத் தெரியவரும் என்பதால் குழந்தைப்பேறு மருத்துவ உலகில் இது ஒரு அருமையான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சி மகிழ்ச்சி

‘‘நான் கஜோலின் மிகப்பெரிய ரசிகை. அவங்க படங்கள் எல்லாத்தையும் நான் பார்த்திருக்கேன். அதிலிருந்து நான் கத்துக்கிட்ட விஷயங்கள் நிறைய... இப்போ அவங்களோட சேர்ந்து நடிக்கப்போறேன்’’ என அமலா பால் இப்படி ஏகப்பட்ட உற்சாகத்தில் சொல்லக் காரணம் உண்டு. சௌந்தர்யா ரஜினியின் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடிக்கும் ‘வி.ஐ.பி.2’வில் பாலிவுட் கஜோலும் நடிக்கிறார்.

சமீபத்தில் ரஜினி கிளாப் போர்டு அடித்து படத்தைத் துவக்கி வைத்தது நினைவிருக்கலாம். ‘‘தமிழ்ல 20 வருஷத்துக்கு அப்புறம் கஜோல் வர்றாங்க. அவங்களுக்கு சினிமாவில் இது 25வது ஆண்டு. அவங்களோட வொர்க் பண்றது எக்ஸைட்டிங்கா இருக்கு’’ என இன்னொரு பக்கம் சௌந்தர்யாவும் நெகிழ்கிறார்.

சர்வே

உலக அரங்கில் ‘தவறான பதில் தருபவர்கள்’ லிஸ்ட்டில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்கள் இந்தியர்கள். கடந்த ஆண்டு மெக்ஸிகோ மக்கள்தான் முதலிடத்தில் இருந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு இந்தியாவுக்கு அடுத்து சீனா, தைவான், தென் ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்க மக்கள் இருக்கிறார்கள். ஓரளவு சரியான பதில் தருபவர்களின் லிஸ்ட்டில் பிரிட்டன், தென் கொரியா மற்றும் நெதர்லாந்து மக்கள் இருக்கிறார்கள்.

சொந்த வீடு, சம்பளம், சொத்து, திருமணம் போன்ற விஷயங்களில் இந்தியர்கள் உண்மையை மறைத்துத் தவறுதலான பதிலையே தந்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, இந்தியர்களில் 87 சதவீதம் பேர் சொந்த வீடு வைத்திருக்கிறார்கள். ஆனால், 44 சதவீதம் பேர் மட்டும் ‘எனக்கு சொந்த வீடு இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் கிளறினால் நிறைய உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.