சென்னைக்கு ஏன் இந்த சோதனை?



‘வர்தா’...பேரைக் கேட்டாலே சென்னைவாசிகளின்  மனம் பயத்தில் அதிர்கிறது. ‘சிகப்பு ரோஜா’ என்று அர்த்தமாம். ஒரு மெல்லிய மலரின் ெபயரை எப்படித்தான் இப்படியொரு அதிதீவிர புயலுக்கு பாகிஸ்தான் சூட்டியதோ தெரியவில்லை. ஒட்டுமொத்த சென்னையையும் மூன்று மணி நேரத்தில் துடைத்தெறிந்து அலங்கோலமாக மாற்றிவிட்டது இந்த சிகப்பு ரோஜா. மாநகரெங்கும் இன்னும் குப்பைகளை அகற்றி முடிந்தபாடில்லை.

சுமார் ஒரு லட்சம் மரங்கள் விழுந்திருக்கலாம் எனக் கணக்கிடுகிறார்கள். ஒவ்ெவாரு தெருவிலும்  மரங்கள் சரிந்து பாதையை மறைத்துவிட்டன. மின்சாரமில்லாமல் இருளில் தவிக்கும் நிலை தொடர்கதையாகிவிட்டது. தண்ணீர் இல்லை. முக்கிய சாலைகள் தவிர்த்து பல இடங்களில் இன்னும் போக்குவரத்து சீராகவில்லை. சென்னை, ‘திட்டமிடல் இல்லாத ஒரு நகரம்’ என்பது இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

சென்னையை ‘சுனாமி’ தாக்கியபோது அவசரமாக கடலோரப் பகுதிகள் சீரமைக்கப்பட்டன. கடந்த வருட மழை வெள்ளத்திற்குப் பிறகு ஏரிகள் தூர் வாரவும், கரையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றவும் முயற்சிகள்  நடந்தேறின. இப்போது, ‘‘மண்ணுக்கேற்ற மரங்கள் இருந்திருந்தால் இத்தனைப் பிரச்னை வந்திருக்காது’’ எனப் பேசத் தொடங்கி இருக்கிறோம்.

ஒவ்வொரு முறையும் இப்படி சூடுபட்ட பிறகுதான் காரணங்களை நாம் தேடுவோமா? அதோடு, இது மட்டும்தான் காரணமா? ‘‘மோசமான நிலையில் இருக்கும் டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், ஆக்கிரமிப்புகளால் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல்கள் என இன்னும் எத்தனை எத்தனையோ குறைபாடுகள் இதற்குப் பின்னே மறைந்து கிடப்பது பலருக்கும் தெரிவதில்லை.

இனியாவது, திட்டமிட்டு நகரைச் சீர்படுத்தவில்லை என்றால் சென்னை வாழத் தகுதியில்லா நரகமாகிவிடும்’’ என எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் நிபுணர்கள். ‘‘இயற்கைச் சீற்றத்துக்கு முன்னாடி நாமெல்லாம் ஒண்ணுமே இல்லைனு இந்தப் புயல் புரிய வச்சிருக்கு’’ என்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம். ‘‘சென்னை மாதிரியான கடலுக்கு நெருக்கமான நகரத்துல எப்ப வேணாலும் இயற்கைச் சீற்றம் வரலாம். இப்பவே, பருவநிலை மாற்றத்தால பயங்கர குளிர், வெப்பம், மழைனு மாறி மாறி வருது.

இதுக்குத் தகுந்த மாதிரி நகரத்தின் திட்டத்தை அமைச்சிருக்கணும். ஆனா, அப்படி எந்தவொரு திட்டமும் அரசுகிட்ட இதுவரை இல்லை. கடந்த 2008ம் வருஷம் சென்னை சி.எம்.டி.ஏ., ‘இரண்டாவது மாஸ்டர் பிளான்’ ஒன்றை அறிவிச்சுது. இதிலுள்ள திட்டங்கள் எதையும் முறையான ஆய்வுக்கு உட்படுத்தலை. ஆனாலும், கடலோரப் பாதுகாப்பு உள்ளிட்ட சில நல்ல அம்சங்கள் இந்தத் திட்டத்துல இருந்துச்சு.

அதுல எதையும் நடைமுறைப்படுத்தலை. இதுதான் நம்ம பிரச்னையே!’’ என வேதனை தெரிவிப்பவர், ‘‘மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தக்க தருணம் இது’’ என்கிறார். ‘‘தமிழக அரசு, சென்னையின் எல்லா மண்டலங்களையும் கவனத்துல வச்சு வேகமா பிளான் பண்ணணும். எந்த மாதிரியான கட்டிடங்கள் சென்னைக்கு ஏற்றது? என்ன மரங்கள் நடலாம்? மின் கம்பங்கள் எப்படி அமைக்கலாம்? நெரிசலை எப்படி குறைக்கலாம்னு நிறைய விஷயங்கள பேசணும்.

அப்படியே, மக்கள் கருத்தையும் கேட்கணும். அப்போதான் சரியான நகரமா சென்னையை கட்டமைக்க முடியும்’’ என்கிறார் அவர் தெளிவாக! இதை ஆமோதிக்கும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சுந்தர்ராஜன், ‘‘முன்னாடியெல்லாம் ‘30 வருஷத்துக்கு முன்பு இந்த மாதிரியான புயல் வந்துச்சு. இருபது வருஷத்துக்குப் பிறகு வெள்ளம் வந்திருக்கு’னு பேசுறதைப் பார்த்திருப்போம். ஆனா, இப்போ நவம்பர், டிசம்பர்  வந்தாலே என்ன நடக்குமோனு பயம் ஏற்படுது பலருக்கு.

காரணம், அடிப்படையில் சென்னை பேரிடரை தாங்காத ஒரு நகரமாக இருக்குறதுதான். அதுமட்டுமல்ல... நம்மகிட்ட பருவநிலை தொடர்பா எந்த ஆய்வும் இல்ல. கடந்த 2014ம் வருஷம் சில பல்கலைக்கழகங்கள் சேர்ந்து பருவநிலை மாற்றங்கள் பற்றி ஒரு ஆய்வு பண்ணினாங்க. அதுல, புயல் தாக்குற ஆபத்தான பகுதிகள்னு தமிழகத்தையும், ஆந்திராவையும் ‘டிக்’ பண்ணியிருக்காங்க. குறிப்பா, சென்னைக்கு அதிக புயல் வர்ற சான்ஸ் இருக்குதாம்.

புவிவெப்பமயமாதல் மற்றும் கடற்கரையோரங்கள்ல அனல், அணுமின் நிலையங்களும், பெரிய தொழிற்சாலைகளும் அதிகம் அமைக்கிறதால கடல் வெப்பம் கூடுறது இதுக்குக் காரணங்கள்னு சொல்றாங்க. தொழில்துறை, சூழலியல்னு நிறைய விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கிட்டு இயற்கைப் பேரிடரைத் தாங்குகிற நகரா திட்டமிட்டு மாத்தணும். இல்லைன்னா, வருங்காலம் ரொம்ப கஷ்டம்’’ என்கிறார் அவர் வருத்தமாக!

ஆனால், ‘திட்டமிடும் சாத்தியம் ரொம்பக் குறைவு’ என்கிறார் தொழில்முறை நகரமைப்பு வல்லுநர் சங்கத் தலைவர் கே.எம்.சதானந்த். ‘‘தமிழகத்தில் நகரமைப்புக்கென ஒரு துறை இருப்பது பலருக்கும் தெரியாது. இங்கே, ஏழரை கோடி மக்களுக்கு மொத்தமே 50 டவுன் ப்ளானர்ஸ்தான் இருக்காங்க. சராசரியாக 14 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு ஒரு டவுன் ப்ளானர் இருப்பது பெரிய மைனஸ். அதனால்தான் தமிழகத்தில் ‘திட்டமிட்ட நகரம்’னு எதையும் குறிப்பிட முடியவில்லை’’ என ஆதங்கப்படும் அவர், வெளிநாடுகளில் 30 ஆயிரம் பேருக்கு ஒரு டவுன் ப்ளானர் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

‘‘நம்ம டவுன் ப்ளானிங் நூறு வருஷ பாரம்பரியம் கொண்டது. நமக்குத் தகுந்த ப்ளானிங்க பிரிட்டிஷ்காரங்க லண்டனைப் பார்த்து கொண்டு வந்தாங்க. அவங்க போட்ட சாலைகளும், கட்டிய பில்டிங்களும் நூறாண்டு கடந்து இப்பவும் நிற்கக் காரணம், ப்ளானிங். ஆனா, இங்க எழுபதுகளுக்குப் பிறகு நகர் திட்டமிடல் பண்ணப்படவே இல்ல. அப்போ, சென்னையைச் சுற்றி திருவள்ளூர், மறைமலை நகர், மணலினு மூணு பகுதிகளை உருவாக்கினாங்க.

சென்னைக்குள்ள அண்ணா நகர், அசோக் நகர், கே.கே.நகர் பகுதிகளைக் கொண்டு வந்தாங்க. ஆனா, எதையும் ப்ளானிங்கா பண்ணலை. காரணம், தமிழகத்துல இந்தத் துறைக்கு வந்த அதிகாரிகள் யாரும்  நிபுணத்துவம் பெற்றவங்களா இருக்கலை. அப்புறம், இந்தத் துறை மற்ற எல்லாத் துறைகளையும் ஒருங்கிணைச்சு வேலை செய்ய வேண்டிய ஒண்ணு! ஆனா, இங்க ஒவ்வொரு துறையும் தனித்தனி யூனிட்டாதான் வேலை செய்றாங்க.

அதனாலதான், ஒரு துறை குழி தோண்டி வேலை முடிச்சிட்டு போனா, அந்த ேராட்டை கடைசி வரை சீர்படுத்தாம இருக்காங்க. தமிழக அரசின் கணக்குப்படி மூணு அல்லது அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை ேராடு போடலாம்னு இருக்கு. ஆனா, வருஷா வருஷம் போடுறாங்க. எண்பது அடியில ஒரு சாலை அமைச்சா அது ஆக்கிரமிப்புகளால நாற்பது அடியா மாறிடுது. எல்லாமே பணம்னு ஆகிப் போச்சு. வாகனங்களும் பெருத்துடுச்சு.

எங்க போனாலும் ட்ராபிக்! இந்தப் புயலுக்குப் பிறகாவது அரசு மறுசீரமைப்பில் கவனம் செலுத்தணும்’’ என்கிறவர், சில தீர்வுகளை முன்வைக்கிறார். ‘‘சிட்டிக்குள்ள மின்கம்பிகள் எல்லாம் பூமிக்கு அடியில் போனாலும் மின்தடை ஏற்பட்டுச்சு. காரணம், பழுதான டிரான்ஸ்பார்மர்கள், கம்பி, கான்கிரீட்களால் ஆன பழைய தெருவிளக்குகள். இதை உடனே பராமரிக்கணும். பெரிய மரங்களின் கிளைகளை அவ்வப்போது மாநகராட்சி வெட்டிவிடணும். அடுத்து, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தணும்.

சிங்கப்பூர்ல, சிட்டிக்குள்ள வர்ற கார்களுக்கு வரி விதிக்கிறாங்க. அதனால, பல பேர் சிட்டிக்கு வெளியே காரை நிறுத்திட்டு அரசு பஸ்ல பயணம் பண்ணுவாங்க. அந்த மாதிரியான சிஸ்டம் இங்கும் கொண்டு வரலாம். அப்புறம், அப்ரூவல் சிஸ்டத்தை வெளிநாடு மாதிரி மாத்தணும். குடிநீர், சாலை, மின்சாரம்னு லேஅவுட் போட்டு அப்ரூவல் கொடுத்த பிறகே குடியிருக்க தகுதியாக்கணும். இனியும், நாம் விஞ்ஞானபூர்வமா செயல்படாமல் தாமதிச்சா இந்த மாதிரியான அழிவுகளைச் சந்திக்க வேண்டியதுதான்’’ என்கிறார் அவர் முடிவாக!
எப்போது திட்டமிடப் போகிறோம் நாம்?

- பேராச்சி கண்ணன்