ஊஞ்சல் தேநீர்
யுகபாரதி
சென்னை கே.கே. நகரில் ஜெயகாந்தன் வீடு. வீட்டுக்குப் போய் அழைப்புமணியை அடித்தேன். ஜெ.கே.வே வந்து கதவைத் திறந்தார். எத்தனை பெரிய எழுத்தாளர், கதவை தானே திறக்கிறாரே என்று பட்டது. அவரிடம் கேட்டிருந்தால், ‘‘என் வீட்டுக் கதவை வேறு எவன் வந்து திறக்கவேண்டும் என எதிர்பார்க்கிறாய்’’ என்றிருப்பார்.
நான் எதையும் கேட்கவில்லை. அவரே தொடர்ந்தார். ‘‘பாரதி, பதில்களை தட்டச்சு செய்துவிட்டு எடுத்து வா! நானே பிழைகளைத் திருத்தித் தருகிறேன். அதன்பிறகு அச்சுக்குப் போகட்டும்’’ என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. ஒரே ஒரு முறை ராஜ்கண்ணன் வீட்டு விசேஷத்தில் அறிமுகமான என்னையும் என் பெயரையும் அவர் எப்படி மறக்காமல் வைத்திருக்கிறார். அந்த ஆச்சரியத்தில் எதையுமே என்னால் பேச முடியவில்லை.
அவர் வீட்டை விட்டு வெளியேறியதும், அந்த பதில்களை உடனே வாசிக்கும் ஆர்வமேற்பட்டது. ‘தமிழ்நாட்டின் வியக்கத்தக்க ஒரு ஆளுமை, என் கேள்விகளை எப்படி எதிர்கொண்டிருக்கிறார்’ என பார்க்கும் ஆர்வமே அது. பக்கத்தைப் புரட்டினால் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார். சமஸ்கிருத சமிதியில் அவர் பேசியது தொடர்பாகவும் ஒரு கேள்வி இருந்தது.
அந்தக் கேள்விக்கு, ‘ஆமாம்... அப்படித்தான் சொன்னேன்’ என்று மட்டும் எழுதியிருந்தார். பிறகு பிழை திருத்தும்போது அந்தக் கேள்வியைக் குறியிட்டு ‘அது வேண்டுமா? பாருங்கள்’ என்று எழுதியிருந்தார். ஆசிரியர் குழு அந்தக் கேள்வியையும் பதிலையும் நீக்கிவிடச் சொன்னது. அவ்விதமே அடிபணிவதுதான் உதவி ஆசிரியனின் வேலை.
சமஸ்கிருத சமிதியில் அவர் பேசியது, அவரைப் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது. மறுப்போ மன்னிப்போ அவரிடமிருந்து வருமென்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அந்நாளில், மயிலாப்பூர் சீனிவாசா அரங்கத்தில் தி.க.சி.க்காக ஒரு விழா எடுக்கப்பட்டது. அந்த விழாவில், ‘‘எந்த நாய் காலை நக்குகிறது? காலை நக்கக்கூடிய பிராணி பூனையே அல்லாமல் நாய் அல்ல. தமிழை, தமிழனை நாயாகக் கருதிய பீடாதிபதி பதில்சொல்ல வேண்டும்’’ என கோவி.லெனின் நேரடியாகக் கேட்டார்.
லெனினுடைய அன்றைய பேச்சு, தமிழ் இன உணர்வாளர்களின் உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. கைதட்டு வேறு. இறுதியாகப் பேச வந்தார் ஜெ.கே. சிங்கத்தைப் போல செருமிக்கொண்டார். ‘‘என்ன இப்போ, நான் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை’’ என்று ஆரம்பித்த ஜெ.கே.வின் அன்றைய பேச்சு முழுவதும் அதைப் பற்றியே இருந்தது. ‘‘நாயென்று சொன்னதுதான் பிரச்னையா? அப்படியென்றால் தன் காலைத் தானே நக்கிக்கொள்ளும் சிங்கம், முயல், கரடி என்று வச்சுக்கோ’’ என்றார். ஜெ.கே. கொஞ்சமாக இறங்கிவந்த இடம் அதுவாக இருக்கலாம்.
ஜெ.கே. என்றால் சபை அனுபவங்கள் இல்லாமலா? அவர் சபையைப் பற்றி ஓரளவு தெரியும். என்றாலும், கலந்துகொண்டதில்லை. எழுத்தாளர் சா.கந்தசாமி அப்போது ஜெ.கே.வை ஓர் ஆவணப் படமெடுக்கும் தயாரிப்பில் இருந்தார். அது நிமித்தம் ஜெ.கே.வை சந்திக்கும் வாய்ப்பு இருந்தது. என்னை ம.ரா.வும் ஓவியர் ஆதிமூலமும் அழைத்துப் போனார்கள். இருப்பதிலேயே நல்ல சட்டையை அணிந்து வகிடெடுத்து தலை வாரி இருந்தேன்.
அன்றுதான் சா.கந்தசாமி, ஜெயகாந்தனைப் பற்றிய ஆவணப்படத்தின் இறுதிப் படப்பிடிப்பை முடித்திருந்தார். ‘‘அடடே, சபைக்கா? வருகிறோம்... வருகிறோம்...’’ என்று வேறு சிலரும் எங்களுடன் வந்திருந்தார்கள். அவர் வீடு வரும்வரை எதை எதையோ பேசிக்கொண்டு வந்தார்கள். வீட்டை அடைந்ததும் ஆளுக்கொரு சால்வையைத் தங்கள் தோள்களில் அணிந்துகொண்டார்கள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘ஒருவேளை ஜெ.கே.வின் சபைக்குப் போவதென்றால் சால்வையோடுதான் போக வேண்டுமோ? ஏற்கனவே சொல்லியிருந்தால் நானும் சால்வையோடு வந்திருப்பேனே’ என்பது போலப் பார்த்தேன். ‘ஒருவரைப் பார்க்கப் போனால் அவருக்குத்தானே சால்வையைப் போர்த்துவார்கள். இவர்கள் தங்களுக்குத் தாங்களே போர்த்திக்கொள்கிறார்களே’ எனவும் பட்டது. ஜெ.கே.வின் சந்திப்பில் நிகழப் போகும் ஆச்சரியங்களில் இதுவும் சேர்ந்ததுதானோ?
அமைதியாயிருந்தேன். மாடிப்படிகளில் ஏறி ஒவ்வொருவராக உள்ளே போனார்கள். இறுதியாக நான். உள்ளே ஜெ.கே. வெறும் பனியனோடு தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ‘‘வா, பாரதி. எதிரே உட்கார்’’ என்றார். எல்லோரும் அவரவர்க்குப் பிடித்த மாதிரி உட்கார்ந்துகொண்டார்கள். அதன்பிறகு ஒவ்வொருவரும் சால்வையை விலக்கி சால்வைக்குள்ளிருந்த மதுபாட்டில்களை மேசையில் பரப்பினார்கள்.
அவர்கள் சால்வை அணிந்த கதை எனக்கு அப்போதுதான் பிடிபட்டது. மூலையில் ஒருவர். துணியில் வைத்து எதையோ புகையாக்கிக்கொண்டிருந்தார். கோப்பைகள் பரப்பப்பட்டன. எல்லா கோப்பைகளிலும் மது ஊற்றப்பட்டது. என் முன்னாலிருந்த கோப்பையிலும். எனக்கு நடுக்கமும் பதற்றமும் ஏற்பட, ஜெ.கே.வைப் பார்த்தேன். ‘பரவாயில்லை. எடுங்கள்’ என்பது போல அவர் பாவனை இருந்தது. நான் தயங்கினேன். ‘‘இதற்குமுன் பழகியிருந்தால் என் முன் தொடர்வதில் தவறில்லை.
பழக்கமில்லையென்றால் விட்டுவிடுங்கள். இங்கே தொடங்காதீர்கள்’’ என்றார். உடனே ஓரத்திலிருந்து ஒரு குரல். ‘‘அது எப்படி ஜெ.கே. சபை ஒருவருக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியும்’’ என்றது அந்தக்குரல். அப்போது ஜெ.கே. இதமாக இரண்டு மிடறு கோப்பையை உறிஞ்சியிருந்தார். அவர், ‘‘அது ஒன்றுமில்லை. ஏற்கனவே பழகியிருந்தால் பிரச்னையில்லை. இங்கு முதலில் ஆரம்பித்தால், பிறகு எப்போது அருந்தினாலும் என்னைத் திட்டும்படி ஆகிவிடும்.
என்னை முதலில் குடிக்க வைத்தவனை இப்பொழுதும் நான் திட்டுகிறேன் இல்லையா? அதுபோல அந்த சாபம் என்னையும் சேர வேண்டாமே’’ என்றதும் எல்லோரும் சிரித்தார்கள். என் கோப்பையை யாரோ ஒருவர் எடுத்து வேறு இடத்தில் வைத்தார். அறை புகையால் நிரம்பியிருக்க, ஜெ.கே.வின் கண்கள் சிவக்கத் தொடங்கின. பற்கள் நறநறத்தன. நாக்கு தடிமனான நிலையில் அவர் கேட்டார், ‘‘பாரதி ஏன் தேசாபிமானம், பாஷாபிமானம் என்று சொன்னான். தேசப்பற்று, மொழிப்பற்று என்று சொல்லியிருக்கலாமே.
அபிமானம் என்ற சொல் சமஸ்கிருதமென்று அவனுக்குத் தெரியாது. பாஷை, தேஸம் என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன? சொல்லுங்கள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்கு நரே’’ என்று ம.ரா.வைப் பார்த்துக் கேட்டார். அடுத்து சா.கந்தசாமி, ஆதிமூலம் என்று ஒவ்வொருவராக பதில் சொல்ல முனைந்தார்கள். யாருடைய பதிலையும் அவர் ஏற்கவில்லை. பதில்களுக்கெல்லாம் குறுக்குக் கேள்விகளைப் போட்டுக்கொண்டே வந்தவர், ‘‘நான் சொல்கிறேன்’’ என மீசையை நீவிக் கொண்டு பேசத் தொடங்கினார்.
‘‘பற்று என்ற சொல்லுக்கு ‘பற்று அற்ற’ என்ற நிலை இருக்கிறது. மொழியின் மீதோ தேசத்தின் மீதோ ஒருபோதும் பற்று அறக்கூடாது. பற்று கூடிக்கொண்டே இருக்கவேண்டும். அபிமானத்திற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் எங்கேயிருக்கிறது காட்டுங்கள், பார்ப்போம்’’ என்றார். மதுவை அவர் அருந்தியிருந்தாலும் எனக்குத் தலை சுற்றியது. இப்படிக்கூட பாரதியை அலசவும் பேசவும் முடியுமா? ஒரு குறிப்போ, தயாரிப்போ இல்லாமல் இரண்டு மணி நேரமும் வார்த்தைகளில் சிலம்பம் ஆடி விட்டார்.
மொழி குறித்தும், திராவிட இயக்கம் குறித்தும் அவர் கொண்டிருந்த பார்வைகள் சிக்கலானவை. ‘ஆன்மாவின் அடி ஆழத்திலிருந்துதான் அவர் எல்லாவற்றையும் அணுகினாரா’ என்பது விவாதத்துக்குரியது. அவர் எழுதிய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் அனைத்திலும் அவருடைய சிக்கலான இக்கருத்துக்களே சக்தியாகவும் சவாலாகவும் அமைந்திருக்கின்றன. அதன் விளைவாகவே ‘அண்ணாவையும் பெரியாரையும் பார்க்காமல் போயிருந்தால் நான் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கலைஞர் சொல்லியிருக்கிறாரே?’ என்று கேட்டதற்கு, ‘அவர்களைப் பார்த்ததால்தான் நான் கம்யூனிஸ்ட் ஆனேன்’ என்று ரவி சுப்ரமணியன் தயாரித்த ஆவணப் படத்தில் பதிலளிக்கிறார்.
‘கணையாழி’ தயாரித்த சிறப்பிதழில், ஜெ.கே. பத்திரிகையாளராக இருந்து கலைஞரை எடுத்த ‘கல்பனா’ இதழ் பேட்டியும் வந்திருந்தது. அந்தப் பேட்டியில் ஜெ.கே.யின் தத்துவார்த்த புரிதல்கள் பதிவாகியுள்ளன. நாத்திகம் பற்றிய கேள்வியில் ‘முதலில் நான் ஆத்திகம் பற்றியும் என்னைப் பற்றியும் விளக்கி விடுகிறேன்’ என்கிறார். ஒரு பத்திரிகையாளன் தன்னைப் பற்றி சொல்லவேண்டியதில்லை. ஆனாலும், ஜெயகாந்தன் சொல்கிறார். ஏனென்றால் அவர் ஜெயகாந்தன்.
ஒருமுறை சர்.பிட்டி தியாகராய அரங்கில் மேலாண்மை பொன்னுசாமி நூல் வெளியீட்டு விழா. விழா தாமதமாகத் தொடங்கியது. சால்வை அணிவிப்பது பற்றி ஜெ.கே ஏதோ எழுத்தாளர் பிரபஞ்சனிடம் கமென்ட் அடித்தார். கூட்டத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் இருவரும் எதையோ தீவிரமாகப் பேசுவதாகப் பட்டது. பிரபஞ்சன் பேச எழுந்தார். உடனே விழாக் குழுவினர் ஓடிவந்து அவருக்கு சால்வை போத்தினார்கள்.
பிரபஞ்சன் சால்வையைப் பெற்றுக்கொண்டு, ‘‘ஆகவே நண்பர்களே, எனக்கும் அந்த அசம்பாவிதம் நடந்தது. இந்தச் சால்வையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? கட்டிக்கொண்டு குளிக்க முடியுமா? உடுத்துக்கொண்டு வெளியே போகமுடியுமா?’’ என்று சொல்லி ‘‘ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத சால்வைக்கு பதில் புத்தகமோ பணமோ ஏன் தரக்கூடாது?’’ என்று முடித்தார்.
அரங்கம் அதிர கைதட்டு. அடுத்து, ஜெ.கே. ‘‘என்ன இது, நாகரிகமில்லாமல். ஒருவர் அன்போடு கொடுத்தால் அதை நிராகரிப்பதா? விஷமே ஆனாலும் குடிப்பதுதானே பண்பு’’ என்று பிளேட்டை திருப்பி அடித்தார். பிரபஞ்சனுக்குத் தட்டிய அதே கைகள் அவருக்கும் தட்டின. விழா முடிந்தது. எல்லோரும் கலைந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
ஓரத்தில் பிரபஞ்சன் நின்று புகைத்துக்கொண்டிருந்தார். ‘‘என்ன சார்?’’ என்றேன். ‘‘நான் பேசிய அவ்வளவும் அவர் என் உடனிருந்து மேடையில் பேசிக் கொண்டிருந்ததுதான்’’ என்றார். ‘ஜெயகாந்தனையும் அவர் எழுத்தையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள் யாருமில்லை’ என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.
(பேசலாம்...)
ஓவியங்கள்: மனோகர்
|