மதுரை மல்லியும் ஈர மனசும்!



-சசிகுமார் புது ரூட்

சசிகுமார் என்றால் என்றென்றும் புன்னகைதான். இப்ேபாது... இன்னும் பிரகாசமாக! அவ்வளவு அன்போடு கரம் கொடுக்கிறார். தமிழ் சினிமாவின் வரலாற்றில் எழுதிய  ‘சுப்ரமண்யபுர’த்தை முதல் படமாக கொடுத்தவர். கோடம்பாக்கத்தின் அத்தனை பேரின் குட் புக்கிலும் இருக்கிற நல்ல மனசுக்காரர்.

‘‘ ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ல சிவாஜி ஐயா பேசின வசனம். ‘பலே வெள்ளையத் தேவா’னு வெற்றிச் சிரிப்போட ஜெமினி சாரை தட்டிக் கொடுப்பார். இன்னிக்கு வரைக்கும் கிராமத்துப் பக்கம் இந்த வார்த்தை உலாவிக்கிட்டே இருக்கு. இயக்குநர் சோலைபிரகாஷ் இந்தக் கதையைச் சொன்னபோது சரியாக வரும்னு தோணுச்சு. ‘செல்ஃபி காத்தாயி’ன்னு இதுல கோவை சரளாவுக்குப் பெயர்.

இன்னிக்கு கிராமத்தின் கடைக்கோடி வரைக்கும் டெக்னாலஜி வந்தாச்சு. அங்கே போனால் ஆட்டோகிராஃப் கேட்கிறத மறந்து நெருங்கி செல்ஃபி எடுத்துக்க அழகா சிரிக்கிறாங்க. அவங்க ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்னு அட்வான்ஸா இருக்காங்க. இதில் இருக்கிற காமெடியெல்லாம் வரிசை கட்டி படத்தில் வருது.

ரொம்ப உற்சாகமான படம். ஹாலிடே சந்தோஷத்திற்கு ரொம்ப கொண்டாட்டமா இருக்கும். உள்ளதிலேயே கஷ்டம் காமெடிதான். காமெடியன்களுக்கு இருக்கிற பெயர் இன்னிக்கு உலகத்திலே யாருக்கும் கிடையாது. சினிமாவில் சார்லி சாப்ளின் மனதில் நின்னதைவிட இங்கே யாரும் நிக்கலை’’ - நிதானமாகப் பேசுகிறார் சசிகுமார்.

‘‘உங்க படம்னாலேயே அதுல அரிவாள், கத்தி புழங்கி கொஞ்சம் பயம் கொடுக்குமே?’’
‘‘இதுல அழகான ஒரு கிராமம். நம்ம மக்கமாருகளோட கூடி வாழறதுதானே நம்ம பக்கத்து பழக்கம்லாம். அரிவாளைத் தூக்குகிறதும், அப்புறம் கண்ணீர் விட்டுக் கட்டிப் பிடிச்சு அழுறதும்தானே நம்ம அழகு. இதில்தான் இதுவரைக்கும் நம்ம கப்பல் போய்க்கிட்டு இருக்கு. நான் ஆரம்பத்திலிருந்தே என்னை ஒரு நடிகனா அதிகமா பார்த்ததில்லை என்பதே நிஜம். இப்ப வரைக்கும் என் தகுதி, நல்ல ரசிகன் என்பதில் போய்த்தான் முடியும். வழக்கமான பாதையிலிருந்து கொஞ்சம் விலகி கலகலன்னு போகிற காமெடியில் பயணம் போயிருக்கேன். ‘ஃபீல்குட் மூவி’ன்னு சொன்னா சரியான வார்த்தையா இருக்கும்!’’

‘‘என்ன, நீங்களும் கோவை சரளாவும் இருக்கிற போஸ்டர் கலகலக்குதே..?’’
‘‘நாங்க இருக்கற தினுசை பார்த்திட்டு பாட்டியும் பேரனும்னு நினைச்சிட்டிருக்காங்க. அதெல்லாம் இல்லை. ஒரு சமயம் நான் அவங்க ஊர் பக்கம் போயிருவேன். அங்கேதான் நாங்க சந்திக்கிறோம். ஆனால் இந்த ரோலை செய்ய இங்கே இரண்டே பேர்தான் இருக்காங்க. ஒண்ணு மனோரமா, இரண்டு சரளாம்மா. இதில் ஆச்சி நம்மை விட்டுட்டு போயிட்டாங்க. அதற்கடுத்து சரளாம்மாதான். அழுகையையெல்லாம் நிறுத்திட்டு, நல்லா சிரிக்க வைக்கிறோம்.

யாரையும் புண்படுத்தாத காமெடி. மதுரைன்னா வன்முறையும், தெறிக்கிற ரத்தமும்தான்னு பழகிப் போச்சு. ஆனா, அதே மதுரையிலதான் மண் மணக்கிற மதுரை மல்லி விளையுது; ஈர மனசோட திரிகிற மக்களும் இருக்காங்க. சரளாம்மா தண்ணீர் மாதிரி. எந்த வடிவமான பாத்திரமா இருந்தாலும் அதில் அழகா நிரம்பி நிற்பாங்க. இதிலும் அப்படித்தான். சினிமாவை ரசிச்சுப் பிடிச்சு வந்தவன் நான். எனக்குப் பிடிச்ச மாதிரிதான் படம் பண்றேன்.

அடுத்தடுத்து பணம், புகழ் மட்டுமே பெருக்கிக்கிட்டு போகணும்ங்கிற மாதிரி ஆசை கிடையாது. இதுல என்னைச் சுத்தி நடக்கிற எல்லாமே காமெடியாக இருக்கும். இன்னும் இந்த மதுரைப் புழுதியை அப்பிக்கிட்டு, கோயில், குளம், துரோகம், ரோட்டுக்கடை, அருவான்னு இந்த மண்ணின் கதைகள் என்கிட்ட இன்னும் நிறையவே இருக்கு. ஆனால், ஒரு நடிகரா வேற வேற உலகத்தை, அனுபவங்களைத் தர வேண்டியது என் கடமை.

சந்தோஷமாக சிரிச்சிட்டு, கொஞ்சமாக ஆக்‌ஷன் பார்த்திட்டு ஒரு கொண்டாட்டத்தைக் கொண்டு வரணும்னு இந்தத் தடவை தீர்மானம். அந்தத் தீர்மானத்தின் முன்மொழிதல்தான் ‘பலே வெள்ளையத்தேவா’ ’’ - என்று சொல்பவர் மடிக்கணினியை க்ளிக்கிட, பளீரென விரிகின்றன ஹீரோயினின் அழகு ஸ்டில்கள். ‘‘நல்லா இருக்கு சகோதரா, பொண்ணு க்யூட்டா இருக்கே, எங்கே பிடிச்சிங்க’’ என விசாரித்தால், ‘‘கண்ணு வைக்காதீங்க சார்! ஆனா, அப்படியும் உங்ககிட்டே சொல்ல முடியாது. நீங்க கண்ணு வைச்சுதானே ெபாண்ணு ஹிட்டு! தான்யானு பெயர்.

மறைந்த நடிகர் ரவிச்சந்திரன் சார் பேத்தி. தனிக்கொடின்னு ஒரு கேரக்டரில் பின்னி எடுக்கறாங்க. புதுப் பொண்ணுனு சொன்னா  நம்ப சிரமப்பட வேண்டியிருக்கும். அவ்வளவு நேர்த்தி. அடுத்தடுத்து அவங்க நிறைய படங்கள் செய்வதற்கான எல்லா அடையாளங்களும் இதில் இருக்கு. பார்வையற்றவர்கிட்டே ‘மல்லிப்பூ எப்படியிருக்கும்’னு கேட்டா ‘வாசனையா’ன்னு சொல்வாங்க. ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி எப்படி இருப்பாங்க’ன்னு கேட்டா ‘காற்றினிலே வரும் கீதம் மாதிரி’னுதானே சொல்லுவாங்க. அப்படி அழகா சொல்லிக்கிற மாதிரி ஒரு காதலும் இருக்கு!’’

‘‘சங்கிலி முருகன் எடுக்கிற படத்தில் நடிப்பீங்கன்னு பார்த்தால், அவரை முக்கிய கேரக்டரில் போட்டிருக்கீங்க?’’
‘‘அவர் அந்தக் காலத்தில அதிரடியான புரொடியூசர். இப்ப வரைக்கும் ‘எனக்கு ஒரு படம் நடிச்சுக் கொடுப்பா’னு ேகட்டுட்டு இருக்கார். ஒரு நாள் அலைபேசியில் அண்ணனை ‘தேனிக்குக் கிளம்பி வாங்க’ன்னு கூப்பிட்டேன். ஆசையா வந்தவரை ‘நான் உங்களுக்குக் கால்ஷீட் கொடுக்கிறதை அப்புறம் பார்க்கலாம். இப்ப நீங்க எனக்கு கால்ஷீட் கொடுங்க’னு ெசால்லி நடிக்க வைச்சிட்டேன். அப்படி ஒரு நடிப்பு!’’

‘‘உங்க படம்னா தர்புகா சிவா அருமையா மியூசிக் பண்றார்...’’
‘‘இதில் மூணே பாடல்கள். எல்லாமே கதையோட ஒட்டினது. என்னோட கேமராமேன் ரவிந்திரநாத் குருவை கூப்பிட்டு ‘இதுவரைக்கும் என் படங்கள் எல்லாம் தண்ணியில்லா காட்டிலதான் படமாகியிருக்கு. இதுல பளிச் பளிச்னு கண்ணுக்கு குளுமையாக பண்ணிக் கொடுங்க பிரதர்’னு சொன்னேன். நான் சொன்னதை மனதில் வச்சுக்கிட்டார் போல. முழுப்படமும் பார்க்கும்போது கலர்ஃபுல்லா வந்திருக்கு.

எனக்குப் பிடிச்சதை பண்ணும்போது, அது ரசிகர்களின் அலைவரிசையிலும் சேர்ந்து வரும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழ் மக்கள் என்னை நல்லா வச்சிருக்காங்க. அவங்களை இந்தத் தடவை சந்தோஷமா சிரிக்க வைப்போம்னு வந்திருக்கேன்’’ என வாய் நிறைய சிரிப்போடு வழியனுப்பி வைக்கிறார் சசிகுமார்.

- நா.கதிர்வேலன்