மருந்து



ரவி மித வேகத்தில் இரு சக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்க, கோபி பின்னால் உட்கார்ந்திருந்தான். ராஜ்பவனைக் கடந்து கிண்டி மேம்பாலத்தை நெருங்கும்போது, ஒரு அழகிய இளம் பெண், தனது ஸ்மார்ட் போனில் கொஞ்சிப் பேசியபடி சாலையைக் கடந்து கொண்டிருந்தாள். சாலையை மறந்து அவளது கவனம் மொபைலில் இருந்ததால், வாகனங்களின் ஹாரன் சத்தம் அவளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

அந்தப் பெண்ணின் அருகே வாகனத்தின் வேகத்தைக் குறைத்த ரவி, ‘‘போன் பேசிக்கிட்டுத்தான் ரோட்டை கிராஸ் பண்ணுவியா...’’ என்று ஆரம்பித்து, அச்சில் ஏற்ற முடியாத சொற்களைப் பிரயோகித்து திட்டி விட்டு பின்னர் கடந்தான். இப்படி ஒரு ஆபாச அர்ச்சனையை அந்தப் பெண் எதிர்பார்க்கவில்லை என்பது அவளது முகபாவங்களிலிருந்து தெரிந்தது. சற்று தூரம் கடந்தபின், ‘‘அந்தப் பொண்ணோட நல்லதுக்குத்தான்டா அப்படி திட்டினேன்’’ என்றான் ரவி.

‘‘அதுக்காக இவ்வளவு மோசமாவா திட்டறது?’’ என்றான் கோபி. ‘‘இனி மொபைல் போனை பார்த்தாலே... நான் திட்டின வார்த்தைகள்தான் அவ ஞாபகத்துக்கு வரும். இந்த மாதிரி தப்பை செய்ய அவ இனிமே யோசிப்பா! இதையே அன்பா சொல்லியிருந்தா, ‘நான் அப்படித்தான் செய்வேன்... நீ என்ன கேக்கறது’ன்னுட்டு போவா. ஒரு வகையில இது கசப்பு மருந்துதான்... ஆனா அவசியமானது’’ என்றான் ரவி.         
                                                        

-ஜி.ஆரோக்கியதாஸ்