இருபது ரூபாய்
ஜோசியர் ஒருவர் சேதுவுக்குச் சொன்னார். ‘‘எப்போதோ நீங்க ஒரு ஏழைக்குச் சேர வேண்டிய கூலியைச் சேர விடாம தடுத்துப் பாவம் பண்ணியிருக்கீங்க. அதனாலதான் உங்களுக்குச் சில கோடி ரூபாய்கள் வராமல் நிக்குது. அதுக்குப் பரிகாரமா நான் சொல்ற கோயிலுக்குப் போங்க. அங்கே இருக்கிற கிணத்திலேர்ந்து பத்துக் குடம் தண்ணி இழுத்து கடவுளுக்கு அபிஷேகம் பண்ணக் கொடுத்துட்டு, அங்கே இந்த வேலை பண்ற ஏழை வேலைக்காரனுக்கு நூறு ரூபாயை தர்மம் செய்யுங்க. எல்லா தடைகளும் நீங்கிடும்...’’
மனசில் கோடி கற்பனைகளுடன் கிளம்பினார் அவர். இந்தப் பரிகாரத்தால் எதிர்பாராத கோடிகள் வந்து குவிந்து விடுமோ! இதோ அவர் சொன்னது போல பத்துக் குடம் நீரை பக்தியுடன் இழுத்துக் கொட்டிவிட்டு, அந்த ஏழையின் கையில் நூறு ரூபாயைத் தந்தபோது அவன் சொன்னான், ‘‘ஐயா! நூறெல்லாம் வெண்டாம். என் நிரந்தர இருபது ரூபா கூலி பறிபோகாம நின்னா அது போதும். உங்களைப் பார்த்து பலபேர் இப்படி பரிகாரம் பண்ண ஆரம்பிச்சா, என் பொழப்பு போயிடும்...’’ சன்னதியில் போய் வணங்கியபோது சேதுவுக்கு அவரின் வேண்டுதல் மறந்தே போயிருந்தது.
-பம்மல் நாகராஜன்
|