கவிதைக்காரர்கள் வீதி



மின் விசிறியில் அடிபட்டு
சாளரத் திட்டில் விழுந்த
சிட்டுக்குருவியைக் கண்டு
விக்கித்து நிற்கும் மின்னுவை
தேற்றித் திசை திருப்ப
ஏதேதோ செய்து தோல்வியைத்
தழுவுகிறாள் அம்மா.

மூச்சற்றுக் கிடந்த குருவியை
அப்புறப்படுத்த விடாமல்
அழுதபடியிருந்த மின்னு
கூவுகிறாள் உற்சாகமாய்
குருவியின் சின்ன அசைவில்.
மெல்லத் தலை தூக்கிய குருவி
உடைந்த சிறகை உதறி உதறிப் பார்த்து
இமைப் பொழுதில் உந்தியெழுந்து
உயரப் பறக்கிறது வாசல் வழியே.
கை தட்டிச் சிரிக்கிறாள் மின்னு.
கண்ணில் நீர் கசிய
வாழ்த்தி விடை கொடுக்கிறாள்,
மீண்டெழும் வித்தை
கை வராத அம்மா.

வர்ணங்கள் அவளது தோழிகள்
இலக்குமிப் பசுவும்
வீடு வீடாக அளந்து ஊற்றும்
பாலும் தயிரும்
வெள்ளைத் தோழிகள்.
சாயும்காலம் கொட்டிலில் அடைக்கும்
குட்டி ஆடுகளும்
நட்சத்திரங்களில்
அவள் தனது அம்மாவைத் தேடும்
இரவு வானமும்
கருப்புத் தோழிகள்.
எசமானர் வாங்கி வரப் பணிக்கும்
கொழுந்து வெற்றிலையும்,
எசமானிக்குப் பறித்து வரும்
மருதாணியும் பச்சைத் தோழிகள்.
முற்றத்து அடுக்குச் செம்பருத்திகளும்
கிணற்றடி மாதுளை மரத்து
மணிமணியான மலர்களும்
ரசிக்க நேரமில்லா வாழ்வில்
ரகசிய ஆறுதல் அளிக்கும்
அழகிய சிகப்புத் தோழிகள்.
சின்ன எசமானிகளுக்கு
அன்றாடம் அலசிப் பிழிந்து
உலர விடும் பள்ளிச் சீருடை...
அவளிடமிருந்து
பிரித்து எடுக்கப்பட்ட
நீலத் தோழி.

-ராமலக்ஷ்மி