துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் சந்திரனும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் 64

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

சுக்கிரனும் சந்திரனும் அதீத வசீகரமும், ஈர்ப்புமுள்ள கிரகங்களாகும். சந்திரனுக்கு மனோகாரகன் என்கிற பெயர் உண்டு. அதோடு காவியக் கிரகமான சுக்கிரன் சேரும்போது மகத்தான படைப்புகள் நிகழ்கின்றன. எப்போதும் பூத்துக் குலுங்கும் கானகம்போல மனம் மாயம் செய்து கொண்டேயிருக்கும். இந்த அமைப்புள்ளவர்கள்அநாயாசமான படைப்பூக்கத்தோடு செயல்படுவார்கள். எதிரிகளைக் கூட உங்களின் கவர்ந்திழுக்கும் பேச்சால் கலங்க வைப்பீர்கள். யார் மனதும் புண்படாமல் பேசும் கலையை இவர்களிடம்தான் கற்க வேண்டும்.

இசை, ஓவியம், கீபோர்ட் வாசித்தல் என்று கற்றுக்கொண்டு தேறுவார்கள். பெரும்பாலும் இவர்கள் சங்கீதப் பிரியர்கள். பல சப்தங்களை சரம்போல் தொடுத்து செவிக்கு இனிமை சேர்ப்பார்கள். சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போலல்லாமல் சுயமாக செய்யும் திறமையை உடையவர்கள். ஒரு வேளை குளியலுக்கு இரண்டு வகை சோப்புகளை உபயோகிப்பார்கள். உடம்பை உருக்கிவிட்ட வெள்ளிபோல பளபளவென்று வைத்திருப்பார்கள். தனிமை பிடிக்காது.

அப்படி இருக்க நேர்ந்தால் ஏதேனும் வரைந்து தள்ளுவார்கள். அல்லது காதல் ரசம் ததும்பும் நாவல்களை படிப்பார்கள். துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராசியில் சுக்கிரனும் சூரியனும் ஒரே இடத்தில் இணைந்திருந்தால் கிடைக்கும் பொதுவான பலன்கள் இவை. இப்போது நாம் துலாம் லக்னத்தை ஒன்றாம் இடமாகக் கொண்டு ஒவ்வொரு ராசிக்குள்ளூம் இவ்விரு கிரகங்கள் நின்றால் என்ன பலன் என்று பார்ப்போமா?

துலாம் லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே சுக்கிரனோடு சந்திரன் இருந்தால் மிதமிஞ்சிய கற்பனையும், படைப்பாற்றலும் கொண்டிருப்பார்கள். தோற்றப்பொலிவு கூடியே இருக்கும். எங்கு சென்றாலும் தன்னை மையப்படுத்தியே பேசுவார்கள். எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆரோக்யத்தில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். சிறியதாக உடம்புக்கு வந்தாலும் அதிகமாக பயப்படுவார்கள். வஞ்சனையே இல்லாமல் எல்லோரையும் பாராட்டுவார்கள். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்றபடி இருப்பார்கள்.

அதீத வாகனப்பிரியராகவும், உணவின் மீது மிகுந்த ஈடுபாடும் கொண்டிருப்பார்கள். துலாம் லக்னத்திற்கு அடுத்த படியான, இரண்டாம் இடமான விருச்சிகத்தில் இவ்விரு கிரகங்களும் சேர்ந்தால் வித்தியாசமான பலன்களே ஏற்படும். ஏனெனில், இங்கு சந்திரன் நீசமடைகிறார். நீச சந்திரனோடு சுக்கிரன் சேரும்போது ஆரம்பக் கல்வி தடைபட்டு மீண்டும் தொடரும். ஆனால், உயர்கல்வி சிறப்பாக அமையும். இதமாகப் பேசவேண்டிய இடத்தில் உரக்கப் பேசி கெட்ட பெயரை வாங்கிக் கொள்வார்.

பணத்தை கண்டமேனிக்கு செலவு செய்வார். ஊருக்கு உதவும் முன் தன் குடும்ப சூழ்நிலையை பார்த்துக் கொள்வதும் முக்கியம். இவர்கள் ஏதேனும் கேள்வி கேட்டபடி இருப்பார்கள். ஆண்களாக இருப்பின் காதில் கடுக்கண் அணியும் பழக்கம் இருக்கும். மூன்றாவதாக தனுசு ராசியில் சுக்கிரனும் சந்திரனும் அமர்வதால் இளைய சகோதரர் மாபெரும் வளர்ச்சியைப் பெறுவார். வசீகர முகமும் மக்களை வசியம் செய்யும் தன்மையும் இருக்கும். மூன்றாம் இடமானது முயற்சி ஸ்தானமும் ஆகும். அதனால், கடைசி வரை உழைத்துவிட்டு வெற்றி பெறும் நேரத்தில் பிரிந்து பிடுவார்கள்.

பாரம்பரிய முகத் தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். தான் சார்ந்திருக்கும் மரபு, சம்பிரதாயங்களை தூக்கிப் பிடிப்பார்கள். போக விஷயங்களில் மிகுந்த நாட்டம் உடையவர்கள். இவர்களை யார் முதலில் பார்த்தாலும், ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’’ என்பார்கள். ஏனெனில், பிரபலங்களின் முகச் சாயல்கள் இவரிடம் உண்டு. இனனொன்று, இவருக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அதனாலேயே கூட்டத்தோடுதான் எங்கும் செல்வார்கள். இவர்களின் உள்ளுணர்வானது அசாத்தியமான வகையில் இருக்கும்.

நான்காம் இடமான மகரத்தில் மாதுர்காரகன் என்றழைக்கப்படும் தாய்க்குரியவனான சந்திரனோடு, கலை கிரகமான சுக்கிரன் சேரும்போது இவரது தாயார் பெரும் படைப்பாளியாக விளங்குவார். இசை, நாட்டியம், எழுத்து, பேச்சு, பாட்டு என்று ஏதேனும் ஒன்றில் சிறந்தே விளங்குவார். அம்மாவையே ரோல் மாடலாக எடுத்துக் கொள்வார். மாபெரும் வாகனப் பிரியர்கள். புளிப்பும் இனிப்பும் கலந்த பலகாரத்தையே அதிகம் விரும்பி உட்கொள்வார்கள். நிறைய மரங்கள், ஆற்றோரம், மலை வாசஸ்தலங்களில்தான் வசிக்க விரும்புவார்கள். கிட்டத்தட்ட கேரளாபோல இருக்க வேண்டும். இவர்கள் யாரையுமே பகைத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஐந்தாம் இடமான கும்ப ராசியில் சந்திரனும், சுக்கிரனும் அமர்ந்தால் கொஞ்சம் வாரிசு விஷயங்கள் தாமதப்பட்டு கிடைக்கும். இவர்களின் தோற்றப் பொலிவைப் பார்த்தால் பெரும் பணக்காரர்கள் போலத் தெரிவார்கள். ஆனால், அன்றாட வாழ்க்கையே அல்லல்படும்படியாக இருக்கும். தாய் மாமன் வகைகளில் அவ்வப்போது ஏதேனும் பிரச்னைகள் வந்தபடியே இருக்கும்.

ஒரு சமயம் இருக்கும் உறுதி மறுசமயம் இருக்காது. சிற்றின்ப விஷயங்களில் எல்லை தாண்டாதிருப்பது நல்லது. திரைத் துறையில் ஈடுபட்டு கதை, வசனம், நடிப்பு என்றெல்லாம் இயங்குவார்கள். இவர்களிடம் உள்ள பெரும் பிரச்னையே எதிலுமே திருப்தியோடு இருக்க மாட்டார்கள். அதுபோல இதுவா... அதுவா... என்கிற குழப்பம் இருந்து கொண்டேயிருக்கும். பட்டு நூல், ஜவுளி வியாபாரத்தில் கொடி கட்டிப் பறப்பார்கள். 

ஆறாம் இடமான மீனத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால் எதிரிகளை எளிதாக வீழ்த்துவார்கள். ஏனெனில், இங்கு சுக்கிரன் உச்சனாகி அமர்கிறான். தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும். கடன் என்றாலே காத தூரம் ஓடுவார்கள். தொட்டதற்கெல்லாம் வழக்கு போட்டுக் கொண்டிருப்பார்கள். சமூகத்தோடு சுமுகமாக இருக்க முடியாது அவஸ்தைப்படுவார்கள். அரசியல்வாதிகளை எதிர்த்துக் கொண்டேயிருப்பார்கள்.

சிறிய நோய் என்றாலும் அதை மனதிற்குள் பூதாகரமாக்கி விடுவார்கள். ஏழாம் இடமான மேஷத்தில் இந்த இரு கிரகங்களும் இருந்தால் தன்னை விட அந்தஸ்திலும், செல்வத்திலும் திளைக்கும் வாழ்க்கைத் துணைவர் அமைவார். இவர்களின் வாழ்க்கைத் துணைவர் கலை உலகில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். மிகுந்த ரசனை உணர்வு மிக்கவராகவும் இருப்பார். இவர்கள் கூட்டுத் தொழிலை செய்யாமல் இருப்பது நல்லது. ஏனெனில், அவ்வளவு சாமர்த்தியம் இருக்காது. இந்த அமைப்பு பெண்களுக்கு இருந்தால் கர்ப்பப்பையில் நீர்க் கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு.

எட்டாம் இடமான ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சியாகிறார். கூடவே, சந்திரனும் சேர்ந்து அமரும்போது அதிகமாக பிரயாணப் பட்டுக் கொண்டே இருப்பார்கள். பத்தாம் அதிபதியான சந்திரன் எட்டில் அமர்வதால் வேலை மாறிக் கொண்டேயிருப்பார்கள். இவர்கள் துணிந்து இறங்கினால் வெற்றி இவர்கள் வசம்தான். ஆனால், எல்லாவற்றிற்கும் பயந்து கொண்டேயிருப்பார்கள். ஆறு, குளம், குட்டை, கடல் போன்றவற்றில் நீராடுதல் கூடாது. நண்பர்களோடு போவதென்றால் சந்திர மண்டலத்துக்குக் கூட தயாராக இருப்பார்கள்.

ஒன்பதாம் இடமான மிதுனத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்வது என்பது பெரும் யோகமாகும். புதன் வீட்டில் சுக்கிரனும், சந்திரனும் என்பதே அருமையான விஷயமாகும். தந்தையின் பெருஞ் சொத்து அப்படியே இவர்களுக்கு வந்து சேரும். ஆனாலும், தந்தையை விஞ்ச வேண்டுமென்று அவரின் வியாபாரத்தை மிக நவீனமாக்குவார்கள். இவரின் எளிமையைக் கண்டும், ஜீவ காருண்யத்தைக் கண்டும் நட்பு வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.

கடகத்தில் பத்தாம் இடத்தில் சுக்கிரன் அமர்வது நல்லது என்றாலும் சந்திரனின் சொந்த இடமாக இருப்பதால் பியூட்டி பார்லர், ஜவுளி வியாபாரம், ஜுவல்லரி, மினரல் வாட்டர் என்று தொழில் தொடங்கி பிரமாண்டமாக வளர் வார்கள். இவர்களின் நவீன படைப்பாற்றலால் நவீனமான கதைகளையும், நாடகங்களையும் இயற்றி பெரும் புகழ் பெறுவார்கள். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுபோல நிறைய பணத்தை சம்பாதிக்கும் போதெல்லாம் அதைச் எப்படிச் சரியான விதத்தில் சேமிப்பது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவர்களில் நிறைய பேர் வெள்ளித் தட்டில் உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள்.

சிம்மத்தில் பதினோராம் இடத்தில் சுக்கிரனும் சந்திரனும் சேருவது அவ்வளவு சிறப்பான விஷயமாகக் கூற முடியாது. மூத்த சகோதரர் அல்லது சகோதரி வீண் செலவும், சேர்த்து வைத்துக் கொள்ளாத நபராகவும் இருப்பார். கமிஷன், ஏஜென்சி வகையில் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். ஆனால், எதில் முதலீடு செய்தால் பெரும் லாபம் வரும் என்பதை துல்லியமாக அறிந்து வைத்திருப்பார்கள். பன்னிரெண்டாம் இடத்தில் சுக்கிரனும் சந்திரனும் இருந்தால் வித்தியாசமான மத சிந்தனைகளை உடையவர்களாக இருப்பார்கள்.

ஆரம்பத்தில், சந்நியாசம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும், போகப் போக சக்தி வழிபாட்டில் மிகமிக ஈடுபாட்டோடும் இருப்பார்கள். நிறைய பேருக்கு மத்திம வயதுக்குப் பிறகு மந்திர தீட்சையெல்லாம் கொடுப்பீர்கள். வீண் ஆடம்பரத்திற்கு நிறைய செலவு செய்ய வேண்டாம். பொதுவாகவே சுக்கிரனும் சந்திரனும் ஒன்று சேரும்போது மாபெரும் எதிர்மறைப் பலன்களைத் தரமாட்டார்கள். இவை இரண்டுமே மன நலன் மற்றும் கலைக்குரிய கிரகங்களாகும்.

ஆனால், நீச, பகை ஸ்தானங்களைப் பெறும்போது கொஞ்சம் எதிர்மறையான பலன்களைத்தருகின்றன. மன உளைச்சலாலும், மனச் சோர்வாலும், ஒருவிதமான வறட்டுத்தனமான மனோநிலைக்கு இவர்கள் ஆட்பட வேண்டியிருக்கும். மனதிற்கு சுவாரசியமான, பிடித்த காரியங்களைச் செய்ய முடியாமல் இருப்பார்கள். இம்மாதிரி நேரங்களில் திருக்கடையூரில் அருள்பாலிக்கும் அபிராமி அம்பிகையையும், கூடவே, அபிராம பட்டரையும் மனதிற்குள் தியானித்துவிட்டு வாருங்கள்.

அபிராமபட்டரிடம் சந்திரனின் பூரண கலைகளின் பொலிவும், அம்மையின் அருளும் ஒன்றாகப் பொலிந்திருந்தன. மேலும், இத்தலத்தின் நாயகரான அமிர்தகடேஸ்வரரையும், எமசம்ஹார மூர்த்தியையும் தரிசியுங்கள். இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.   

(கிரகங்கள் சுழலும்)

ஓவியம்: மணியம் செல்வன்