குங்குமம் ஜங்ஷன்



டெக் டிக்

ஆண்ட்ராய்டு மொபைல்களை அடுத்து ஸ்மார்ட் வாட்ச்சுகளும் இளசுகளின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆப்பிள் வாட்ச்சுகளுக்கு என்று பிரத்யேகமாக சிஎம்ஆர்ஏ என்ற வாட்ச் ஸ்ட்ராப் புதிதாக வரவிருக்கிறது. இதில் கேமரா பொருத்தப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை ரெக்கார்ட் செய்யலாம். 8 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்கள் கொண்ட  கேமராக்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்பவர்களுக்கு 9,943 ரூபாய்க்கு இந்த ஸ்ட்ராப் கிடைக்கும். இனி வாட்ச் மூலமாகவே செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம்.

புத்தகம் அறிமுகம்

பேரரசன் அசோகன்
சார்லஸ் ஆலன் / தமிழில் : தருமி
(எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642 002. விலை ரூ.400.
தொடர்புக்கு : 98650 05084)

‘சாலையெங்கும் மரங்களை நட்டார் அசோகர்’ என படித்தறியாத சிறுவர்கள் இங்கே எவரும் இருக்க முடியாது. அத்தகைய பேரரசன் அசோகனின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்நூல். அசோகன் வெறும் மன்னர் மட்டுமில்லை, அவரது மனச் சித்திரங்களாக காணக்கிடைப்பது ஆச்சர்யமூட்டுகிறது. அவர் ஒரு தேசாந்திரியாக இருந்திருக்கிறார்.

அவரது பயணங்கள் விசாலமானவை. வாழ்ந்த இடமே மறந்துபோகிற அளவுக்கு பயணப்பட்டிருக்கிறார். அனைத்து மதங்களுமே மரியாதைக்குரியவை என நினைத்து வந்திருக்கிற அசோகனின் பெருந்தன்மை நினைவுகூரத்தக்கது. வரலாற்றைப் புறக்கணித்துவிட்டு நாம் வந்துவிட இயலாது. மக்களின் மகிழ்ச்சி, அவர்களின் வாழ்க்கைத்தரம் என அவர் எப்போதும் கவனம் செலுத்தி வந்திருப்பது அழகு, சிறப்பு. வாசகனைச் சென்றடைய வேண்டிய முயற்சிகளை சார்லஸ் ஆலன் திறம்பட உழைத்து அமைத்திருக்கிறார். மொழியாக்கத்தில் தருமியின் செயல்பாடு மனதுக்கு நெருக்கமானது. முன்னோர்களை அறிய முயல்வது நம்மை அறிவது போன்றதே.

நிகழ்ச்சி மகிழ்ச்சி

ஸ்ரீதிவ்யா, கேத்தரின் தெரசா, இயக்குநர்கள் பார்த்திபன், சீனுராமசாமி, பாண்டிராஜ், பா.இரஞ்சித், இசையமைப்பாளர் டி.இமான், யுகபாரதி என பலரும் திரண்ட கலர்ஃபுல் விழா அது. சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடித்த ‘மாவீரன் கிட்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. முதன்முறையாக இந்தப் படத்திற்காக வசனகர்த்தாவாக மாறியிருக்கிறார் யுகபாரதி. ‘‘இந்தக் காலத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாகப் பார்க்கிறார்கள்.

நாம் சின்ன தவறு செய்தால் கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு இதை எடுத்துக்கொள்ளலாம்... நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் ‘தொடரி’ திரைப்படத்தில் 150கி.மீ. வேகத்தில் செல்லும் இரயிலில் கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் பறக்கவில்லை’ என்ற ஓர் விஷயம் ரசிகர்களால் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வைரலானது’’ என பார்த்திபன் பேச, மேடையில் சிரிப்புமழை.

சர்வே

இந்தியாவில் புகைப்பழக்கத்தின் காரணமாக இளம் வயதிலேயே இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ஒவ்வொரு வருடமும் இப்படி இறந்துபோகிறவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்கிறது அந்த ஆய்வு. இந்தியாவில் சுமார் 30 கோடிப் பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள். உடல் நலத்துக்கு சிகரெட்டை விட எட்டு மடங்கு தீமையை விளைவிக்கக் கூடிய பீடியைத்தான் 85 சதவீதம் பேர் புகைக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் இதுபோன்ற புகைப்பொருட்களுக்கு 70 சதவீதம் வரியாவது விதித்தால்தான் இந்த கெட்ட பழக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றமுடியும் என்று தீர்க்கமாகச் சொல்கிறது.

சிற்றிதழ் Talk

படம் இயக்குவதற்கு முதலில் ஒரு கதை வேண்டும். அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், சுவாரஸ்யமற்று இருக்கக்கூடாது. அதில் நாடகம் இருக்க வேண்டும்; மனிதம் இருக்க வேண்டும். நாடகம் எப்படி இருக்க வேண்டும்? வாழ்வின் சுவாரஸ்யமற்ற பகுதிகள் வெட்டியெடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
-ஆல்பிரட் ஹிட்ச்காக் (‘அம்ருதா’ இதழில்)

யூ டியூப் லைட்

நாளுக்கு நாள் அமலாபாலின் க்ளாமர் மெருகேறிக்கொண்டே வருகிறது. சொந்த வாழ்க்கையின் சோகத்தை மறந்துவிட மனம் கவர்ந்த இடங்களுக்கு சுற்றுலா சென்று ரெஃப்ரெஷ் ஆகியிருக்கிறார். ‘திருட்டு பயலே 2’ படப்பிடிப்புக்கு ரெடியாகிவிட்டவர், இந்தோனேஷியாவில் அழகான ஒரு நீச்சல்குளத்தில் குதித்து குதித்து விளையாடும் மினி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட, 6 லட்சத்துக்கும் மேலானோர் பார்வையிட்டு மகிழ்ந்துள்ளனர்.

நீங்களும் தரிசிக்க இன்ஸ்டாவில் dreamcather_ams என்ற பெயரில் தேடினால் போதும். இந்தோனேஷியாவில் கில்லிமெனோ தீவின் அழகையும் வீடியோவாக்கியிருக்கிறார் அமலாபால். இன்னொரு முக்கியமான விஷயம், தனது பிறந்தநாளை அந்தத் தீவுகளில்தான் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.