உறவெனும் திரைக்கதை
-ஈரோடு கதிர்
பழுத்துதிரும் தருணம் வாழ்வின் தொடக்கத்தில் ஒருமுறை மட்டுமே வாய்ப்பதா குழந்தைப்பருவம்? நிகழ்வுகளால் மெல்லப் பழுத்து, அனுபவங்களை ஈட்டி, நினைவுகளால் கனத்து, உதிரும் பருவத்தில் குழந்தைத்தனத்தை தானாக அமைத்துக் கொடுத்து, விடைபெற அனுமதிக்கின்றது வாழ்க்கை. குழந்தையாய் வாழ்ந்த காலம் அதுவென்றால், குழந்தைபோல் வாழ நிர்ப்பந்திக்கப்படும் காலம் இது.
இந்த இரண்டாம் கட்ட குழந்தைப்பருவத்திலிருக்கும் மிகப்பெரிய சிக்கலே, சேகரித்து வைத்திருக்கும் அனுபவங்கள், முதிர்ந்த குழந்தைகளை தன்போக்கில் எளிதில் வளைத்துக் கொள்வதுதான். வளைந்து நெளிந்து நளினமாய் தப்பித்துக்கொள்ள முடியாதோர், முட்டி மோதி, மூச்சுத் திணறுகின்றனர். உள்ளுக்குள் ஏதோ ஒன்றை முறித்துக் கொள்கிறார்கள்.
மனதளவில் பற்பல குழப்பங்களோடு அவர்கள் குழந்தைகளாய் மாறிப்போக, அவர்களின் சந்ததிகள் இளமையின் பலத்தோடு நிமிர்ந்து நிற்க, இசைவு பிசகுகையில் ஏற்படும் உராய்வுகளில் இரு தரப்பிலுமே வலியும் வேதனையும்தான். உயர்தர மருத்துவமனை ஒன்றில் தம் தாயை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டு போகும்போது, நாகரீமாக, படித்தவராகத் தோற்றம் தந்த, சுமார் ஐம்பதுகளிலிருக்கும் மகன் தன் அம்மாவை நோக்கி உமிழ்ந்த வசவுச்சொற்கள், உச்சரிக்கவோ, எழுதவோ துணிந்திட முடியாதவை.
அந்தக்கணத்தில் அவர்களிருவரையும் கால யந்திரத்தில் ஏற்றி, சுமார் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்திப் பார்க்க பேராவல் கொண்டதை ஒருவிதப் பழிவாங்கலாகவே கருதினேன். அதிகாரமும், ஆளுமையும், எவரோடும் இசைவாய்ப் போகும் தன்மையுமுடைய அவர், தம் குடும்பத்தின் அடையாளமும்கூட. உறவுகளுக்கும், நட்புகளுக்கும் எப்போதும் இணக்கமானவர். வாழும் முறையில் பலருக்கும் இருப்பதுபோல் சிற்சில குறைகளும், பலவீனங்களும் அவருக்குமுண்டு. அதிலொன்று தன் உடல் நலனில் அக்கறை கொள்ளாதது.
உடல் நலனில் கவனம் கொள்ளாதோரை, குறிப்பிட்ட வயதுக்கு மேல் தன் வீரிய நாவால் முதுமை விரைந்து வருடத் தொடங்கிவிடுகிறது. ஒருநாள் திடீரென மயக்கமடைந்தவரை முதுமை மிக வேகமாகத் தழுவிக்கொண்டது. “நாம என்ன சொன்னாலும் கேக்றதில்லையே!” என அப்போதுவரை குறைப்பட்டுக் கொண்டிருந்த குடும்பம், புகார்களைப் புறந்தள்ளி ஊர் ஊராக மருத்துவமனைப் படியேறினார்கள்.
சிறுநீரகத்தில், நுரையீரலில், மூளையில், செரிமானத்தில் பிரச்சனை என உடலுக்குள் ஒரு பிரளயமே தொடங்கியது. பசி பசி என பத்து முறை உணவெடுத்தார்; செரித்தும் செரிக்காமலும் கழிந்தது. முதிர்ந்தவொரு குழந்தையாய் மாறிப்போனார். அந்தச் சிதைவை அவரும், குடும்பமும் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. கோபம், நெகிழ்வு, குழந்தைத்தனம், பிடிவாதம் என அலைவரிசைகளை மாற்றி மாற்றி தம்மேல் திணிக்கப்பட்ட அந்த திடீர் முதுமையைக் கடக்க முற்பட்டார்.
அந்த அலைவரிசைகளுக்குள் பொருந்தமுடியாமல் குடும்பம் குழம்பி நின்றது. மூளையில் நீர்க்கோர்வை, சுருக்கம் எனச் சிதைவுகள் வேகமாகச் சேகரமாகின. தாம் வாழ்ந்த காலத்தின் பல பருவங்களுக்குத் தடம் புரண்டார். நிகழ்காலத்திற்கும், இறந்தகாலத்திற்கும் மாறி மாறிப் பயணப்பட, அந்தப் பயணத்தோடு ஒன்ற முடியாத குடும்பம் தடுமாறித் தவித்தது. ஒரு கட்டத்தில் அவரை அவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்தது குடும்பம்.
அவரின் எல்லா அன்றாடங்களுக்கும் உதவி தேவைப்பட்டது. மற்றவர்கள் உதவுவதை பல நேரங்களில் அவரால் உணரக்கூட முடியவில்லை. உணர்ந்திடாத தருணங்களில் கோபித்துக் கொண்டார். உணர்ந்த தருணங்களில் குழந்தையாய் மாறி நெகிழ்ந்து குழைந்துபோனார். அவருடைய குறைகளாக அதுவரை கருதியிருந்த பல செயல்கள், நோய்மையில் மூளை செய்த மாயம் என்பதை அனைவரும் உணரும் தருணத்தில் அவர் வேகமாய்ப் பழுத்து உலரத்தொடங்கியிருந்தார்.
அந்தக் குறுகிய காலச் சிதைவுகள் ஒருவகையில் அவரின் இழப்பைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தைத் தந்திருந்தது. அவ்வளவு வேகமாய், வேதனைகளோடு உதிர்ந்திருக்க வேண்டாம் என்பது நீங்கா வருத்தமாய் கிளைக்கத் தொடங்கியது. வங்காளியான பாஷ்கோரும் அவர் மகள் பிக்குவும் டெல்லியில் வசிக்கின்றனர். எழுபது வயது பாஷ்கோரின் மலச்சிக்கல் குறித்து உணவு மேஜை உள்ளிட்ட எல்லா இடங்களிலும் எந்த அசூயையுமில்லாமல் அவர்களுக்குள் உரையாடல்கள் நிகழும். எவ்விதம் கழிந்தது, நிறம், தன்மை, அளவு உள்ளிட்டவற்றைப் பகிர்ந்தே தீரவேண்டும்.
அப்பாவிற்கான மருந்து, ஆறுதல்கள், அவருடனான வாதங்கள், உரசல்கள், புலம்பல்கள் உள்ளிட்டவைகளால் அலுவலகத்திற்குத் தாமதமாய்க் கிளம்பி, டாக்ஸி ஓட்டுநரை விரைந்து செல்லக் கட்டாயப்படுத்துவது வழக்கம். வேகத்தினால் விபத்துகள் ஏற்பட்டு டாக்ஸி சேதமடையும்போது கிஞ்சித்தும் கவலைப்படாதவர் பிக்கு. மகளின் கவனம் எப்போதும் தன் மீதே இருக்க வேண்டுமென்பதில் கவனம் கொண்டவராகவும் இருக்கிறார் பாஷ்கோர்.
உடல் வெப்பம் 98.4லிருந்து 98.6, 98.8 என்று ஒருநாளில் மாறுவதைக்கூட, அரற்றிப் புலம்பி மகளின் கவனத்தை ஈர்க்கும் தந்தை. திருப்தியாய், நல்லவிதமாய் ஒருபோதும் மலம் கழிந்ததாய் நிறைவு பெறாத உடலும் மனமுமாய் எப்போதும் சிடுசிடுப்பவர். பெண்கள் தம் திருமணத்தில் சுயத்தை இழந்துவிடுகிறார்கள் எனும் கருத்து பாஷ்கோருக்கு உண்டு. மகளை மன, உடலளவில் சுதந்திரமாக வளர்த்திருப்பவர். பிக்கு தன் ஆண் நண்பனோடு படுக்கையைப் பகிர்ந்துகொள்வதை ஏற்றுக்கொள்ளும் தந்தை.
விருந்தொன்றில், அவளிடம் ஆர்வமாய்ப் பேசும் இளைஞனிடம், “அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறியா? அவள் என்னை மாதிரியே முசுடு. அவள் வர்ஜின் இல்லை” எனத் துண்டிக்கிறார். மகள் தன்னைவிட்டுப் போய்விடக்கூடாது என்ற சுயநல மனநிலையும் உண்டு. குழந்தையாய் இருந்தபோது மகளை தான் கவனித்துக்கொண்டது போல், இப்போது தன்னை குழந்தை போல் பாவித்துக் கவனிக்க வேண்டியது மகளின் கடமை என்கிறார்.
பாஷ்கோர் கொல்கத்தாவிலிருக்கும் தன் சொந்த வீட்டிற்குச் செல்ல விரும்புகிறார். விமானம், ரயில்களை மறுத்து, காரில் சென்றால்தான், நினைத்த இடத்தில் மலம் கழிக்க வசதியாக இருக்குமென்கிறார். பழைய அனுபவங்களால் வாடகைக் கார் ஓட்டுனர்கள் மறுத்துவிட, நிறுவனத்தின் முதலாளி ராணாசவுத்ரியே கார் ஓட்டுகிறார். ‘வேகமாகக் கார் ஓட்டக்கூடாது, பிக்கு ஓட்டக்கூடாது, மரணம் இயற்கையாய் மட்டுமே நிகழவேண்டும், விபத்தில் ஏற்படக்கூடாது’ என்பதுள்ளிட்ட பல்வேறு அதிகாரங்கள் செய்கிறார். வாடகைக்கு அமர்த்தியிருப்பதால் ‘என் விருப்பம்போல், நான் சொல்வதை மட்டும் கேள்’ என அடாவடியாய்ப் பயணிக்கும் பாஷ்கோரை, ஒரு கட்டத்தில் ராணாசவுத்ரி மிரட்டி அடக்குகிறார்.
கொல்கத்தாவில் இருக்கும் தன் தம்பி குடும்பம் வாழ்ந்து வரும் தன் வீட்டை அடைகிறார். அமைதியானதாய், பூரணமானதாய் உணர்கிறார். மலச்சிக்கல் அவருக்கு மட்டுமல்லாது அவரின் தந்தை, தம்பி ஆகியோருக்கும் பொதுவான ஒன்று. மலச்சிக்கல் குறித்து விவாதங்கள் நிகழ்கின்றன. ஒரு நாள் வீட்டில் சொல்லாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு, நகர் முழுதும் சுற்றி வருகிறார். நீண்ட நேரம் காணாமல் போனவரைத் தேடுகிறார்கள். விரும்பும் எல்லா இடங்களையும் நிதானமாய்க் கண்டு திரும்புகிறார்.
எழுபது வயதில் உடல் பிரச்சனைகளை வைத்துக்கொண்டு சைக்கிளில் இருபத்தைந்து கி.மீ தூரம் சுற்றியிருக்கக் கூடாது எனக் கண்டிக்கும் மகளைச் சமாதானம் செய்கிறார். கழிவறையிலிருந்து திரும்பியவர், மலம் மிகத்திருப்தியாகக் கழிந்ததாக, மனநிறைவாய், மகிழ்வாய்ச் சொல்கிறார். இதெல்லாம் பேச வேண்டிய விஷயமா எனத்தவிர்க்கும் மலச்சிக்கல், முதுமை குறித்த உளப்போராட்டங்களை, மிக நிதானமாய்ப் பகிர்கின்றது 2015ல் வெளியான இந்திப்படமான ‘பிக்கு’. முதுமையில் தோன்றும் மனச்சிக்கலை நாம் புரிந்துகொள்ள திறவுகோலாய் உதவுகிறது.
அந்திமக் காலத்தில் ஆளுமையும், கம்பீரமும், தெளிவும் உடனிருப்பது மகிழ்ச்சிக்குரியது. வாழ்வின் நிறைவுக் கணங்கள், தனக்கோ பிறருக்கோ, உடலாலோ, உணர்வுகளாலோ வருத்தம் தராததாய் அமைவது ஆகச்சிறந்த வரமாய் இருக்கும். இது எல்லோருக்கும் பொதுவானதோ, சாத்தியமானதோ அன்று. பிறழும் சூழலில் வந்தமரும் முதுமை தன்னை முரட்டுக் குழந்தையாய் வரித்துக்கொள்கிறது.
முதுமையில் தோன்றும் பலவீனங்களை முரட்டுத்தனமான போக்கில், தன்னுடைய பலமென்று நிறுவ எடுக்கும் முயற்சிகள் பொய்த்துப்போகையில், முள்ளில் விழுந்த நைந்த நூற்கண்டாய் மனம் சிக்கல்களுக்குள்ளாகும். முதுமையும், இயலாமையும் இணைந்து மனச்சிக்கலை மனச்சிதைவாக மாற்றும் சாத்தியமுண்டு. அமைதியான, வருத்தாத, வதைக்காத, உடலையும் உயிரையும் சிதைக்காத மரணத்தை தம் வாழ்வின் நிறைவாக ஒவ்வொருவரும் கருதுகின்றனர்.
ஒரு கட்டத்திற்குமேல் ஒட்டுமொத்த பிரார்த்தனைகளும் அதற்கானதாகவே இருப்பதுமுண்டு. அவ்விதமாய் அமையவேண்டுமெனும் ஏக்கமே மனமெங்கும் மந்திரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும். முதிர்ந்த குழந்தைகளைச் சமாளிக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியதே உடலும் மனமும் பலமாய் இருக்கும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது. வழியனுப்பல் நிறைவாய் நிகழ்ந்திட உதவுவது, வாழ்ந்து செல்வோருக்கு வாழ்ந்ததின் வெற்றி, உறவுகளாய் உடனிருப்போருக்கு எதனினும் பெரியதொரு புண்ணியம்.
(இடைவேளை...)
ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
|