நலன் குமரசாமி in Download மனசு



அறம்

அறம் என்பதை நிர்மாணிக்க நிறைய விதிமுறைகள் இருப்பதால், நான் குழம்பிவிடுகிறேன்... எப்பொழுதும் ஒரு விதிமுறை வைத்து செயல்படுவது எளிதானதாக இருக்கிறது. இது எல்லாம் செய்யலாம், இது எல்லாம் செய்யக்கூடாது என்று பெரிய லிஸ்ட் குடுத்தால் நான் சொதப்பிவிடுவேன்.. ஆனால் அதற்கெல்லாம் அடிப்படை விதி என்று ஒன்று இருந்தால் அதைத் தெரிந்து கொள்வதில்தான் ஆர்வம்... சமீபத்தில் ஒரு விளக்கம் கிடைத்தது...

காடுகளில் survival of the fittest என்பதே நியதி ஆகும்... அதாவது ஒன்றுக்கு ஒன்று இரை என்று இயங்குவது காடுகளின் தர்மம். அதற்கு எதிரானதுதான் மனிதர்களின் தர்மம்... அதாவது எளியவர்களையும், நலிவடைந்தவர்களையும் அடித்துச் செல்லாமல் அரவணைப்பதுதான் தர்மம் என்று படித்தேன். சிறப்பு.

கற்ற பாடம்

ஆறாவது ஏழாவது படிக்கும்போது நாங்கள் ஒரு திருட்டு கேங். அப்போது டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் ஊருக்குப் புதிது. அதில் ஒரு சிறு கூட்டமாகச் சென்று திருடினோம். அதை நம்மால் பண்ண முடிகிறது என்கிற த்ரில் சுவாரஸ்யம்.. பின்னர் ஒரு கடையில் மாட்டினேன். அசிங்க அசிங்கமாகத் திட்டி போலீஸில் பிடித்துக் குடுப்போம் என்று மிரட்டி.. ரொம்ப நேரம் கழித்துத்தான் விட்டார்கள். அப்போதுகூட நெஞ்சில் குத்தவில்லை. அதே காலக்கட்டத்தில் ஒரு நண்பன், ஹாஸ்டலில் தங்குபவன், 50 ரூபாய் கொடுத்து ஜென்டில்மேன் கேசட் வாங்கி வரச் சொன்னான்.

நான் ஒரு சின்ன திருட்டுத்தனம் செய்தேன். அதாவது அவன் காசில் வாங்கிய டேப்பை நான் வைத்துக்கொண்டு, இரண்டு நாட்களுக்கு முன்னால் வாங்கிய என்னுடைய டேப்பை அவனுடைய டப்பாவில் வைத்து குடுத்துவிட்டேன். இரண்டு நாட்கள் கழித்து என்னைத் தனியாகக் கூப்பிட்டு அவன், ‘நம்புனேன்ல, இப்பிடி நடந்துகிட்டியே’ என்று கேட்டான். பொளேர், பொளேர், பொளேர் என்று இருந்தது. அதுதான் நான் வாழ்வில் கற்ற முதல் நல்ல பாடம். அதிலிருந்து என் அறிவுக்குட்பட்டு என்றுமே நான் எச்சத்தனமாகவும், திருட்டுத்தனமாகவும் நடந்துகொள்வது கிடையாது.

பிடித்த புத்தகம்

பிடித்த புத்தகம் என்பதைவிட சமீபத்தில் வியந்த எழுத்தாளர், எழுத்து என்றால் இருவர்...காப்ரியல் மார்க்வெஸ். எனக்கு எப்போதுமே வேறொரு ரியால்டி கிரியேட் பண்ணினால் மயங்கிடுவேன். இதில் இவர் கில்லி. அதேபோல் புதுமைப்பித்தன்... அவர் தன் கதை ஒன்றில் அலை பாயும் எண்ணங்களை, எந்த ஃபில்டரும் இல்லாமல் கோர்வையாக்காமல் கொடுத்தது போலிருக்கும். பிரமிப்பாக இருக்கிறது.

திருமணம் / காதல்

ஒரு வாட்டி கோபமாக அம்மாவிடம் சென்று, ‘வர டிசம்பருக்குள் பொண்ணு பாருங்க, இல்லைன்னா நான் பாக்குற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்’னு வீர வசனம் பேசினேன். பின்னர்தான் புரிந்தது, அவசரப்பட்டு வாய்விட்டு விட்டோம் என்று. நமக்கு பெண்களை வயப்படுத்துகிற வக்ேகா திறமையோ ஆண்டவன் குடுக்கலை என்பதை ஒரு கணம் மறந்துவிட்டாயே பாலகுமாரா என்றுணர்ந்து மீண்டும் அம்மாவிடம் சென்று, ‘நீங்க சொல்ற பேச்ச நான் தட்டமாட்டேன்’ என்று சமாளித்து விட்டேன்.

மிகச் சிறந்த நண்பன்

பத்து பதினைஞ்சு பெத்தவன் எல்லாம் நிம்மதியா இருக்கான். ெரண்டே ெரண்டு (நானும் தங்கச்சியும்) பெத்துட்டு எங்கப்பா படுற பாடு இருக்கே... பாவம்.. ஆனால் என்ன படுத்தினாலும் அசரமாட்டார். அதுதான் அவர் ஸ்பெஷாலிட்டி... நல்ல மனிதர்... நல்ல நண்பர், நல்ல அப்பா. கடைசியாக அழுதது மன்னிக்கவும்... சொல்ல முடியாது.

எதிர்பார்ப்புகள்

அற்புதமான மனிதர்களைச் சந்திக்க வேண்டும். போர் (War) பார்க்கக்கூடாது. சில நல்ல ஐடியாக்கள் முழுமையடையாமல் வைத்திருக்கிறேன். அவை எல்லாம் நல்ல படங்களில் வரவேண்டும். நம்ம ஊர் சினிமாக்கள் கலக்க வேண்டும். உலகத்திலேயே சுவாரஸ்யம் நிறைந்த இடம் இந்தியாதான் என்பது சினிமாவாகவும் எல்லா நாட்டவருக்கும் சென்றடைய வேண்டும். நல்ல காமிக்ஸ் எல்லாம் வந்து, மீண்டும் படிக்கும் பழக்கம் கூடினால் நன்றாக இருக்கும்.

மறக்கமுடியாத மனிதர்கள்

அ) எனக்கு எலியட் சார் என்று லெவன்த் மேத்ஸ் எடுத்த ஆசிரியர். அவர் ஒரு மிராக்கிள். அவருடைய நடவடிக்கை, பேச்சு, சொல்லித் தரும் முறை எல்லாமே மேஜிக்கலாக இருக்கும். கை காலை ஆட்டிக் கொண்டு, நம் ஊரில் சாமி வந்து ஆடுவது போல் மேத்ஸ் எடுப்பார். அட்டகாசமாக இருக்கும். சிரிக்க வைப்பார். மிரட்டி எடுப்பார். புரிய வைப்பார். அற்புதமான வாத்தியார். அவரைச் சந்திக்க முயன்று கொண்டிருக்கிறேன்.

ஆ) சின்ன வயசில் வீட்டருகே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். குண்டாக இருப்பேன். தெருவில் போன இரண்டு பெண்கள். ஏதோ என்னைப் பார்த்து நக்கலடித்துச் சிரிக்க, நான் அவர்களைப் பார்த்து ‘போங்கடி’ மாதிரி ஏதோ சொல்லிவிட்டேன். அவர்கள் பதிலுக்கு ரெண்டு திட்டிவிட்டு முறைத்துக்கொண்டே சென்றார்கள். சில நிமிடங்களில் இரண்டு பேர் 20, 25 வயதில் போதையில் வந்து என்னைக் கண்டுபிடித்து இரண்டு குத்து குத்தினார்கள்.

நான் அதிர்ச்சியில் சத்தம், கித்தம் போடாமல் குத்தை வாங்கிக் கொண்டேன். அவர்கள் தொலைச்சுப் புடுவேன் என்று மிரட்டிவிட்டுப் போனார்கள். அவர்கள் போனவுடன் அந்த இடமே சற்று பரபரப்பானது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் எல்லாம் கூடி விசாரிக்க, அப்பத்தான் அழ வேண்டும்போல் தோன்றி, அழ ஆரம்பித்தேன். அப்போது அந்த வழியாக ஒரு அண்ணன், பழைய சத்யா படத்தில் கமல் போல் ஆனால் தோற்றம் நம் கார்த்தி போல் இருந்த ஒருவர் வந்து விவரம் என்ன என்று விசாரித்தார்..

அத்தனை பேரும் சேர்ந்து கதை சொன்னார்கள். நான் ‘ஆம்’ என்பது போல் நின்றேன் சோகமாக. சரி என்று கிளம்பிப் போனார். பின்னர் நாங்களும் பேக்கப் செய்து கிளம்பி வீட்டுக்குச் சென்றோம். போகிற வழியில் ஒரு ரோட்டில் சிறு பரபரப்பு. எட்டிப் பார்த்தால், அடித்து விட்டுப் போன இருவரும் சத்யா அண்ணன் கையில் மாட்டி அடி வாங்கிக் கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்த அண்ணன், அப்படியே எங்களை வீட்டுக்குப் போகச் சொல்ல சைகை காட்டிவிட்டு, தன் சேவையைத் தொடர்ந்தார். அந்த அண்ணன் ஊர், பேர் எல்லாம் தெரியலை... ஆனா அவரு ஒரு ஹீரோ.’’

ரசிக்கும் எதிரி

என்னிடம் சிலர் போராடிப் பார்ப்பார்கள். ஆனால் யாருக்கும் எதிரி ஸ்தானத்தை அளிப்பதில்லை... அது என்னிடம் நடக்கவே நடக்காது.

பொழுதுபோக்கு

எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு சும்மா இருப்பது... இருப்பதிலேயே சுவாரஸ்யமான கஷ்டமான பொழுதுபோக்கு சும்மா இருப்பது. நிறையப் பேருக்கு அது தெரிவதில்லை. புத்தகம் படிப்பது, தூங்குவதை அவர்கள் சும்மா இருப்பதாக கணக்கில் கொள்கிறார்கள்.. உண்மையாக சும்மா இருப்பது கஷ்டம்.

சமீபத்தில் அதிர்ந்தது

சமீபமாக எதற்கும் பெரிதாக அதிர்வதில்லை. இதை ஒரு ஜென் நிலை என்று நான் நினைத்துக் கொள்கிறேன். சிலர் சூடு, சொரணைகெட்ட தனம் என்றும் சொல்கிறார்கள்... பார்ப்போம்..

- நா. கதிர்வேலன்

படங்கள்: பி. வெங்கடேஷ்