விஜயனின் வில்



-கே.என்.சிவராமன்

அதிர்ந்தது... முட்டையை வேகவைத்த பிறகுதான். தப்பு. ஓட்டை உரித்தவுடன் பளிச்சிட்ட KVQJUFS என்ற எழுத்துகளைக் கண்ட பின்னர்தான். அவித்த முட்டைக்குள் எப்படி எழுத்துகள் தோன்றும்? வெந்து தணிவதற்கு முன் முட்டைக்குள் எதையும், யாரும் எழுத முடியாது. எனில் சுடு நீர் கிறுக்கியதா..? எப்படி... ஓட்டை உடைத்துக் கொண்டா? இந்த எழுத்துகள் எந்த மொழியைச் சேர்ந்தவை? இவை என்ன சொல்கின்றன...? எதை உணர்த்துகின்றன? யாருக்காக எழுதப்பட்டவை? எனக்கா? ஏன்? இந்த அதிர்ச்சிக்கு முன்பு வரை தாரா நார்மலாகத்தான் இருந்தாள்.

செல்போன் அலாரம் ‘கீச்’சிடுவதற்கு முன்பே, க் + ஈ = கீ என்று இணைவதற்குள்ளாகவே எழுந்துவிட்டாள். சரியாக மணி நான்கு. ரெஸ்ட் ரூம் சென்றாள். அதிகாலைக் கடனை பூர்த்தி செய்தாள். பல் துலக்கினாள். முகம் கழுவினாள். மாநிற முகத்தை கதர் துண்டால் துடைத்தாள். ஐந்தடி ஏழு அங்குல உடலை ஆளுயரக் கண்ணாடியில் பார்த்தாள். சிகப்பு டி-ஷர்ட்டை இழுத்து சரிப்படுத்தினாள். தலையை வாரினாள். நைலான் க்ளிப்பினால் போனி டைல் போட்டுக் கொண்டாள்.

இன்பத்தேன் வந்து பாய  இயர் போனை செவியில் நுழைத்தாள். செல்போனை பைஜாமா பாக்கெட்டில் பத்திரப்படுத்தினாள். ஸ்போர்ட்ஸ் ஷூவை கால்களில் பொருத்தினாள். ஃப்ளாட்டை லாக் செய்தாள். சாவியை பின்பக்க பாக்கெட்டில் சிறைப்படுத்தினாள். இரண்டிரண்டு படிக்கட்டுகளாகத் தாவி க்ரவுண்ட் ஃப்ளோரை அடைந்தாள். இருபத்தோரு அடி நடந்து கேட்டை அடைந்தாள். சாலையில் அடியெடுத்து வைத்தாள்.

இத்தனை ‘ள்’ளும் ஐந்து ஆண்டுகளாக நாளும் நடப்பவைதான். அதாவது இருபத்தோரு வயதில் சென்னைக்கு அவள் வந்தது முதல். அதாவது குரோம்பேட்டை ராதாநகர், ஸ்கூல் தெருவுக்கு குடிவந்தது முதல். அதாவது எண்: 14, காயத்ரி ஃப்ளாட்ஸுக்குப் பின்னால் இருந்த சீனிவாசா அபார்ட்மென்ட்டுக்கு வந்து சேர்ந்தது முதல். அதாவது முதல் மாடியில் இருக்கும் F/5ல் தனியாக வசிக்கத் தொடங்கியது முதல். மழை கொட்டினாலும் வெயில் சுட்டெரித்தாலும் இந்த நடைமுறை மட்டும் மாறியதே இல்லை.

மாற்றவும் தாரா விரும்பியதில்லை. இன்றும் அப்படித்தான் அவளது பொழுது ஆரம்பித்தது. இளையராஜாவின் மெலடியை அனுபவித்தபடி அரசு போக்குவரத்துக் கழக பஸ் டிப்போவுக்கு வந்தவள், பரந்து விரிந்திருந்த மைதானத்தில் ஐந்து முறை ஓடினாள். வெளிச்சம் மலர்ந்து பொட்டுப் பொட்டாக உடல் முழுக்க வியர்வை பூக்கத் தொடங்கியதும் குமரன் குன்றம் நோக்கி ரிலாக்ஸாகச் சென்றாள். கோயில் திறந்திருக்காது. ஆனால், குன்றுக்கு செல்லும் படிக்கட்டுகள் 24 X 7 பூட்டியிருக்காது. ஷூவைக் கழற்றிவிட்டு ஏறினாள்.

கோயில் வாசலில் நின்றாள். இறங்கினாள். தரையைத் தொட்டாள். மீண்டும் ஏறினாள். மீண்டும் இறங்கினாள். ஆறாவது முறை பூமியில் பாதம் பட்டபோது மூச்சு வாங்கியது. நிமிர்ந்து கோபுரத்தைப் பார்த்தாள். நின்றபடியே ஷூவுக்குள் காலை நுழைத்தாள். வந்த வழியே திரும்பினாள். டூ வீலரில் சென்ற ஆண்களின் கண்கள் தன்னை மொய்ப்பதை அலட்சியப்படுத்திய படியே டிப்போவில் இருந்து ராமர் கோயிலை நோக்கிச் செல்லும் சாலைக்கு வந்தாள். வலப்பக்கமாகத் திரும்பினால் ஸ்கூல் தெரு.
திரும்பவில்லை.

மாறாக, தெரு முனையில் இருந்த டீக் கடைக்குச் சென்றாள். வழக்கமாக முட்டை வாங்கும் கடை. பார்த்ததுமே புன்னகைத்தபடி வெளிர் பச்சை பாலிதீன் பையில் ஐந்து முட்டைகளைக் கொடுக்கும் தாத்தா இன்று அப்படிச் செய்யவில்லை. ஆமாம். செய்யவில்லை. அவித்த முட்டையில் தென்பட்ட KVQJUFS என்ற ஆங்கில எழுத்துகளை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே தாரா நிமிர்ந்தாள். புருவங்கள் சுருங்க டீக்கடை வாசலில் நடந்ததை அசை போட்டாள். நடந்த உரையாடல்களும் அவற்றைத் தொடர்ந்து அடுக்கடுக்காகக் கிளை பரப்பிய எண்ண ஓட்டங்களும் கமா, ஃபுல்ஸ்டாப் மாறாமல் ரீவைண்ட் ஆகின.

பாலிதீன் பையுடன் கடையை விட்டு வெளியே வந்த அந்த வயதானவர், தயக்கத்துடன் அவள் அருகில் நின்றார். ‘‘என்ன மாஸ்டர், பாக்கி எல்லாம் நேத்தே செட்டில் பண்ணிட்டனே..?’’ ‘‘அதில்லமா...’’ ‘‘ஏதாவது பண உதவி வேணுமா..?’’ ‘‘இல்லம்மா...’’ கேள்வியுடன் அவரை ஏறிட்டாள். ‘‘நாளைலேந்து கடை இருக்காதும்மா...’’ சொல்லும்போதே வயதானவரின் குரல் தழுதழுத்தது. ‘‘ஏன்..?’’ ‘‘காலி பண்ணச் சொல்லிட்டாங்க...’’ குரல் உடைந்தது.

‘‘திடீர்னா..?’’ ‘‘ஜனவரி மாசமே சொல்லிட்டாங்க. நான்தான் இதோ அதோனு தள்ளிப் போட்டேன். வாடகை தர போனப்ப கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாங்க. தீபாவளி முடிஞ்சதும் கடையைக் கொடுக்கறதா வாக்கு கொடுத்துட்டேன்...’’ ‘‘வாடகை அதிகமா எதிர்பார்க்கறாங்களா..?’’ ‘‘அப்படிச் சொன்னா நாக்கு அழுகிடும். 42 வருஷங்களா இதே இடத்துல இருக்கேன். ஒருமுற கூட அவங்களா வாடகையை உயர்த்தினதில்ல... நானா போட்டுக் கொடுப்பேன். வாங்கிப்பாங்க. இப்ப ஓனருக்கும் வயசாகிடுச்சு. பையன் அமெரிக்காவுல.

அங்க போகப் போறார்...’’ ‘‘அப்ப இந்த இடம்..?’’ ‘‘வீட்டையும் கடையையும் இடிச்சு புது மாதிரியா கட்டப் போறாங்களாம்...’’ ‘‘வேற இடம் பார்க்கலையா..?’’ ‘‘பார்த்தேன். சரிப்பட்டு வரலை. பேசாம ஊருக்கே போயிடலாம்னு இருக்கேன். வேற என்ன செய்ய? பத்து வயசுல ஒரு வேளை சோத்துக்காக கேரளாலேந்து வந்தேன். பன்னெண்டு வருஷம் குமரன் குன்றம் பக்கத்துல எங்க மாமா கடைல டீ க்ளாஸ் கழுவினேன். அப்புறம் இங்க சொந்தமா கடை போட்டேன்.

இப்ப..? எப்படி வந்தனோ அப்படியே வெறுங்கையோட ஊருக்குப் போறேன்...’’ அழுகையை மென்று விழுங்கியவர் மவுனமாக பாலிதீன் கவரைக் கொடுத்துவிட்டு அகன்றார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சூழலை தாரா சென்ற மாதம் எதிர்கொண்டாள். மயிலாப்பூர் கச்சேரி சாலையில் ராஜா திருமண மண்டபத்துக்குப் பக்கத்தில் இருந்த டீக்கடையும் அதனை ஒட்டி இருந்த பெட்டிக் கடையும் இப்படித்தான் ஒருநாள் மூடப்பட்டன. ராயப்பேட்டை, மந்தவெளி, திருவல்லிக்கேணி பக்கம் செல்லும்போதெல்லாம் குறிப்பிட்ட அந்தக் கடையில்தான் டீ குடிப்பாள்.

உட்கார்ந்து குடிக்கும் வகையில் சேர், பென்ச் போடப்பட்டிருக்கும். டீ, ரஸ்தாளி, ஹால்ஸ். இருபது ரூபாய் கொடுத்தால் மீதி மூன்று ரூபாய் கிடைக்கும். அவர்களும் வருடக்கணக்கில் கடை நடத்தியவர்கள்தான். சென்ற டிசம்பரில் பெய்த பெரு மழைக்குப் பின் அந்தக் கடை மூடப்பட்டது. இப்போது அங்கு செருப்பு விற்கும் கடை முளைத்திருக்கிறது. சொந்தமாகக் கடை வைத்திருந்த மாஸ்டர், மடிப்பாக்கம் பக்கம் வேறொரு கடையில் வாரக் கூலிக்கு டீ ஆத்துகிறார்.

பெட்டிக் கடையை நடத்தியவர் மத்திய கைலாஷ் பக்கம் நடைபாதை வியாபாரியாக மாறியிருக்கிறார். இதுதான் சென்னை. இதுவேதான் அதன் முகம். உண்மையில் சென்னை புலம் பெயர்ந்தவரின் நகரம். வந்தேறிகளின் வாழிடம். மெரினாவும் இருக்கிறது. கூவமும் ஓடுகிறது. அண்ணா சாலையும், ஈஸிஆரும், ராஜீவ் காந்தி சாலையும் இருப்பது போலவே பிராட்வேக்களும் நிரம்பி வழிகின்றன. கொளத்தூரும் உண்டு, போட் கிளப்பும் உண்டு. புளியந்தோப்புகள், கூவம் கரை ஆகியவற்றில் சேரியும் உண்டு.

உயர் நடுத்தர வர்க்கங்கள் வாழும் அண்ணா நகரும், அடையாறும் இருப்பது போலவே நடுத்தர வர்க்கங்கள் ஒண்டுக் குடித்தனங்களில் மூச்சுத் திணறும் திருவல்லிக்கேணியும், சைதாப்பேட்டையும் உண்டு. குஜராத்திகளும், ராஜஸ்தானிகளும் சவுகார்பேட்டையில் சங்கமமாகியிருப்பது போலவே முகமதியர்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் நீக்கமற மாநகரம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள்.

கனவுத் தொழிற்சாலையான கோடம்பாக்கமும், சாலிக்கிராமமும், வளசரவாக்கமும் இருப்பது போலவே, கனரகத் தொழிற்சாலைகளான அம்பத்தூர் தொழிற்பேட்டையும்  பெரும்புதூரும் சாஃப்ட்வேரை பறைசாற்றும் டைடல் பார்க்கும் கண் சிமிட்டுகின்றன. நாடார் கடைகளும், வன்னியர் தெருக்களும், சேட்டன்களின் டீக்கடைகளும் மாநகரத்தின் எல்லா சந்து பொந்துகளிலும் இருப்பது போலவே, மொபைல் ஷோ ரூம்களும், ரெடிமேட் ஆடைக் கடைகளும், நகைக் கடைகளும் பூத்துக் குலுங்குகின்றன.

டூ வீலர்களும் சாலைகளில் செல்கின்றன. பென்ஸ் கார்களும் பறக்கின்றன. காபி 10 ரூபாய்க்கும் கிடைக்கிறது, ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கிறது. பேய் மழை பெய்தாலும் வீடுகள் மிதக்கின்றன. சின்ன தூறல் விழுந்தாலும் வீட்டினுள் ஒழுகுகின்றன. இருகரம் கூப்பி அனைவரையும் வரவேற்கும் சென்னையே ஒரு கட்டத்துக்குப் பிறகு கழுத்தைப் பிடித்து வெளியேற்றவும் செய்கிறது. அனுமதிக்கும் வரையே இது நகரம். துரத்திய பின் எஞ்சிய வாழ்க்கையே நரகம்.

யோசித்தபடியே தன் ஃப்ளாட்டுக்கு வந்தாள். இண்டக்‌ஷன் ஸ்டவ்வில் முட்டையை வேக வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள். யெஸ். அதன் பிறகு? தலையைத் துவட்டியபடி வெளியில் வந்தோம். ஸ்விட்சை ஆஃப் செய்தோம். வெந்த முட்டைகளை சாதாரண நீரில் போட்டோம். ஜீன்ஸ், பனியன் அணிந்து கொண்டோம். முட்டையின் ஓட்டை உரித்தோம். பிறகு... கைகள் நடுங்க இதோ நின்று கொண்டிருக்கிறோம். நீளமாக மூச்சை இழுத்து சில நொடிகள் நின்றாள்.

அதிர்ச்சி மெல்ல மெல்ல விலக ஆரம்பித்ததும் உன்னிப்பாக அவித்த முட்டையில் தென்பட்ட எழுத்துகளை மீண்டும் பார்த்தாள். KVQJUFS. பொறி தட்ட, சட்டென்று லேப்டாப்பை எடுத்தவள், கூகுளைத் திறந்தாள். KVQJUFS என்று அடித்தாள். Encrypting kvqjufs என ஆறு பக்கங்களுக்கு ஏதேதோ வந்து கொட்டின. ஒன்றும் புரியவில்லை. உடனே, வேகவைத்த முட்டையில் எப்படி எழுத்துகள் தோன்றும் என்று கூகுளாண்டவரிடம் விண்ணப்பித்தாள்.

அது ஆள்காட்டி விரலைப் பிடித்தபடி பதினாறாம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்றது. இத்தாலியைச் சேர்ந்த Giovanni Porta என்ற விஞ்ஞானி, ரகசியங்களைக் கடத்து வதற்காக இந்த வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார். ஒரு அவுன்ஸ் படிகாரம், அதனுடன் ஒரு சிட்டிகை வினிகர் கலந்து முட்டையின் ஓட்டில் எழுத வேண்டும். பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ந்தாலும் எழுதியது தெரியாது. பிறகு அதை உரியவரிடம் கொடுத்துவிட வேண்டும். சம்பந்தப்பட்டவர் அந்த முட்டையை வேகவைப்பார். வெந்ததும் ஓட்டை உரிப்பார். எழுதப்பட்ட எழுத்துகள் பளிச்சென்று தெரியும்.

ஃபேன் காற்றை மீறி தாராவின் நெற்றி வியர்த்தது. 16ம் நூற்றாண்டில், அதுவும் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசியங்களை கடத்தும் பாதை, எதற்காக 21ம் நூற்றாண்டில், அதுவும் சென்னையில் வசிக்கும் தன்னைத் தேடி தஞ்சமடைந்திருக்கிறது? கைகளைப் பரபரவென்று தேய்த்துக் கொண்டவளுக்கு ஒன்று புரிந்தது. KVQJUFS என்பது மொழி அல்ல. அது ஏதோ ஒரு சொல்லின் - வார்த்தையின் - Code word. எக்குத்தப்பாக, கண்டபடி சர்ச் பட்டனில் தேடினாள். அரை மணி நேரத்துக்குப் பின் சின்னதாக வெளிச்சம் கிடைத்தது.

ஒருவேளை அடுத்து வரும் ஆங்கில எழுத்தைக் குறிக்கும் வகையில் KVQJUFS அமைக்கப்பட்டிருந்தால்? காகிதத்தை எடுத்து எழுதிப் பார்த்தாள். LWRKVGT. ம்ஹும். இது KVQJUFS-ஐ விட குழப்பமாக இருக்கிறது. வலது உள்ளங்கையை மடக்கி தலையில் குட்டிக் கொண்டவள் சட்டென்று துள்ளிக் குதித்தாள். ஒய் நாட்? ஒருவேளை முந்தைய ஆங்கில எழுத்தைக் குறிக்கும் வகையில் KVQJUFS எழுதப்பட்டிருந்தால்..? எழுதினாள்.

JUPITER. காட் இட்! ‘ஜூபிடர்’ என்பது கிரகம். இதன் தமிழ்ச் சொல் ‘வியாழன்’. அதாவது ‘குரு’. இது மனிதனின் பெயரா அல்லது வேறு ஒன்றை உணர்த்தும் சொல்லா..? எந்த ரகசியத்தை மறைக்க அல்லது வெளிப்படுத்த இப்படி முட்டை மீது எழுதியிருக்கிறார்கள்? அதை ஏன் நம்மிடம் கொடுத்திருக்கிறார்கள்..? மாஸ்டரைக் கேட்டால், விடை கிடைக்கும். பரபரத்த மனதை அடக்கியபடி எல்லா ஸ்விட்சும் அணைக்கப்பட்டிருக்கிறதா என்று ஒன்றுக்கு இருமுறை பரிசோதித்துவிட்டு ஃப்ளாட்டை பூட்டினாள். தனது நீல நிற ஹோண்டா ஆக்டிவாவை ஸ்டார்ட் செய்தபடி டீக்கடைக்கு வந்தாள். இயல்பாக இருப்பதுபோல் காட்டிக் கொள்ள முயன்றாள்.

‘‘மாஸ்டர்... முட்டையை எங்க வாங்குவீங்க?’’ ‘‘நம்பர் தரேன். பேசுங்க. வாரத்துக்கு ஒருமுறை மொத்தமா கொண்டு வந்து கொடுப்பாங்க...’’ ‘‘குட் ஐடியா...’’ மாஸ்டர் சொன்ன எண்ணை தனது செல்போனில் சேமித்தாள். ‘‘இன்னிக்கி முட்டை எப்படிமா இருந்தது?’’ முகத்தில் எதுவும் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தாரா குனிந்தாள். ‘‘எதுக்கு கேட்கறீங்க?’’ ‘‘ஹோல்சேல்ல வாங்கினது தீர்ந்து போச்சு.

நீங்க ஏமாறக் கூடாதேன்னு அஞ்சு முட்டை தனியா வாங்கினேன்...’’ சுண்டிவிட்டது போல் நிமிர்ந்தாள். ‘‘எங்க?’’ ‘‘ஒரு பெரியவர்கிட்டேந்து...’’ ‘‘பேரு?’’ ‘‘கார்க்கோடகன். ஏம்மா, முட்டை நல்லா இல்லையா..?’’ ‘‘ரொம்ப நல்லா இருந்தது. எங்க இருப்பாரு?’’ ‘‘வைஷ்ணவா காலேஜ் பக்கத்துல. யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க...’’ ‘‘தேங்க்ஸ் மாஸ்டர். ஊருக்குப் போனாலும் அப்பப்ப
செல்லுல கூப்பிடுங்க...’’ புன்னகைத்தபடி ராமர் கோயிலைத் தாண்டி வந்த போலீஸ் பூத்தைக் கடந்து வைஷ்ணவா கல்லூரியைத் தொட்டாள்.

ரயில்வே கேட் பக்கம் கூட்டமாக இருந்தது. விசாரிப்பதற்காக வண்டியை அந்தப் பக்கம் நகர்த்தினாள். ‘‘ஒண்டிக்கட்ட. ஒரு நாளைக்கு அஞ்சு முட்டைதான் விப்பாரு. அதுக்கு அப்புறம் இங்க வந்து உக்காந்துடுவாரு. யார்கூடயும் பேச மாட்டாரு. போற வர்ற ரயில்களையே அமைதியா பார்த்துட்டு இருப்பாரு. அமைதியாவே இன்னிக்கி போயும் சேர்ந்துட்டாரு. பேருதான் கார்க்கோடகன். ஆனா, ரொம்ப தங்கமான மனுஷன்...’’ மோதிய குரல் தாராவை வேரோடு சாய்த்தது.

சைடு ஸ்டாண்ட் போட்டுவிட்டு கூட்டத்துக்குள் புகுந்தாள். எதிர்ப்பட்ட காட்சி அவளை நிலைகுலைய வைத்தது. எந்த மனிதரைத் தேடி அவள் வந்தாளோ, அந்தப் பெரியவர் வெற்று மார்புடன் இறந்து கிடந்தார். அதுவும் ரங்கம் அரங்கநாதர் எந்த சயன கோலத்தில் படுத்திருப்பாரோ அந்தத் தோற்றத்தில்.

‘‘அவர் கைல இருந்த காகிதத்துல ‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை நவரத்தினமும் ஒன்றுமில்லை அதிசயமே உலகம் திரிசூலமே நான்காவது லூகாஸ் பஞ்சபூதம்...’னு எழுதியிருக்கு. யாருக்காக இதை எழுதியிருக்காரு... என்ன சொல்ல வர்றார்னு புரியலையே...’’ முணுமுணுத்தவரை தாரா நிமிர்ந்து பார்த்தாள். நிச்சயம் இதற்கு கூகுள் பதில் தராது.

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்