சமையல்
-ஆ.லோகநாதன்
‘‘பெண்ணின் பெயர் ஸ்வப்னா. ஐ.டி. கம்பெனியில வேலை செய்யறா. நல்ல சம்பளம். இரண்டு பெண்கள். மூத்தவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இவள் இளையவள்’’ என்று சொல்லிக் கொண்டே போன தெய்வசிகாமணியின் கையிலிருந்த போட்டோவை வாங்கிப் பார்த்த சுலோச்சனா முகம் மலர்ந்தாள். ‘‘மூர்த்திக்கு பொருத்தமா இருக்கும். வெள்ளிக்கிழமை போய் பார்த்துட்டு வரலாங்க..’’என்று கணவனிடம் சொன்னாள் சுலோச்சனார் பெண்ணை எல்லோருக்கும் பிடித்துவிட்டது.
பெண்ணின் தகப்பனார் தயங்கியபடி மாப்பிள்ளையைப் பார்த்தார். ‘‘கோவிக்காதீங்க தம்பி. என் பொண்ணு நல்லா சமைப்பா. உங்களுக்கு சமையல் வருமா?’’ சுலோச்சனாவின் முகம் மாறியது. ‘‘என்னங்க நாங்க கேட்க வேண்டிய கேள்விய நீங்க கேக்கறீங்க?’’ மூர்த்தி குறுக்கிட்டான். ‘‘அம்மா, சும்மாயிருங்க. அவர் கேட்பதிலும் அர்த்தம் இருக்கு’’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்தான்.
‘‘நான் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சப்போ நானேதான் சமைப்பேன். அருமையா சமைப்பேன். உங்க பொண்ணும், நானும் ஒரே மாதிரி வேலை பார்க்கறதால ஷிப்ட் மாறி வரும். கண்ட இடத்தில, கண்டதை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கக் கூடாது. நாளைக்கு பிள்ளைகள் ஆன பின் சாப்பாட்டுப் பிரச்சினை வரக்கூடாது. அதுதானே சார்?’’ திகைத்துப் போனவர் ‘ஆம்’ எனத் தலையாட்டினார். ‘‘அடப்பாவிங்களா, என்னமா யோசிக்கிறாங்க. நம்ம பையன் பயங்கரமா யோசிக்கிறான். ம்... சரியான ஜோடிதான்!’’ வியப்புடன் மகனைப் பார்த்து புன்னகைத்தாள் சுலோச்சனா!
|